24 – திரை விமர்சனம்

24

சூர்யா நடிப்பிற்கு நல்ல ஸ்கோப் தந்திருக்கும் படம், மூன்று வேடங்களில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். வில்லன் & ஹீரோ பாத்திரங்களில் நல்ல வித்தியாசத்தைக் காண்பித்து நடிப்பில் மிளிர்கிறார். அவரின் கேரியரில் நிச்சயம் இது ஒரு முக்கியமான படம். ஒவ்வொரு பாத்திரத்தையும் உள்வாங்கி கேரக்டராக மாறி நடித்துள்ளார். அதுவும் மணி பாத்திரத்தில் ஒரு ஜாலித் தன்மையுடனும், வில்லனாக குரூர குயுக்தியுடன் நடிப்பது பாராட்டுக்குரியது!

திரைக் கதை மட்டும் இன்னும் நன்றாக அமைந்திருந்தால் இன்னும் நல்ல படமாக இது அமைந்திருக்கும். டைம் டிராவல் கதை.  நல்ல மூலக் கதையை வைத்துக் கொண்டு பரபரவென நகரும் திரைக் கதையாக மாற்றியிருக்க வேண்டும் விக்ரம் குமார். இப்படத்தை ஹரி இயக்கியிருந்தால் இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து இருப்போம். ஆனால் இது விண்டேஜ் கார் மாதிரி மெதுவாக பயணிக்கிறது. முதல் பாதி வெகு நீளம். இடைவேளையின் போதே படத்தை முடித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் குழப்பம் இல்லாமல் நகர்கிறது திரைக் கதை. சகொதர்களிடையே வரும் பகைக்கான காரணம் சொல்லாததும் படத்தில் அழுத்தத்தை குறைக்கிறது.

நித்யா மேனனுக்கு சின்ன பாத்திரமாக இருந்தாலும் நன்றாக செய்துள்ளார். சமந்தா ஸ்பெஷலாக எதுவும் இல்லை. சராசரி என்ற அளவிலே தான் அவர் பங்களிப்பு உள்ளது. தமிழ் படங்களின் ஆஸ்தான அம்மாவான சரண்யா பொன்வண்ணன் கச்சிதமாக நடித்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் இவ்வளவு பப்ளியாக நிஜ வாழ்க்கையில் இருந்தால் நன்றாக இருக்கும். மகனிடம் முன் கதையை சொல்லும் பொழுது நெகிழ வைக்கிறார்.

ஜனரஞ்சகப் படங்களுக்குப் பாடல்கள் தேவை எனினும் இப்படத்தில் பாடல்கள் ரொம்ப சுமார் ரகம். ரஹ்மானின் இசை என்று சொல்லவே முடியாது. மேலும் டூயட்கள் படத்தில் வேகத் தடைகளாகவே உள்ளன. சூர்யாவுக்கும் சமந்தாவுக்கும் சுத்தமாக கெமிஸ்டிரி இல்லை. அல்லது அந்த மாதிரி ரோமேண்டிக் சம்பவங்கள் சேர்க்கப்படவில்லை என்று சொல்லலாம்.

திருவின் ஒளிப்பதிவு படத்தின் பலம். சோதனைக் கூடத்தில் இருக்கும் சேதுராமனை காட்டும்போதும், அவரின் evil twin ஆத்ரேயாவை காட்டும்போதும் ஒளியில் எதோ மாயம் செய்து நல்ல வித்தியாசத்தைக் கொண்டு வருகிறார்.

24 என்ற ப்ராஜெக்டின் பெயருக்கான காரணம் புரிய வரும்போது அட போட வைக்கிறார் இயக்குநர். சின்ன சின்ன நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ள கதை, லைட்டான படம். மெலோடிராமா எதுவும் இல்லை.

சூர்யா ரசிகர்கள் மட்டும் அல்லாமல் மற்ற தரப்பினருக்கும் இந்தப் படம் entertainingஆக இருக்கும். ரசிகர்களிடம் இருந்து வந்த Feed back வைத்து படத்தை trim செய்தால் நன்று.

24-1