ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்

okk

செம ஜாலி படம். அவ்வளவு மகிழ்ச்சியை ஒரு படம் பார்க்கும்போது பெற முடியும் என்று உணர்த்திய மணி ரத்தினம் அவர்களுக்கு நன்றி 🙂 துல்கர் சல்மான் top notch! அந்த ரோலுக்குப் பச்சக் என்று பொருந்துகிறார். (pun not intended 🙂 ) நித்யா மேனனும் ரொம்ப நன்றாகச் செய்திருக்கிறார். Both are very cute 🙂

இன்றைய இளைஞர்கள் எண்ணம், வாழ்க்கை முறையைக் காட்டும் கதை. அதுவும் முக்கியமாக மெட்ரோ நகரங்களில் நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களிடையே இவ்வாழ்க்கை முறை சகஜமாகி வருகிறது. ஆனால் பண்பாட்டுக் காவலர்கள் இதற்கு என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. படத்தின் முடிவு நம் கலாச்சாரத்துக்கு மாறுபடாமல் இருப்பதால் எதிர்ப்பவர்களும் வலுவுடன் எதிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.

துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகிய இருவருக்கும் துடிப்பான அதே சமயம் உணர்ச்சிகளை நன்குக் காட்டக்கூடிய பாத்திரங்கள்! பழைய வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வயதான கதாப்பாத்திரங்களாக பிரகாஷ் ராஜ், லீலா சேம்சன். படத்தில் உள்ள அனைவருமே மணிரத்னம் இயக்கத்தில் அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள். அல்சைமர்ஸ் என்கிற மறதி நோயை மிகச் சரியாகவும், caregiver ஆக பிரகாஷ் ராஜ்ஜின் பாங்கான பராமரிப்பையும் அழகாகக் காட்டியிருக்கும் மணி ரத்தினத்துக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டுப் பூங்கொத்து.

இசை இப்படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட். பாடல்களும் சரி, பாடல்களை ஆங்காங்கே பின்னணி இசையாகப் போட்டிருக்கும் நேர்த்தியும் சரி, மிக நன்று. ரஹ்மான் இதை இளைஞர்களுக்கானப் படம் என்று சமைத்துக் கொடுத்து விட்டார்.

P.C.ஸ்ரீராம் திரைக் கதையை ஒளி ஓவியமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

படம் ஓடும் நேரம் 2மணி 18நிமிடங்கள். விரு விரு என்று செல்கிறது. நன்றி editor சார்.மும்பையில் பிராகாஷ் ராஜின் பழமையான வீடு கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அது செட்டாகத் தான் இருக்கும். கலை – சர்மிஷ்டா ராய்.

எப்பவும் இருக்கும் மணி படங்களில் கீழ் வருவன இல்லாதது பெரு மகிழ்ச்சியைத் தந்தது 🙂

1. படம் முழுவதும் ஒரு வகை இருட்டு

2. கிசுகிசுப்பான காதிலேயே விழாத ஒலியில் அனைவரும் பேசுவது.

3. ஒரு சொல் வசனங்கள்.

இவை கூட இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இளைஞர்களுக்கும், மனத்தால் இளைஞர்களாக இருப்பவர்களுக்கும் romantic outlook உள்ளவர்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் 🙂

இப்படம் U/A. குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

okk1