இராமானுஜர் பகுதி – 5

ramanujar10

பெரிய திருமலை நம்பி

பிறகு பயணத்தைத் தொடர்ந்து திருமலை அடிவாரத்துக்குச் சென்று அங்கு தங்குமிடம் ஏற்படுத்திக் கொண்டார் இராமானுஜர். வேங்கடவனையும் இலட்சுமியையும் ஆழ்வாரக்ளையும் தியானித்து உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக் கொண்டார். பூலோக வைகுந்தமாகத் திகழும் திருமலையில் பெருமாளும் தாயாரும் வசிப்பதால் மலை மேல் நடந்து செல்ல அவர் மனம் ஒப்பவில்லை.

அவர் வருகையைத் தெரிந்து கொண்டு, யாதவராஜன் என்னும் அரசன் அவரை தரிசிக்க வந்தான். அவரை வணங்கி அவரின் சீடனாக வேண்டும் என்னும் விருப்பத்தைத் தெரிவித்தான். இராமானுஜரும் அவனை சீடனாக ஏற்றுக் கொண்டார். குரு தட்சணையாக அம்மன்னன் அவருக்கு அளித்தக் கிராமங்களை அங்கிருந்த ஏழை எளியவர்களுக்கேப் பிரித்துக் கொடுத்தார். திருமலை திருப்பதியில் வசிக்கின்ற துறவிகளும் அவரை தரிசிக்க வந்தனர். அவர்கள் அவரை திருமலை மேல் பாதங்கள் படக்கூடாது என்னும் எண்ணத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் மலை ஏறவில்லை என்றால் சாதாரண மக்களும் ஏறத் தயங்குவார்கள் என உணர்த்தியதும், அடியவர்களின் வேண்டுகோளை ஆணையாக எடுத்துக் கொண்டு அவர்களுடன் மலை ஏறினார்.

பாதி தூரத்தில் இவர் களைத்திருக்கும் சமயத்தில் மலையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஒரு முதியவர் இவருக்குப் பெருமாள் தீர்த்தமும் பிரசாதமும் அருளினார். அவர் வேறு யாரும் இல்லை, இவருக்குப் பெயர் சூட்டிய இவரின் தாய் மாமன் பெரிய திருமலை நம்பிகளே ஆவார். பின்பு திருவேங்கடவன் திருச்சன்னிதியை அடைந்தார். அங்கு பெருமாளை தரிசித்துவிட்டுத் தன் சீடனான அனந்தாழ்வானைக் (ஆனந்தாச்சாரியார்) கண்டு அவன் சேவையின் மேன்மையைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

திருமலையில் மூன்று நாட்கள் இருந்து பின் திருப்பதி வந்தடைந்து தன் மாமா திருமலை நம்பியின் திருமாளிகையில் தங்கினார். அங்கேயே ஒரு வருட காலம் இருந்து இராமாயணத்தை திருமலை நம்பியிடம் பயின்றார்.

கோவிந்த பட்டர்

அங்கே இவரின் உயிரை யாதவப் பிரகாசரின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றிய சித்தி மகன் கோவிந்தனை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்தார். திருமலை நம்பியின் அணுக்கச் சீடராக சேவை செய்து கொண்டிருந்தார் கோவிந்தன். அவரைக் கண்டதும் ஆனந்தத்தில் அவரை அணைத்துக் கொண்டார். அங்கிருந்த பொழுது தன் தம்பி கோவிந்தனின் உயரிய ஜீவகாருண்ய சேவையையும் குருவுக்குச் செய்யும் பணிவிடைகளையும் பார்த்துப் பெருமிதம் கொண்டார். யாதவ பிரகாசருடன் கோவிந்தர் காசிக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு அவர் கங்கையில் நீராடினார். அப்பொழுது அவருக்குக் கையில் ஒரு லிங்கம் கிடைத்தது. அவர் அந்த லிங்கத்தைக் காளஹஸ்தியில் பிரதிஷ்டை செய்து சைவ மதத்தைத் தழுவி வாழ்ந்து வந்தார். இந்த விஷயம் கேள்விப்பட்ட இராமானுஜர் திருமலை நம்பியிடம், கோவிந்தரிடம் வைணவ மதத்தின் சிறப்பினை எடுத்துக் கூறி வைணவத்துக்கே மறுபடியும் அவரை அழைத்து வருமாறு கூறினார். அவ்வாறே திருமலை நம்பியும் காளஹஸ்தி சென்று கோவிந்தரிடம் தர்க்க வாதம் புரிந்து வைணவத்தின் சிறப்பை எடுத்துரைத்து கொடுத்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார். அது முதல் கோவிந்தர் திருமலை நம்பியின் சீடராகவே இருந்து வந்தார்.

