கோலமாவு கோகிலா – திரை விமர்சனம்

நயன் இப்போ சூப்பர் ஸ்டார் லெவல். நயன் தேர்ந்தெடுக்கற கதைகளும் அந்த லெவல் தான். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றும் ஒரு விதம், மேலும் அவர் அப்படங்களில் ஹீரோ அளவுக்கு முக்கிய வேடத்தில் வருகிறார் அல்லது ஹீரோவுக்கு ஜோடி என்றாலும் நடிக்க நல்ல வாய்ப்புள்ள பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தப் படமும் மிகவும் வித்தியாசனமான படம் தான்.

பேய் படங்கள் சீசன் மாதிரி இப்போ டார்க் க்ரைம் காமெடி சீசன். கோலமாவு கோகிலா அத்தகைய கதையே! பொருளாதரத்தில் நடுத்தரக் குடும்பத்துக்கும் கீழுள்ள ஒரு குடும்பத்தின் மூத்த மகளாக பொறுப்புள்ள அழகிய பெண் கோகிலாவாக வருகிறார் நயன்தாரா. அவர் வேலையில் சந்திக்கும் செக்ஸுவல் ஹேரஸ்மென்டை எதிர்த்து வெளியேறும் விதம், பின் அடுத்த வேலையை விரைவில் சேரும் சாமர்த்தியம் இவை மூலம் அவர் பாத்திரத் தன்மையை ஏழை குடும்பப் பெண் என்றாலும் கெத்தும், சாமர்த்தியமும் உடையவர் என்று முதல் காட்சிகளிலேயே புரிய வைத்து விடுகிறார் இயக்குநர் நெல்சன். அதன் பின் அம்மாவின் நோயின் மருத்துவ செலவுக்காக சந்தர்ப்பவசத்தால் ஒரு குறுக்கு வழி தெரியும்போது அதைப் பற்றிக் கொண்டு பணம் ஈட்ட ஆரம்பிக்கும் வரை நன்றாகவே யதார்த்தத்துடன் நகர்கிறது கதை. அடுத்து அந்த ஹெராயின் கடத்தும் கும்பலுடன் சேர்ந்து கொலை செய்வதையும் சகஜமாக பார்க்கும் போது (அசால்டாக இன்னொரு கொலை செய்யத் தூண்டுவது எல்லாம்!!!!) அந்தப் பாத்திரத்தின் தன்மை இயல்புக்கு எதிராக மாறுகிறது. அம்மாவுக்காக என்று செய்யும் சில செயல்கள் தவறாக இருந்தாலும் பயந்து பயந்து செய்யும் நேர்த்தி நன்றாக இருக்கிறது ஆனால் தீடீரென்று தேர்ந்த கடத்தல்காரியாக மாறும்போது நெருடல் ஏற்படுத்துகிறது.

அந்த நெருடலை பொருட்படுத்தாவிட்டால் அதற்குப் பின் திரைக்கதை கொஞ்ச நேரத்துக்கு நன்றாக நகர்கிறது. யோகி பாபு நயன் மேல் ஒரு தலைக் காதலுடன் அவர் வீட்டின் எதிர் பக்கத்தில் பொட்டிக் கடை வைத்திருக்கிறார். அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு, திரையில் தோன்றியவுடனே ஆர்பரிக்கிறது திரையரங்கம். அவரின் நகைச்சுவை பங்களிப்பினால் கொஞ்சம் இழுவையாக இருக்கும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. நயனின் தங்கையாக வரும் ஜெக்குலினின் ஒரு ரெண்டாங்கெட்டான் காதலனாக வரும் அன்புதாசனும் கலக்கலாக நடித்திருக்கிறார். அவர் பத்திரமும் நகைச்சுவைக்கு நன்றாக உள்ளது. ஆனால் நயனும் குடும்பத்தாரும் ஹெராயின் கடத்தலுடன் நிறைய பேரை கொலை செய்வதையும் எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் செய்வது அவர்களின் பாத்திரப் படைப்புக்கு சரியாக ஒத்து வரவில்லை. ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்கள் ஒரு டான் குடும்பத்து ஆண்கள் போல செயல்படுவது கதையோடு ஒன்றமுடியாமல் செய்துவிடுகிறது.

கொலைகள் இல்லாமல் சாமர்த்தியத்துடன் நயன் செயல்பட்டு எதிரிகளை வீழ்த்துவதாக காட்டியிருக்கலாம். பின் பாதியில் நூறு கிலோ ஹீரோயினுடன் அந்தக் குடும்பம் ஒரு வேனில் சுத்துவது எல்லாம் காதில் பூ. போலிஸ் அதிகாரியாக சரவணன் வருகிறார். அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். ஒரு ஹெராயின் விநியோகஸ்தராக மொட்டை ராஜேந்திரன். இவர்கள் எல்லாம் கதைக்கு நல்ல பலம். அனிருத்தின் இசையில் சில பாடல்கள் படம் வரும்முன்னே பிரபலம் ஆகிவிட்டன. பின்னணி இசையும் நன்றாக உள்ளது. சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் நன்றே.

சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது படம். ஆனால் எதிர்பார்த்த அளவு சுவாரசியமாக இல்லை. எதிர்பார்த்தது நம் தவறோ? ஹாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளிவந்த We’re the Millers படத்தின் காப்பி இந்த படம், அதில் ஹீரோ பிரச்சனையில் மாட்டிக்கொள்வார், அதை மாற்றி இப்படத்தில் ஹீரோயின். அனால் படத்தை முழுவதுமாக தாங்கி நிற்கிறார் நயன்தாரா, அதில் ஒரு சந்தேகமும் இல்லை. (சாவித்திரி மாதிரி ஒரு கண்ணில் மட்டும் அழுகிறார்). அவருக்கு இது ஒரு வெற்றிப் படம்!