விஸ்வரூபம் -2 திரை விமர்சனம்

படம் தொடங்கியவுடன் அக்ரஹாரத்துக்குள்ள நுழைந்து விட்டோமான்னு ஒரு சந்தேகம். அத்தனை பிராமண பாத்திரங்கள், அலுக்க சலிக்க பிராமண மொழி. இடைவேளைக்குப் பிறகு இந்தத் தொந்தரவு இல்லை. ஈஸ்வர ஐயர் செத்து விடுகிறார். இல்லையென்றால் வீட்டுக்குப் போவதற்குள் பார்க்க வந்த ரசிகர்கள் எல்லாரும் பிராமண மொழியில் பேச ஆரம்பித்திருப்பார்கள். ஆனாலும் பூஜா குமார் கடைசி வரை உயிரோடு இருப்பதால் படம் பார்த்துவிட்டு செல்லும் சிலர் இரவு தயிர் சாதம் மாவடுவுடன் சாப்பிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

விஸ்வரூபம் 1 வெளிவந்து ஐந்து வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளிவருகிறது. அந்தப் படத்தை பார்த்தவர்களுக்கு ஓரளவு இந்தப் படம் புரியும். முதல் பாகத்தின் பல காட்சிகள் படத்தின் ஊடாலே நிறைய முறை வருகிறது. ஆனாலும் இப்படத்தை மட்டும் பார்க்கிறவர்களுக்குப் படம் கொஞ்சம் fizz போன சோடா மாதிரி தான் இருக்கும். (முதல் படத்தைப் பார்த்தவர்களுக்கும் இதே தான் என்பது வேற விஷயம்).

கமல் மிக அருமையாக நடித்திருக்கிறார். இது சர்க்கரை இனிக்கும் என்று சொல்வதற்கு ஒப்பானது. ஆனாலும் சொல்லியாக வேண்டும் அல்லவா? உணர்சிகளை காட்டுவதில் அவருக்கு நிகர் அவர் தான். பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் அனைவரின் பங்களிப்பும் நன்று. இதில் பூஜா குமாரும் ஆண்ட்ரியாவும் பேசும் வசனங்கள் ரொம்பப் பொறுமையை சோதிக்கின்றன. ஒவ்வொரு வசனத்துக்கு நடுவிலும் ஓர் இடைவெளி. இருவருக்கும் கமலுடன் காதல் காட்சிகள் இந்தப் படத்தில் போனஸ். முதல் படத்தில் அவை இல்லை. அம்மா செண்டிமென்டுக்காக வஹீதா ரஹ்மான் கமலின் அம்மாவாக அல்சைமர் நோயாளியாகத் தோன்றுகிறார்.

விஸ்வரூபம் முதல் பாகத்தின் கதைக் களம் அமெரிக்கா. இப்படத்தில் இங்கிலாந்து. கமல் RAW ஏஜன்ட், அதனால் ஜேம்ஸ் பான்ட் கதை மாதிரி எங்கு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறுப் போகிறது என்று தெரிந்தாலும் அங்கு சென்று அதனை முறியடித்து மக்களை காப்பாற்றுவது தான் இரண்டு படங்களின் அடிநாதமும். இதில் இங்கிலாந்தின் ஒரு துறைமுக நகரத்திலும் பின்பு தில்லியிலும் விசாமால் தீவிரவாதில்கள் திட்டமிட்ட குண்டு வெடிப்பு சதி தடுக்கப்படுகிறது. அதற்கான பல சாகச காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் வெடி குண்டை செயலிழக்க செய்ய கடல் நீருக்கடியில் சென்று செய்ய வேண்டிய காட்சிகளில் அதில் பங்கு பெற்ற கமல், பூஜா குமார், இதர நடிகர்கள் உண்மையிலேயே ஸ்குபா டைவிங் செய்து கடலுக்கடியில் சென்று அது படமாக்கப்பட்டுள்ளது. அதே போல கமலும் ஒரு தீவிரவாதியும் தண்ணீருக்கடியில் சண்டையிடும் ஸ்டன்ட் காட்சிகளும் அருமை. தொழில் நுட்ப திறனுக்கும் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள். ஜிப்ரான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நன்றாக வந்துள்ளன.

ஆனால் முதல் படத்தில் இருந்த திரைக் கதையின் தெளிவு இரண்டாம் படத்தில் இல்லை. முன்னும் பின்னும் கதை நகர்வதால் குழப்பமாக உள்ளது. மேலும் கதையே மெதுவாகத் தான் நகர்கிறது. இந்த மாதிரி த்ரில்லர் படங்களுக்கு வேகம் தான் முக்கியம். வசனங்களில் நகைச்சுவையோ  கூர்மையோ இல்லை. அதே போல முதல் படத்தில் இருந்த அல்குவைதா ஆப்கானிஸ்தான் காட்சிகள் இந்தப் படத்தில் காட்டப்படும்போது ஒட்டவில்லை. முதல் படத்தில் இருந்த டிரான்ஸ்பர்மேஷன் காட்சி போல இதிலும் ஒன்று படத்தின் இறுதியில் உள்ளது. ஆனால் ரொம்ப சப்பையாக உள்ளது. எம்ஜிஆர் கால கதை மாதிரி அம்மாவையும் மனைவியையும் வில்லன் பிடித்து வைத்திருப்பது தான் க்ளைமேக்ஸ் என்றால் என்ன சொல்வது?

