இரண்டாயிரத்து ஏழாம் வருடம் வந்த வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் மனசைத் தொட்டப் படம். கிரிக்கெட் நம் இரத்தத்தில் ஊறிய ஒரு விளையாட்டு. அதுவும் தெரு கிரிக்கெட்டும், பந்தய மேட்ச்களும் எல்லா தமிழக இளைஞர்களின் வாழ்வில் கண்டிப்பாக ஒரு அங்கமாகவே பள்ளி, கல்லூரி நாட்களில் கலந்திருக்கும். சென்னை 28 பகுதி 2 முதல் படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படத்திலும் மேட்ச் முக்கிய அங்கம் வகிப்பதினால் கிரிக்கெட்டில் நாம் காணும் சுவாரசியம் படத்திலும் காண முடிகிறது.
முதல் படத்தில் நடித்தவர்களையே இரண்டாம் பாகத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பது சிறப்பு, அதுவும் படம் வந்து பத்து வருடங்கள் ஆன பிறகு எடுத்திருக்கும் போது அதே மாதிரி அந்தக் கதாப்பாத்திரங்களின் வயதையும் பத்து வருடம் அதிகப் படுத்திக் கதை அமைத்து சொல்லியிருப்பது அழகு. முந்தின பகுதியில் வந்த நண்பர்கள் குழுவில் நாலு நண்பர்களுக்குத் திருமணம் முடிந்து அதில் இவருக்குக் குழந்தைகளும் இருக்கு. அதில் ஒரு நண்பரான ஜெய்யின் காதல் திருமணத்திற்கு இவர்கள் அனைவரும் தேனீக்கு செல்கின்றனர். அங்கு நடக்கும் பிரச்சினைகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.
ஆங்கிலப் படமானாலும் சரி தமிழ் படமானாலும் சரி இரண்டாம் பகுதி என்று எடுக்கும் போது முதல் பகுதியில் இருந்து எல்லாமே சற்று மாறுபட்டிருக்கும், எதிர்பார்த்த அளவும் இருக்காது. அந்தக் குறை இப்படத்தில் இல்லை. முதல் கதையின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது. கதாப்பத்திரங்களின் குணாதிசயங்களில் மாற்றம் இல்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர். அதே சமயம் வெறும் கிரிக்கெட் என்றில்லாமல் கதையில் கொஞ்சம் மசாலாவும் சேர்த்திருப்பதால் சுவைக்கிறது.
லகான், சென்னை 28 முதல் பகுதி ஆகியவை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்ததால் தான் நமக்கு ஈர்ப்பு அதிகம் இருந்தது. அதே ஈர்ப்பு, பகுதி இரண்டிலும்! போட்டி மேட்ச்களின் போது நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து நன்றாக உள்ளது. முதல் பகுதியில் பீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளிடம் இந்த நண்பர் குழு மேட்சில் தோத்து பேட்டை பறிகொடுப்பது ஹைலைட்டான விஷயம். அதே பிள்ளைகள் வளர்ந்து இவர்களின் சென்னை ஷார்க்ஸ் அணியிடம் திரும்ப அதே அளவு டஃப் பைட் கொடுப்பதாக இரண்டாம் பகுதியிலும் வைத்திருப்பது நகைச்சுவை ட்விஸ்ட்!
யுவன் சங்கர் ராஜாவின் இசை சொல்லிக் கொள்ளும் படியாகவே இல்லை. சீக்கிரம் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்ப்போம். படத்தின் வேகத்தைப் பாடல்கள் குறைக்கின்றன. சில பாடல்களை எடுத்துவிட்டால் படம் இன்னும் வேகமாக நகரும். முதல் பாகத்தில் இருந்தப் பின்னணி இசையைப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது. பிரேம்ஜி உடல் இளைத்திருக்கார், வயதும் நன்றாகத் தெரிகிறது. அதே மொக்கக் காமெடி தான் அவரின் பங்களிப்பு. ஜெய் ஒரு ஹீரோ பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வைபவ் வில்லனாக நன்றாக நடித்துள்ளார். மற்ற நடிக நடிகையர் பாத்திரத்துக்கேற்ப நல்ல தேர்வு.
நக்கல் நையாண்டி நிறைய இருக்கு. இடிஸ்பிரஷாந்த் வீடியோவில் திரை விமர்சனம் செய்வதையும் விஜய் டிவி எல்லாருக்கும் அவார்ட் கொடுப்பதையும் கிண்டல் செய்கிறார் நடிகர் சிவா. பிராஷாந்தைக் கிண்டல் அடிக்கிறாங்களேன்னு நினச்சா அவர் இரண்டு காட்சிகளில் கிரிக்கெட் கமெண்டேடரா வரவும் செய்கிறார்! படம் முழுவதும் நண்பர்கள் கூடினால் மது அருந்துவது தான் செய்யப்படும் ஒரே செயல் என்பது போல அதிகமான மது அருந்தும் காட்சிகள். அவை சிறிதும் நன்றாக இல்லை. முதல் பாதியில் கதையில் ஒன்ற முடியவில்லை. அதே போல இறுதி முடிவும் கதையை முடிக்க சட்டென்று எதோ ஒரு முடிவை போட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
சென்னை 28க்கு நல்ல இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும். லைட்டான படம். பெரிதா எதிர்பார்த்துச் செல்லாதீர்கள், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்!