சென்னையில் ஒரு நாள் – திரை விமர்சனம்

chennaiyil oru naal

கதை என்ன என்று ஓரளவு தெரிந்து தான் படம் பார்க்கப் போனேன்.  Traffic என்று மலையாளத்தில் வந்த படத்தின் தமிழ் ரீமேக். மூளை இறந்த ஒருவரின் இதயத்தை இன்னொரு மாற்று இதயம் தேவையான நோயாளியிடம் மிக விரைவாகச்  சென்று சேர்ப்பிக்க வேண்டும். அது தான் கதை.

நல்ல ஒரு கதைக் கரு. இதில் முக்கியமாக இதயத்தை அல்லது வேறு ஒரு உறுப்பை எப்படி ஒரு உயிர் பிழைக்க முடியாத ஒருவரின் குடும்பத்தின் ஒப்புதலோடுப் பெறுவது, அவர்களின் உணர்வுகள், அதை பெறுபவரின் உணர்வுகள் இவற்றை போகஸ் செய்திருந்து படத்தை எடுத்திருந்தால் படம் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.

கோடம்பாக்கமே இருக்கிறது படத்தில். ஏன் என்று தான் தெரியவில்லை. அனாவசியமாக நடிகர்களுக்காக கதை எழுதப்பட்டிருக்கிறது. கதைக்காக நடிகர்கள் இல்லை. மேலும் ஒரு பாத்திர அமைப்புக் கூட முழுமையாக இல்லை, சிறப்பாகவும் இல்லை. பிரகாஷ் ராஜ் ஒரு சுநலம் மிக்க நடிகர் என்பது கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. அக்கறையுள்ள தாயாக ராதிகாவும் மகளின் கடைசி தருணங்கள் என்று நினைக்கும் நேரத்திலும் குழந்தையுடன் இல்லாமல் கணவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார். படத்தில் மகா கேவலமான ஒரு ட்விஸ்ட் பிரசன்னவால் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு மருத்துவருக்கான உடல் மொழியே பிரசன்னாவிடம் இல்லை. அவர் ஒரு டாக்டராம்!உயிர்ப்புள்ள சம்பங்களுக்காப் பஞ்சம்? உண்மையில் நடந்த சம்பவங்களைக் காட்டியிருந்தாலே படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.

இதில் ஒரே ஆறுதல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயப்ரகாஷின் நடிப்பு. ஆனாலும் அவர்களின் பாத்திரப் படைப்பு இன்கம்ப்ளீட். அந்த விபத்து நடப்பதற்கு முன் இன்னும் சஸ்பென்சோடு கதையை நகர்த்தியிருக்கலாம். ஒரு குட்டி சீனில் விஜயகுமார். சரத் குமார் தான் டிராபிக் போலிஸ் கமிஷனராக வருகிறார். படம் அவர் படம். நன்றாக நடித்திருக்கிறார். அனால் எடிட்டிங் சரியில்லையா, வசனம் சரியில்லையா, இல்லை திரைக்கதை சரியில்லையா, இல்லை ஒட்டு மொத்தமாக எல்லாமே சரியில்லையா என்று என்னால் சரியாக சுட்டிக் காட்ட முடியவில்லை. அதனால் சரத் குமாரும் சோபிக்கவில்லை.

Wait, I have kept the best #FacePalm for the last. #சூர்யா. கடவுளே! அவர் அவராகவே வருகிறார். அதுதான் ஆகச்சிறந்த கொடுமை. கடைசி கட்டத்தில் நெருக்கமாக வீடுகள் உள்ள காலனியில் டிராபிக்கை விலக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்கு அவர் அங்கு உள்ள அவர் ரசிகர்களுக்கு தொலைக் காட்சி மற்றும் வானொலி மூலம் அறிக்கை விடுகிறார். மக்களும் அவர் பேச்சைக் கேட்டு பர பரவென்று தீயாய் வேலை செய்து வழித் தடத்தை  சரி செய்து இதயம் கொண்டு செல்லும் வண்டியை விரைவில் செல்ல வழிவகுக்கின்றனர். அதற்கு பிறகு அவர் உறுப்பு தானம் செய்ய சொல்லி ஒரு ஸ்பீச். உண்மையாகவே கேட்கிறேன் இவர் என்ன பெரிய அப்பாடக்கரா? அவர் பேச்சும் செய்கையும் மிகவும் செயற்கையாகவும் எரிச்சலையூட்டுவதுமாக உள்ளது.