மத நல்லிணக்கத்துக்கான வசனங்களும் வில்லனின் பிள்ளைகள் பற்றிய ஒரு நல்ல செய்தியும் மக்களுக்கான மெஸ்சேஜ்.

Vishwaroopam 2 will be on par with Hollywood films: Kamal Haasan

கஜினிகாந்த் – திரை விமர்சனம்

‘பலே பலே மகாதிவோய்’தெலுங்கு படத்தின் ரீமேக். எந்த காட்சியையும் மாத்தாமல் அப்படியே எடுத்திருப்பதாக தெரிகிறது. முழு நீள நகைச்சுவைப் படம். பெயரிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் ரஜினியின் அதி தீவிர ரசிகரா இருந்திருக்கணும் தாயோ தந்தையோ என்று (இதில் தந்தை) அதனால் ரஜினிகாந்த் என்று பெயர் ஆனால் தர்மத்தின் தலைவன் படத்தைப் பார்க்கும்போதே திரை அரங்கில் பிறந்ததால் அதிலுள்ள ஒரு ரஜினி மாதிரி மிகவும் ஞாபக மறதிப் பிரச்சினை ஹீரோவுக்கு. அதனால் காரணப் பெயர் கஜிநிகாந்த்.

சதீஷ் யார் கருணாகரன் யார் என்று எப்பவும் கன்பீஸ் ஆகும், இந்தப் படத்தில் இருவருமே ஆர்யாவின் நண்பர்களாக வருகிறார்கள். ஆர்யாவின் தந்தையாக ஆடுகளம் நரேன், தாயாக உமா பத்மநாபன். இதில் குறுக்கே மறுக்கே ஓடும் இன்னொரு பாத்திரம் மொட்டை ராஜேந்திரன், பாவத்த கல்யாண வயசுள்ள ஆர்யாவின் நண்பராக வருக்கிறார்!பெரிய கதையம்சமோ நடிப்பை வெளிக்காட்டும் ஆற்றலோ தேவையின்றி ஞாபக மறதியினால் (ஞாபக மறதி என்பதை விட Attention deficiency syndrome என்று சொல்லலாம்) விளையும் கஷ்டங்களை நகைச்சுவையாக காட்டும் படம் இது. நிறைய காட்சிகள் பல பழைய படங்களில் உருவின மாதிரி உள்ளது, உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கௌண்டமனியும் கார்த்திக்கும் மாப்பிள்ளையாக ஆள் மாறாட்டம் செய்வதை இந்தப் படத்தில் சதீஷும் ஆர்யாவும் நாயகி சாயிஷாவின் அப்பா சம்பத்திடம் செய்கிறார்கள். சின்ன வாத்தியார் படத்தில் பிரபு மறதி விஞ்ஞானியாக வருவார் அதே மாதிரி பாத்திரம் தான் ஆர்யாவுக்கும், வேளான் விஞ்ஞானி!

சாயிஷா சைகல் பாத்திரம் பத்தி எல்லாம் ரொம்ப மெனக்கெடலை இயக்குநர். முன்பெல்லாம் வரும் ஒரு மக்கு ஹீரோயின் பாத்திரம் சாயிஷாவுக்கு. ஜூங்கா படத்தில் இன்னும் அழகாகத் தெரிந்தார், சிறப்பாகவும் நடித்திருந்தார். அவரின் நடன அசைவுகள் இந்தப் படத்திலும் அருமை!

இசை பற்றியோ படத்தொகுப்போ பற்றியோ சொல்ல ஒன்றும் இல்லை. ஒளிப்பதிவு (பாலு) நன்றாக இருந்தது.

