எனக்குள் ஒருவன் – திரை விமர்சனம்

enakuloruvan1

கன்னடத்தில் லூசியா என்ற பெயரில் சக்கை போடு போட்ட படம் தமிழில் எனக்குள் ஒருவனாக வந்துள்ளது. நான் கன்னடப் படம் பார்க்கவில்லை அதனால் ஒப்பீடு பண்ண முடியாது. ஹீரோ சித்தார்த். எந்த நடிகரும் செய்ய விரும்பும் பாத்திரமாக அமைந்த இந்தக் கதையின் நாயகன் ரோல் இவருக்குக் கிடைத்திருக்கிறது. வாய்ப்பை முழுவதுமாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளார். காவியத் தலைவனில் பாத்திரம் சரியாக அமையாததால் நன்றாக நடித்தும் அதில் அவர் சோபிக்கவில்லை.

இந்தப் படத்தில் அவர் கேரக்டரின் complex தன்மையை புரிந்து கொண்டு ரொம்ப நன்றாக நடித்துள்ளார். இந்தப் பாத்திரத்திற்கும் இதை விட தமிழில் உள்ள இளம் நடிகர்கள் வேறு யாரும் இவ்வளவு சரியாகப் பொருந்தியிருப்பார்களா என்பது சந்தேகமே. சித்தார்த்தின் நடிப்பு உண்மையிலேயே அற்புதம். ஒரு கேரக்டரில் மிகவும் அழகாகவும் வருகிறார். A real heart throb! அவரை கூடுதல் அழகாகக் காட்டிய ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு “ஓ”!

படம் ஒரு ஆர்ட் பில்ம் மாதிரி உள்ளது. சினிமாவை ரொம்ப விரும்பும் மக்கள் தான் இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முயற்சியை பாராட்டுவார்கள். கன்னட ஆடியன்ஸ் சிலாகித்தப் படம், ஆயினும் நம்மூரில் இது எப்படி ஓடும் என்று எனக்குத் தெரியவில்லை. ஓரிடத்தில் எது கனவு எது நிஜம்னே எனக்கு இப்போப் புரியலை என்று சித்தார்த் ஒரு வசனம் பேசுவார். அதற்கு தியேட்டரில் அப்படி ஒரு அப்ளாஸ். (அதாவது ஆடியன்ஸ் படத்தைப் பார்த்து வந்த பீலிங்கை அந்த வசனம் பிரதிபலிக்கிறது என்று கொள்க)

இயக்குநர் பிரசாத் இராமர் மூன்று கதைகளை ஒரே சமயத்தில் parallel ஆக சொல்லி அதில் நம்மை லயிக்கவும் வைத்துத் திறமையாகக் கையாண்டுள்ளார். ஆயினும் ஒரிஜினல் படம் நிச்சயம் இதை விட நன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. இதில் நிறைய இடங்களில் தொய்வு. இன்னும் வலுவானத் திரைக் கதை படத்திற்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கும். எனக்கென்னவோ கதைக் கருவான “லூசியா”வுக்கு தமிழ் versionல் போதிய முக்கியத்துவம் தரப் படவில்லை என்று தோன்றுகிறது.

யோக் ஜப்பி சிரிப்புப் போலீஸ் மாதிரி ஆகிவிட்டார். அவர் வரும் சீன்கள் எப்படி பட்டவையாக இருந்தாலும் தியேட்டரில் சிரிப்பலை தான். தனி டிராக்காகவோ அல்லது படத்துடன் இழைந்தோ எந்த நகைச்சுவையும் இல்லாதது கொஞ்சம் குறையாகப் படுகிறது.

நாயகி தீபா சந்நிதி, கன்னட நடிகை. நன்றாகச் செய்துள்ளார். அழகு நடிப்பு இரண்டுமே பாஸ் மார்க்கிற்கு மேல்.

இசை சந்தோஷ் நாராயணன். பின்னணி இசை super! பாடல்களும் நன்றாக உள்ளன. இரண்டு பாடல்களில் பாடகர் சாய்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை, (ஏண்டி இப்படி – சந்தோஷ் நாராயணன் & குட்டிப்பூச்சி by மாணிக்க விநாயகம்) சுத்தமாக சித்தார்த்துக்குக் கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரபலமாகவே by சித்தார்த்த் அருமை!

கடைசியில் வரும் ட்விஸ்ட் ஏன் கடைசியில் வருகிறது என்பது ஒரு பெரிய கேள்வி. அதை கதையின் எந்தப் பகுதியிலும் சொல்லியிருக்கலாம், ஆனால் கடைசியில் சொல்வதால் தான் படத்தை இரண்டு மணி இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீட்டிக்க முடிகிறது.

