படம் பார்த்து முடித்தப் பின்னும் இசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசை இப்படத்தின் கதைச்சொல்லி. இசை ஞானியைத் தவிர வேறு யார் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தாலும் இந்த மேன்மை வந்திருக்காது. விஜய் சேதுபதி நடிகராக ஒரு பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளராக மேற்குத் தொடர்ச்சி மலையின் மூலம் சிகரம் தொட்டுவிட்டார். இரண்டு மணி நேரத்தில் ஒரு மக்களின் வாழ்க்கையை சொல்ல எப்படி லெனின் பாரதி துணிந்தார் என்று புரியவேயில்லை. ஆனால் வாழ்க்கையை அவர்களின் சுக துக்கங்களை, ஏக்கங்களை, கடுமையான உழைப்பை, அரசியலை, வெள்ளந்தியான உள்ளங்களை, உண்மையை, ஏமாற்றத்தால் விளையும் கோபத்தை, ஆசைகளை, நிராசைகளை, அன்பை, மகிழ்ச்சியை இறுதியில் விரக்தியை, விரக்தி என்று கூட சொல்ல முடியாத யதார்த்தத்தை சுமக்கும் வலியை இவை அனைத்தையும் அங்கேயே போய் நாம் வாழ்ந்திருந்தாலும் புரிந்து கொண்டிருக்க முடியாத உணர்ச்சிகளை இரண்டு மணி நேரத்தில் அனுபவித்து விடுகிறோம்.
அந்தப் பச்சை ஏலக்காய் மூட்டை சரிந்து விழும்போது நாமும் உடைந்து கீழே அதோடு விழுகிறோம்! என்ன ஒரு நேர்த்தியான இயக்கம்! என்ன ஒரு நேர்த்தியான ஒளிப்பதிவு! நடு இரவில் இருட்டிலும் மங்கலான பலப் வெளிச்சத்தில் தொடங்கும் கதையும் படக்காட்சியும் விடியும்போது செவ்வானம் வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்தப் பசுமையான மலைக் காடுகளும் இதுவரை பார்த்திராத ஒரு பூமியைக் காட்டுகிறது. அதுவும் எந்தவித கூடுதல் ஒளிசாதனமும் இல்லாமல் இயற்கை ஒளியைக் கொண்டே பெருபான்மையான காட்சிகளை படம்பிடித்திருப்பது அற்புதம்.
தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் ஊரை அழகாக காட்ட அவர் தனி முயற்சி எடுத்திருப்பார் தானே? அப்ளாஸ் வாங்குகிறார்! படத் தொகுப்பு அதைவிட அருமை. எல்லா புகழும் காசி விஸ்வநாதனுக்கே! எந்த இடரும் இல்லாத ஒரு நீண்ட காட்சியாய் விரிகிறது படம். எந்த இடத்திலும் தொய்வு இல்லை.
ரங்கசாமியோடு (ஏன்டனி) நாமும் ரங்கசாமியா மாறிவிடுகிறோம். அவன் ஏறும் காடு மலை, அவன் செல்லும் பாதை, அவன் செய்யும் வேலைகள், அவன் வாங்க நினைக்கும் கை அகல நிலத்துக்கு அவன் படும் பாடு, அவனின் அழுக்கு உடை எல்லாவற்றிலும் நாமும் ஐக்கியம் ஆகிவிடுகிறோம். இந்த அளவு ஒரு இயக்குநரால் எப்படி செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை, ஒவ்வொரு பிரேமும் கவிதை. கவிதையை நிதானமாகத் தானே ரசிக்க முடியும். படமும் நிதானமாகத் தான் நகர்கிறது. பருந்து பார்வையில் அந்த மலையை பார்க்கும் போது, இதில் இப்படி இவர்கள் தினமும் ஏறி இறங்கி வாழ்கிறார்கள் என்ற பிரம்மிப்பு நம்முள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
தோழர் சாகோ, எஸ்டேட் ஓனர் ரவி, கங்காணி, கணக்குப் பிள்ளை, ஊத்து ராசா, கிறுக்குக் கிழவி, பாய், தள்ளாத வயதிலும் மூட்டை சுமக்கத் துடிக்கும் முதியவர் என்று ஒவ்வொரு பாத்திரமும் நம்மிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். கொஞ்சமே வந்தாலும் ரங்கசாமியின் தாயும் அதே ரகம் தான். ரங்கசாமியின் மனைவி ஈஸ்வரி (அறிமுகம் காயத்ரி கிருஷ்ணா) பாரதிக்கு ஒரு கண்ணம்மா மாதிரி. அத்தனை பொருத்தம்! எந்த ஒப்பனையும் இல்லாமல் கிராமத்து இளம் பெண்ணாக, மனைவியாக, தாயாக வாழ்ந்திருக்கிறார்.
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்தக் கதையில் எல்லாருமே நல்லவர்கள் தாம். மலை வாழ் வெள்ளந்தி மனிதர்கள் வேறு எப்படி இருப்பார்கள்? சந்தர்ப்ப சூழ்நிலை இறுதியில் சில பாத்திரங்களை சற்றே கெட்டவர்களாக காட்டுகிறது, அதைக் கூட யதார்த்தத்தின் வெளிப்பாடாகவே உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கிறது.
நிறைய அவார்ட்கள் வாங்கியுள்ள படம். அதனால் வெகு சில திரை அரங்குகளிலேயே காட்டப்பட்டு அவையும் ரொம்ப நாள் ஓடாமல் எடுக்கப்பட்டு விட்டன. இப்படி ஆதரவு தர நாம் தயங்கினால் எப்படி நல்ல சினிமா அமையும்? நானும் இந்தப் படத்தைத் தாமதமாகப் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
உலகமெங்கும் விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு இந்த படத்தை சமர்ப்பணம் செய்திருக்கிறார் இயக்குநர் லெனின் பாரதி. அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.