புரியாத புதிர் – திரை விமர்சனம்

ரஞ்சித் ஜெயகொடியின் முதல் படம், நீண்ட தாமதத்திற்குப் பிறகு வெளி வந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருப்பதால் பாராட்டுக்குரியதாகிறது. எழுதி இயக்கியிருக்கும் ரஞ்சித் ஒரு தேர்ந்த திரையுலக படைப்பாளியாக முதல் படத்திலேயே பெயர் வாங்குகிறார்.

விஜய் சேதுபதியின் நடிப்பு மிக மிக அருமை. அட்டகாசமாக செய்திருக்கிறார். தன் காதலிக்கு நேரும் துன்பத்தைக் கண்டு பத்தட்டப் படுவதும்,  அதிர்ச்சிக்கு உள்ளாகும்போதும் அனாயசமாக பாத்திரத் தன்மையை உள்வாங்கி வெளிக் கொண்டு வருகிறார். மேலும் மூன்று வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு நடந்திருப்பதால் குறைந்த எடையுடன் இருக்கும் விஜய் சேதுபதியைக் கண்டு களிக்க முடிகிறது.  பொதுவில் கதாநாயகிகளுக்குக் கிடைக்காத கனமான பாத்திரம் ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ காயத்திரிக்கு இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. நடிக்கிறார் என்பதே தெரியாத அளவு பாத்திரத்தில் ஒன்றி சிறப்பாக பங்களித்துள்ளார். இவர்கள் இருவரின் நடிப்பும் இப்படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.

லென்ஸ் சொல்ல வந்தக் கருத்தை இப்படமும் முன்னிறுத்துகிறது. ஆனால் சொல்ல வந்தப் பிரச்சினை ஒன்றாக இருப்பினும் முற்றிலும் வேறு கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் நெருங்கும் வரை யூகிக்க முடியாத கதையம்சத்துடன் விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியிருகிறார் இயக்குநர். படத்தின் ஒன் லைன் – நமக்கு ஏற்படும் வரை இழப்பின் வலி நமக்குத் தெரியாது என்பது தான். அதுவும் இன்றைய கால கட்டத்தில் பலான காணொளிகளை இணையம் மூலம் பலருக்கும் பகிர்வதை சகஜமாக நினைக்கும் இளைஞர்களுக்கு இப்படம் ஒரு நல்ல பாடமாக அமையும் என்று நம்புகிறேன். குற்ற உணர்வு வருமா, மக்கள் திருந்துவார்களா என்று தெரியாது ஆனால் மனத்தில் உரைக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்குத் தேவையான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சாம் C.S. பல இடங்களில் பின்னணி இசையே திரைக்கதையாகிறது. பாடல்களும் நன்றாக உள்ளன. இசையைப் பொறுத்த வரையில் சபாஷ் சாம்! ஒளிப்பதிவும், முக்கியமாக லைட்டிங்கும் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கு ஒரு பூங்கொத்து!

படக்காட்சி இரண்டு மணி நேரம் தான். இடைவேளை வரை இருக்கும் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் இரண்டாவது பாதியும் நன்றாக அமைந்துள்ளது. அருவருப்போ, ஆபாசமோ இல்லாமல் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது இயக்குநருக்கு. அச்சு பிச்சு காமெடி இல்லை. காதலில் சொதப்புவது எப்படி அர்ஜுனனுக்கு பெரிய பாத்திரம், சிறப்பாக செய்திருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கும் காயத்திரிக்கும் அதிக வாய்ப்புகள் வர வாழ்த்துகள்.

குறையில்லாமல் இருக்குமா? ரமேஷ் திலக் வரும் பகுதியில் சில விஷயங்கள் விளக்கப்படாமல் உள்ளது. அது தனிப்பட்ட ஒரு சம்பவம் எனில் நாயகியை வாயை கட்டி கையை கட்டி அவர் என்ன செய்வதாக இருந்தார்? அது ரசிகரை குழப்புவதற்காக போடப்பட்ட முடிச்சா என்று புரியாத புதிராக உள்ளது. அந்த உதிரி பகுதியையும் சரியாக விளக்கியிருக்கலாம் இயக்குநர்.