திருப்பதியை விட்டுக் கிளம்பும் போது உடையவரிடம் திருமலை நம்பி உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார். அதற்கு அவர் தன்னுடன் கோவிந்த பட்டரை அனுப்பும்படி வேண்டி யாசித்தார். திருமலை நம்பியும் கோவிந்தரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார். இராமானுஜர் பின் கடிகாசலம் திருப்புட்குழி ஆகிய ஊர்கள் வழியாக காஞ்சியை வந்தடைந்தார்.

இராமானுஜரும் கோவிந்தரும் காஞ்சி வந்தடைந்த பிறகு திருக்கச்சி நம்பிகளிடம் கோவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார். அவரின் நல்ல குணங்களை எடுத்துரைத்து கோவிந்தரின் சேவை மனப்பான்மை மேலும் வளர திருக்கச்சி நம்பிகளை ஆசீர்வதிக்கச் சொன்னார். கோவிந்த பட்டருக்குத் தன் குருவான திருமலை நம்பியைப் பிரிந்து உடல் வாட்டமடையத் துவங்கியது. இதனை கவனித்த உடையவர் அவருடன் இரு சீடர்களை துணைக்கு அனுப்பி திருப்பதியில் அவர் மாமனும் குருவுமான திருமலை நம்பியிடம் விட்டுவிட்டு வரச் சொன்னார்.

அங்கே போன கோவிந்த பட்டரை திருமலை நம்பி திரும்பிக் கூட பார்க்கவில்லை, திருமாளிகைக்குள் வரச் சொல்லவும் இல்லை. அவர் மனைவி கோவிந்த பட்டருக்காகப் பரிந்துரைக்க, அதற்கு அவர் “விற்றப் பசுவுக்குப் புல் அளிப்பவருமுண்டோ” என்று கடிந்து கூறி திரும்பவும் அவனை இராமானுஜரிடமே போகச் சொல் என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்று சென்று விட்டார். கோவிந்தரும் ஏதும் அருந்தாமல் தன்னுடன் வந்தவர்களுடன் திரும்ப காஞ்சி வந்தடைந்தார். எம்பெருமானாரின் திருவடிகளில் விழுந்து “அடியேனை தம்பி என்று பாராமல் சீடனாக ஏற்று அருள் புரிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். திருமலை நம்பியிடம் எத்தகைய குரு பக்தியுடன் நடந்து கொண்டாரோ அதே குரு பக்தியுடன் அதன் பின் இராமானுஜரிடமும் நடந்து கொண்டார்.

கோவிந்த பட்டர் எம்பார் ஆனார்

காஞ்சியில் இருந்து அனைவரும் திருவரங்கம் சென்றடைந்தனர். அங்கே யார் கோவிந்தரைப் புகழ்ந்தாலும் அது குருவுக்கே சொல்லப்படும் புகழ்ச்சியாக அவர் எடுத்துக் கொண்டார். ஒரு முறை வேசி வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார் என்று அவர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. இராமானுஜர் அவரை விசாரித்தார், “ஆச்சாரியரே, தங்கள் இனிய நற்குணங்களை அந்த வேசி அமுத கானமாகப் பாடிக் கொண்டிருந்தாள். முடியும் வரை கேட்டு மகிழவே அந்தத் திண்ணையில் அமர்ந்திருந்தேன்” என்றார்.

