பரியேறும் பெருமாள் – திரை விமர்சனம்

படத்தைப் பார்த்த பிறகு இதைப் பற்றி எழுத எப்படி எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. விமர்சனம் எழுதவும் எனக்குத் தகுதி இருக்கா என்ற எண்ணவைக்கும் ஒரு படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜின் முதல் படம். முத்திரை படம். தன் பணத்தைப் போட்டு இப்படத்தைத் தயாரித்து தான் பேசி வரும் சித்தாந்தம் வெறும் பேச்சளவில் இல்லை செயலிலும் உண்டு எனக் காட்டி தன்னை நிரூபித்து உள்ளார் தயாரிப்பாளர் பா.ரஞ்சித். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் பெரிய வகையில் பாராட்டுகள் உரித்தாகுக.

நம் நாட்டில் ஜாதி வெறி இரத்தத்தோடு ஊறி விடுகிறது. அதற்குத் தீனி போட்டு வளர்ப்பது நான் உயர்ந்தவன் என்கிற அதிகார பலமும், பண பலமும், சுற்றி நிற்கும் வலுவான இனத்தாரின் ஆதரவுமே. கீழ் ஜாதியினர் மேலெழும்ப முடியாமல் இன்னமும் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணம் அவர்கள் அந்த ஆதிக்க வர்க்கத்துக்கே ஊழியம் செய்து பிழைப்பதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பின்மையாலும், மிக முக்கியமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னேற முடியாமல் வரும் மேம்பாட்டுக் குறைவினாலுமே ஆகும். இவை அனைத்தையும் பிசிறில்லாமல் கதையமைத்துக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். பல உண்மை சம்பவங்களின் கோர்வை தான் என்றாலும் இது ஆவணப் படம் போல இல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருப்பது தனிச் சிறப்பு.

ஆதிக்க வர்க்கம் நிறைந்த ஒரு பகுதியில் திருநெல்வேலி பக்கம் ஒரு கீழ் சாதிப் பையன் முதல் தலைமுறையாக சட்டம் படிக்க கல்லூரி சேர்கிறான். அவன் சேருவதற்கு முன்பே அவன் நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும்போது நடக்கும் சம்பவம் படத்தின் ஒன் லைனாக பார்ப்பவர்களை பொளேர் என்று முகத்தில் அறைகிறது. இது தான் நான் காட்டப் போகும் படத்தின் கரு என்று சொல்லி விடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நகரத்தில் வாழ்பவர்களுக்கும், மேல் ஜாதியாக இருந்தாலும் சாதி வித்தியாசம் பார்க்காதவர்களுக்கும், தங்களை பாதிக்காத வரை அதைப் பற்றி சிந்திக்காதவர்களுக்கும், இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கறாங்க என்று கேட்கும் அறிவீலிகளுக்கும் இப்படம் சமுதாயத்தின் அழகான மேல் தோலை உரித்து உள்ளே இருக்கும் அசிங்கமான இரத்தத்தையும், சதையையும், பிண்டத்தையும் காட்டுகிறது. கருப்பி என்னும் நாயோடு இருக்கும் உறவும் பந்தமும் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பைக் காட்டுகிறது. அதை கொடூரமான முறையில் ஆதிக்க வர்க்கம் கொல்வது எப்படி அவர்களின் நம்பிக்கையை தகர்க்க அவர்கள் கையாளும் முறை என்பதையும் காட்டுகிறது.

கதிர் பரியேறும் பெருமாள். இன்னொருவரால் இந்தப் பாத்திரத்தை இவ்வளவு செம்மையாக செய்திருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் உயிர் கொடுத்தப் பாத்திரம் எனினும் அதை நகமும் சதையுமாக திரையில் நடமாட வைத்து நம்மை அப்பாத்திரத்தின் அத்தனை வலியையும் உணர வைக்கிறது கதிர் தான். இந்த மாதிரி பாத்திரம் கிடைக்க ஒரு நடிகர் பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிலருக்குக் கிடைக்காமலும் போகும். இவருக்குக் கிடைத்து அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன் படுத்தியுள்ளார், வெகுளிப் பையனாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது உள்ள அவர் இயல்பு, பின் படிப்படியாக நிறைய ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளால் வித்தியாசங்களை அனுபவிக்கும் போது உண்டாகும் குழப்பங்கள், பின் படிப்பினைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவரின் பக்குவம், அடுத்து அவர் அடித்துத் துவைக்கப்பட்டு இதுதாண்டா சமூகத்தில் உன் நிலை என்று சுட்டிக் கட்டப்பட்ட பின் அவரின் விவேகமான பார்வை, இயலாமையை இயலாமையாக எடுத்துக் கொள்ளலாமல் அதனை எதிர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளில் தெறிக்கும் கோபம், கள்ளம் கபடமில்லாமல் ஜோதியுடன் பழகும் பாசம், அனைத்தையும் அவர் முகமும் உடல் மொழியும் காட்டுகிறது. முக்கியமாக ஜோதியுடன் பழகுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும். கோட்டின் இந்தப் பக்கம் இருந்தால் நான் நல்லவன் அந்தப் பக்கம் போயிட்டா நான் ரொம்ப கேட்டவன் வசனம் மாதிரி மெல்லிய கோட்டு வித்தியாசத்தில் காட்டும் முகபாவங்கள் அந்த உணர்வுகளை காதலாக மாற்றி அவர் பத்திரத்தையே கொச்சைப் படுத்திவிடும். அவ்வாறு ஆகாமல் சரியாக கையாண்டு பாத்திரத்தின் தன்மையை காப்பாற்றுகிறார்.

