நான் திருமணமாகி அமெரிக்கா சென்ற போது என் கணவர் M.S. படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தார். அவர் இரவு லாபுக்கு சென்று வெகு நேரம் வேலை செய்யும் போது நான் வீட்டில் தனியாக இருக்காமல் அவருடன் சென்று GMAT படிப்புக்காக என்னை தயார் செய்துகொண்டு அடுத்த இரண்டு மாதத்தில் வந்த தேர்வையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் மேற்படிப்பு சேருவதற்கோ அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் GMAT மதிப்பெண் காலாவதியாகிவிடும் தருணம் வந்ததால் தான் அவசரமாக நான் கல்லூரியில் சேர்ந்தேன்.
என் கணவர் படித்தது டெக்சாஸ் மாகாணத்தில். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால் கலிபோர்னியா மாகாணம் சென்றோம். அங்கு வேலை கிடைத்து சான் ஹோசேயில் குடியமர்ந்தோம். அப்பொழுது உடனே நான் கல்லூரியில் சேர எங்கள் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவர் படிப்புக்கான கடனை அடைக்க வேண்டியிருந்தது. மேலும் நிரந்தரக் குடியுரிமியாயைத் தரும் பச்சை அட்டை (Green card) இல்லை என்றால் கல்லூரிக் கட்டணமும் அதிகம். அதற்காகப் பொறுமை காத்தோம். எங்கள் நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால் என் விசாப்படி நான் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் அவர் கணக்கில் வராமல் ஆனால் நான் செய்யும் வேலைக்குச் சற்றேக் குறைந்த சம்பளமாகக் கொடுத்து வந்தார்.
அடுத்த முடிவு பிள்ளைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி! பிள்ளைப் பெறுவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதலில் மகள், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். அதற்குள் எங்களுக்கு பச்சை அட்டையும் வந்து விட்டது. இதற்கு நடுவில் நான் பகுதி நேர வேலைக்குப் போய் கொண்டு இருந்தேன்.
நாங்கள் வசித்த சான்ஹோசேயிலேயே படிப்பது என்று முடிவு செய்து San Jose State Universityயில் MBA பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது என் மகனுக்கு இரண்டு வயது. ரொம்ப குறும்பு செய்யும் வயது. நான் படிப்பது அவனுக்கு சிறிதும் பிடிக்காது. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எப்படித் தான் படித்தேன் என்று எனக்கே ஆச்சர்யமாக உள்ளது 🙂
என் GMAT மதிப்பெண் காலாவதியாவதற்குள் முதலில் ஒரு ப்ரீ ரெக்விசிட் வகுப்பு எடுத்திருந்ததால் ஒரே வருடத்தில் என் படிப்பை முடித்தேன், அதாவது மூன்று செம்ஸ்டர்களில். என்னுடைய மதிப்பெண்கள் 4.0 GPA. இதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் என் கணவரும் அதே கல்லூரியில் MBA (Executive programme) பண்ணிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வெளி நாடுகள் செல்ல வேண்டியிருந்ததால் நடுவில் அவர் படிப்பு தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால் படிப்பை நான் முடிக்கும் போதே அவரும் முடித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பட்டம் பெற்றோம்.
நான் கடைசி செமஸ்டரில் இருந்த போதே என் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெகு முனைப்போடு வேலை தேடிக் கொண்டிருந்தனர். நானும் என் ரெசியுமேவை என் நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் அவர்கள் மூலம் கொடுத்து வந்தேன். ஆனால் உண்மையில் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு முழு நேர வேலை செய்ய நான் விரும்பவே இல்லை. வேலை வேட்டையில் தீவிரமாக இறங்குகிற நேரம் அது. ஆனால் நானோ மிகவும் குழம்பித் தவித்துக் கொண்டு இருந்தேன். என் படிப்புக்கு உதவியாக என் மாமியார் மாமனார் அங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு என்ன செய்வது என்று மிகவும் கவலைப் பட்டேன்.
பட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சிறிது தாமதித்தாலும் சூடு ஆறிப் போய் வேலைக் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புண்டு. என் மதிப்பெண்களைப் பார்த்து என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உனக்கு உடனே நல்ல வேலைக் கிடைக்கும், அதனால் வேலைத் தேட சிறந்த முயற்சி எடுத்துக் கொள்ளும்படித் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.
