மிஸ்டர் சந்திரமௌலி – திரை விமர்சனம்

இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் கதையை ஆரம்பிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும் இயக்குநர் திருவுக்கு. முதல் பாதி முழுக்க ஆமை வேகத்தில் ஊர்கிறது கதை(?)! இரண்டு கேப் கம்பெனிகளுக்குள் போட்டி என்பது மட்டுமே முதல் பாதியில் நாம் தெரிந்து கொள்வது. ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியை அழிக்க எந்த அளவு போகிறது என்பது மறு பாதியில் தெரிகிறது. டூ ஃபார் ஒன் விலையில் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பா மகன் பாத்திரம். கார்த்திக் இன்னும் இளமை மாறாமல், அவரின் சேஷ்டைகள் மாறாமல், டயலாக் டெலிவரி மாறாமல் அப்படியே இருக்கிறார். கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் நல்லதொரு முன்னேற்றம் காணமுடிகிறது.

கௌதம் கார்த்திக் ஒரு வளரும் குத்துச் சண்டை வீரர். உடற் கட்டும், சண்டைப் பயிற்சியும் அவரை முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் அதையெல்லாம் காட்டுவதற்கு வாய்ப்பு பின் பாதியில் தான். முதல் பாதியில் அப்பாவும் மகனும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் நம் பொறுமையை சோதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அப்பா மகன் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இயக்குநர் மகேந்திரன் சின்ன பாத்திரத்தில் வருகிறார். தெறி படத்தில் வில்லனாக நன்றாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. இயக்குநர் அகத்தியனும் கார்த்திக்கின் நண்பனாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார்.

கௌதம் கார்த்திக்கின் ஜோடி ரெஜினா கசான்ட்ரா டூயட்களில் நன்றாக கவர்ச்சி காட்டுகிறார். முதல் பாதியில் உப்புச்சப்பில்லாமல் அவர்களுக்குள் ஏற்படும் காதலுக்கு ஓரிரு டூயட்கள் துணை போகின்றன. நடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். அவர்கள் அறிமுகமே பின் பாதியில் தான். நடக்கும் கொலை, திருட்டு இன்ன பிற குற்றங்களுக்கான காரண புதிரை விடுவிக்க வரலட்சுமி பாத்திரம் உதவுகிறது. வரலட்சுமி வெகு இயல்பாக நடிக்கிறார். அவரை தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறது. நடிகர் சதீஷ் இருந்தும் காமெடி துளியும் இல்லை. ஓரிரு இடத்தில் கஷ்டப்பட்டு சிரிக்கலாம்.

ஒரு விபத்தால் கௌதமுக்கு பெரிய குறை ஏற்பட்டப் பின் அந்தக் குறையுடன் குற்றப் பின்னணியை கண்டுபிடிக்க சதீஷ் ரெஜினா கௌதம் கூட்டணி கையாளும் டெக்னிக் படத்துக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறது. இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்தது படத்துக்கு ஊக்க மருந்தாக அமைகிறது. இவை மட்டும் இல்லையென்றால் படத்துக்கு விமர்சனமே எழுத தேவையிருந்திருக்காது.

இசை சாம் C.S, பின்னணி இசை சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் பழைய படங்களில் வரும் பின்னணி இசை போலவும் உள்ளது. ஒரு பாடல் ஏதேதோ ஆனேனே அதற்குள் வானொலியில் பிரபலமாகியுள்ளது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் நாதன், தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட டூயட்டில் அவரின் கை வண்ணம் மிளிர்கிறது. T.S.சுரேஷின் படத்தொகுப்பு நன்றாக உள்ளது. ஆனால் முன் பாதியை கத்திரிக்காமல் விட்டதற்கு அவரை மன்னிக்க முடியாது.

கௌதம் கார்த்திக் நன்றாக நடித்துள்ளார். சூர்யா, கார்த்திக் தவிர மற்ற வாரிசு நடிகர்கள் ஒருவரும் பேர் சொல்லும்படியாக தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வரவில்லை. இவருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கார்த்திக் ஒரு பேட்டியில் நிறைய அப்பா மகன் கதைகள் வந்தும் அவையெல்லாம் பிடிக்காமல் இக்கதையைப் பிடித்துத் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். அப்போ அவர் கேட்ட மத்த கதைகள் எல்லாம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்று நாம் யூகிக்கலாம். இதில் அப்பா மகன் உறவில் நெகிழ்ச்சித் தரக் கூடிய காட்சிகள் உள்ளன ஆனால் இருவருக்கும் தீனி போடும் விதத்தில் திரைக் கதையில் ஒன்றும் இல்லை.

மௌன ராகம் பட மிஸ்டர் சந்திரமௌலி பெயரை வைத்துத் திரை அரங்கத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால் இறுக்கையில் இருத்தி வைக்க முடியலையே!