தத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2

Bhagavat Gita and Krishna4

ஒரு கதை உண்டு. உலோபியான ஒருவன் இறக்கும் தருவாயில் தன் மகன் நாராயணனிடம் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலைச் சொல்ல நாராயணா என்று அழைக்கிறான். அந்த சமயத்திலேயே அவன் உயிர் பிரிகிறது. இறக்கும் தருவாயில் தெரியாமலேயே நாராயண நாமத்தைச் சொன்னாலும் அவன் சொர்க்க லோகம் போகிறான்! கதை வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகத் தான் நம் அடுத்தப் பிறவியில் பிறக்கிறோம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.

இவ்வுலகத்தை வவிட்டுப் பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் இறை பதத்தை அடைவோம். ஆனால் திடீரென்று கடைசி நிமிடத்தில் இறைவனை நினைக்கத் தோணாது. அதற்குப் பயிற்சி அவசியம். எப்பொழுதும் நம் மனம் இறைவனையே எண்ணியிருந்தால் தான் எந்தக் கணத்தில் நம் ஆத்மா உடலை விட்டுப் பிரிகிறதோ அப்பொழுதும் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கும்.

இது எப்படி முடியும்? அதற்கு பகவத் கீதையில் பதில் வைத்திருக்கிறார் கண்ணன். ஒன்பதாம் அத்தியாயத்தில் இறைவனை வழிபட எளிய வழிகளைச் சொல்லிக் கொடுக்கிறார். ‘இலை, பூ, பழம் காய், தண்ணீர், இவற்றை யார் பக்தியோடு எனக்கு அர்ப்பணிகிறானோ அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார். அதுவும் முடியவில்லையா, ‘நீ எதை செய்கிறாயோ, உண்கிறாயோ, உடுக்கிறாயோ அதையே எனக்கு அர்ப்பணித்து விடு’ என்கிறார். இதைவிட எளிமையான வழிபாடு இருக்க முடியுமா? இதையே நாம் தினம் தினம் செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. அதன் பின் நாம் கண்ணனுடன் இணைவது உறுதி.

lotusflower

எங்கெங்கு காணினும் கண்ணனடா என்பதை நாம் உணர்வதற்கான முதல் வழி அவனின் பெருமைகளை உணர ஆரம்பிப்பதே தான்.

காக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
 என்று பாடுகிறார் மகா கவி சுப்பிரமணிய பாரதி.

பலவற்றில் உள்ள ஒருமைப்பாட்டை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறோம். அப்படி பார்த்தும் கண்ணனின் பெருமைகளின் ஒரு அம்சத்தைத் தான் நம்மால் உணர முடிகிறது. கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்:

தோள் கண்டார் தோளே கண்டார்;

தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்;

தடக் கை கண்டாரும் அஃதே;

வாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?

ஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.

தோள் கண்டார் தோளே கண்டார், தாமரை மலர் பாதங்களைக் கண்டவர்கள் அதற்கு மேல் கண்களை நகர்த்த முடியவில்லை. அவ்வழகில் மயங்கி நின்றனர். கையழகைக் கண்டவர் அதோடு வேறு எங்கும் பார்க்கவில்லை. அது போல தான் நாமும் காணும் காட்சிகளிலும் நடக்கும் சம்பவங்களிலும் இறைவனின் ஒரு குணத்தை மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவனின் பெருமைகளுக்கு எல்லையே கிடையாது.

முதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்ட அர்ஜுனன், பிறகு ஒன்றிலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆசைப் படுகிறான். பலவற்றில் ஒன்றை பார்ப்பதற்குப் பேர் விபூதி. ஒன்றில் அனைத்தையும் பார்ப்பதற்குப் பேர் விஸ்வரூபம். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணன் அல்லவா ஆதலால் அவரும் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தருகிறார். அதையும் அவனின் ஊனக் கண்ணால் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அந்தக் காட்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முடிவில் அர்ஜுனன் கண்ணனை பழைய வடிவத்தில் பார்க்க ஆசைப் படுகிறான். பக்தனுக்குக் கட்டுப்பட்டவராச்சே கண்ணன், அதனால் பழைய உருவத்தை தன் பக்தனும் நண்பனும் ஆன அர்ஜுனனுக்குக் காட்டுகிறார்.