திருமணம் புரிந்திருந்தும் இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாமல் இருந்தார் கோவிந்தர். குருவின் கட்டளையின் பேரில் ஓர் இரவு மனைவியுடன் கழித்தார், ஆனால் அந்த இரவில் அவருக்கு காமம் அறவே ஒழிந்து, உள்ளத்தே பகவானின் அருட் பேரொளி நிறைந்திருந்தது. இதை உடையவரிடம் அவர் கூறினார். இதைக் கேட்ட இராமானுஜர் இந்திரியங்களை வெல்லும் ஆற்றல் உனக்கிருந்தால் நீ சந்நியாசம் வாங்கிக் கொள் என்று அறிவுருத்தினார். இதைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்தார் கோவிந்தர். தன் தாயாரின் அனுமதியோடு சந்நியாசம் பெற்றுக்கொண்டார். இராமானுஜரும் தமக்களித்த எம்பெருமானார் என்னும் பட்டத்தை கோவிந்தருக்குச் சூட்டினார்.

தாஸ்ய பக்தியின் வடிவமாக விளங்கிய கோவிந்தர் தன் ஆச்சாரியனின் திருப்பெயரை ஏற்க அஞ்சி, எம்பெருமானார் என்ற திருநாமத்தைச் சற்று மாற்றி எம்பார் என்றே அழைக்கப்படலானார்.

ஸ்ரீ பாஷ்யம் அருளல்

இராமானுஜருக்குத் திருவரங்கத்தில் ஆயிரமாயிரம் சீடர்கள் சேரலாயினர். அதில் எழுபத்தி நான்கு பேர்கள் சிம்மாசனாதிபதிகள் என்று அழைக்கப் படலாயினர். ஆளவந்தாரின் குறையைப் போக்க தான் கொடுத்த வாக்கை இன்னும் நிறைவேற்றவில்லை என்பதை நினைவு கூர்ந்தார் உடையவர். பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதுவதாக அவர் வாக்களித்திருந்தார்.

ஸ்ரீ போதாயன மகரிஷி எழுதிய கிரந்தம் கிடைத்தாலன்றி அவரால் பிரம்ம சூத்திரத்துக்கு விளக்கம் எழுத முடியாது. அது காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடத்தில் இருக்கிறது என்று தெரிய வந்து தன் சீடர்களுடன் அங்கு யாத்திரையாகப் புறப்பட்டார். மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த மடத்து

மக்களுடன் நன்முறையில் பழகி தான் வந்த காரியத்தைச் சொன்னார். போதாயன மகரிஷிக்கு நிகரான புலமையை உடையவர் இவர் என்று அவர்கள் புரிந்து கொண்டு எங்கே இந்நூல் இவர் கைக்குக் கிடைத்தால் அத்வைத மதத்துக்கே விரோதி ஆகிவிடுவாரோ என்று அஞ்சி புத்தகம் செல்லரித்து விட்டது என்று பொய் சொல்லிவிட்டனர்.

மிகவும் மன வருத்தத்துடன் இரவு உறங்கச்சென்ற எம்பெருமானார் கனவில் சரஸ்வதி தேவியே வந்து அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, உடனே இவ்விடத்தை விட்டு விரைவில் போய் விடுங்கள் அல்லது துன்பம் நேரும் என்று அருளினார்.

அதனால் இராமானுஜரும் உடனே தன் குழுவுடன் தென் திசை நோக்கிக் கிளம்பினர். ஆனால் சில நாட்களிலேயே சாரதா தேவி மடத்தினர் நூல் நிலையத்தில் உள்ள நூல்களை சரி பார்க்கையில் இந்தக் கிரந்தம் இல்லாதது கண்டு வந்தவர்கள் தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று ஊகித்துப் புத்தகத்தைத் திரும்ப வாங்க காஷ்மீரப் பண்டிதர்கள் சிலர் புறப்பட்டனர். ஒரு மாத காலத்திலேயே உடையவர் குழுவைக் கண்டுபிடித்து புத்தகத்தை மீட்டுச் சென்றனர்.