ஜோதி மகாலட்சுமியாக ஆனந்தி சிறப்பாக செய்திருக்கிறார். பெரிய வீட்டுப் பெண், உயர்ந்த ஜாதிப் பெண், எதற்காகவும் வாழ்க்கையில் கெஞ்சியதில்லை, அவமானப்பட்டதில்லை! அழுத்தப்பட்ட சமூகத்தின் வலி தெரியாமல் அது வரை வாழ்ந்தவர், படத்தின் இறுதி வரையிலும் உணராமலேயும் இருக்கிறார் பரியேறும் பெருமாள் தயவில். பாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கதிர் விலகிப் போவது புரியாமல் அழுது வேதனைப் படுவது, வெளி உலகமே தெரியாமல் தன்னை சுற்றி மட்டுமே உலகம் இயங்குவதாக நினைக்கும் ஒரு privileged பெண் பாத்திரத்தை பாங்குடன் செய்திருக்கிறார். அவரால் தைரியமாக காதலிக்க முடிகிறது அதை சொல்லவும் முடிகிறது. ஆனால் கதிர் ஜோதி மேல் கொண்டிருப்பது என்ன மாதிரி உணர்வு என்று கதிர் புரிந்து கொள்ளும் முன்னரே அந்த உணர்ச்சி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இரு பாத்திரங்குளுக்குமான இந்த வித்தியாசம் சொல்கிறது ஜாதியின் சமூக அவலத்தை.

ஜோதியின் அப்பாவாக வரும் பாத்திரம் (G.மாரிமுத்து)முழு வில்லனும் இல்லை, நல்லவரும் இல்லை. கதிரின் கதையை முடிக்கவும் குடும்பத்தினருடன் ஒத்துக் கொள்கிறார், அது அந்த சமூகத்துக்கு இயல்பான ஒன்றாகவும் கட்டப்படுகிறது. அவரின் தவறின் வீர்யம் கூட அவருக்கு உரைக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால் அதே சமயம் அவருக்குள் இருக்கும் மனசாட்சி அவருக்குக் கதிரை எளிதாகப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு வரும்போது தடுத்து விடுகிறது என்பதையும் பார்க்கிறோம். இறுதியில் கதிருடன் நடக்கும் உரையாடலில் அவரின் conundrum புரிகிறது. அது தான் நிதர்சனமும் கூட!

பெண் வேஷமிடும் கூத்து நடிகராக கதிரின் அப்பா பிரமாதமான பாத்திரப் படைப்பு மட்டுமல்ல கதைக்கு நல்ல பரிமாணத்தைக் கொடுத்து உயர்த்துகிறது. அவரை வில்லன் மாணவர் அவமானப்படுத்தி ஓடவிடும் காட்சியில் கண்ணில் நீர் துளிக்காதவர்கள் இருக்க முடியாது.

சர்க்கரை வியாதி எப்படி ஒரு சைலன்ட் கில்லரோ அது போல் இப்படத்தில் ஒரு சைலன்ட் கில்லர் பகீர் ரகத்தில் உள்ளார். ஜாதி மேல் உள்ள பற்று என்பது கடவுள் வழிபாட்டையும் விட உக்கிரமாக கருதப் படுவதை இவரின் செயல்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இவரின் இறுதி முடிவு இவரின் கொள்கைப் பிடிப்பின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இன்னும் மற்றப் பாத்திரங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், முதலில் வரும் கல்லூரி முதல்வர், அடுத்து இரண்டாவதாக வரும் முதல்வர், இதர பேராசிரியர்கள், கிராமத்து மனிதர்கள், கல்லூரி நண்பர்கள் அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகி பாபுவின் பங்களிப்பு அருமை. கல்லூரியில் ஆங்கிலம் தெரியாமல் கதிரும் அவரும் செய்யும் அலப்பறைகள் நல்ல நகைச்சுவை ரகம். தந்தையாக நடிக்க கதிர் அழைத்துவரும் சண்முகராஜனும் நன்றாக செய்திருக்கிறார். பரியேறும் பெருமாள், ஜோதி மகாலட்சுமி தான் முக்கிய கதாபாத்திரங்கள் எனினும் படத்தில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். திரைக்கதையின் சிறப்பு அது.

