வாலு – திரை விமர்சனம்

vaalu-movie-poster

எந்தப் பெரிய நடிகர் நடித்தப் படமாக இருந்தாலும் தயாரித்து மூன்று வருடம் கழித்து ரிலீஸ் ஆகும் எந்தப் படமும் வரவேற்பின்றி வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடுவது தான் வழக்கம். ஏனென்றால் அதற்குள் trend மாறியிருக்கும். வாலு அதற்கு விதிவிலக்கு. அதற்கு முழுக் காரணம் சிம்பு! படம் முழுதும் லாகவமாக வலம் வருகிறார்.

இந்தப் படத்தை தல, தளபதி இணைந்து வழங்கும் என்று மட்டும் அல்ல மக்கள் திலகம், சூப்பர் ஸ்டார் அனைவரும் சேர்ந்து வழங்கும் படம் என்றும் விளம்பரப் படுத்தி இருக்கலாம். அந்த அளவு எல்லோரையும் பயன்படுத்தி இருக்கிறார் சிம்பு 🙂 படம் பார்த்தால் நான் ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்று புரியும் 🙂

ரொம்ப லைட்டான கதை. கதாப்பாத்திரங்கள் அனைவருமே likeable characters ஆக இருப்பது நாம் படம் பார்க்கும் அனுபவத்தை இதமானதாக ஆக்குகிறது. ஓவராக குடி சீன்கள்/டாஸ்மாக் காட்சிகள் இல்லை. சிகரெட் பிடிப்பதைக் கூடக் கதாநாயகன் நிறுத்துவது போல ஒரு காட்சி. மிக்க நன்றி இயக்குநரே! இரட்டை அர்த்த வசனங்களோ முகத்தை சுளிக்க வைக்கும் நடன அசைவுகளோ இல்லை. தந்தை-மகன், தாய்-மகன், அண்ணன்-தங்கை, காதலன்- காதலி, நண்பன்-நண்பி, தோழன்-தோழன், ஹீரோ-வில்லன், ஹீரோ-அடியாட்கள் ஆகியோருடனான உறவுகள் நன்றாக கையாளப் பட்டுள்ளன. புதுமுக இயக்குநரான விஜய் சந்தர், கதை வசனமும் எழுதி ரொம்ப மெனக்கெடாமல் ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

படம் நகைச்சுவையாக உள்ளது. ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை. நல்ல டைம்பாஸ், அவ்வளவே. சிம்பு ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எல்லா படங்களில் பார்க்கும் அதே படிக்காத, வேலை இல்லாத, மிடில் கிளாஸ், பார்க்க சுமாரான பையன்- ரொம்ப அழகான, படித்த, அந்தஸ்துள்ள ஒரு பெண்ணை காதலித்து அவளை அடைவது தான் கதை. முறைப்பையன்/தாதா தான் வில்லன். உஸ்ஸ் அப்பா என்று தலையில் கை வைத்துக் கொள்ளாத அளவு எளிமையாக நகருகிறது படம். காமெடியான ஸ்டன்ட் காட்சிகள் மேலும் ஒரு ப்ளஸ். சிம்பு விரல் வித்தையெல்லாம் காட்டாமல் சாதாரணமாக நடித்திருப்பது பெரிய நிம்மதி. நன்றாக நடனமும் ஆடியிருக்கிறார்.

ஹன்சிகா மிகவும் அழகாக வருகிறார். பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைத் தருகிறார். சிம்புவுக்கு இணையாக நடனம் ஆடுகிறார். சிம்புவின் சகாக்கள் சந்தானம், விடிவி கணேஷ். அவர்களும் ஓவர் சலம்பல் இல்லை. அடக்கியே வாசித்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸ்ஸில் சண்டைக் காட்சி இல்லாமல் முடிவது நன்று. எப்படியிருந்தாலும் ஹீரோவுக்கு தான் லட்டு. பிறகு எதற்கு ஒரு ஆக்ரோஷமான சண்டைக் காட்சி என்று சிம்பிளாக முடிவு பண்ணிட்டார் இயக்குநர்/கதாசிரியர்.

இசை – தமன். பாடல்கள் நன்றாக உள்ளன, அதாவது படத்தின் தரத்திற்கேற்ப! யூத் டைப்!  சிம்புவும், தமனும் தனித் தனியாகப் பாடிய பாடல்கள் இரண்டும் FM வானொலி சேனல்களில் ஹிட். பின்னணி இசைக்குப் பழைய பாடல்கள் தமனுக்கு நன்கு கை கொடுத்திருக்கின்றன.

இரண்டு மணி நேரம் தான் படம் என்று பார்க்கும் நிலைமைக்கு நாம் பழகிவிட்டோம். பைட் சீன்களில் கத்திரி போட்டிருக்கலாம். படம் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கும்.

பல வருட காத்திருப்பிற்குப் பிறகு படம் ரிலீஸ் ஆனதற்கு சிம்புவிற்கும் படத்தின் குழுவினருக்கும் வாழ்த்துகள்!

vaalu1