புதிய முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர்கள் CV குமார், வருண் மணியன், YNot சஷி, அபினேஷ் இளங்கோவன் ஆகிய நால்வருக்கும் பாராட்டுக்கள். சித்தார்த்தின் உழைப்புக்குக் கூலி கிடைக்குமா என்று தெரியவில்லை.

enakuloruvan

காவியத் தலைவன் – திரை விமர்சனம்

?????????????????????????????????????????????????????????

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம், நாடக சபாக்கள் பாய்ஸ் கம்பெனிகளாகவும், குருகுல வாசமாக நடிகர்கள்  இருந்து, பயின்ற காலத்தில் நடக்கிறது கதை. மேலும் சுதந்திரப் போராட்டம் நடக்கும் காலமாகவும் உள்ளதால் கதையில் அதுவும் முக்கிய இடம் வகிக்கிறது.

நாடக நடிகர்களாக சித்தார்த்தும், பிருதிவிராஜூம், குருவாக நாசரும், வாத்தியாக தம்பி ராமையாவும் ரொம்ப நன்றாகப் பரிமளிக்கிறார்கள். பொன் வண்ணனுக்கு மிகச் சிறிய பாத்திரம். மிகவும் அழகாக உள்ள வேதிகா அதே நாடகக் கம்பெனியில் வளரும் ஒரு நடிகையாக (கே.பி.சுந்தராம்பாளின் உண்மை வாழ்வின் நிழல் பாத்திரமாக) கச்சிதமாகப் பொருந்துகிறார்.

வாங்க மக்கா வாங்க என்று intro பாடலுடனும், நாடகக் கம்பெனியில் நடக்கும் விஷயங்கள் வைத்தும், சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய பல நாடகங்களில் இருந்து குட்டிக் குட்டியாகப் பல சீன்களைப் போட்டும், காதல், சூழ்ச்சி என்று முதல் பாதியில் நம்மை கதையில் லயிக்க வைத்துள்ளார் வசந்த பாலன்.

செட் டிசைனருக்கும், உடை அலங்கார நிபுணருக்கும், தனித் தனியாக ஒரு பூங்கொத்து! செட் டிசைனர் T.சந்தானம். அப்படியே அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறார். ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா முதல் பரிசை தட்டிச் செல்கிறார்.  வண்ணங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து அற்புதமாகப் படத்தை உருவாக்கியுள்ளார். அதே போல நடன இயக்குநருக்கும் பாராட்டுகள்! அந்தக் கால நடன அசைவுகள் எல்லாம் கண்ணுக்குக் குளுமை.

இடைவேளைக்குப் பிறகு இயக்குநருக்குக் கதையை நகர்த்தத் தெரியவில்லை. அங்கே இங்கே என்று தடுமாறி, சுதந்திரப் போராட்டத்தை உள்ளே நுழைத்து, அதிலும் சுவாரசியமாக எதுவும் சொல்லாததால் சஸ்பென்ஸ் எதுவும் இன்றி தொய்கிறது கதை.

ஜெயமோகன் வசனம். அவர் பாதிப்புப் பெரிதாக இல்லை. அவ்வை சண்முகம் பற்றிய சுயசரிதையை வசந்தபாலனிடம் ஜெயமோகன் கொடுத்துப் படிக்கச் செய்தது தான் இந்தப் படம் தொடங்குவதற்கு ஆரம்பம். அதற்கு மட்டுமே அவர் credit எடுத்துக் கொள்ளலாம்.

மதுரை என்று காட்டப்படும் ஊர் தேவகோட்டை/செட்டிநாடு. ஏன்? வசந்தபாலன்? ஏன்? செட்டிநாட்டு வீடுகள் தனித் தன்மை கொண்டவை. அவை பல படங்களில் (எல்லா படங்களிலும் அதே வீடு வேற) வந்து நமக்கு மனப்பாடமும் ஆகிவிட்டது. அதை ஏன் மதுரை என்று காட்டவேண்டும்?

பாடல்கள் வெளியீட்டின் போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. யாருமில்லா தனியிரங்கில் மிகவும் இனிமையாக உள்ளது. ஆண் பாத்திரங்களுக்கான அனைத்துப் பாடல்களையும் ஹரி சரண் மட்டுமே பாடியுள்ளார். சிறப்பான சாதனை!

படத்தில் பங்குபெற்றவர்கள் அனைவரும் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு சித்தார்த்தை இந்தப் படத்தில் மிகவும் பிடித்திருந்தது. ப்ரிதிவிராஜூன் நடிப்பிலும் குறை சொல்ல முடியாது. படம் நன்றாக இல்லை என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டுக் கடந்து செல்வது நல்லது இல்லை தான். ஆனாலும் எதிர்ப்பார்த்த திருப்பங்களும், உப்பு சப்பில்லாத திரைக் கதையும் இருந்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

kaviyathalaivan1

 

ஜிகிர்தண்டா – திரை விமர்சனம்

jigirthanda

இந்த மாதிரி திரைக் கதையை சமீபத்தில் வந்தத் தமிழ் சினிமாவில் நான் பார்க்கவில்லை. மகாபாரதத்தில் வரும் திடுக் திருப்பங்களுக்கும் சாதுர்ய சதுரங்க நகர்த்தல்களுக்கும் ஈடாக இன்றைய மதுரை தாதாக் கதையை முற்றிலும் மாறுபட்டக் கோணத்தில் சுவாரசியமாகத் திரைக் கதையை அமைத்து இயக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவருக்குப் பாராட்டுக்கள். (ரொம்பப் புகழறேனோ?)

