பிசாசு – திரை விமர்சனம்

pisasu1

பேய் கதை என்று அதீத பயமும் இல்லை, நம்பகத் தன்மை அற்றும் இல்லை. நிச்சயம் வித்தியாசமானத் திரைக்கதை. ஆரம்பம் முதலே நல்ல விறுவிறுப்பு, அது இறுதி வரை தொடர்வதே படத்தின் வெற்றி. நன்றாக ஆராய்ச்சி செய்து எடுத்துள்ளார் மிஷ்கின்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் நன்றாக செதுக்கியுள்ளார். குறைந்த அளவே பாத்திரங்களை வைத்து நிறைவான ஒரு படத்தைத் தந்த மிஷ்கினுக்கு மனமார்ந்த பாராட்டு. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான். அது படத்தின் முக்கியமான பலமாகும்.

இந்த படத்தை உருவாக்கிய மொத்தக குழுவும் சிறப்பாக அமைந்தது தயாரிப்பாளர் பாலாவுக்கும் இயக்குநர் மிஷ்கினுக்கும் அதிர்ஷ்டமே. ஒளிப்பதிவாளர் ரவி ராய் படத்தின் கதையை விஷுவலாக சொல்லிவிடுகிறார். மிஷ்கின் சொல்ல வந்ததை அவர் காட்டிவிடுகிறார். பேய் கதை ஆயினும் படம் வெளிச்சமாகப் படமாக்கப் பட்டுள்ளது 🙂

இசை, புதியவர் Arrol Corelli. அவர் ஒரு வயலினிஸ்ட் என்று கேள்விப்பட்டேன், அதனால் வயலின் இசை படத்தில் தூக்கலாக இருக்கிறது. அனால் வயலின் இசை முன் பாதியில் கதையோட்டத்துக்கு நிச்சயமாக உயிரூட்டுகிறது. வயலின் தெரிந்தவரோ அல்லது படத்துக்காகக் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை, நாயகன் வாசிப்பும் பிரமாதம். படத்தில் முன் பாதியில் அவரின் மன நிலையை பிரதிபலிக்கும் ஒரு melancholy moodஐ அந்த வயலின் இசை கொண்டு வருகிறது.

Editing கோபிநாத். கதையோட்டத்தைப் பாழ் படுத்தாமல் கச்சிதமான எடிடிங். ராதாரவியைத் தவிர நடித்தவர்கள் யாரும் பிரபலமில்லை. ஆனால் அனைவரும் நன்கு நடித்துள்ளனர். பாத்திரங்களின் யதார்த்தத் தன்மையும், அதனால் வரும் நகைச்சுவையும் படத்தை நல்லதொரு entertainment ஆக்கியுள்ளது.

படத்தில் வரும் வீடும், அபார்ட்மென்ட் காம்ப்லெக்சும் அழகாக உள்ளன. ஜெயஸ்ரீ லக்ஷ்மிநாராயணன் என்கிற பெண் தான் கலை இயக்குநர். அவர் கைவண்ணம் மிளிர்கிறது.

அமானுஷியத்திலும் அன்பின் வெளிப்பாட்டை நன்கு காட்டியுள்ள மிஷ்கின், இனி அவர் எடுக்கும் மற்றப் படங்களையும் இவ்வாறு சிறப்புடன் செய்ய வாழ்த்துகள் 🙂

pisasu