மற்ற இணை பத்திரங்களில் வந்த அனைவருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.  சோனியா தீப்தி சின்ன பாத்திரத்தில் வந்தாலும் மனத்தில் நிற்கிறார். நிறைவைத் தருகிற குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. புரியாத புதிர் டீமுக்கு வாழ்த்துகள்.

விக்ரம் வேதா – திரை விமர்சனம்

 

புஷ்கர்-காயத்ரி இருவரும் இணைந்து இயக்கி இருக்கும் இருவர் பற்றிய படம் விக்ரம்-வேதா! அம்புலிமாமாவின் விக்ரமாதித்தன் வேதாளம் கதையின் நீட்சியாக திருடன் போலிஸ் கதை இது.  வேதாளம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக உடைந்து விடும் அதனால் இக்கதையிலும் கேங்க்ஸ்டர் வேதாவின் கேள்விகளுக்குப் பதில் தேடி முடிச்சை அவிழ்க்கிறார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம். அருமையான திரைக்கதை மற்ற போலிஸ் கேங்க்ஸ்டர் கதைகளிலிருந்து இதனை மாறுபடுத்திக் காட்டுகிறது. முதல் பாதி முடிவுக்கு சற்று முன்பேயிருந்து சதுரங்க விளையாட்டைப் போல போலிஸ் மாதவனும் தாதா விஜய் சேதுபதியும் ஒருவரை ஒருவர் எதிராளியை அசர அடிக்கும் காய் நகர்த்தல்கள் மூலம் வெற்றிக் கொள்ள பார்க்கின்றனர். கடைசியில் இருவருமே செக்மேட் என்கிறார்களா இல்லை ஒருவர் வெற்றி பெறுகிறாரா என்பாதை வெள்ளித் திரையில் பார்க்கவேண்டும்.

மிகவும் அனுபவுமள்ள நடிகர் மாதவன். அவருக்கு ஈடு கொடுத்து மட்டுமல்லாமல் அசால்டாக {சென்னை தமிழ்} அவரை நடிப்பில் மிஞ்சப் பார்க்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்கு இவர்கள் இருவரின் நடிப்பு தான் என்றால் மிகையாகாது. மாதவன் ஒரு நல்ல போலிசாக வருகிறார். அவருக்கு எந்தக் கிரிமினலும் குற்றவாளி தான். ஆனால் குற்றவாளிகள் வேறு வடிவத்திலும் இருப்பார்கள் என்று அறியும்போது அவர் வெள்ளை கருப்பு என்று பகுதிபடுத்தி இருந்த பிம்பம் உடைகிறது. கெட்டவனான விஜய் சேதுபதியிடம் அவர் கதை கேட்பதும் அதன் மூலம் விடை தேடப் போவதும் நல்ல யுக்தி.

மாதவன் மனைவியாக வக்கீலாக வரும் ஷ்ரத்தா பாத்திரத்துக்கு கன பொருத்தம். குற்றவாளி வேதாவுக்கு அவரே வக்கீலாக வருவதும் அதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளும் அழகு. டைட்டிலில் வரலட்சுமி பெயர் வருகிறதே எங்கே காணோம் என்று இடைவேளையின் போது யோசித்ததற்கு இடைவேளைக்குப் பின் சந்திரா என்னும் பாத்திரத்தில் வந்து நடிப்பில் அசத்துகிறார் வரு சரத்குமார். தாதா கதை என்பதால் வரும் பெரும்பாலான  அடியாள் பாத்திரங்கள் ஜடா முடியுடன் அழுக்கு உடைகளுடன் வலம் வருகின்றனர். விஜய் சேதுபதியின் தம்பி பாத்திரத்தில் வரும் கதிர், இன்னொரு ரவுடி பாத்திரத்தில் சேட்டா என்று வரும் ஹரீஷ், போலிஸ் சக அதிகாரி சைமனாக வரும் பிரேம் நடிப்பினால் மனத்தில் நிற்கின்றனர். எல்லா பாத்திரங்களின் தன்மையையும் முதலில் இருந்து கடைசி வரை மாறாமல் வைத்திருப்பது இயக்குநர்களின் வெற்றி.

