
கிரேசி மோகன் பேச ஆரம்பித்தாலே ஒரு வரிக்கு ஒரு நகைச்சுவை துணுக்கு வரும்படி பேசுகிறார். அது அவர் இயல்பு. கூட இருக்கிறவர்கள் கொடுத்து வைத்தவர்கள். எப்பவும் சிரிப்பு மழை தான். அவருடைய தாரக மந்திரமே, “Take it easy. Life is crazy”! பேசும்போதே இதை நிறைய தடவை பயன்படுத்துகிறார்.
வெகு வேகமாகப் பேசுகிறார். அதாவது அவர் எண்ணங்கள் சொற்களாக மாறும் முன் அடுத்த எண்ணம் வந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. பழக மிகவும் எளிமையாக உள்ளார். காலையில் எழுந்தவுடன் சாப்பிட ரசம் சாதம் இருந்தால் அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கிறார்.

அவர் வரவேற்பு அறையில் நிறைய வெற்றி விழா கேடயங்கள் அலங்கரிக்கின்றன. மந்தைவெளியில் உள்ள அவர் வீடு தான் அவருக்கு சொர்க்கம். வெளிநாட்டில் நாடகம் நடத்தச் சென்றால் கூட எப்போ மந்தைவெளி திரும்ப வருவோம் என்று சென்னையை விட்டுக் கிளம்பியவுடனே நாட்களை எண்ண ஆரம்பிப்பது அவர் வழக்கம் என்று அவர் தம்பி கிரேசி பாலாஜி கூறுகிறார்.
அதற்கு கிரேசி மோகன் சொல்கிறார்: எனக்குக் கோடம்பாக்கம் போனால் கூட home சிக்னெஸ் வந்துவிடும். எல்லாமே எனக்கு மைலாப்பூர் மந்தவெளி தான். நான் படித்தது P.S. ஹை ஸ்கூல், விவேகானந்தா காலேஜ், கிண்டி இஞ்சினியரிங் காலேஜ். எங்க பாட்டி நான் கிண்டி இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த போது, விவேகானந்தா காலேஜிலேயே இஞ்சினியரிங் படிச்சிடு டா கிண்டி வரைக்கும் போக வேண்டாம்னு சொல்லியிருக்காங்கன்னா பார்த்துக்கங்களேன். நான் கலைத் துறையில் வளரக் காரணமா இருந்த K.பாலச்சந்தர் சாரும் கமல் சாரும் கூட மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை தான். மைலாப்பூரை My love பூர் என்று தான் சொல்வேன்.
நீங்கள் எழுதுவதற்கு யார் அல்லது என்ன உங்கள் inspiration?
நான் நிறைய படிப்பேன். வியாசரை மறந்து போவோம். ஆனா மகாபாரதத்தை மறக்க மாட்டோம். சின்ன வயசில் இருந்தே நிறைய படிப்பேன். ல.ச.ரா, கி.வா.ஜ, நா.பார்த்தசாரதி, கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் எல்லார் எழுத்தும் படிப்பேன். என் மனைவி இரவில் படுக்க வரும்போது என்னை சுத்தி படுக்கைல இருக்கிற புஸ்தகங்களை எல்லாம் நகர்த்தி வெச்சுட்டு அவங்க இடம் பண்ணி தான் படுத்துப்பாங்க. என் நண்பன் சு.இரவி தான் எனக்கு கம்பன், காளிதாசன், காளமேகம் இவர்களை அறிமுகம் செஞ்சு வெச்சான். இவங்க தான் எனக்கு inspiration.
நல்ல ரசனையுள்ளவன் அனைத்து எழுத்தாளர்களையும் படிப்பான். என் எழுத்து தான் வேதம்னு என்னிக்குத் திமிர் வந்துச்சோ போச்சு! உடம்புல தொப்பை விழுந்தா ஜிம்முக்குப் போய் தொப்பையை குறைச்சுக்கலாம். மனசுக்கு தொப்பை விழுந்தா ரொம்ப ஆபத்து. அது வராம இருக்க நிறைய படிக்கணும்.
நீங்க படிக்கிற புத்தகங்கள் எல்லாம் சீரியஸ் ரகமா இருக்கே. எப்படி நகைச்சுவையா எழுதறீங்க?