சந்தோஷ் நாராயணன் இசை வேற லெவல். இதில் கீழ் ஜாதி மக்களின் வாழ்க்கையே இசையோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகும். அவர்களின் சோகத்துக்கும் வடிகால் இசை தான். அவர்களின் உற்சாகத்துக்கும் ஊக்க சக்தி இசை தான். அவர்கள் வாழ்க்கையின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கும் பாடல்களில் உள்ள வரிகள் தாம் காரணம். உணர்ச்சி பிழம்பாக ஒலிக்கிறது ஒவ்வொரு பாடலும். நம் காதுக்கு இனிமையா என்பதை விட கதைக்குப் பொருத்தமா என்பதை தான் கவனிக்க வேண்டும். இதில் ‘கருப்பி’ பாடல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் அவ்வளவு கோபமும் ஆவேசமும் வெளிப்பதுவதில் தான் பரியேறும் பெருமாளின் நிலையையும் அந்த ஜாதி மக்களின் இயலாமை நிலையையும் நமக்கு உணர்த்துகிறது. தெருக்கூத்து நடனத்துக்கு வரும் பாடலும் அருமை. இசையால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பொட்டக் காட்டில் பூவாசம் அழகான மெலடி!

எப்படி மேற்கு தொடர்ச்சி மலை இயல்பான வாழ்வியலை காட்டியதோ அதே மாதிரி இந்தப் படமும் எந்த அரிதாரமும் பூசாமல் ஜாதி தரும் அழுத்தத்தோடு எளிய மக்கள் வலியோடு வாழும் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. வசனங்கள் குறைவு. ஒரு பக்க அறிவுரையை எந்த பாத்திரமும் தருவதில்லை. சம்பவங்களின் காட்சிப் படுத்தலே சொல்ல வந்ததை நச்சென்று சொல்லிவிடுகிறது. ஆனால் சொல்லப்படும் வசன்னங்கள் அனைத்துமே கூர்மை.

அரசியல்வாதி, அடியாள், ரவுடி இவர்களை வைத்தான சாதிக் கதை இல்லை இது. உண்மையாக நடக்கும் போராட்டத்தை, கீழ் ஜாதியினரின் இயலாமையை, மேல் ஜாதியினரின் சலுகைகளைக் காட்டி மேல் ஜாதியினர் மனம் மாறாத வரையில் கீழ் ஜாதியினர் முன்னேற வழி இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதுவும் கடைசிக் காட்சியின் குறியீடு அற்புதம். கதிர் பாத்திரம் யாரையும் பழி தீர்க்க ஆசைப்படுவதில்லை. அது ஒரு நல்ல மெஸ்சேஜ்.

முதலில் பெரிய ஓபனிங் இல்லாவிட்டாலும் இப்பொழுது அரங்கம் நிறைந்த காட்சிகளாக சென்னையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக திரையரங்கில் சென்று படத்தைப் பார்க்கவும். சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது ஜாதி சார்ந்தது. ஜாதி விஷயத்தில் நாம் மாறாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதையாவது புரிந்து கொள்ள இப்படம் உதவும்.

காலா – திரை விமர்சனம்

Kaala

கதைக் களம் என்னமோ ரொம்பப் பழசு தான். நாயகன் முதலான படங்களில் பார்த்த தாராவியில் அரசியல் செல்வாக்குடன் ஒருவன் வந்து வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கி குடியிருப்புகள் கட்டத் திட்டமிடுவது, அதைத் தடுத்து அங்கு வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நல்ல தமிழ் தாதா ஹீரோவாக இருப்பது! நாயகன் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதில் வீடுகளை இடித்து யாரோ ஒரு பணக்காரன் நிலத்தை ஆட்டையப் போடப் பார்ப்பான். இந்தப் படத்தில் மக்களுக்கே அங்கு குடியிருப்புகள் கட்டித் தருவதாகச் சொல்லி வேறு மாதிரி மக்களை ஏமாற்ற திட்டம் போடுகிறான் அரசியல்வாதி வில்லன். இதை முறியடிக்க காலா என்ன செய்கிறார் என்பதே கதை. இந்த மாதிரி படங்களுக்கு பலமே திரைக்கதை தான். எப்படி கதை சொல்லப்படுகிறது என்பதில் தான் சுவாரசியம் அடங்கியிருக்கும். அதில் சராசரி மதிப்பெண் மட்டுமே பெற்று பாஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

