புரியாத புதிர் – திரை விமர்சனம்

ரஞ்சித் ஜெயகொடியின் முதல் படம், நீண்ட தாமதத்திற்குப் பிறகு வெளி வந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருப்பதால் பாராட்டுக்குரியதாகிறது. எழுதி இயக்கியிருக்கும் ரஞ்சித் ஒரு தேர்ந்த திரையுலக படைப்பாளியாக முதல் படத்திலேயே பெயர் வாங்குகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பு மிக மிக அருமை. அட்டகாசமாக செய்திருக்கிறார். தன் காதலிக்கு நேரும் துன்பத்தைக் கண்டு பத்தட்டப் படுவதும்,  அதிர்ச்சிக்கு உள்ளாகும்போதும் அனாயசமாக பாத்திரத் தன்மையை உள்வாங்கி வெளிக் கொண்டு வருகிறார். மேலும் மூன்று வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு நடந்திருப்பதால் குறைந்த எடையுடன் இருக்கும் விஜய் சேதுபதியைக் கண்டு களிக்க முடிகிறது.  பொதுவில் கதாநாயகிகளுக்குக் கிடைக்காத கனமான பாத்திரம் ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ காயத்திரிக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. நடிக்கிறார் என்பதே தெரியாத அளவு பாத்திரத்தில் ஒன்றி சிறப்பாக பங்களித்துள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பும் இப்படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

லென்ஸ் சொல்ல வந்தக் கருத்தை இப்படமும் முன்னிறுத்துகிறது. ஆனால் சொல்ல வந்தப் பிரச்சினை ஒன்றாக இருப்பினும் முற்றிலும் வேறு கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் நெருங்கும் வரை யூகிக்க முடியாத கதையம்சத்துடன் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருகிறார் இயக்குநர். படத்தின் ஒன் லைன் – நமக்கு ஏற்படும் வரை இழப்பின் வலி நமக்குத் தெரியாது என்பது தான். அதுவும் இன்றைய கால கட்டத்தில் பலான காணொளிகளை இணையம் மூலம் பலருக்கும் பகிர்வதை சகஜமாக நினைக்கும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு நல்ல பாடமாக அமையும் என்று நம்புகிறேன். குற்ற உணர்வு வருமா, மக்கள் திருந்துவார்களா என்று தெரியாது ஆனால் மனத்தில் உரைக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சாம் C.S. பல இடங்களில் பின்னணி இசையே திரைக்கதையாகிறது. பாடல்களும் நன்றாக உள்ளன. இசையைப் பொறுத்த வரையில் சபாஷ் சாம்! ஒளிப்பதிவும், முக்கியமாக லைட்டிங்கும் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து!

படக்காட்சி இரண்டு மணி நேரம் தான். இடைவேளை வரை இருக்கும் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் இரண்டாவது பாதியும் நன்றாக அமைந்துள்ளது. அருவருப்போ, ஆபாசமோ இல்லாமல் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு. அச்சு பிச்சு காமெடி இல்லை. காதலில் சொதப்புவது எப்படி அர்ஜுனனுக்கு பெரிய பாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கும் காயத்திரிக்கும் அதிக வாய்ப்புகள் வர வாழ்த்துகள்.

குறையில்லாமல் இருக்குமா? ரமேஷ் திலக் வரும் பகுதியில் சில விஷயங்கள் விளக்கப்படாமல் உள்ளது. அது தனிப்பட்ட ஒரு சம்பவம் எனில் நாயகியை வாயை கட்டி கையை கட்டி அவர் என்ன செய்வதாக இருந்தார்? அது ரசிகரை குழப்புவதற்காக போடப்பட்ட முடிச்சா என்று புரியாத புதிராக உள்ளது. அந்த உதிரி பகுதியையும் சரியாக விளக்கியிருக்கலாம் இயக்குநர்.

மற்ற இணை பத்திரங்களில் வந்த அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.  சோனியா தீப்தி சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனத்தில் நிற்கிறார். நிறைவைத் தருகிற குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. புரியாத புதிர் டீமுக்கு வாழ்த்துகள்.