இப்போ நான் நிறைய ஆன்மிகப் புஸ்தகங்கள் தான் படிக்கிறேன். ரமண மகரிஷி பற்றி, விட்டோபா, அரபிந்தோ, சேஷாத்திரி சுவாமிகள், இந்த மாதிரி books தான். நாம சாப்பிடற உணவு எப்படி ஒரு இரசாயன மாற்றத்தினால் நமக்கு பலத்தைத் தருதோ அது மாதிரி தான் நான் படிக்கிற ஆன்மிக புத்தகங்கள் எனக்கு நகைச்சுவையா எழுத ஆற்றலைத் தருது.
நான் ஆஸ்திகனோ நாஸ்திகனோ இல்லை. ஹாஸ்திகன். நான் தினம் கும்பிடற தெய்வம் பாக்கியம் இராமசாமி தான். அவர் எழுத்தை தினம் படிக்காம வெளிய கிளம்பமாட்டேன். ஜாலியா இருக்கிறது தான் வாழ்க்கைல முக்கியம்.
நிறைய பேர் கேட்டிருப்பாங்க அனா நானும் கேட்கிறேன். உங்கள் இந்த take it easy மனப்பான்மைக்கும், வெற்றிக்கும் காரணம் என்ன?
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். எனக்குப் பல பெண்கள். தப்பா நினைச்சுக்காதீங்க, முதல்ல என் பாட்டி, அப்புறம் என் அம்மா, என் மனைவி, கூட்டுக் குடும்பம் என்கிறதனால என் தங்கைகள்னு இவங்க எல்லாரும் தான் என் வெற்றிக்குக் காரணம். இதுல முக்கியமா நான் ஜானகி டீச்சரைப் பத்தி சொல்லியாகனும். அவங்க இப்போ பெங்களூர்ல இருக்காங்க, 85 வயசாறது. அவங்க தான் என்னை ஒண்ணாங் கிளாஸ் படிக்கிறப்போ அட்டை கத்தி கிரிடம் எல்லாம் போட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் டயலாக்கை மனப்பாடம் செய்ய வெச்சு ஸ்கூலா ஸ்கூலா காம்படீஷனுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க. எனக்கு டிராமாவை அறிமுகப் படுத்தி வெச்சவங்க அவங்க தான். அதனால தான் நான் ரஜினி படமா இருந்தாலும் சரி கமல் படமா இருந்தாலும் சரி என் சம்பளத்தைப் பத்திக் கூட பேச மாட்டேன், ஹீரோயின் பேர் ஜானகி, அதுக்கு மறுப்பு சொல்லக் கூடாதுன்னு உத்தரவாதம் வாங்கிப்பேன். என் நாடகங்கள்ல ஹீரோயின் பேர் எப்பவும் ஜானகி தான். நான் அவங்களுக்கு செய்யிற நன்றிக் கடன் இது.

நீங்க டிவி சீரியல்கள் எதுக்கும் கதை எழுதுவதில்லையா?
டிவி சீரியல்கள் தயவு செய்து பார்க்காதீங்க. ஜவ்வு மாதிரி இழுக்கறாங்க. சாதாரணமா இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால். ஆனா டிவி சீரியல்ல இன்னிக்கு செத்தா நானூறாவது எபிசோடில் தான் பால், அதுக்குள்ளே பாடி வேற மாறி போயிருக்கும். டிவி சீரியல்ல எல்லா கெட்ட கேரக்டர்ஸும் வந்தாச்சு. கெட்ட மாமியார், துஷ்ட நாத்தனார், கெட்டுப் போன பத்தினி. உறவு முறைகளைக் கேவலப் படுத்த இதை விட முடியாது. நானும் டிவி சீரியல்கள் பண்ணியிருக்கேன். ஆனா அதெல்லாம் நகைச்சுவை வகை.
நீங்க இப்போ நிறைய வெண்பாக்கள் எழுதறீங்கன்னு கேள்விப்பட்டேன். அதில் எப்படி ஆர்வம் வந்தது? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் வர முக்கியக் காரணம் என் தாத்தா வேங்கட கிருஷ்ணன். நான் சாதாரணமா ஒரு கவிதை எழுதினாக் கூட காளிதாசன் மாதிரி எழுதற டா என்பார். அல்பத் தனமா ஒரு படம் வரைஞ்சாக் கூட ரவி வர்மா மாதிரி வரையரேன்னு சொல்லுவார். அவர் சொன்னதை நம்பிண்டு தான் நான் பின்னாடி எழுத்தையும் ஓவியத்தையும் develop பண்ணிண்டேன்.