தொடக்கத்தில் இருந்தே காலா போராட்டக்காரராகவும் தாராவி மக்களின் நலனை மட்டுமே மனத்தில் வைத்து செய்லபடுபவராகவும் காட்டியிருப்பதும் அந்த கேரக்டர் கடைசி வரை அதில் வழுவாமல் இருப்பதும் சிறப்பானப் பாத்திர உருவாக்கம். அதற்கு ரஞ்சித்திற்குப் பாராட்டுகள். காலாவின் ஒரு மகன் அகிம்சை வழியில் போராடுபவராக காட்டி பின் அந்தப் பாத்திரம் இருந்தும் அவரின் செயல்பாடுகள் காணாமல் போய்விடுகின்றன. தந்தைக்கும் மகனுக்கும் பெரிய சண்டை எல்லாம் வருகிறது, பிறகு அதன் தொடர்ச்சி புஸ்ஸென்று போய்விடுகிறது.

ரஜினிக்கு மச்சானாக ஈஸ்வரி ராவுக்கு தம்பியாக வரும் சமுத்திரக்கனி மிகவும் நன்றாக நடித்துள்ளார். சதா சர்வகாலமும் தண்ணியில் மிதந்தும், தள்ளாடியும், ஸ்டெடியா நிற்கும் பாத்திரம். ஆனால் அந்தப் பாத்திரத்தினால் கதைக்கு எந்தப் பயனும் இல்லை, காமெடிக்காக அவரை பயன்படுத்தியிருக்கலாம். ஈஸ்வரி ராவ் காலாவை அன்பால் அதிகாரம் செலுத்தும் ஒரு வெள்ளந்தியான பாத்திரம். அஸால்டாக செய்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்களாக வரும் அனைவரும் ஓகே. முன்னாள் காதலி ஹூமாவின் கேரக்டர் முரண்பாடாகவும், கதையுடன் ஒன்றாமலும் உள்ளது. முன்னாள் காதலியாகவும், திடீரென வில்லியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நில உரிமை போராட்டம் என்பது படத்தின் கரு. எந்தக் கதைக்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் ஓர் இலக்கு. திரைக்கதை அதில் ரொம்பத் தள்ளாடுகிறது. படத்தைத் தாங்கிப் பிடிப்பது ரஜினி மட்டுமே. ரஜினி பயங்கர ஃபிட்டா இருக்கிறார். நின்னா, நடந்தா, உட்கார்ந்தா, பார்த்தா, சிரிச்சா, புருவத்தை உயர்த்தினான்னு ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைல். அவரை அதில் மிஞ்ச ஒருவர் இனி பிறந்து தான் வரவேண்டும்.

க்யா ரே செட்டிங்கா? வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் வாலேன்னு சொல்லிட்டு நிக்கற ரஜினிக்குப் பெரிய சண்டைக் காட்சி இருக்கும்னு பார்த்தா வேங்கை மகனோட மகன் தான் சுத்திச் சுத்திச் சண்டை போடுகிறார். ஆனால் பிறகு மழையில் மேம்பாலத்தின் மேல் வரும் சண்டைக் காட்சி மாஸ்! வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், காலாவுக்கு குடையும் கூர்வாள்!

முதலில் கதை சூடு பிடிக்கக் கொஞ்ச நேரம் ஆகிறது. பிறகு கொஞ்சமாக சுவாரசியம் உருவாகிறது. வில்லன் வரவே இடைவேளை வந்துவிடுகிறது. அதுவரை ரஜினி ஷேடோ பாக்ஸிங் தான் செய்து வருகிறார். நானா படேகரும் ரகுவரன் அளவுக்கெல்லாம் இல்லை. திரும்பத் திரும்ப நிலத்தை அபகரிக்க வில்லன் திட்டமிடுவதும் அதைத் தடுக்க காலா முயல்வதும் எந்த வித சஸ்பென்ஸும் இல்லாமல் நகர்கிறது கதை. இதில் க்ளைமேக்ஸ் ரொம்பப் பொறுமையை சோதிக்கிறது. நிறைய சண்டைக் காட்சிகளும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே போகும் போராட்டமும் நல்ல எடிட்டரின் கத்திரிக்கு வெட்டப்பட்டு படத்தைக் காப்பாத்தியிருக்கும். இத்தனைக்கும் நல்ல எடிட்டர் தான் ஶ்ரீகர் பிரசாத். படத்தின் நீளம் 167 நிமிடங்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டாரா?