இந்தப் படத்தில் சேரனும் இருக்கிறார். முக்கிய பத்திரத்தில் வருகிறார். அவர் தான் வாகன ஒட்டி. அவர் பாத்திரப் படைப்பு மட்டுமே செயற்கைத் தனம் இல்லாது உள்ளது. விபத்து விளைவித்த பெண் காவல் நிலையத்தில் வந்து தகவல் சொல்கிறாள். பிறகு என்ன ஆச்சு என்பது நம் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது. பிரசன்னா ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் திரும்பவும் அவரை வண்டியில் சேரன ஏன் ஏற்றிக் கொள்கிறார் என்பது கடைசி வரை விடுவிக்கப் படாத ஒரு புதிர். வேலூர் மருத்துவமனையில் ராதிகா கையில் க்ளோபல் மருத்துவமனையின் பைல் உள்ளது. அஸிஸ்டன்ட் டைரக்டரும் சரியில்லை!

படம் பார்த்து திட்டுவதே என் வேலை என்று நினைத்து விடாதீர்கள். நல்ல படம் வந்தால் நிச்சயம் நல்ல விமர்சனம் எழுதுவேன். அடுத்து சேட்டை பார்க்கப் போகிறேன். படம் நன்றாக இருந்தால் விமர்சனம் உண்டு. இல்லையேல் கிடையாது 🙂

நீ தானே என் பொன் வசந்தம் – திரை விமர்சனம்

J

ரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட்  என்றால் என்னத்த சொல்ல! இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.

கதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன்? விண்ணை தாண்டி வருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.

சமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்)  ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வதில் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.

சந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்

natuvula

விழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி! அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.

சின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு! டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே!

பீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த  கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.

இந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர்  ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.

இது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.

துப்பாக்கி! விமர்சனம்

முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு மாஸ் விஜய் படம் 🙂 லோகல் ரௌடிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக பிரமோஷன் அடைந்து நாட்டின் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார் விஜய். முன்பு ஒரு படத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்திருப்பார். பாத்திரம் பொருந்தாது. இந்தப் படத்தில் அவருக்கு பாத்திரத்தை கனகச்சிதமாகப் பொருந்த வைத்திருப்பது இயக்குனரின் முதல் வெற்றி.

விறுவிறுப்பான திரைக் கதை படத்தின் வெற்றிக்கு அடித்தளம். விஜயை நாம் அசகாய சூரர் என்று ஏற்றுக் கொண்டு விட்டதால் அவர் தனி ஆளாகச் செய்யும் சாகசங்களை கேள்வி கேட்காமல் பாராட்டுகிறோம். அது தான் நியதி. அந்த நம்பிக்கையின் மேல் தான் இந்தப் படமே அமைந்து இருக்கிறது.

மும்பையிலேயே முக்கியக் காட்சிகள் எடுத்திருப்பதால் படம் நம்பகத் தன்மையோடு இருக்கிறது. நிச்சயம் முருகதாஸ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அவருக்காகப் படம் எடுக்காமல் விஜய்க்காக எடுத்திருக்கிறார். விஜயின் நடிப்பிலும் ஒரு முன்னேற்றம்/முதிர்ச்சி தெரிகிறது.

நடனத்தில் அவரை மிஞ்ச ஒருவர் வர வேண்டும். அனாயாச ஸ்டெப்ஸ்! பாடல்கள் தான் படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி இன்னும் இவ்வளவு மார்கெட் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர்! பின்னணி இசையும் அதே ரகம். கூகிள் பாடல் நன்றாக உள்ளது.

வடிவேலு இல்லாக் குறையை போக்க ஜெயராமன் ரொம்ப முயற்சி செய்கிறார்.  பாவம் பாதி தூரம் கூட அவரால் எட்ட முடியவில்லை. எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் மிகவும் அருமை.

எப்பொழுதும் முதல் நாளே பார்த்துவிட்டால் விமர்சனம் காதுக்கு வராது. கொஞ்சம் லேட்டாகப் பார்த்ததால் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு அந்த எண்ணத்தோடு போனதால் எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது 🙂

சொல்ல மறந்துவிட்டேன், ஹீரோயின் காஜல் அகர்வால் 🙂