இந்த ஒரு மாத காலத்தில் சிறு பகுதியை மட்டுமே இராமானுஜர் கற்றிருந்தார். மீதியைக் கற்பதற்குள் புத்தகம் பறிபோனதால் மிகுந்த வருத்தமுற்றார். கூரத்தாழ்வார் அவரை சமாதானப் படுத்தி முந்தின இரவே முழு கிரந்தத்தையும் தான் மனப்பாடம் செய்து விட்டதாகக் கூறினார். இதைக் கேட்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த இராமானுஜர் அவர் மூலம் முழு கிரந்தத்தையும் எழுதி வாங்கி அதற்கு விளக்கவுரையும் உடனே எழுதினார்.

திருவரங்கம் வந்த பின்னர் பிரம்ம சூத்திரத்திற்கு விருத்தி உரை எழுதும் பணியில் தன்னை முழுதுமாக ஈடுபடுத்தி விளக்கவுரையை இராமானுஜர் சொல்ல கூரேசர் எழுதினர். தியானம், உபாசனை, பக்தி, ஆகியவற்றின் மூலமே முக்தி அடைய முடியும் என்பதே வேத வேதாந்தத்தின் சாரம் என்று கூறி அவருடைய சித்தாந்தத்தை ஸ்ரீ பாஷ்யத்தில் உறுதி படுத்தினார்.

ஆளவந்தாரின் திருவுள்ளக் குறையாக இருந்தவற்றுள் முதலாவதான குறையை, திவ்யப் பிரபந்தத்தைத் “திராவிட வேதம்” என்னும் பெயரால் உலகறியச் செய்து, அதனை வடமொழி வேதத்துக்கு ஒப்பானது என்று நிறுவியதன் மூலம் போக்கியருளினார். பிரம்ம சூத்திரத்துக்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்ததன் மூலம் இரண்டாவது விருப்பத்தையும் பூர்த்தி செய்தார்.

திவ்ய தேச யாத்திரையும் வைணவ சமயத்தைப் பரப்புதலும்

பின்னர் அவர் தன் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளுடனும், எண்ணற்ற சீடர்களுடன் யாத்திரையாகப் பல ஊர்களுக்குப் போனார். போகிற இடங்களில் எல்லாம் வைணவக் கொள்கைகளைத் தம் வாதத் திறமையால் பல இடங்களிலும் பரப்பினார்.

கும்பகோணத்தில் ஆரம்பித்து, திருவனந்தபுரம் வரை தெற்கே சென்று பலக் கோவில்களில் வழிபாடு செய்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சேர்ந்ததும் சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் நிறைவேறா ஆசை ஒன்றை நினைவு கூர்ந்தார். தனது திருமணத்தின் போது நூறு அண்டாக்களில் அக்கார அடிசில் செய்து சீதரனக்கு அர்ப்பணிக்க அவள் ஆசை கொண்டிருந்தது கை கூடாமல் போயிருந்தது. அந்த சன்னதியில் அது அவருக்கு நினைவுக்கு வந்தது. தங்கைக்கு ஒரு தமையன் தருகிற திருமணச் சீராக நூறு அண்டாக்களில் நெய் ஒழுக அக்கார அடிசில் ஆக்கி வடபத்திர சாயிக்கு வழங்கினார். அந்த நொடியே ஆண்டாள் அவர் அகக்கண் முன் தோன்றி “எம் அண்ணாவே” என்று வாஞ்சையோடு கூப்பிட்டாள். அதனால் தான் இன்றும் வில்லிப்புத்தூர் ஆண்டாள் “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்று போற்றப்படுகிறாள்.

பின் வடக்கு நோக்கிப் பயணமானார். துவாரகை, மதுரா, பிருந்தாவனம், சாலிக்கிராமம், சாகேதம், பத்ரிநாத், நைமிசாரிண்யம், புஷ்கரம் ஆகிய திவ்ய தேசங்களை தரிசித்துப் பின் காஷ்மீரம் சென்றார். அங்கே சாரதா தேவியை வணங்கி “கப்யாசம் புண்டரீகாக்ஷம்” என்பதன் பொருள் சிறப்பை இராமானுஜர் விளக்கக் கேட்டு ஸ்ரீ பாஷ்யம் அருளியமைக்கு சரஸ்வதியே மகிழ்ந்து அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்னும் பட்டத்தை அளித்தார்.