சந்தோஷ் நாராயணனனின் பின்னணி இசை படத்துக்குப் பலம். நானா படேகர் வரும் இடங்களில் பின்னணி இசை கச்சிதம். ந ன ன ன ன ன என காதலி சந்திப்பின் போது ஒலிக்கும் பின்னணி இசை மட்டும் செம கடுப்பு. பாடல்கள் இசை வெளியீட்டில் கேட்டதை விட படத்தில் பாந்தமாக வந்து அமருகின்றன. முரளியின் ஒளிப்பதிவு மழையில் சண்டைக் காட்சிகளிலும், தாராவிப் பகுதிகளை காட்டும்போதும் அவரின் திறன் வெளிப்படுகிறது.

நிறைய குறியீடுகள், புத்தர் கோவில் முன் காலா உட்கார்ந்து ஆலோசிப்பது, காலா வீட்டில் அம்பேத்கார் படம், புத்தர் சிலை இருப்பது, மேஜையில் இராவண காவியம் புத்தகம் எனப் பல! ஆனால் அவை காலாவுக்கான குறியீடுகளாகத் தெரியவில்லை, இயக்குநர் ரஞ்சித்தின் குறியீடுகளாகத் தெரிகின்றன. பிஜேபி மாதிரி ஒரு கட்சிக்கு எதிரா தான் காலாவின் எதிர்ப்பு உள்ளது. ஸ்வச் பாரத் மாதிரி பியுர் இந்தியா திட்டத்தின் விளம்பர பலகைகளை பார்க்கலாம், வெள்ளை பைஜாமா குர்தாவவுடன் நெற்றியில் குங்கும திலகம் தரித்தவர்களே அக்கட்சியினராகவும் காட்டப்படுகின்றனர். இதில் இராம பக்தன் வில்லனாகக் காட்டப்படுகிறார். காலாவை இராவணனாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் நோக்கமாக இருக்கும் என்று கொள்ளவேண்டும்.

படத்தில் பஞ்ச் டயலாகுகள் இல்லை. க்ளைமேக்சில் ரஜினி ரொம்ப அமைதி காப்பது போலவும் அவரை மிஞ்சி காரியங்கள் நடப்பது போலவும் காட்டியிருப்பது அவரின் பாத்திரப் படைப்புக்கு இழுக்காகவும் அவரின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றே தோன்றுகிறது. முக்கியமாக முடிவில் நடப்பது என்ன என்று புரிந்து கொள்வது கூட சிரமாமக உள்ளது. ஹீரோ & வில்லன் கொல்லப்பட்டார்களா போன்ற சில முக்கிய விஷயங்களையே மக்களின் கற்பனைக்கு விட்டுவிட்டார் இயக்குநர்.

நில உரிமை எளிய மக்களின் வாழ்வாதரம், அவர்களின் உடம்பே ஆயுதம் என்னும் முக்கிய கருத்துகளை ரஜினியை பயன்படுத்தி மக்கள் முன்வைத்த ரஞ்சித் படம் இது!

Kaala1

 

மேயாத மான் – திரை விமர்சனம்

அன்றிலிருந்து இன்று வரை சமூக அந்தஸ்து, ஜாதி, மதம் மாறி காதலிப்பது தான் நிஜ வாழ்வில் நடக்கிறது.  அதன் நகல்கள் தான் வண்ணத் திரையிலும் பல்லாயிரம் முறை காட்டப்பட்டிருக்கின்றன. அதனால் இந்தக் காதல் கதைகளை சொல்லும் விதத்தில் வேறுபாடு காட்டி, சுவாரசியமாக்கி தான் வெற்றி பெற முடியும்! இயக்குநர் இரத்தின குமார் ஒரு தலைக் காதலினால், ஜாதி மாறி, அந்தஸ்து மாறி காதலிப்பதினால் விளையும் துக்கத்தை நகைச்சுவை கலந்து மேயாத மான் படத்தில் சிறப்பாக தந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் கதை சூடு பிடிக்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.

நடிகர் வைபவ்க்கு இது லட்டு மாதிரி ஒரு பாத்திரம். சிக்ஸர் அடித்திருக்கிறார். வட சென்னை இசைக்குழு நடத்தும் ஏழை பையன் அவர், அண்ணா நகர் பிராமண பணக்கார பெண்ணை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நல்ல நட்புகள், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல தங்கை அண்ணா பாசம், கதைக் களம் நெரிசலான வட சென்னை என இன்னும் சில மசாலாக்கள் சேர்த்த சுவையான காதல் கதை தான் மேயாத மான்!  நாயகி ப்ரியா பவானி சங்கர் {தமிழ் பெண்}, தங்கையாக வரும் இந்துஜா {தமிழ் பெண்}, வைபவ் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா, எல்லாருமே புது முகங்கள் + நல்ல நடிகர்கள். வாழ்த்துகள் புது முக இயக்குநரே, இவர்களின் தேர்வுக்கும் பயிற்றுவிப்புக்கும்!

பிராமண குடும்பமாக காட்டப்படுபவர்கள் கொஞ்சம் வெளுத்தத் தோலாகவும் ரொம்ப திமிர் பிடித்தவர்களாகவும் காட்டப் படுகிறார்கள். வட சென்னை மொழி பயன்படுத்துப் படுவதில் காட்டிய அக்கறை பிராமண மொழி பயன்பாட்டில் காட்டப் படவில்லை. இந்தப் படத்தில் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பாத்திரங்களின் குணாதிசயங்களை சரியா வரையறுத்தி அதை இறுதி வரைக்கும் மாற்றாமல் வைத்திருந்து அதன் மூலம் கதைக்கு வலு சேர்த்திருப்பது அருமை! தங்கை/நட்பு பாத்திரங்கள் எப்பவும் நாயகனுக்குத் துணைப் பாத்திரங்களாக தான் இருக்கும் ஆனால் இந்தப் படத்தில் அவர்களுக்கும் ஒரு தனிக் கதை அமைத்து அவர்களின் பாத்திரத்துக்கான குணத்தை மைய்யபடுத்தி விரிவாக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அண்ணன் தங்கை குத்துப் பாட்டு நடனமும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது.

சந்தோஷ் நாராயணன்/பிரதீப் இசையில் பல பாட்டுகள் ஹிட். ஏண்டி ஏண்டி எஸ். மது பாடல் மாதிரி வட சென்னைக்கு ஏற்ற பதிப்பாக அமைந்துள்ளன.  நாயகனும் இசைக் குழு வைத்து நடத்துவதால் கொஞ்சம் பழைய பாடல்கள், புதுப் பாடல்கள் என  இசை கொஞ்சம் ஓவர் டோசாக எனக்குத் தோன்றியது. காதல் தோல்வி/சங்கடம் என்றாலே டாஸ்மாக் காட்சிகள் தான் என்றாகிவிட்ட நிலைமையில் முதல் காட்சியில் இருந்தி கடைசி காட்சி வரை மதுவே {நாயகி பேரும் மது} முதலிடம் வகிக்கிறது! காதல் வெற்றி பெற அவர்கள் கடைசியில் எடுக்கும் முயற்சி {!!!} சற்றே ஆபாசம்/சொதப்பல்!

மற்றபடி டைம் பாஸ் நல்ல படம். கார்த்திக் சுப்புராஜின் முதல் தயாரிப்பு. வாழ்த்துகள்!

பைரவா – திரை விமர்சனம்

bairavaa

பெர்மியுடேஷன் காம்பினேஷன் மாத்தி விஜய்யின் இன்னொரு மசாலா படம் பைரவா! நாளுக்கு நாள் எப்படித்தான் இளமையா ஆகிறாரோ தெரியவில்லை, விஜய் இன்னும் உடல் மெலிந்து அதிக முகப் பொலிவுடன் இருக்கிறார். படத்தில் சைக்கிளில் என்ட்ரி என்றாலும் கில்லி என்ட்ரி!

வண்ணத்திரையில் தீமையை எதிர்த்து நன்மைக்குப் போராடுவது தான் எம்ஜிஆர் பாணி. அதையே இவரும் தொடர்ந்து பாலோ செய்கிறார்.  கல்வியறிவே இல்லாத அராஜகவாதி, கெட்ட வழியில் சம்பாதித்தப் பணத்தை இன்னும் பன்மடங்காக்க அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொடங்கியிருக்கும் கல்வி நிறுவனத்தில் சிக்கிச் சீரழியும் மாணவர்களைக் காப்பாற்றும் செயல் வீரராக வருகிறார் விஜய். அவருக்கேற்ற கதை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக யூகிக்கக் கூடியத் திரைக் கதையா என்று கேட்பவர்களுக்கு, அவரைப் பொறுத்த வரையில் இது tried and tested. அவர் ரசிகர்கள் விரும்புவது இதைத் தான் என்பதால் தொடர்ந்து இவ்வாறே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