A_Vishva-rupa_print

இறைவனைப் புரிந்து கொள்ளக் கூட விஞ்ஞானம் அவசியமாகிறது. ஆதி சங்கரர் சொல்கிறார், பரம்பொருளைப் பற்றிய  அனுமான அறிவே ஞானம், அனுபவ அறிவே விஞ்ஞானம் என்று. அந்த இரண்டையும் பெற்று வெகு சிலரே இறைவனின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். நம்மிடம் ஒரு தேடல் இருக்க வேண்டும், அப்பொழுது தான் உண்மை என்னும் இறைவன் நமக்குச் சரியாகப் புலப்படுவார்.

அறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது, அறிவு ஒருவருக்கு அளிக்கும் ஒளி தான் ஞானம். ஒருவன் ஞானியாக மாறும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறுகிறது.

தத் த்வம் அசி என்கிற மகா வாக்கியமானது உபதேச வாக்கியமாகக் கருதப் படுகிறது. வேதத்தின் முழுப் பொருளை உணர்த்தும் இவ்வாக்கியத்தை தத் த்வம் அசி என்று மூன்றாகப் பிரித்துப் பொருளை உணரலாம். எளிமையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால், தத்வமசி என்பது ‘That You Are’! பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஆறு ஆறு அத்தியாயங்கள் தத் த்வம் அசி என்ற மூன்று சொற்களின் பொருளை விளக்குவதாக அமைகிறது. நான் முன்பே த்வம் பற்றி எழுதியுள்ளேன்.

https://amas32.wordpress.com/2013/10/21/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/

த்வம் என்பது நீ/நான். நம்மை அறிந்து கொள்வது எளிது. கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.

ஏழாவது அத்தியாயத்தில் இருந்து பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘தத்’ என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. தத் என்பது இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வது. கடைசி ஆறு அத்தியாயங்கள் ‘அசி’- அதுவாகிறாய், அதாவது நாம் அது வாகிறோம். ஜீவாத்மா பரமாத்மாவின் உறவினை விளக்குகிறது இந்த மகா வாக்கியம்.

இறைவனைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அனால் அதை நமக்காக குரு சீடன் உரையாடல் மூலம் அழகாக கேள்வி பதில் வடிவில் கீதையில் ஏழிலிருந்து பன்னிரெண்டாம் அத்தியாயங்களில் கண்ணன் சொல்கிறார்.

எக்கும் இரும்பும் சேர்ந்து செய்யப்பட ஒரு நீராவி இயந்திரம் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும் நீராவியினால் செயல்படுகிறது. நீராவி தனித்து இருக்கும்போது இந்த ஆற்றல் அதற்கு இல்லை. அனால் அதே ஒரு ஜடப் பொருளான இயந்திரத்தில் செலுத்தப்படும் போது  செயல் திறன் மிக்கதாக மாற்றப் படுகிறது. அதே மாதிரி அழிவில்லாத பரிபூரணமான ஆத்மா உயிரற்றப் பொருள்களை ஆணைத்துப் பலவாகத் தோன்றும் இவ்வுலகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

steamengine

எல்லா பருத்தி ஆடையிலும் பருத்தி இருப்பது போல, எல்லா தங்க நகைகளிலும் தங்கம் இருப்பது போல, எல்லா நாம ரூபங்களிலும் இறைவன் சாராம்ச பொருளாக ஊடுருவி நிற்கின்றான். சிறுசும் பெரிசுமாகவும், வட்டமும் நீளமும் ஆக இருக்கும் முத்துக்களான ஜீவாத்மாக்களை பரமாத்மா எனும் நூல் ஒன்றாகக் கோக்கின்றது. நாம் தொடர்பு கொள்ளும் எல்லோரிடமும் ஆத்மாவின் உறவை மறக்காமல் பழகினால் நாம் போகும் பாதை சரியானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.

நாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும்  நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால் அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.

ஆன்ம நாட்டம் கொண்டவர்கள் தேடித் தேடிக் கடைசியில் தானே ஆத்மா என்று கண்டுகொள்கிறார்கள். ‘என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்னிடமே வந்தடைகிறார்கள்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா! ‘சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படியே நாம் மாறுகிறோம்’. நல்லவற்றையே திரும்பத் திரும்ப நினைத்தால் அவ்வாறே நாம் மாறுகிறோம்.சிந்தனையை ஒத்து செயலும் நல்லதாகவே அமைகிறது.

கண்ணன் நமக்கு உத்தரவாதத்தையும் தருகிறார். ஒரு வீட்டுக்குத் தேவையானப் பொருளை வாங்கினால் உத்தரவாத அட்டை அதனுடன் வருவது போல கண்ணனும் நாம் இந்த பூவுலகில் பிறக்கும் போது என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்ற உத்தரவாத அட்டையுடன் தான் நம்மை அனுப்புகிறார். அதுவும் வாழ்நாள் உத்தரவாதம்! என்னை நிரந்தரமாக வழிபடுகிறவனுக்கு நல்ல யோகத்தையும் வளங்களையும் தருவேன் என்று கண்டிப்பாக உறுதி அளிக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் பக்தி யோகம் செய்யும் முறைகளைப் பற்றியும், பக்த லட்சணங்களைப் பற்றி அவர் கீதையில் சொன்னதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு. இந்த குணங்களுடன் யாரொருவன் இருக்கிறானோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று ஒரு பாடலில் சொல்கிறார் கண்ணன்.

வேதங்களும் வேதாந்தங்களும் பரம்பொருள் என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்வதில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுகின்றன. எல்லாம் அறிந்தவர், புராதானமவர், அணுவைக் காட்டிலும் நுணுக்கமானவர் ஆனாலும் பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவர், உலகெல்லாம் ஆட்சிப் புரிகின்ற சக்தி ரூபமானவர், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர், சிந்தனைக்கு எட்டாதவர், சூரியனைப் போல ஒளி வீசுபவர், அறியாமை அல்லது இருளுக்கு அப்பாற் பட்டவர் என்று க்ளூக்கள் தான் தரப் படுகின்றன! இறைவனை தேடிக் கண்டு பிடிப்பது நம் கையில் தான் உள்ளது.

எல்லா மண் பண்டங்களிலும் களிமண் இருப்பது போல இறைவன் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா பொருட்களும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆனால் அவற்றில் நான் இல்லை என்கிறார் எம்பெருமான். கடலில் இருந்து தான் அலைகள் உருவாகின்றன ஆனால் அலைகள் நானல்ல என்று கடல் சொல்லலாம். விழித்தவன் இடம் தான் கனவு கண்டவனும் இருக்கிறான். ஆயினும் கனவு நேரத்தில்  இருந்தவன் அவனல்ல. முற்றிலும் விழித்துக் கொண்ட நிலை வந்ததும் அவனிடம் கனவு அனுபவங்களும் இல்லை.

மனத்துடனோ புத்தியுடனோ தன்னை இணைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மாமுநிவனும் மகா அயோக்கியனும் ஒண்ணு தான். எழுந்தவுடன் திருடனுக்குத் திருட்டுப் புத்தியும் முனிவருக்கு இறை சிந்தனையும் தோன்றும். அவர்கள் இருவருக்கும் இயக்கமளிக்கும் உயிர் சக்தி ஒன்று தான்.