காஷ்மீர மன்னர்களும் பண்டிதர்களும் இராமானுஜரின் புலமைக்குத் தலை வணங்கி அவருக்குச் சீடராயினர். பின் காசி சென்று, ஜகன்னாதத்தில் ஒரு மடமும் நிறுவினார் இராமானுஜர்.

இந்த சமயத்தில் திருமலையில் இருப்பது திருமாலா இல்லை சிவனா என்று வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் பெரும் சண்டை நடந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு முடிவு காண இராமானுஜர் முயற்சி செய்தார். திருவேங்கடவன் முன் சங்கு சக்கரமும், சிவனுக்குரிய சூலம் ஆகியவைகளை வைத்து இரவு திருக்கதவு மூடப்பட வேண்டும். விடிகாலை எதனை இறைவன் தரித்து இருக்கிறார் என்று பார்த்து முடிவு செய்யலாம் என்று ஆலோசனை கூறினார். அவ்வாறே செய்யப் பட்டது. அடுத்த நாள் விசுவரூப தரிசனத்துக்குக் கதவு திறந்தபோது சங்கு சக்கரங்களைத் தரித்தவராய் திருவேங்கடவன் காட்சி அளித்தார்.

இவ்வாறு வடக்கே காஷ்மீரம் முதல் தெற்கே திருவேங்கடம் வரை அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்திப் பின் திருவரங்கம் வந்தடைந்தார்.

கூரத்தாழ்வார்

கூரத்தாழ்வார் நினைவாற்றலால் தான் உடையவர் ஸ்ரீ பாஷ்யம் எழுத முடிந்தது. பிரம்ம சூத்திர விருத்தி உரையில் தவறு ஏற்படாத வண்ணம் கூரத்தாழ்வார் தன் புலமையால் உடையவருக்கு உறுதுணையாக இருந்து வந்தார். மேலும் வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதாந்த சங்கிரகம், கீதா பாஷ்யம் ஆகிய நூல்களை ஸ்ரீ இராமானுஜர் இயற்றி அருளினார். இதைத் தவிர சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம் என்னும் கிரந்தங்களையும் நமக்கு அருளியுள்ளார்.

பெரும் செல்வந்தராக இருந்த கூரத்தாழ்வார் அனைத்தையும் துறந்து இராமானுஜரின் முதன்மை சீடராக ஆன பின்னால் அவர் தினம் பிச்சை எடுத்தே உண்டு வந்தார். ஒரு நாள் அடைமழை பெய்ததால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டார் கூரேசன். அவர் பட்டினி கிடப்பதைப் பார்த்து மனம் தாளாமல் அவர் மனைவி அரங்கனை வேண்டினாள். திருவரங்கன் திருவருளால் கோவில் பரிசாரகர்கள் சிலர் வீட்டுக்கு வந்து அறுசுவை உணவான பிரசாதத்தை வைத்துவிட்டுப் போயினர். அதை இருவரும் உண்டு பாசுரங்களை சேவித்தவாறு உறங்கினர்.

மகாபிரசாதத்தை உண்டதன் பலனாக அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஒரே சமயத்தில் பிறந்தனர். மூத்தக் குழந்தைக்கு பராசர பட்டர் என்றும் இளைய குழந்தைக்கு வேத வியாச பட்டர் என்றும் இராமானுஜர் பெயர் வைத்தார். ஆளவந்தாரின் திருவுள்ளக் குறையாக இருந்த மூன்றாவதையும் பூர்த்தி செய்தார் இராமானுஜர்.

ramanujar11

இப்பகுதி “நமது திண்ணை” இணைய இதழின் செப்டம்பர் மாத வெளியீட்டில் வந்துள்ளது. இது மறு பதிவு.