காதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்

kkp

My Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் க க போ! நலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மறுபடியும் இணைந்து கொடுக்கும் படம் இது. சூது கவ்வும் படத்தின் தரத்தை எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே. சூது கவ்வும் ஒரு மாறுபட்ட கதையாலும், கதை சொல்லும் விதத்தாலும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

ரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவு {தினேஷ் கிருஷ்ணன்} என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய மழை வரும் சீன்கள் உள்ளன, படம் முடியும்போதும் மழை தான். அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது என்ன வெளியே மழை இல்லையே என்று ஒரு நொடி தோன்றுகிறது. அந்த அளவு அருமையான ஒளிப்பதிவு! பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு இந்தப் படமும் ஒரு ஹிட் தான்.

ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்பு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்.

விஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.

நாயகன் நாயகி இருவரின் பாத்திரமும் நன்றாக செதுக்கப் பட்டுள்ளது. முதலில் இருந்து கடைசி வரை அவர்கள் பாத்திரத் தன்மையில் பிறழ்ச்சி இல்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ஒரு கவிதை போல் உள்ளது.

பிரச்சினை கதையில் தான் வருகிறது. எந்த குறிக்கோளுக்காக யாழினி சென்னையில் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. விழுப்புரத்தில் இருந்தும் கூட அவர் மறுபடியும் வேலை தேடிக் கொண்டிருக்கலாம். அதே மாதிரி கடைசியில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்று புரியவில்லை. சமுத்திரக் கனியை கொல்ல முடிவெடுத்ததும் ஏனென்று தெரியவில்லை. அதையும் தவிர அவ்வளவு கெட்டவனான சமுத்திரக்கனி வேலையை முழுதும் முடிக்காமல் போவதும் ஏனோ?

க்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் பங்களிப்பால், ஒரு பீல் குட் மூவியை பார்த்த எண்ணம் அரங்கை விட்டு வெளியே வரும்போது வருகிறது.

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills