பைரவா – திரை விமர்சனம்

bairavaa

பெர்மியுடேஷன் காம்பினேஷன் மாத்தி விஜய்யின் இன்னொரு மசாலா படம் பைரவா! நாளுக்கு நாள் எப்படித்தான் இளமையா ஆகிறாரோ தெரியவில்லை, விஜய் இன்னும் உடல் மெலிந்து அதிக முகப் பொலிவுடன் இருக்கிறார். படத்தில் சைக்கிளில் என்ட்ரி என்றாலும் கில்லி என்ட்ரி!

வண்ணத்திரையில் தீமையை எதிர்த்து நன்மைக்குப் போராடுவது தான் எம்ஜிஆர் பாணி. அதையே இவரும் தொடர்ந்து பாலோ செய்கிறார்.  கல்வியறிவே இல்லாத அராஜகவாதி, கெட்ட வழியில் சம்பாதித்தப் பணத்தை இன்னும் பன்மடங்காக்க அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொடங்கியிருக்கும் கல்வி நிறுவனத்தில் சிக்கிச் சீரழியும் மாணவர்களைக் காப்பாற்றும் செயல் வீரராக வருகிறார் விஜய். அவருக்கேற்ற கதை. திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக யூகிக்கக் கூடியத் திரைக் கதையா என்று கேட்பவர்களுக்கு, அவரைப் பொறுத்த வரையில் இது tried and tested. அவர் ரசிகர்கள் விரும்புவது இதைத் தான் என்பதால் தொடர்ந்து இவ்வாறே கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்று நினைக்கிறேன்.

விஜய் முதலில் கலெக்ஷன் ஏஜண்டாக ஒரு ஏமாற்றுக் கும்பலிடம் பணம் வசூல் செய்ய கிரிக்கெட் ஆடி, அடிக்கும் காட்சிகள் நல்ல நகைச்சுவை. தொடர்ந்து நிறைய சண்டைக் காட்சிகள். எவ்வளவு தடியான ஆளுடன் சண்டை போட்டாலும் எதிராளி எத்தனை பெரிய ஆயுதம் வைத்திருந்தாலும் அனாயாசமாக சண்டை போட்டு ஒரு சின்னக் கீறல் கூட மேலே படாமல் ஒவ்வொரு சண்டையிலும் வெற்றிப் பெறுகிறார் விஜய்! ஜகபதி பாபுவும், டேனியல் பாலாஜியும் முரட்டு வில்லன்களாக வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் நன்றாக செய்திருக்கிறார். அவர் சொல்லும் பிளாஷ்பேக்கை நச்சுன்னு முடித்திருக்கலாம். அங்கே ஆரம்பிக்கிறது இழுவை. எடிட்டிங் சொதப்பல். பாடல்களும் படத்தின் தொய்வுக்குப் பெரும் காரணம். வரலாம் வா வரலாம் வா பைரவா பாடலையும் இன்ட்ரோ பாடலான பட்டையக் கிளப்புப் பாடல்களைத் தவிர அனைத்துப் பாடல்களையும் படத்திலிருந்து வெட்டியிருக்கலாம்.

சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோர் படத்துக்குத் தேவையே இல்லை. வங்கி மேலாளராக Y.G. மகேந்திரனும் எரிச்சலை ஏற்படுத்துகிறார். இவர்களை சரியாகக் கையாளாதது அல்லது தவறாக தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநரின் தவறு. மேலும் விஜய், சதீஷ் இருக்கும் மேன்ஷன், தெரு ஆகியவை செட் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. கலையலங்காரத்துக்கு ஒரு குட்டு. விஜயின் உடைகள் நன்றாக இருந்தாலும் அவரின் விக் அவருக்கு சரியாகப் பொருந்தவில்லை.

உண்மையிலேயே கல்லூரிகளில் இன்று நடக்கும் தவறுகளை, ஆசிரியரே மாணவியிடம் சொற்களால் வன்கொடுமை செய்வது போன்றவைகளை திரைக்கதையில் சேர்த்திருப்பதாலும் {அதை விஜய்யும் தட்டிக் கேட்கிறார்} கோர்ட்டில் விஜய் உண்மை சம்பவங்களையே மேற்கோள் காட்டி எப்படி நிர்வாகத்தின் அஜாக்கிரதையினால் பல மரணங்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கின்றன என்பதை சொல்வதினாலும் படம் என்டேர்டேயின்மென்ட் தாண்டி நல்ல மெஸ்சேஜ்ஜையும் தருகிறது. அது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

இங்கே சோஷியல் மீடியாவில் சொல்லப்படுவது போல மகா மோசமனப் படமாக எனக்குப் படவில்லை. விஜய் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தும் உள்ளன. முழுப் படத்தையும் விஜய் ஒருவரே தாங்குகிறார். பஞ்ச் வசனம் கைத்தட்டல் பெறுகின்றது. ஒளிப்பதிவாளர் சுகுமார் விஜயை அழகாகவும் ஸ்க்ரீனில் நல்ல ப்ரசன்சுடன் காட்டுவதில் பாராட்டைப் பெறுகிறார்.

bairavaa1

தெறி – திரை விமர்சனம்

theri

முன்பே வந்த பல படங்களின் கலவை தான் இப்படம்! அதிலும் என்னை அறிந்தால், வேலாயுதம் சாயல் மிக அதிகம். ஆனால் விஜயின் பங்களிப்பால் பக்கா கமர்ஷியல் படமாக விஜய் ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி வந்துள்ளது.

நடனம், நடிப்பு, ஸ்டன்ட் காட்சிகள் அனைத்திலும் ரொம்ப ஈடுபாட்டுடன் உழைத்து செய்திருக்கிறார் விஜய். அதற்கு அட்லீயை பாராட்ட வேண்டும். விஜயின் 3 கெட் அப் சேஞ் பட ரிலீசுக்கு முன் பேசப்பட்ட அளவு படத்தில் மிகப் பெரிய மாற்றத்தைத் தந்ததாக எனக்குத் தோன்றவில்லை. 75%சதவிகிதம் அவருக்கு மிகப் பொருத்தமான போலிஸ் உடையிலும், பாடல்களில் அதற்கேற்றார் போன்ற உடைகளிலும் வருகிறார். படம் முழுவதும் மிகவும் ஸ்மார்ட்டாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் வருகிறார்.

சமந்தா முந்தைய படங்களை விட நன்றாக நடித்து, இன்னும் அழகாகவும் மாறி உள்ளார். எமி ஜேக்சனுக்கு மிகச் சிறிய பாத்திரம். நைநிகா பேசுவது அழகாக இருந்தாலும் வயதுக்கு மீறிய பேச்சாக பல இடங்களில் உள்ளது, தவிர்த்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் கூட பயமில்லாமல் மிக மிக இயல்பாக நடித்திருக்கிறாள்.

இந்தப் படத்தின் ஷோ ஸ்டீலர் வில்லனாக வரும் இயக்குநர் மகேந்திரன். செம வில்லனாக உள்ளார். உடல் மொழியே அவரை அரசியல்வாதி என்று சொல்கிறது. கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாக செய்துள்ளார். இதுவரை இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் இவர் டாப்பில் வருகிறார். இவர் நடிப்பால் அவரை எதிர்க்கும் பாத்திரத்தில் வரும் விஜயின் நடிப்பிலும் மெருகு கூடியுள்ளது.

ஆனால் ஒரே மாதிரி கதை சலிப்பைத் தருகிறது. மேலும் படத்தின் நீளமும் வெகு அதிகம். இரண்டு டூயட்களை கட் பண்ணியிருக்கலாம். அவை படத்தில் தொய்வை உண்டு பண்ணுகிறது. ப்ளாஷ் பேக்கில் கதை விரியும் போது நமக்கு எந்த சஸ்பென்சும் இல்லை, பட ஆரம்பத்திலேயே தந்தையும் மகளும் தனியாக இருப்பது அவர் குடும்பத்துக்கு என்ன ஆகியிருக்கும் என்று ஊகிக்க வைத்து விடுகிறது. 

ஜி.வி.பிரகாஷின் சில பாடல்கள் நன்றாக உள்ளன. பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. மிகப் பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு. கண்ணுக்கு விருந்து. அனால் அதே சமயம் கலை காலை வாரி விட்டிருக்கிறது. பல இடங்களில் செட்கள் கண்ணை உறுத்துகின்றன.

நிர்பயா கேஸ் போன்ற ஒரு ரேப், அதன் பின் அந்தப் பெண்ணின் மரணம் என்று ஒரு சம்பவம் வருகிறது. அந்த விசாரணையில் பேசப்படும் விஷயங்கள் கண்டிப்பாக குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்ல. U சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும் பெற்றோர்கள் கவனத்திற்கு இதை சொல்கிறேன்.

விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக மகிழும் அளவு படம் வெளி வந்திருக்கிறது.