விஜய் முதலில் கலெக்ஷன் ஏஜண்டாக ஒரு ஏமாற்றுக் கும்பலிடம் பணம் வசூல் செய்ய கிரிக்கெட் ஆடி, அடிக்கும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. தொடர்ந்து நிறைய சண்டைக் காட்சிகள். எவ்வளவு தடியான ஆளுடன் சண்டை போட்டாலும் எதிராளி எத்தனை பெரிய ஆயுதம் வைத்திருந்தாலும் அனாயாசமாக சண்டை போட்டு ஒரு சின்னக் கீறல் கூட மேலே படாமல் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றிப் பெறுகிறார் விஜய்! ஜகபதி பாபுவும், டேனியல் பாலாஜியும் முரட்டு வில்லன்களாக வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் நன்றாக செய்திருக்கிறார். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கை நச்சுன்னு முடித்திருக்கலாம். அங்கே ஆரம்பிக்கிறது இழுவை. எடிட்டிங் சொதப்பல். பாடல்களும் படத்தின் தொய்வுக்குப் பெரும் காரணம். வரலாம் வா வரலாம் வா பைரவா பாடலையும் இன்ட்ரோ பாடலான பட்டையக் கிளப்புப் பாடல்களைத் தவிர அனைத்துப் பாடல்களையும் படத்திலிருந்து வெட்டியிருக்கலாம்.

சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோர் படத்துக்குத் தேவையே இல்லை. வங்கி மேலாளராக Y.G. மகேந்திரனும் எரிச்சலை ஏற்படுத்துகிறார். இவர்களை சரியாகக் கையாளாதது அல்லது தவறாக தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் தவறு. மேலும் விஜய், சதீஷ் இருக்கும் மேன்ஷன், தெரு ஆகியவை செட் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. கலையலங்காரத்துக்கு ஒரு குட்டு. விஜயின் உடைகள் நன்றாக இருந்தாலும் அவரின் விக் அவருக்கு சரியாகப் பொருந்தவில்லை.

உண்மையிலேயே கல்லூரிகளில் இன்று நடக்கும் தவறுகளை, ஆசிரியரே மாணவியிடம் சொற்களால் வன்கொடுமை செய்வது போன்றவைகளை திரைக்கதையில் சேர்த்திருப்பதாலும் {அதை விஜய்யும் தட்டிக் கேட்கிறார்} கோர்ட்டில் விஜய் உண்மை சம்பவங்களையே மேற்கோள் காட்டி எப்படி நிர்வாகத்தின் அஜாக்கிரதையினால் பல மரணங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்றன என்பதை சொல்வதினாலும் படம் என்டேர்டேயின்மென்ட் தாண்டி நல்ல மெஸ்சேஜ்ஜையும் தருகிறது. அது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

இங்கே சோஷியல் மீடியாவில் சொல்லப்படுவது போல மகா மோசமனப் படமாக எனக்குப் படவில்லை. விஜய் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும் உள்ளன. முழுப் படத்தையும் விஜய் ஒருவரே தாங்குகிறார். பஞ்ச் வசனம் கைத்தட்டல் பெறுகின்றது. ஒளிப்பதிவாளர் சுகுமார் விஜயை அழகாகவும் ஸ்க்ரீனில் நல்ல ப்ரசன்சுடன் காட்டுவதில் பாராட்டைப் பெறுகிறார்.

bairavaa1

கபாலி – திரை விமர்சனம்

kabali

ரஜினிகாந்திற்கு இருக்கும் ஒரு மாஸ்/கரிஸ்மா இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது என்று சொல்லலாம். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அப்படிப்பட்டவரை வைத்து இயக்குவது என்பது லேசான விஷயம் இல்லை. திரையுலகத்தில் பல வெற்றிக் கொடிகளை நாட்டியவர்களுக்கே அவரை இயக்குவது சவாலாக அமையும்போது இளம் இயக்குநர் பா.ரஞ்சித் அதில் துணிச்சலுடன் களம் இறங்கியதே பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

இந்தக் கதை நமக்கு அந்நியமானது. மலேசியா வாழ் தமிழின மக்களின் சரித்திரப் பின்னணியில் கதை அமைந்துள்ளது. ரஞ்சித்திற்கு இந்தக் கதைக் கரு பிடிக்க காரணம் அங்கும் அவ்வின மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர், படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில் போன்ற எளிதாக பணம் ஈட்டக் கூடிய தொழில்களில் இளைய சமுதாயம் ஈடுபட்டு சீரழிந்து கொண்டு வருகிறது. அதனால் கேங்குகள் உருவாகக் காரணம் ஆகிறது. அடிமட்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவனாக ரஜினியை சித்தரிக்க இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் ரஞ்சித். ஆனால் திரைக்கதை விரிவாகவும், அழகாகவும் கதையை விளக்கினால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அந்தக் கதை போய் சேரும். அங்கே தான் சோடை போகிறார் இயக்குநர்.