ஒவ்வொரு முறையும் மாதவன் கையில் அகப்பட்டு பின் தப்பிக்கும் விஜய் சேதுபதி, அதற்கான காரணம், கடைசியில் க்ளைமேக்ஸ் அனைத்தும் விறுவிறுப்பாக, சுவாரசியமாக அமைக்கப்பட்டிருக்கு. ஆனால் க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயத்தில் நமக்கே பல விஷயங்கள் யூகிக்க முடிகிறது. அந்த வகையில் பெரிய சஸ்பென்ஸ் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் திரைக்கதையில் எங்கும் தொய்வில்லை.

இசை சாம். ஒரு பாடல் நன்றாக உள்ளது. பின்னணி இசை காட்சி நிகழும்போதே, அதற்கு சற்று முன்பேயே அதன் தன்மையை நமக்கு உணர்த்திவிடுகிறது.  எடிடிங் & ஒளிப்பதிவு பக்கா! நல்ல ஒரு த்ரில்லர் படம். கதையைப் பொறுத்த வரையில் ஆங்கிலப் படங்களின் சாயல் உள்ளது. ஆனால் தமிழில் வந்திருக்கும் நல்லதொரு படைப்பு. டீம் விக்ரம் வேதாவுக்குப் பாராட

Post Formats Standard
 Aside

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

andavankattalai

முதல் படத்தில் சிக்சர் அடித்துவிட்டுப் பின் வரும் படங்களில் டக் அவுட் ஆவது பல இயக்குநர்களின் சாபம். ஆனால் தொடர் ஹேட்ரிக் அடித்துள்ளார் இயக்குநர் மணிகண்டன். அருள் செழியன், அனுசரணுடன் திரைக்கதை அமைத்து முன் எடுத்த இரு படங்களுக்கும் இப்படத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தின் பெயருக்கும் படத்துக்கும் என்ன தொடர்பு என்று தான் படம் முடிந்த பிறகும் புரியவில்லை.

வெற்றிக்கொடி கட்டு படத்தின் எப்படியாவது வெளிநாட்டுக்குப் போய் பணம் சம்பாதிப்பது, ஆனால் முடியாமல் இங்கேயே இருந்து சாதிப்பது தான் இந்தப்படத்தின் ஆரம்பமும். பின்னர் வேறு பாதையில் பயணிக்கிறது கதை. ஆனால் சொல்ல வரும் கசப்பு உண்மையை சர்க்கரைப் பாகில் நனைத்துத் தருகிறார் மணிகண்டன்.  சோகமாக சொல்லியிருக்கக் கூடிய ஒரு கதையை காக்கா முட்டைப் போலவே சுவாரசியமாக, நகைச்சுவைக் கலந்து அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி அமைதியாக தமிழ் சினிமா உலகில் ஒரு நல்ல இடத்துக்கு முன்னேறி வருகிறார். அலட்டல் இல்லாத, அதே சமயம் பாத்திரத்துக்கேற்ற சிறந்த நடிப்பு அவரின் பிளஸ் பாயின்ட். இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார். இறுதிச் சுற்று ரித்திகா சிங் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளார். கார்மேகக் குழலியாக தொலைக் காட்சி ஏங்கராக, விஜய் சேதுபதிக்கு உதவுவதற்காக அவர் முதலில் யோசிப்பதும், பின் உதவப் போய் சிக்கலில் மாட்டிக் கொண்டு வெளிவர முனையும்போதும் முகத்தில் நல்ல உணர்ச்சி பாவங்கள்.

துணைப் பாத்திரங்களில் வரும் அனைவரும் மனத்தில் நிற்கின்றனர். அது மணிகண்டனின் தனிப் பட்ட வெற்றி. நாடகக் கலைஞர்/ஆசான் நாசர், லண்டனுக்குப் போய் அவதியுற்றுத் திரும்பி வரும் யோகி பாபு, இலங்கை அகதியாக வரும் அரவிந்தன் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர், அதிலும் அரவிந்தனின் நிலை நம் மனத்தில் கழிவிரக்கத்தை உண்டு பண்ணுகிறது. பூஜா தேவார்யாவும் உள்ளார். வக்கீல், வக்கீலின் உதவியாளர், நீதிபதி, பாஸ்போர்ட் அதிகாரி, என ஒவ்வொரு பாத்திரத்தையும் நுணுக்கத்துடன் செதுக்கியுள்ளார் மணிகண்டன்.

இசை K. பாடல்கள் படத்துடன் இணைந்து உறுத்தாமல் இருந்தன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது, வசனம் இல்லா இடங்களில் இசை பேசுகிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் நன்று.

