Baby face Bobby Simha அதிரடியா நடித்திருக்கும் ஒரு வகை அரசியல் thriller/நையாண்டி படம் கோ 2. இரண்டு மணி நேரமே படம் என்றாலும் முதல் பாதியில் சூடு பிடிக்க நேரம் ஆகிறது. பின் பாதியில் முடிச்சுகள் அவிழ்கையில் சுவாரசியம் கூடுகிறது. சில வசனங்களில் இன்றைய ஆளும் கட்சியை சாடும் அரசியல் காட்சிகளை அரங்கேற்றினாலும் தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தினால் வாக்களிப்பதில் பெரும் மாற்றமோ பாதிப்போ ஏற்படாத வண்ணம் சவ சவ என்று அமைந்திருப்பது இப்படத்தின் மைனஸ்.
திரைக் கதையில் தெளிவு இல்லை. பின் பாதியில் தான் கதையே சரியாகப் புரிகிறது. சஸ்பென்ஸ் தேவை தான் ஆனாலும் கதை முதலில் இருந்து புரிந்தால் தான் சஸ்பென்ஸ் கடைசியில் எடுபடும். பாபி சிம்ஹாவுக்கு ஏற்ற பாத்திரம், கச்சிதமாக செய்திருக்கிறார். சினிமா இலக்கணத்துக்கு ஏற்ப ஒரு சண்டை காட்சி, டூயட் இரண்டும் உள்ளது. நிக்கி கல்ராணி ஹீரோயின். பிற மாநில நடிகைகளை இரு கரம் நீட்டி தமிழ் திரையுலகம் வரவேற்கும் என்பது எழுதப்படாத விதி. நம் தலைவிதியும் அதுவே. அதனால் நடிப்பைப் பற்றி யார் கவலைப் படப் போகிறார்கள்? வெள்ளைத் தோல் போதும். அது நிறையவே உள்ளது, முக்கியமாக பாடல் காட்சியில். ஹீரோயினுக்கு உடையமைப்பு யார் என்று தெரியவில்லை. சுத்தமாக செட் ஆகவில்லை.
முதல்வராக பிரகாஷ் ராஜ். நடிக்க ஸ்கோப் இருந்தா தானே பாவம் அவரும் நடிக்க முடியும்? முதல்வன் படத்தின் ரகுவரன் அர்ஜுன் தொலைக் காட்சி பேட்டி கண் முன் வந்து மனக் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டுப் போகிறது. அதே மாதிரி கேள்வி பதில் செஷன் கிட்நேப் செய்யப்பட முதல்வருடன் பாபி சிம்ஹாவுக்கு உள்ளது. ஆனால் சேர்க்கப்பட்ட சம்பவங்களும் வசனங்களும் ரொம்ப சுமார் ரகம். இளவரசு, நாசர், கருணாகரன், ஜான் விஜய் சின்ன பாத்திரங்கலில் வந்தாலும் நன்றாக செய்திருக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டராக வரும் அந்த காமெடி நடிகர்{பெயர் தெரியவில்லை} புது மாதிரியாக நடிப்பதாக நினைத்துக் கொண்டு செய்யும் மேனரிசம் கடுப்பை மட்டுமே வரவழைக்கிறது, மேலும் அது படத்தின் விறுவிறுப்பைக் குறைக்கிறது. கோஹிலா கோஹிலா என்ற பாடல் மட்டும் நன்றாக உள்ளது. மற்ற பாடல்கள் சுமார். புது இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ். இது தான் அவர் முதல் படம். ஒளிப்பதிவாளர் பிலிப் சுந்தர் டூயட் பாடலை மிகவும் நன்றாக படமாக்கியுள்ளார்.
இது சின்ன பட்ஜெட் படம் தான். அதனால் போட்ட பணத்தை எடுத்துவிடுவார் தயாரிப்பாளர். இன்னும் விறுவிறுப்பாக பொறி பறக்கும் வசனங்களுடன் எடுத்திருக்கலாம், ஆனால் படம் ரிலீஸ் ஆகாமல் போக வாய்ப்பிருந்திருக்கும். இதிலேயே சென்னை வெள்ளம் பற்றிய ரெபரன்ஸ் மற்றும் ஆளுங் கட்சியை கேள்வி கேட்கும் வகையில் சில வசனங்கள் இருந்தும் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தயாரிப்பாளருக்கும் ஹீரோ இயக்குநருக்கு கட்டம் சரியா இருந்திருக்கும் போல!