நாம் சினிமாவுக்குப் போகிறோம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கொலை கொள்ளை நடக்கின்றன. புயலிலும் மழையிலும் நாயகி சிக்கித் தவிக்கிறாள். ஆனால் படம் முடிந்ததும் வெள்ளித் திரையில் அதற்கான ஒரு சுவடும் இல்லை. புயல் மழையினால் திரை நனையவில்லை, கிழியவில்லை. அடிதடியினால் வெள்ளை திரையில் ரத்தக் கறையும் காணவில்லை. இறை பொருளின் நிலைமையும் அது போலத் தான்.

movie-screen

மேஜை மேல் ரேடியம் முகப்புள்ள கடிகாரம் ஒன்று உள்ளது. அந்த மேஜையின் மேல காகிதங்களும் புத்தகங்களும் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக நீக்கியபோது அதன் அடியில் இருந்த கடிகாரம் இருட்டிலும் ஒளிவிடுகிறது. இறைவனின் சுயம் பிரகாச பேருண்மையும் அதே மாதிரி தான். அறியாமை விலகியவுடன், சுய ஒளியில் தானாகவே அப்பேருண்மை நம் உணர்வில் தோன்றுகிறது.

கிருஷ்ணா பரமாத்மா மேலும் பதினோறாம் அத்தியாயத்தில் தன்னை அர்ஜுனனுக்கு விளக்க முற்படுகிறார், அதன் மூலம் நமக்கும்! அவர் சொல்லும் பல உதாரணங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:

‘ஒளி அளிப்பவைகளில் நான் சூரியன், நட்சத்திரங்களில் நான் சந்திரன், புலன்களில் நான் மனம், ருத்திரர்களில் நான் சங்கரன், வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன், மலைகளில் நான் மேரு, சொற்களில் நான் தனிச் சொல் ‘ஓம்’, நீர் நிலைகளில் நான் சமுத்திரம், அசைவில்லாப் பொருள்களில் நான் இமயம், மரங்களில் நான் அரச மரம், பசுக்களில் நான் காமதேனு, பாம்புகளில் நான் வாசுகி, அசுரர்களில் நான் பிரகலாதன், ஆயுதம் தாங்கிய வீரர்களில் நான் இராமன், நதிகளில் நான் கங்கை, விக்ஞாயானங்களில் நான் ஆத்மா விக்ஞானம், எழுத்துக்களில் நான் ‘அ’ எழுத்து, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம், யாப்பு வகைகளில் நான் காயத்திரி, எல்லாவற்றிற்கும் விதை போன்று இருப்பவன் நான் தான்’ என்று முடிக்கிறார்.

முழுமையான ஒரு முக வழிபாட்டின் மூலம் யார் வேண்டுமானாலும் பகவானின் இறைத் தன்மையைக் காணலாம், அவரின் மாட்சியை தனக்குள் அனுபவிக்கலாம் என்று கண்ணன் கூறியவுடன் அர்ஜுனன் முகத்தில் அதை எப்படி அடைய முடியும் என்ற கவலை ரேகைகள் ஓடுவதை அவர் பார்த்திருப்பார். அதனால் அதற்கு எளிமையான வழி முறைகளையும் அவரே சொல்கிறார்.

1. பக்தனின் செயல்கள் யாவும் இறைவனின் திருப்பணியாகவே அமையவேண்டும்.

2. அவனின் இலக்கு இறைவனை அடைவதாகவே இருக்க வேண்டும்.

3. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்க வேண்டும்.

4. பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.

5. எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.

இவ்வைந்து அம்சங்களையும் சிரமேற்கொண்டு செய்து வந்தால் நம்மால் இறைவனை உணர முடியும். முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து பின் இறைவனை எங்கும் எதிலும் காணும் நிலையை அடைவோம்.

krishna

Ref: சுவாமி சின்மயானந்தாவின் பகவத் கீதை உரை.