துப்பாக்கி! விமர்சனம்

முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு மாஸ் விஜய் படம் 🙂 லோகல் ரௌடிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக பிரமோஷன் அடைந்து நாட்டின் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார் விஜய். முன்பு ஒரு படத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்திருப்பார். பாத்திரம் பொருந்தாது. இந்தப் படத்தில் அவருக்கு பாத்திரத்தை கனகச்சிதமாகப் பொருந்த வைத்திருப்பது இயக்குனரின் முதல் வெற்றி.

விறுவிறுப்பான திரைக் கதை படத்தின் வெற்றிக்கு அடித்தளம். விஜயை நாம் அசகாய சூரர் என்று ஏற்றுக் கொண்டு விட்டதால் அவர் தனி ஆளாகச் செய்யும் சாகசங்களை கேள்வி கேட்காமல் பாராட்டுகிறோம். அது தான் நியதி. அந்த நம்பிக்கையின் மேல் தான் இந்தப் படமே அமைந்து இருக்கிறது.

மும்பையிலேயே முக்கியக் காட்சிகள் எடுத்திருப்பதால் படம் நம்பகத் தன்மையோடு இருக்கிறது. நிச்சயம் முருகதாஸ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அவருக்காகப் படம் எடுக்காமல் விஜய்க்காக எடுத்திருக்கிறார். விஜயின் நடிப்பிலும் ஒரு முன்னேற்றம்/முதிர்ச்சி தெரிகிறது.

நடனத்தில் அவரை மிஞ்ச ஒருவர் வர வேண்டும். அனாயாச ஸ்டெப்ஸ்! பாடல்கள் தான் படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி இன்னும் இவ்வளவு மார்கெட் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர்! பின்னணி இசையும் அதே ரகம். கூகிள் பாடல் நன்றாக உள்ளது.

வடிவேலு இல்லாக் குறையை போக்க ஜெயராமன் ரொம்ப முயற்சி செய்கிறார்.  பாவம் பாதி தூரம் கூட அவரால் எட்ட முடியவில்லை. எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் மிகவும் அருமை.

எப்பொழுதும் முதல் நாளே பார்த்துவிட்டால் விமர்சனம் காதுக்கு வராது. கொஞ்சம் லேட்டாகப் பார்த்ததால் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு அந்த எண்ணத்தோடு போனதால் எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது 🙂

சொல்ல மறந்துவிட்டேன், ஹீரோயின் காஜல் அகர்வால் 🙂