பாதையை  மாற்றி பயணிக்க வைக்கும் திரைக்கதை/இயக்குநர்கள் தமிழ் திரை உலகுக்கு ஒரொரு இடைவெளியில் வருவார்கள். பாரதி ராஜா, பாலச்சந்தர், பாலு மகேந்திரா, மகேந்திரன், வசந்த், மணி ரத்னம், ஷங்கர், பாலா, வெற்றி மாறன் வரிசையில் சுப்பு கார்த்திக் பெயரை தைரியமாகப் பரிந்துரைக்கலாம். பீட்சாவிலேயே தன் முத்திரையைப் பதித்த இவர் இந்தப் படத்தில் அடுத்த லெவலுக்குச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ப நம் ரசனையும் மாறுகிறது. இன்றைய ரசனைக்கேற்பப் படத்தைத் தந்திருக்கிறார்

சித்தார்த் சூப்பராகப் பண்ணியிருக்கார். எப்பொழுதும் அழுத வண்ணம் இருக்கும் அவர் முகம் இந்தப் படத்தில் இந்தப் பாத்திரத்துக்கு ரொம்ப செட் ஆகியிருக்கிறது. படம் முழுக்க, முக்கியமாக முடிவில் அவர் நடிப்பு A1. அவருக்குப் பக்கத் துணையாக கருணாகரன் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்.

தனி காமெடி track இல்லை. ஆனால் பல கதாப் பாத்திரங்கள் பல சிச்சுவேஷன்களில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள். படமே ரொம்ப லைட்! வெட்டுக் குத்து எரிப்பு இவற்றை எல்லாமே நம் மனம் வெகு எளிதாக ஜீரணித்துக் கொள்ளும் அளவு தமிழ் சினிமாவில் வன்முறைக் காட்சிகள் பல்கிப் பெருகி விட்டதால் எந்த சீனுமே gory ஆக தெரிவது இல்லை. நம் மாறிய மன நிலைமையைக் கண்டு அஞ்சுவதா, வெதும்புவதா அல்லது இயல்பு இது தான் என்று பட்டுக் கொள்ளாமல் போவதா என்று தெரியவில்லை.

லச்சுக்குக் குட்டி ரோல் தான். உடல் ஸ்லிம்மாக இருக்கிறார். இதையே மெயின்டெய்ன் பண்ணால் நன்றாக இருக்கும். அம்பிகாவின் பாத்திரம் அவன் இவனில் வந்தப் பாத்திரத்தை நினைவூட்டுகிறது.

படத்தின் வில்லன் ப்ளஸ் பலமான கதாப்பாத்திரம் பாபி சிம்ஹா. வில்லன் பாத்திரம் செம வில்லத்தனமாக இருந்தால் தான் ஹீரோ பாத்திரம் எடுபடும்! ஆரம்பம் முதலே மிரட்டலாக நடித்துள்ளார் சிம்ஹா. சித்தார்த்தை விட அவருக்கே challenging role. நடிப்புச் சொல்லித் தரும் ஆசிரியராக வரும் சோமசுந்தரம் – கலக்கல் நடிப்பு 🙂

விவேக் ஹர்ஷனின் editing நன்றாக இருந்தாலும் சில இடங்களில் கத்திரிப் போட்டிருக்கலாம். அதை தடுத்தது இயக்குநரா என்று தெரியவில்லை. 170 நிமிடம் கொஞ்சம் அதிகமே. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்களில் சில நன்று ரகம், சில ஒகே ரகம்.

சினிமேடோக்ராபி செய்தவர் பெயர் வித்தியாசமாக இருக்கிறது Gavemic Ary. தொழில் சுத்தம்! Excellent! ரொம்ப நெருக்கமானத் தெருக்களைக் கொண்ட மதுரையில் கூட்டத்தின் நடுவேயும் இரண்டு வீடுகளில் சின்ன அறைகளிலே நடக்கும் காட்சிகளை ரொம்ப அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டயிருக்கார்.  அவருக்குப் படத்தின் வெற்றியில் பெரும் பங்கு உள்ளது.

ஜிகிர்தண்டா பெயருக்கேற்ப மதுரை சுவையோடு உள்ளது. என்ன, கொஞ்சம் rawவாக இருக்கு. Refine பண்ணியிருந்தால் இன்னும் சுவை கூடியிருக்கும்.