முழு நீள நகைச்சுவைப் படம் என்று முன்பெல்லாம் சில படங்களுக்கு விளம்பரப் படுத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு படம் தான் ரஜினி முருகன். என்ன கொஞ்சம் நீஈஈளப் படம்! அது தான் கஷ்டம். இருபது நிமிஷத்துக்கு வெட்டி எடுத்து விட்டால் படம் இன்னும் நன்றாக இருக்கும்.
மதுரையில் நடக்கும் கதை. அதனால் அடி தடி கன்பிர்ம்ட். சமுத்திரக்கனி நல்ல வில்லனாக பார்ம் ஆகி வருகிறார். கடைசியில் தான் கொஞ்சம் காமெடி பீசா அவரை ஆக்கிடறாங்க. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சூரி. அதனால் சமயத்தில் நாம பார்க்கிற படம் வருத்தப் படாத வாலிபர் சங்கமா இல்லை ரஜினி முருகனா என்று சந்தேகம் வருகிறது. முன்னதில் சத்யராஜ் கெத்து காட்டியிருப்பார். இந்தப் படத்தில் ராஜ்கிரண். நல்ல பாத்திரத் தேர்வு! கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். முன்னாள் நடிகை மேனகாவின் மகள். அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்.
சிவகார்த்திகேயன் நடனம் ஆடுவதிலும், நடிப்பதிலும் நல்ல முன்னேற்றம் காட்டுகிறார். அவருக்குத் தகுந்த பாத்திரமாகத் தேர்வு செய்து நடிப்பதால் அவர் செயல் திறனும் நன்றாக உள்ளது. இயக்குநர் பொன்ராம் ஒரு சாதா கதையையும் சிவகார்த்திகேயனையும் ஒரு சேர நன்றாகக் கையாண்டிருக்கிறார். திரை அரங்குக்குப் போய் ஒரு இரண்டரை மணி நேரம் டைம் பாசுக்கு உகந்த லைட்டான படம் இது. எந்த இடத்திலும் மெலோடிராமா இல்லாமல் கதை கொஞ்சம் சீரியஸ் ஆகும்போது நகைச்சுவையை இயக்குநர் உள்ளே நுழைத்துப் படத்தை சுவாரசியமாக்குகிறார்.
நிறைய பாடல்கள். {இசை டி.இமான்} சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே நமக்கு பக்கென்றாகிவிடுகிறது. ஏனென்றால் உடனே ஒரு டூயட்! இதைத் தவிர மதுரை மண் மணக்க பல ஆடல் பாடல்கள்.
இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குச் சித்திரம் அதனால் தயாரிப்பாளர்கள் திருப்பதி பிரதர்ஸ் பணம் பண்ணிவிடுவார்கள். பொங்கல் ரிலீசில் இது தேறிவிடும் என்பது என் கணிப்பு. எல்லாமே ஒப்பீடு தானே. ஆனால் இதே மாதிரி இன்னொரு படம் சிவகார்த்திகேயன் பண்ணினால் அலுத்துவிடும்.