theri1

புலி – திரை விமர்சனம்

puli

இது முழுக்க முழுக்க பேண்டசி படம். விஜய் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அம்புலிமாமா இதழ்களில் வரும் கதைகள் போல் ஒரு கதை புலி. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி மந்திரவாதியின் உயிர் ஒரு கிளியினுள் இருக்கும். அதைக் கொன்று அசகாய சூரனான கதையின் நாயகன் நாயகியை மந்திரவாதியின் பிடியில் இருந்து விடுவித்து மணந்து கொள்வான். படிக்க ஜாலியா இருக்கும் அந்தக் காலத்தில். கதாநாயகனுக்கு உதவ பேசும் விலங்குகள், வழிகாட்டும் பறவைகள் என்று கதையில் வரும். அதே பார்முலா தான் இப்படத்திலும் சிம்பு தேவன் கையாண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவி இடைவேளைக்குப் பிறகு தான் வருகிறார். சிறப்பாகவே செய்திருக்கிறார். டிரெயிலரில் பார்த்ததை விட படத்தில் நன்றாக உள்ளார். உடைகளும், அவரின் அனுபவப்பட்ட நடிப்பும் வெகு நேர்த்தி. ஸ்ருதி ஹாசன் குரல் காதை ரொம்பப் பதம் பார்க்கிறது. அவருக்கு வேறு யாராவது டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி இருவருமே வெறும் டூயட் பாடவே பயன்படுத்தப் பட்டிருக்கின்றனர். இருவர் பெர்பார்மன்சும் சாதா. சுதீப் வில்லன். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் அவரின் வில்லத்தனம் முதல் பாதியில் கொஞ்சமே தெரிகிறது. கிளைமேக்சில் கொஞ்சம் வெளிப்படுகிறது. அதனால் அவரின் பங்களிப்பு பெரிதாக சோபிக்கவில்லை.

கதையில் விஜய்க்கு நண்பர்கள்/உதவியாளர்களாக தம்பி ராமையாவும், சத்யனும் வருகிறார்கள். இவர்களுக்குப் பதிலாக வேறு இருவரை போட்டிருக்க வேண்டும். படம் முழுக்க இவர்கள் தொடர்ந்து வருவது மேலும் எரிச்சலைக் கூட்டுகிறது.

நடனம் – ராஜூ சுந்தரம், கலை – டி.முத்துராஜ், ஒளிப்பதிவு – நடராஜன் சுப்பிரமணியன், எடிடிங் – ஸ்ரீகர் பிரசாத், நான்குமே நன்றாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் பாடல்களும் மோசம். டிஎஸ்பி நல்ல வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார். கம்பியுடர் கிராபிக்ஸ் நன்றாக உள்ளது.

விஜயின் நடிப்பில் மாற்றம் ஏதும் இல்லை. ஒரே மாதிரி செய்வதால் சமயங்களில் அலுப்பு தட்டுகிறது. அரசியல் நெடி வசனங்கள் குறிப்பிட்டு சொல்லும் அளவு உள்ளன, முக்கியமாக படம் முடிவில். இவரும் அரசியலில் குதிப்பதாக இருந்து சினிமாவை ஒரு பிளேட்பார்மாக பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை.

ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும். படம் வேஸ்ட் என்று நினைத்துப் போனால், பரவாயில்லையே நன்றாகத் தானே இருக்கிறது என்று எண்ண வைக்கும் இப்படம்.

puli1

துப்பாக்கி! விமர்சனம்

முருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு மாஸ் விஜய் படம் 🙂 லோகல் ரௌடிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக பிரமோஷன் அடைந்து நாட்டின் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார் விஜய். முன்பு ஒரு படத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்திருப்பார். பாத்திரம் பொருந்தாது. இந்தப் படத்தில் அவருக்கு பாத்திரத்தை கனகச்சிதமாகப் பொருந்த வைத்திருப்பது இயக்குனரின் முதல் வெற்றி.

விறுவிறுப்பான திரைக் கதை படத்தின் வெற்றிக்கு அடித்தளம். விஜயை நாம் அசகாய சூரர் என்று ஏற்றுக் கொண்டு விட்டதால் அவர் தனி ஆளாகச் செய்யும் சாகசங்களை கேள்வி கேட்காமல் பாராட்டுகிறோம். அது தான் நியதி. அந்த நம்பிக்கையின் மேல் தான் இந்தப் படமே அமைந்து இருக்கிறது.

மும்பையிலேயே முக்கியக் காட்சிகள் எடுத்திருப்பதால் படம் நம்பகத் தன்மையோடு இருக்கிறது. நிச்சயம் முருகதாஸ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அவருக்காகப் படம் எடுக்காமல் விஜய்க்காக எடுத்திருக்கிறார். விஜயின் நடிப்பிலும் ஒரு முன்னேற்றம்/முதிர்ச்சி தெரிகிறது.

நடனத்தில் அவரை மிஞ்ச ஒருவர் வர வேண்டும். அனாயாச ஸ்டெப்ஸ்! பாடல்கள் தான் படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி இன்னும் இவ்வளவு மார்கெட் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர்! பின்னணி இசையும் அதே ரகம். கூகிள் பாடல் நன்றாக உள்ளது.

வடிவேலு இல்லாக் குறையை போக்க ஜெயராமன் ரொம்ப முயற்சி செய்கிறார்.  பாவம் பாதி தூரம் கூட அவரால் எட்ட முடியவில்லை. எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் மிகவும் அருமை.

எப்பொழுதும் முதல் நாளே பார்த்துவிட்டால் விமர்சனம் காதுக்கு வராது. கொஞ்சம் லேட்டாகப் பார்த்ததால் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு அந்த எண்ணத்தோடு போனதால் எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது 🙂

சொல்ல மறந்துவிட்டேன், ஹீரோயின் காஜல் அகர்வால் 🙂