இது முழுக்க முழுக்க பேண்டசி படம். விஜய் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அம்புலிமாமா இதழ்களில் வரும் கதைகள் போல் ஒரு கதை புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு கிளியினுள் இருக்கும். அதைக் கொன்று அசகாய சூரனான கதையின் நாயகன் நாயகியை மந்திரவாதியின் பிடியில் இருந்து விடுவித்து மணந்து கொள்வான். படிக்க ஜாலியா இருக்கும் அந்தக் காலத்தில். கதாநாயகனுக்கு உதவ பேசும் விலங்குகள், வழிகாட்டும் பறவைகள் என்று கதையில் வரும். அதே பார்முலா தான் இப்படத்திலும் சிம்பு தேவன் கையாண்டிருக்கிறார்.
ஸ்ரீதேவி இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார். டிரெயிலரில் பார்த்ததை விட படத்தில் நன்றாக உள்ளார். உடைகளும், அவரின் அனுபவப்பட்ட நடிப்பும் வெகு நேர்த்தி. ஸ்ருதி ஹாசன் குரல் காதை ரொம்பப் பதம் பார்க்கிறது. அவருக்கு வேறு யாராவது டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி இருவருமே வெறும் டூயட் பாடவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருவர் பெர்பார்மன்சும் சாதா. சுதீப் வில்லன். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் வில்லத்தனம் முதல் பாதியில் கொஞ்சமே தெரிகிறது. கிளைமேக்சில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அதனால் அவரின் பங்களிப்பு பெரிதாக சோபிக்கவில்லை.
கதையில் விஜய்க்கு நண்பர்கள்/உதவியாளர்களாக தம்பி ராமையாவும், சத்யனும் வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக வேறு இருவரை போட்டிருக்க வேண்டும். படம் முழுக்க இவர்கள் தொடர்ந்து வருவது மேலும் எரிச்சலைக் கூட்டுகிறது.
நடனம் – ராஜூ சுந்தரம், கலை – டி.முத்துராஜ், ஒளிப்பதிவு – நடராஜன் சுப்பிரமணியன், எடிடிங் – ஸ்ரீகர் பிரசாத், நான்குமே நன்றாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் மோசம். டிஎஸ்பி நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். கம்பியுடர் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.
விஜயின் நடிப்பில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரே மாதிரி செய்வதால் சமயங்களில் அலுப்பு தட்டுகிறது. அரசியல் நெடி வசனங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு உள்ளன, முக்கியமாக படம் முடிவில். இவரும் அரசியலில் குதிப்பதாக இருந்து சினிமாவை ஒரு பிளேட்பார்மாக பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.
ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். படம் வேஸ்ட் என்று நினைத்துப் போனால், பரவாயில்லையே நன்றாகத் தானே இருக்கிறது என்று எண்ண வைக்கும் இப்படம்.