வாழ்க்கையின் யதார்த்தத்தை, ஒரு கிராமத்தில் இருந்து நகரத்துக்கு சொந்த நாட்டிலேயே புலம் பெயர்வதில் வரும் இன்னல்களை, உண்மையாக இருக்க முயற்சி செய்கையில் பொய் வாழ்வில் வந்தால் அதை அகற்றி வாழ முற்படும் போது வரும் சவால்களையும் நகைச்சுவையுடன் காட்டுகிறார் மணிகண்டன். இன்னும் சிறப்பான படங்களை மென்மேலும் தர வாழ்த்துகள்.

aandavan-kattalai-new-1

இறைவி – திரை விமர்சனம்

iraivi2

பலர் புகழ்ந்து தள்ளியது போல படம் ரொம்ப ஓஹோ என்றும் இல்லை எழுத்தாளர் சாருவும் வேறு சிலரும் இகழ்ந்தது போல படம் படு குப்பையும் இல்லை. இக்கால சூழலுக்கு ஏற்ற மிக நல்ல படம். பெண்கள் என்றும் சூழ்நிலை கைதிகளாகவே உள்ளனர், சுதந்திரம் என்பது வெகு அரிதான ஒரு பரிசாக அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை அழகாக எடுத்துச் சொல்கிறது படம். பெண்கள் ஆண்களிடம்/கணவன்களிடம் படும் அவஸ்தைகளை மெலோடிராமா இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கார்த்திக் சுப்புராஜின் மூன்றாவது படம். பீட்சா, ஜிகிர்தண்டா, அதன் பின் இறைவி. ஜிகிர்தண்டா ரொம்ப ஜனரஞ்சகமான படம். இறைவி கொஞ்சம் சீரியஸ். படத்தில் வரும் சம்பவங்கள் நிஜ வாழ்வை ஒத்து உள்ளது.  எஸ்.ஜே.சூர்யா தான் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் ஒரு இயக்குநராக அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. அவரது மனைவியாக கமாலினி முகர்ஜி, விரக்தியால் குடி நோயில் தள்ளாடும் சூர்யாவிடம் மாட்டிக் கொண்டு திருமணத்தை முறித்துக் கொள்ளவும் முடியாமல் அவருடன்  குடித்தனமும் செய்ய முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு நிலையில் வாழும் அவரும் சிறப்பாக செய்துள்ளார்.

விஜய் சேதுபதி திரும்பவும் அடியாள் மாதிரி பாத்திரம். அவரது மனைவியாக பல சின்ன சின்னக் கனவுகளுடன் அஞ்சலி. அஞ்சலி, கமாலினி, பூஜா தேவரியா ஆகிய மூன்று முக்கிய பெண் பாத்திரங்களில் அஞ்சலி எளிதாக முதல் இடத்தைப் பிடிக்கிறார். வடிவுக்கரசியும் படத்தில் உள்ளார், அவர் கோமாவில் இருப்பதால் நடிப்பு என்று பேச எதுவும் இல்லை. ராதாரவி, சீனு மோகன் தங்கள் தேர்ந்த நடிப்பால் படத்துக்கு பலம் சேர்க்கிறார்கள்.

பெண்களின் நிலை பற்றி பொதுவில் எவரும் கவலைப்படுவதில்லை ஏனென்றால் பெண் எந்த நிலைக்கும் தன்னை பொருத்திக் கொள்வாள் என்ற காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையே. அதுவே இப்படத்தின் அடித்தளம். அதன் மேல் கட்டப்பட்டிருக்கு மற்ற சம்பவங்கள். ஆண் என்பவன் கோபக்காரன், முரடன், ஆதிக்கம் செலுத்துபவன். ஆண்கள் பெண்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும் சமயத்திலும் கூட அதன் முடிவு ஆண்களுக்கு சாதகமாக இருந்தாலே அதை செயல் படுத்துகிறார்கள். அதை மாற்றவும் முடியாது என்பதையும் இப்படம் சொல்கிறது.