ஒரு பதினேழு பதினெட்டு வயசுல பரணிதரனின் அருணாச்சல மகிமை படிச்சு எனக்கு ரமண மகரிஷியிடம் ஈர்ப்பு வந்தது. ரமண மகரிஷிக்கும் வெண்பா எழுதறது ரொம்பப் பிடிக்கும். அவர் தெலுங்கில், சமஸ்கிரதத்தில் எல்லாம் வெண்பா எழுதியிருக்கார். எனக்குக் கற்றுக் கொள்ள ஆர்வம் வர அதுவும் ஒரு காரணம். என் நண்பன் சு.இரவி தான் எனக்கு வெண்பா இயற்றவும் கற்றுக் கொடுத்தான். கிட்டத்தட்ட 450 வெண்பாக்கள் ரமண மகரிஷியின் மேல் இயற்றி இருக்கேன். அவர் முக்தியடையறதை வெண்பாவா எழுதும்போது விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டேன். என்னாலேயே control பண்ண முடியலை. அப்போ உள்ளே வந்த மனைவி, “இதோப் பாருங்கோ வெண்பா எழுத வரலைன்னா இப்படி அழக் கூடாது. யாருக் கிட்டயாவது கேட்டா கத்துத் தரப்போறா” அப்படீன்னா. எங்க வீட்டில எல்லாமே நகைச் சுவை தான்.
இரா.முருகனும் நானும் ஒரு சமயத்தில் வெண்பாவிலேயே பேசிக் கொள்வோம். அவ்வளவு பைத்தியம் ஆயிடுத்து. அவர் காலயில் ஒரு வெண்பா அனுப்புவார். அதற்குப் பதிலாக நான் அவருக்கு இன்னொரு வெண்பா அனுப்புவேன். நான் சாக்லேட் கிருஷ்ணாக்குப் பிறகு இன்னொரு டிராமா எழுதாம இருக்க இந்த வெண்பா மேல உள்ள அதிக ஈடுபாடு தான் காரணம். என் தம்பி பாலாஜி திட்டி திட்டி இப்போ தான் நான் கூகிள் கடோத்கஜன்னு அடுத்த டிராமா எழுத ஆரம்பிச்சிருக்கேன்.
சாக்லேட் கிருஷ்ணாவின் ஒவ்வொரு ஷோக்கு முன்னாடியும் ஒரு வெண்பா எழுதுவேன். தினம் ஹிந்து கேஷவ் கிருஷ்ணர் படத்தை வரஞ்சு எனக்கு அனுப்புவார். உடனே அதற்கு ஒரு வெண்பா எழுதி நான் பதில் அனுப்புவேன், அது தினம் நடக்கிறது.

”அழகவன் கோலம், அழகவன் ஜாலம்,
அழகவன் லீலா அபங்கம் -பழக,
அழகனவன் நட்போ, அலுக்காத கற்பு,
பொழுதுமவன் பொற்பைப் புணர்”
….கிரேசி மோகன்….

“காய்ச்சிய பாலுரை குத்தத் தயிராகும்,
ஆய்ச்சியர் பாடி அவனுறையூர், –மேய்ச்சல்
மனன்யன் முகுந்தன் மடியேந்தி தாளால்,
அனன்யபக்தி ஆவுக்(கு) அளிப்பு’’
…கிரேசி மோகன்….

“சோவர்த்த மானமழை தேவர னர்த்தமாய்,
ஆவர்த்த மானம் அதில்நனைய , –கோவர்த்
தனத்தையன்று சுண்டுவிரலால் தாங்கி, தலையின்(இந்திரன்)
கனத்தையன்று கர்வபங் கம்”
….கிரேசி மோகன்….

”விளக்கீசல் போலே, வியனுலகில் ஈசா,
உளத்தாசை கொண்டிங்(கு) உதிர்ந்தேன், –அளப்பரிய,
ஆதியே உந்தனனு பூதியில் மூழ்கிடும்,
தேதியைச் சொல்லியெனைத் தேற்று
….கிரேசி மோகன்….
சில சமயம் ஏதாவது புஸ்தகம் படிக்கும் போது சில வெண்பாக்கள் தோன்றும்.
