வெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்

இரண்டு நகைச்சுவை நடிகர்களை வைத்து ஒரு தொடர் கடத்தல் கொலை மர்ம படத்தை தந்துள்ளார் அறிமுக இயக்குநர் விவேக் இளங்கோவன். நடிகர்கள் விவேக், சார்லி இருவருமே கே.பியின் மாணவர்கள். அவர் பட்டறையில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வகை நடிப்பும் எளிதாக வரும். திரைக்கதை ஆசிரியர்களும்(விவேக் இளங்கோவன், ஷண்முக பாரதி) இயக்குநர் விவேக் இளங்கோவனும் அவர்கள் இருவரையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தரமான அதே சமயம் வித்தியாசமான படத்தை தந்திருக்கிறார்கள்.

99% கதை நடப்பது சியாட்டில், அமெரிக்காவில். மிக சமீபத்தில் ஓய்வுபெற்ற கொலை வழக்குகளை துல்லியமாக துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிக்கும் திறன் உள்ள போலிஸ் அதிகாரியாக விவேக் வருகிறார். மிகைபடாத நடிப்பு. நகைச்சுவை நடிகராக நடிக்கும்போது வரும் உடல்மொழிகள் இன்றி நல்ல ஒரு குணச்சித்திர பாத்திரத்தின் தன்மை புரிந்து நடித்துள்ளார். சுறுசுறுப்பாக வேலை செய்து வந்த அவர் மகன் வீட்டில் போரடித்துக் கொண்டு நடமாடுவது முதல் கடத்தப்பட்ட மகனின் நிலை பற்றி அனுமானித்து உடைந்து அழும் வரை எல்லா உணர்ச்சிகளும் கச்சிதமான வெளிப்பாடு. அவருக்குத் துணை பாத்திரமாக சார்லி. பிள்ளைகளுக்காக அமேரிக்கா செல்லும் பெற்றோர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே யதார்த்தமாக இருக்கிறது சார்லி, அவர் மனைவி மற்றும் விவேக்கின் பாத்திரப்படைப்புகள்.

அதேபோல சார்லி மகள் (பூஜா தேவரியா) மற்றும் விவேக் மகன் மற்றும் மருமகள் பாத்திரங்களும் இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் உள்ளன. இந்தக்கதையில் ஓர் இழை குழந்தைகளின் பாலியல் வன்முறை தொடர்பாக அமெரிக்க பாத்திரங்களின் வாயிலாக தொடர்ந்து வருகிறது. அதில் சிறு பெண்ணாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு மிக அருமை. மனத்தைப் பிழியும் இழை. அந்த இழை கடைசியில் எப்படி மெயின் கதையோடு ஒட்டுகிறது என்பது நல்ல சஸ்பென்ஸ்.

விவேக் தன் மகன் வீட்டிற்கு வந்த இடத்தில் பக்கத்து வீட்டு பெண் கடத்தப் படுவதும் அந்தப் பகுதி சிறுவனும் கடத்தப் படுவதும் நடக்கிறது. அதைப் பார்த்து துப்பறியும் தன்மை உடலோடு கலந்திருப்பதால் விவேக்கும் அமெரிக்க போலிசுக்கு இணையாக துப்பறிய தொடங்குகிறார். அவர் தனியாக ஒவ்வொரு இடத்துக்கும் செல்லாமல் துணைக்கு தன் மகனின் அலுவலக தோழி பூஜா தேவரியாவின் அப்பாவான சார்லியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ளவும் குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முயற்சிகள் எடுக்கிறார். இவ்விரு பாத்திரங்களே படம் முழுவதும் தொடர்ந்து வருவதாலும் வசனங்கள் நிறைய இருப்பதாலும் கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. படம் ஓடும் நேரம் இரண்டு மணி தான் என்றாலும் மிக நீண்ட நேரம் போலத் தோன்றுகிறது.

இந்தக் கதை அமெரிக்க படங்களில் அதிகம் காணப்படும் மனோதத்துவ ரீதியான த்ரில்லர் படம். படம் எடுத்திருப்பது அமேரிக்கா வாழ் தமிழர்கள் திகா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத். அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு இந்தக் கதைக் களம் எளிதாக புரியவும் ஏற்றுக் கொள்ளவும் முடியும். நமக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு பாத்திரத்துக்கு இள வயதில் உண்டாகும் கொடுமையான நிகழ்வுகளால் வளர்ந்த பிறகு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஆவதும் பழி வாங்க பலரை கொல்வதும் நம்மூர்களில் அவ்வளவாக நடப்பதில்லை.

விவேக்கின் அமெரிக்க மருமகளாக வரும் பெய்ஜ் ஹென்டர்சன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். விவேக்கின் அன்பை பெற அவர் ஆசைப்படுவதும் முதலில் விவேக் அவரை உதாசீனப் படுத்துவதும் பின்பு சார்லியின் அறிவுரையின் பேரில் விவேக் மாறி அன்பை செலுத்த ஆரம்பிக்கத் தொடங்கும் போது வேறு பல நிகழ்வுகளால் உண்டாகும் உணர்ச்சிகளை அவர் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்க வாழ் இந்தியர்களே இந்தப் படத்தை எடுத்திருப்பதால் அமெரிக்க வாழ்க்கை பற்றிய தவறான சித்தரிப்பு இல்லாமலும் செயற்கைத் தனம் இல்லாமலும் உள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் கண்ணுக்கு விருந்தாக சியாட்டில் நகரத்தை படமாக்கியிருக்கிறார். பாடல்கள் பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பொற்றாமரை பாடலில் எஸ்பிபி குரல் தேவ கானமாக ஒலிக்கிறது. பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கு சரியானதாக உள்ளது. இசை அமைத்திருப்பவர் ராம்கோபால் க்ரிஷ்ணராஜூ.

நல்ல முயற்சி. த்ரில்லர் படம். மெஸ்சேஜ் என்று தனியாக எதுவும் எந்தப் பாத்திரமும் உரைப்பதில்லை. ஆனால் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும் இப்படத்தைப் பார்க்கையில். பெற்றோராக படம் பார்ப்பவர் இருப்பின் குழந்தைகள் வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உறைக்கும்.

1 Comment (+add yours?)

  1. முத்துசாமி இரா
    Apr 22, 2019 @ 07:05:29

    நல்ல விமர்சனம்..

    Reply

Leave a comment