சில இடங்களில் வயிறு வலிக்க சிரிக்க முடிகிறது. மத்தபடி விசேஷமாக எதுவும் இல்லை. நகைச்சுவையாக நடிக்க ஆர்யாவும் எந்த சிரமும் எடுத்துக் கொள்ளவில்லை, முழுக்கவும் சிரிக்க வைக்க இயக்குனரும் கஷ்டப்பட்டுக் கொள்ளவில்லை. ஆர்யா படம் என்பதால் கடைசியில் சண்டைக் காட்சிகளையும் இடம் பெற செய்திருக்கிறார்கள். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் எல்லாம் நம்பும்படியாக இல்லை. ஆனால் லாஜிக் பார்க்கும் படம் இல்லை இது. சும்மா டைம் பாஸ். ரொம்ப நாளாக அவரை காணாமல் இருந்த ஆர்யா ரசிகர்களுக்கு இது நல்ல படம். உடல் பிட்டாக இருக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் P.ஜெயகுமாருக்கு குடும்பப் படம் எடுக்கத் தெரியும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் ஒன்றிரெண்டு இடங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன. தெலுங்கில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது படம் என்று அந்தப் பட விமர்சனம் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

 

 

கூடே – மலையாளப் படத் திரை விமர்சனம்

அது என்ன மாயமோ, பெரும்பாலான மலையாளப் படங்கள் மனசுடன் உறவாடும் படங்களாக அமைகின்றன! கூடே படத்துக்கு சப் டைட்டில் இருந்தாலும் அது தேவையே இல்லாத அளவு காட்சிகளே கதை சொல்கின்றன. அதிலும் படத் தொகுப்பு என்றால் என்ன என்பதை படத் தொகுப்பாளர்கள் இப்படத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். கத்திரித்து ஒட்டியதே தெரியாத அளவுக்கு ஒரே இழையாக ஓடுகிறது படம். இத்தனைக்கும் ப்ளாஷ் பேக் நிறைந்த கதை! அஞ்சலி மேனன் பெங்களூர் டேஸ்க்குப் பிறகு அதை விட பிரமாதமாக ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.

பிரிதிவிராஜ், பார்வதி மற்றும் இதில் பங்கேற்ற அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ப்ரித்விராஜ் இப்படத்தில் ஓவ்வொரு பிரேமிலும் இருக்கிறார், கதையை அவர் முகமே சொல்லிவிடுகிறது. அதிலும் பதின் பருவ ப்ரித்விராஜாக வருபவர் நடிப்பும் அற்புதம். அந்தப் பிள்ளை தனியாக உறவினருடன் செல்லும் காட்சியும் அவன் படப் போகும் (யாரும் கேட்க நாதியில்லாத நிலையில்) அதீத துன்பத்தை suggestiveஆக சொல்லியிருப்பது நேரடியாக காட்டியிருந்தால் உண்டாகும் தாக்கத்தை விட பகீரரென்று நமக்கு உரைத்து சோகத்தை அதிக அளவில் ஏற்படுத்துகிறது. இயக்குநருக்கு பாராட்டுகள். காக்கா தலையில் பனங்காயாக பெரும் பணச் சுமையை பதின்ம வயதில் இருந்தே தாங்கிய வெறுப்பு, யாருடைய உதவியும் இல்லாமல் பல துன்பங்களைக் கடந்து வந்த சோகம், சகோதரியின் மேல் அளவற்ற பாசம் அதுவே ஒரு நிலைக்குப் பின் ஒட்டுதலற்ற தன்மை, பெற்றோர்கள் மேல் எரிச்சல் கடுப்பு, தோழி/காதலியிடம் சிநேகமும் காதலும், கால் பந்தாட்ட பயிற்றுவிப்பாளரிடம் மரியாதையும் வாஞ்சையும் என்று பலதரப்பட்ட உணர்வுகளை காட்டி சிறப்பாக செய்திருக்கிறார் ப்ரித்விராஜ்.

நஸ்ரியாவிற்கு நாலு வருட இடைவேளைக்குப் பிறகு இது கம் பேக் படம். சும்மா லட்டு மாதிரி இருக்கிறார். சற்றே பூசினா மாதிரி உடல்வாகும் இப்பாத்திரத்திற்கு அழகாக உள்ளது. ப்ரித்விராஜ் பாத்திரத்துக்கு எதிரான குணாதிசயங்களுடன் வருகிறார். மருத்துவமனை-வீடு-பள்ளி/கல்லூரி -மருத்துவமனை என்று வாழ்க்கை அவருக்கு இருந்தாலும் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் ஒரு பக்குவத்தை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாட்டை அழகாக காட்டியிருக்கிறார். அதிக வசனம் இவருக்கு தான் 🙂

கதைக் களம் நீலகிரி மழைத் தொடர் ஊட்டி அருகில். ஆனால் இவ்வளவு அழகான எரியும் இயற்கை வளங்களும் அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இடம் ஊட்டி அருகில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கேரளாவில் எடுத்ததோ என்று தோன்றுகிறது.  ஷார்ஜாவில் ஆரம்பித்து நீலகிரியில் பயணிக்கிறது கதை. அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என்கிற கேள்வியை விட ஒருவரின் நிறைவேறாத ஆசையின் தீவிரம் இறந்த பிறகும் அதை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கும் என்பதை நாம் ஒத்துக் கொள்ளும் வகையில் கதை அமைந்திருக்கிறது. சிரியன் கிறிஸ்டியன் குடும்பக் களம். ஆனாலும் மறுபிறவி நம்பிக்கையுடன் முடிகிறது கதை.

