ஹவாயில் Kauai யில் ஒரு பெரிய சைவ ஆதீனம் உள்ளது. அதன் முந்தைய மடாதிபதி சிவாய சுப்ரமுனிய சுவாமி. நாங்கள் அவரை அன்புடன் குருதேவா என்று அழைப்போம். அவர் ஒரு முறை எங்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ஏன் வட இந்தியர்கள் தொழிலில் சிறந்து விளங்குகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். பின் அவரே சொன்னார், அவர்கள் தங்கள் குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே தான் வியாபாரம் பற்றிப் பேசுவர். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலும் மீதிப் பொழுதில் தந்தையின் தொழிலில் உதவிப் புரிவதை பழக்கமாக்கிக் கொள்ள வைப்பர். தொழில் பிரச்சனைகளை எப்படி தந்தை சமாளிக்கிறார் என்று பக்கத்தில் இருந்து பார்த்தே வளர்ந்த பிள்ளைகள் பின்னாளில் தந்தையின் தொழிலை எடுத்துக் கொண்ட பின் இன்னும் சாமர்த்தியத்துடன் தொழிலை நடத்தி முன்னுக்கு கொண்டு வருகின்றனர்! இன்றும் தமிழ் நாட்டில் வாழும் வட இந்தியர்கள் வீட்டில் இந்த கலாச்சாரத்தைக் காணலாம்.
அதே தென் இந்தியர்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கின்றனர். (நான் இங்கே குறிப்பிடுவது நடுத்தர மற்றும் மேல் வர்க்கக் குடியினரைப் பற்றித்தான். ஒரே அறையில் வாழும் ஏழைக் குடும்பங்கள் பற்றியல்ல) எந்தப் பிரச்சினையும் குழந்தைகள் காதுக்கு எட்டிவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர். படிப்பில் மட்டுமே முழு கவனம் இருக்க வேண்டும். விளையாட்டில் அல்லது கலையில் ஆர்வம் இருந்தால் கூட படிப்பிற்கு பங்கம் வந்து விட்டால், அதை துறந்து விட வேண்டும். பெற்றோர்கள் மன வேற்றுமையோடு வாழ்ந்து கொண்டு இருப்பதைக் கூட உணராமல் பல குடும்பங்களில் பிள்ளைகள் வளருகிறார்கள். திடீரென்று முகத்தில் அறைந்தார் போல் உண்மை வெளி வரும்போது கதி கலங்கி போய் விடுகிறார்கள். குழந்தைகளின் சிறு வயது அப்பாவித்தனத்தை நாம் சிதைக்கக் கூடாது தான். அதே சமயம் குடும்ப சூழ்நிலை, பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்.
இதை விட மோசம் வெளி நாடுகளில் வளரும் இந்தய வம்சாவளிக் குழந்தைகள். ஆளுக்கு ஒரு அறை. அறைக்குள் போய் அடைந்து கொண்டு ஐ பாட், ஐ போன், x பாக்ஸ், கணினி ஆகிய தொழில் நுட்ப உபகரனங்களுடனே தான் அவர்கள் வாழ்வு பின்னிப் பிணைகிறது. இந்தியாவிலும் பல செல்வந்தர் வீடுகளில் இது போல ஒரு சூழல் தான் பரவலாக உள்ளது. குழந்தைகள் பள்ளியில் தோழர்களோடு நேரடியாக உரையாடி விளையாட்டுக்களில் பங்கு பெறுவதை விட Gchatலும் Facebookலும் முகம் தெரியாதவர்களுடன் இனைய தளத்தில் தொடர்பு கொண்டு உறவை வளர்த்துக் கொள்ள மணிக்கணக்காக கணினியின் முன் அமர்ந்திருக்கின்றனர். அதுவே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுடன் இரண்டு நிமிடம் உட்கார்ந்து பேச அவர்களுக்கு விஷயம் இருப்பதில்லை. இதுவே தொடர்ந்தால், வருங்கால இளைஞர்களுக்கு நேரடி மானிட தொடர்புகளை சமாளிக்கும் திறன் குறைந்து சமூகத்தில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும். இப்பொழுதே தொலைபேசியில் பேசுவதை விட மின் அஞ்சலில் செய்தியையோ வாழ்த்தையோ சொல்லவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஏனென்றால் இது ஒரு வழிப் பாதையாக உள்ளது. நாம் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டால் போதும். பரஸ்பர பேச்சுப் பரிமாற்றம் கூட தேவை இல்லை 🙂
குழந்தை பருவத்தில் இருந்தே தன் நலம் மட்டுமே கருதுகிற மனப்பான்மை ஒழிய வேண்டும். அவர்கள் சிறு வயது முதலே தன்னை சுற்றி நடக்கின்ற அனைத்தையும் கவனித்து புரிந்து கொள்கின்ற பக்குவத்தை வளர்த்துக் கொள்ள பெற்றோர்கள் உதவ வேண்டும். பெற்றோர் இருவரும் பொருளாதார மேம்பாட்டுக்காக வேலைக்குச் செல்லும் கட்டாயம் இருந்தாலும் தொலைக்காட்சி பெட்டியோ கணினியோ அவர்கள் இடத்தை எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டால் நல்லது!
Feb 06, 2012 @ 07:48:20
காலத்தின் போக்கில் வரும் மாற்றங்கள் இவை – நாம் வளர்ந்த காலத்தில் நம் உறவினர்கள், நண்பர்கள் கூறிய கதைகள், அறிவுரைகள் நம்மை பக்குவப்படுத்தின – இந்த கணினி, ஈமெயில், சாட், முகபுத்தகம் (facebook) ஆகியவை இந்த காலத்து இளையவர்களை முன்பின் தெரியாதவர்களின் உத்வேகத்தினால் தவறான பாதைக்கு போக வழியுண்டு – அது ஆகாமல் தவிர்ப்பது ஒவ்வொரு பெரியவர்களின் கடமை
Feb 06, 2012 @ 08:01:41
நிச்சயமாக இணையம் என்பது இன்றை இளைஞர்களுக்கு கொஞ்சம் சாபமாகவும் அமைந்துள்ளது. இணைய நட்புகளை விட, தனது உறவினர்கள் மற்றும் பள்ளி கல்லூரி நண்பர்களுக்கு குறைவான அளவே முக்கியத்துவம் தரப்படும் சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. இதனால் நேரடி மனிதத் தொடர்புகளைச் சமாளிக்க இயலா சூழலும், தனிமையை விரும்பும் போக்கும் ஏற்படலாம். பெற்றோர்கள் நிச்சயமாகக் குழந்தைகளைக் கவனித்து வளர்க்கவேண்டியது கடமையாகிறது (@selvu)
Feb 06, 2012 @ 13:25:24
Thank you, Shekar and Selvu 🙂
Feb 07, 2012 @ 03:15:48
புராணக் கதைகளில் வரம் தரும் தெய்வங்கள் கூடவே ஒரு எச்சரிக்கையும் தருவது போல, தொழில் நுட்ப வளர்ச்சியின் வசதிகளை நுகரும் போது இது போன்ற சவால்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.பெற்றோர் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நெறிப்படுத்தலாம் நல்ல நீரோட்டமான பதிவு வாழ்த்துக்கள்
Feb 07, 2012 @ 03:18:50
ரொம்ப நன்றி சுந்தர் 🙂
Nov 14, 2017 @ 04:36:01
குழந்தைகள் வளர்ப்பு வளரும் தன்மை வளர்க்கும் விதம் நல்லதோர் விளக்கம் உங்கள் குருதேவருக்கு நமஸ்காரம்
Nov 14, 2017 @ 04:39:54
குழந்தைகள் வளர்ப்பு வளரும் தன்மை வளர்க்கும் விதம் நல்லதோர் விளக்கம் உங்கள் குருதேவருக்கு நமஸ்காரம்