ஹவாயில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி என்ற சைவ சித்தாந்த மடாதிபதி இருந்தார். (http://en.wikipedia.org/wiki/Sivaya_Subramuniyaswami )அவர் கான்கார்டில் உள்ள அவர்களின் பழநி சுவாமி கோவிலுக்கு விஜயம் செய்யும் பொழுது நாங்கள் அவரை தரிசிக்க செல்வோம். வெள்ளை அமெரிக்கர், எல்லா ஆன்மிக மற்றும் வாழ்வியல் கேள்விகளுக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிப்பார். அவரிடம் நான் வேலைக்குப் போவது பற்றிக் கேட்டேன். ஒரு தாயின் இடம் வீடு என்றார். ஒரு தாயே குடும்பத்துக்கு ஆணிவேர். இந்தக் காலத்துக்கு நான் சொல்வது ஏற்புடையதாகத் தெரியாவிட்டாலும் உன் கேள்விக்கு இது தான் பதில் என்றார்.
எங்கள் பொருளாதார நிலை நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்தினாலும், என்னை சுற்றியுள்ள அனைத்து இந்திய பெண்மணிகள் குழந்தைகளையும் பராமரித்து பாங்குடன் வேலைக்குச் செல்வதை பார்த்தும் என்னால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு செலவழித்துப் படித்துவிட்டேன். படித்தால் முழு நேர வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சமுதாய அழுத்தும் என்னை அலைக்கழித்தது.
அப்பொழுது ஒரு நாள் தொலைக் காட்சியில் (City Slickers http://en.wikipedia.org/wiki/City_Slickers) என்ற ஆங்கில படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைத்தது. மூன்று நண்பர்கள் தம் தம் வாழ்க்கையில் ஒரு நிம்மதியின்றி இருக்கும் தருவாயில் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு adventure sportஐ மேற்கொள்கின்றனர். மாடுகளை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வசிக்கும் நியுயார்க்கில் இருந்து நியுமெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து கொலராடோ என்ற மாநிலத்துக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். நியுயார்க்கில் நகர வாழ்க்கை வாழ்ந்து, நடு வயதைத் தொட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரம் கர்ளி என்பவருடையது. அவர் தான் அந்த மாட்டு மந்தைகளை சரியாக இவர்கள் எல்லாரும் கொண்டு சேர்க்கின்றார்களா என்பதை மேற்பார்வை பார்க்கும் பாஸ்! அவரின் பாத்திரப் படைப்பு அருமை. இந்த மூவரைத் தவிர இன்னும் சிலரும் இந்த மாடுகளை ஒட்டிக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இது ஒரு Cow Boy கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்.
பலப் பல இடையூறுகளைக் கடந்து எப்படி கொலராடோ போய் சேருகிறார்கள் என்பது மீதிக் கதை. நகைச்சுவைப் படம். இருப்பினும் கடைசியில் கர்லி வாயிலாக அந்த மூன்று நண்பர்களும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய வாழ்வில் நாம் ஏதோ ஒன்றை மட்டுமே மிகவும் நேசிக்கிறோம். அதை மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மட்டுமே நம் முழு கவனம் இருக்கவேண்டும். வாழ்க்கையில் நிம்மதி தானே வந்து நம்மை அடையும்!
I then realized that my “one thing” is my family. நான் என் முடிவை என் கணவரிடம் தெரிவித்தேன். பகுதி நேர வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவும் என் குழந்தைகளையும் கணவரையும் பராமரிப்பதில் பாதிப்பு வராத வரையில் என்று முடிவெடுத்து அவரிடம் சொன்னேன். நான் அங்கே மாலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். சனி ஞாயிறுகளிலும் வகுப்புகள் எடுப்பேன். அந்த சமயத்தில் என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். இந்தியா திரும்பிய பின் நான் வேலைக்குச் செல்லவில்லை. என் பெற்றோர்கள் மற்றும் என் கணவரின் பெற்றோர்களையும் பராமரிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.
Hats off to those women who manage their families and careers efficiently! அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது 🙂 இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை. மகிழ்ச்சியே அடைந்திருக்கிறேன். அதற்குத் துணையாக இருந்த என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் என் நன்றி.