முழுக்க முழுக்க மலேசியக் கதையாக இருந்தால் சரிபட்டு வராது என்று பாதியில் ராதிகா ஆப்தேவைத் தேடி ரஜினி சென்னை வரும் பகுதி சேர்க்கப்படிருப்பது போலத் தோன்றுகிறது. மலேசியக் கதையையும் முழுமையாகச் சொல்லாமல் கேங்க்ஸ்டர் கதை என்று கொள்ளும்படியும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் படத்தின் திரைக்கதையை அமைத்தது தான் ரஞ்சித்தின் பெரும் சறுக்கல். படம் ஓபனிங் நன்றாகவே உள்ளது. ஆனால் கிளைமேக்சிற்கான காரணம் சரியாக இல்லாததால் படத்தைப் பார்த்து முடித்து எழும் ரசிகன் அந்த ஏமாற்றத்துடன் எழுந்து போகிறான். அத்தனை உழைப்பும் வீணானது போலத் தோன்றிவிடுகிறது.

ராதிகா ஆப்தே ரஜினியின் அன்பு மனைவியாக பிரமாதமாக செய்துள்ளார். அவர்கள் மகளாக வரும் தன்ஷிகா பாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார். அவரின் வளர்ப்பு, அதனால் அவர் மேற்கொள்ளும் தொழில், அதுவே பின்னால் தந்தைக்குப் பலவிதத்தில் உதவியாக இருப்பது அனைத்தும் சரியாகவே கதையின் ஓட்டத்துடன் உள்ளது.  வில்லனாக வின்ஸ்டன் சாவ் மட்டும் மனத்தில் நிற்கிறார். நாசர், கலையரசன், ஜான் விஜய், கிஷோர், ரித்விகா அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் எந்த பாத்திரமும் தனியான குணாதிசயத்துடன் செதுக்கப் படவில்லை. அதனால் எந்தப் பாத்திரமோ, நடிகரோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாத்திரங்களைக் குறைத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இத்தனைப் பாத்திரங்களுடன் படத்தைப் பார்க்கையில் பாத்திரக் கடையில் நுழைந்த யானையைப் போல களேபரமாக உள்ளது.

அமிதாப் பச்சன் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கிறார், ரஜினி ஏன் இன்னும் சின்ன வயது ஹீரோயினுடன் டூயட் பாடி ஆடுகிறார் என்று கேள்வி சமீப காலத்தில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். கனவு சீனோ டூயட்டோ இல்லை. இரட்டைப் பொருள் கொண்ட வசனங்களும் இல்லை. ஆனால் எக்கச்சக்க வன்முறை காட்சிகள். இறுதியில் கண்டமேனிக்கு ஸ்டன்ட் காட்சிகள், கேங்க்ஸ்டர் படம் என்று நம்ப வைக்கவோ என்னவோ.

ரஜினி படத்தில் ரொம்ப லாஜிக் பார்க்க முடியாது. அவர் எது செய்தாலும் அதில் ஸ்டைலும் நம்பகத் தன்மையும் வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது. அது தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை பிரமாதமாக நடித்துள்ளார் ரஜினி. அவர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் என்று எந்த அசைவும் ஒரு தன்னம்பிக்கையையும் ஸ்டைலையும் வெளிப்படுத்துகிறது. ரஜினி ஒவ்வொரு பிரேமிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சில க்ளோஸ் அப் காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் உணர்வுகள் அருமை. மனைவியை மீண்டும் சந்திக்கும் இடத்தில் ராதிகா, ரஜினி இருவருமே பிரமாதமாக செய்துள்ளனர், அதில் ராதிகா ஆப்தே ஒரு புள்ளி அதிக மதிப்பெண்ணைப் பெறுகிறார்.

படத்தின் பெரும் பலம் சந்தோஷ் நாராயணனின் இசை! பாடல்களும் அருமை, பின்னணி இசை அதை விட அருமை. ஆனால் பாடல்களின் தாக்கம் படமாக்கத்தில் குறைந்து விட்டது சோகமே. முரளியின் கேமரா அழகு, அதிலும் ஒரு காட்சியில் மலேசியாவில் ரஜினியின் வீட்டை டாப் ஏங்கிளில் காட்ட ஆரம்பித்து அப்படியே அந்த வீட்டை சுற்றியுள்ள பெரும்  தோட்டத்தைக் காட்டும்போது கண்ணுக்குள் பசுமை நிறைகிறது.

மெட்ராஸ் படத்தின் முழுக் குழுவும் இதில் பணியாற்றியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றியது ஒரு பெரிய வரமாக இருந்திருக்கும்.

kabali1