Men are from mars and women are from Venus என்பது ஒரு புகழ் பெற்ற புத்தகத்தின் தலைப்பு. அப்புத்தகத்தில் ஆசிரியர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசத்தை விவரமாக காட்டியிருப்பார். ஆணும் பெண்ணும் வெவ்வேறு கிரகத்தைச் சார்ந்தவர்கள், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் எதிர்ப்பார்ப்புகளும் வெவ்வேறானவை. அது இப்படத்தின் கருவாக இல்லாவிட்டாலும் ஆண், பெண் உணர்வுகளின் வித்தியாசத்தை இப்படம் அழகாக கோடிட்டுக் காட்டுகிறது.

இப்படத்துக்குப் பாடல்களே தேவையில்லை. பாடல்களும் நன்றாக இல்லை. நான்கு பாடல்களையும் கட் பண்ணிவிடலாம். அவை கதையோட்டத்திற்கு தடையாகவும் உள்ளன. இந்தத் தவறை இயக்குநர் ஏன் செய்தார் என்று புரியவில்லை. படத்தின் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடங்கள். பாடல்களை எடுத்துவிட்டால் நேரமும் குறையும். மேலும் பாபி சிம்ஹாவின் பாத்திரப் படைப்பில் பழுதுள்ளது. அது கதையை பலவீனப் படுத்துகிறது.

பாபி சிம்ஹா கோமாவில் இருக்கும் வடிவுக்கரசியிடம் தன எண்ணங்களையும் செயல்களையும் பற்றி பேசுவது ஆடியன்சுக்கு அவரின் செயல்களைப் புரிய வைக்கவே என்று தெளிவாகத் தெரிகிறது. அது நாடகத்தனமாக உள்ளது. {ஆடியன்ஸ் அறிவாளிகளே!} அதே மாதிரி தான் கடைசியில் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் வசனமும். அவர் ஆண் பெண் பற்றி விளக்கம் சொல்லாமலே நமக்கு விளங்கும். படமே அது தானே!

ஒரே சமயத்தில் பல பாத்திரங்களை கதையில் களமாட விட்டு ஒருவரின் செயல் இன்னொருவரை பாதிக்கும் விதத்தில், அதே சமயம் சிக்கலில்லாமலும் திரைக் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பெண்களுக்கு மதிப்புக் கொடுங்கள் என்று ஓபனாக சொல்லாமல் பெண்மையை உயர்த்திக் காட்டியிருக்கும் கார்த்திக் சுப்புராசுக்கு ஒரு மலர் கொத்துப் பரிசு :-}

Actress Anjali in Iraivi Tamil Movie Stills

Actress Anjali in Iraivi Tamil Movie Stills

காதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்

kkp

My Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் க க போ! நலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மறுபடியும் இணைந்து கொடுக்கும் படம் இது. சூது கவ்வும் படத்தின் தரத்தை எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே. சூது கவ்வும் ஒரு மாறுபட்ட கதையாலும், கதை சொல்லும் விதத்தாலும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

ரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவு {தினேஷ் கிருஷ்ணன்} என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய மழை வரும் சீன்கள் உள்ளன, படம் முடியும்போதும் மழை தான். அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது என்ன வெளியே மழை இல்லையே என்று ஒரு நொடி தோன்றுகிறது. அந்த அளவு அருமையான ஒளிப்பதிவு! பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு இந்தப் படமும் ஒரு ஹிட் தான்.

ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்பு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்.

விஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.

நாயகன் நாயகி இருவரின் பாத்திரமும் நன்றாக செதுக்கப் பட்டுள்ளது. முதலில் இருந்து கடைசி வரை அவர்கள் பாத்திரத் தன்மையில் பிறழ்ச்சி இல்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ஒரு கவிதை போல் உள்ளது.

பிரச்சினை கதையில் தான் வருகிறது. எந்த குறிக்கோளுக்காக யாழினி சென்னையில் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. விழுப்புரத்தில் இருந்தும் கூட அவர் மறுபடியும் வேலை தேடிக் கொண்டிருக்கலாம். அதே மாதிரி கடைசியில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்று புரியவில்லை. சமுத்திரக் கனியை கொல்ல முடிவெடுத்ததும் ஏனென்று தெரியவில்லை. அதையும் தவிர அவ்வளவு கெட்டவனான சமுத்திரக்கனி வேலையை முழுதும் முடிக்காமல் போவதும் ஏனோ?

க்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் பங்களிப்பால், ஒரு பீல் குட் மூவியை பார்த்த எண்ணம் அரங்கை விட்டு வெளியே வரும்போது வருகிறது.

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills