எங்கள் நண்பர் குழாம் பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கேன். அதில் மூன்று தோழிகளின் மகள்களுக்கும் இரண்டு தோழிகளின் மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இன்று விடிகாலையில் வரிசைப்படி முதலில் திருமணம் புரிந்து கொண்ட எங்கள் தோழியின் மகளுக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்து எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள்.
காதல் திருமணத்தின் அன்புப் பரிசு இந்தக் குழந்தை! 2009ஆம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது, காதல் என்றாலே எதிர்ப்பும் சகஜம் தானே? இந்தத் திருமணத்திலும் அதற்குக் குறைவில்லை. ஆனால் அவர்களின் அன்பு வென்றது. இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு சிங்கையில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு இறைவன் அருளால் குழந்தை வரம் இப்பொழுது கிடைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் அவளுக்கு வளைகாப்பு வைபவம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அவளின் due date அடுத்த மாதம் 15 ஆம் தேதி தான். என் தோழி 18ஆம் தேதி இங்கிருந்து கிளம்பி உதவிக்குச் செல்வதாக இருந்தது. அதற்குள் நேற்று காலை என் தோழியின் மகளின் உடல் சுகவீனம் அடைந்து அவளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. என் தோழிக்கு இரவு 11.30 மணி விமானத்தில் தான் இடம் கிடைத்தது.
ஒரொரு தோழியின் பிள்ளைகளும் எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் போலத்தான். எங்கள் தோழி பட்ட துடிப்பையும் நாங்களும் பட்டோம். நல்லபடியாகப் பிரசவம் ஆகவேண்டுமே என்ற கவலை. இடுப்பு வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும் சூழலில் இருந்து சிறிது சிக்கல் ஏற்பட்டு உடனே சிசேரியன் செய்ய வேண்டிய சூழல் வந்தது. ஆனால் நல்லபடியாக அறுவை சிகிச்சை மூலம் 16.10.2௦14 விடிகாலை 3.47 எங்கள் குழுவின் முதல் பேத்தி புனர்பூச நட்சித்தரத்தில் உதித்தாள். தாயும் சேயும் நலம், எங்கள் தோழி குழந்தை பிறந்ததும் தான் சிங்கை சென்றடைந்தாள்.
ஒவ்வொரு தோழியின் பிள்ளைகள் திருமணத்திலும் மகிழ்ச்சியோடு பங்குபெறும் நாங்கள் இம்முறை பிரசவம் ஆகும் வரை சேர்ந்து கவலைப்பட்டு பின் நல்ல செய்தி வந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தோம். ஒவ்வோர் குழந்தையின் திருமணத்தின் போதும் வரும் மருமகளிடமும் மருமகனிடமும் உனக்கு ஒரு மாமியார் இல்லை, பத்து மாமியார்கள் என்று பயமுறுத்துவோம் ஆனால் பேத்தி பிறந்த எங்கள் தோழி மட்டுமே தற்சமயம் பாட்டி என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙂
குழந்தையின் பெயர் சாஷா 🙂 மனிதகுலத்தைக் காப்பவள் என்று பொருள்! பார்க்க ரோஜா பூப் போல அவ்வளவு அழகாக இருக்கிறாள். சாஷா நோய் நொடியின்றி நூறாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.