கீதா விளக்கம் ‘’ஞானேஸ்வரி’’ படிக்கையில், கண்ணன் அர்ஜுனனுக்கு சொல்வது….
‘’மரண(ம்)அமு துக்குண்டோ !, மேகம்கண்(டு) அஞ்சி,
கரணம் அடிக்குமோ காற்று!, –தருணம்
இருளென்று பானு இயங்காது போமோ!,
உறவென்(று) உருகா(து) உழை’’
….கிரேசி மோகன்….
’’தூங்கும் முன் தோன்றியது’’….
”பாட்டுக்கு நாச்சியார், பரவசம் மீராவால்,
கூட்டுக்கு ராதை, குவலயப் -பாட்டுக்கு(பாடு),
பாரதம், வீட்டுக்கு(வீடு) பாகவதம், மாட்டுக்கு
பேரிதம் சேர்க்கப் பிறப்பு’’
….கிரேசி மோகன்….
‘’நோகா வரம்பெற நோய்நொடி நாடாதே,
சாகா வரம்கூட சாத்தியமே, –யோகா
நிலையாமை நீக்கி நிரந்தரம் சேர்க்கும்,
கலையாம் அதுபாது காப்பு’’
….கிரேசி மோகன்….
என் பேத்தியோடு போகோ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போ தோன்றியது இது.
‘’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்
போகோவைப் பார்பேரன் பேத்தியொடு, –ஆகாகா!
சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,
தேகாபி மானம் தொலைப்பு’’
….கிரேசி மோகன்….
இன்றைய தமிழகத்தில் எழுத்தாளர்களின் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?
நான் சினிமா இன்டஸ்ட்ரிக்கு வந்தது கமலஹாசனோட விசிடிங் கார்ட் வைத்து. என்னை முதலில் சினிமாவில் அறிமுகப் படுத்தியதே கேபி சார் தான். அதனால் நான் ஒரு blue eyed boy. இங்கே நான் ஒரு கஷ்டமும் பட்டதில்லை. என் டயலாக்கை எந்த இயக்குநரும் கட் பண்ணியதில்லை, மாத்தச் சொன்னதில்லை. ஆனா எல்லாருக்கும் இந்த நிலைமை இல்லை. ஆனானப்பட்ட சுஜாதாவே சரியான முறையில் போற்றப் படவில்லை என்பது என் கருத்து. நான் ஒரு நாள் சாயங்காலம் ரெக்ஸ் கடைப் பக்கம் நடந்துண்டு இருக்கேன், சுஜாதா வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ். மாடிக்குப் போனா அவர் மூச்சு விட சிரமப்பட்டுண்டு இருக்கார். அப்பவும் எதுக்கு வந்திருக்க, என்னன்னு விசாரிக்கிறார். அதற்குள் அபோல்லோ ஆம்புலன்ஸ் ஆளு ஸ்டெரச்சரை தூக்கிண்டு மேலே வரான். ஆனா ஒருத்தன் தான் ரெண்டு பேர் கூட அந்த அம்புலன்சில் இல்லை. அந்த பில்டிங்கில் லிப்ட் work பண்ணலை. நான், அவர் பிள்ளை, அந்த ஆம்புலன்ஸ் ஆளு மூணு பேருமா அவரை சேரில் வைத்துத் தூக்கிக் கொண்டு வந்து ஆம்புலேன்சில் ஏத்தினோம். நீல் சைமன்னு ஒருத்தன், சுஜாதாவின் கால் தூசுக்கு வரமாட்டான். வெளிநாட்டு எழுத்தாளர் . அவன் வீட்டில் ஹெலிபேட் இருந்தது. வெளிநாட்டில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மதிப்பு. ஆனா இங்கே எழுத்தாளர்களின் நிலை அப்படி இல்லை. பல பழைய எழுத்தாளர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமை நிலையில் இருக்கின்றன. அவர்களுக்கு என்னால் ஆன சிறு உதவிகளை செய்து வருகிறேன்.
கிரேசி மோகனுக்கு “நமது திண்ணை” சார்பாக கூகிள் கடோத்கஜன் மாபெரும் வெற்றிப் பெற வாழ்த்தி விடை பெற்றேன் J
நன்றி @keshav61 அவரின் கண்ணனின் வண்ண ஓவியங்களை இங்கே போட அனுமதித்ததற்கு.
ஜூன் மாத ‘நமது திண்ணை’ இணைய இதழில் வந்த நேர்காணல்.