இது மராத்திப் படம் Happy Journeyயின் தழுவல். மராத்தியில் ரொம்ப dark. ஆனால் மலையாளத்தில் கூடே படம் உணர்ச்சிக் குவியிலின் collage. பின்னணி இசை ரகு திக்ஷித். மிகவும் நன்றாக உள்ளது. பாடல்களுக்கு இசை ஜெயச்சந்திரன், ரகு திக்ஷித். பரவாயில்லை ரகம். படத்தொகுப்பு லிட்டில் ஸ்வயம்ப், அற்புதம்! அவர் படத்தின் ஒரு தூண்.

அஞ்சலி மேனன் matriarchal societyயில் வளர்ந்ததால் கருத்துகளை சொல்வதில் இன்னும் அதிக சுதந்திரம் கிடைத்ததோ என்று தோன்றுகிறது.(கதையில் ஒரு பெண் பாத்திரம் விவாகரத்து செய்யக் கூட உரிமையில்லாமல் திண்டாடுவதும் அதே சமூகத்தில் தான் என்கிற அவலமும் உள்ளது). பாத்திரங்களுக்கு சரியான நடிகர் தேர்வு, சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதை மனத்தில் வைத்து இயக்கிய திறன், லிட்டில் மிஸ் சன்ஷைன் படத்தில் வரும் வண்டி போல வரும் ஒரு வண்டியும், அவர்கள் வீட்டு நாயும் மனிதப் பாத்திரங்களுக்கு இணையாக படத்தில் பங்கு பெற வைத்திருக்கும் நேர்த்தி, சிறுவர் பாலியல் வன்முறை, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் நிலை (பெண் பாலியல் வன்முறை கேள்வி கேட்கப்படாமல் அடக்கப்படும் மூர்க்கம்) ஆகிய முக்கிய சமூக அவலங்களை முகத்தில் அறைந்தார் போல சொல்லாமல் நெஞ்சில் பதியும்படி சொல்லியிருக்கும் நளினம் இவை அனைத்துக்கும் ஒரு பெரும் சபாஷைப் பெறுகிறார் இயக்குநர்!

வாழ்க்கையில் பணம் காசு இல்லாமல் வாழ முடியாது தான் ஆனால் அதில் உறவுகள் தரும் பலமும் பாசத்தின் பிணைப்பும் வாழ்வை இலகுவாக்குகிறது, மன தைரியத்தை அதிகப் படுத்துகிறது, படும் சிரமத்திற்கு அர்த்தமளிக்கிறது. இதெல்லாம் படத்தைப் பார்த்து எனக்குத் தோன்றியது. உங்களுக்கு வேறு ஏதாவது தோணலாம், பார்த்துத் தெரிந்து கொள்ளவும் 🙂

 

ஜூங்கா – திரை விமர்சனம்

தமிழ் படம் 1, 2, இவற்றிற்கு டஃப் கொடுக்கும் ஒரு நல்ல சபூஃப் ஜூங்கா! நானும் ரவுடி தான் படத்தில் விசே தான் ஒரு ரவுடி என்று அலப்பறை பண்ணுவார். ஆனா நயன் சிம்பிளா நீங்க ரௌடி இல்லை ஒரு பிராட் என்று சொல்லிவிடுவார். அந்த மாதிரி இந்தப் படத்திலும் இவர் டான் என்று சொல்லிக் கொண்டாலும் காமெடி டானாக இருக்கிறார். சீரியஸா எடுத்துக்கற படம் இல்லை இது. லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம். ஆரம்பமே சூப்பர் ஸ்டாருக்குக் கொடுக்கற பில்டப் மாதிரி தொடங்குது, இவர் பாத்திரமும் முதலில் கண்டக்டர் தான்! அரங்கத்திலும் ஆரவாரம் அதிகம். விசில் பறக்குது!

கஜினி படத்தில் அசின் அவர் அப்பா டிராவலஸ் நடத்தி நொடித்துப் போய் கார்களை விற்றதால் மூணு அம்பாசிடர் கார் வாங்கின பிறகு தான் கல்யாணம் பணன்னும்னு சொல்றா மாதிரி விசேயும் அவர் அப்பாவும் தாத்தாவும் டானாக இருந்தும் வரவுக்கு மேல் செலவு செய்து ஒரு செட்டியாரிடம் அநியாயமாக தொலைத்தத் தன் அம்மாவின் சீதன சொத்தான திரை அரங்கை மீட்க சபதம் எடுத்து டானாக மாறுகிறார். அதற்காக சென்னை வந்து கம்மி ரேட்டில் கொலை, கடத்தல் எல்லாம் செய்கிறார். அதனால் தொழிலில் இருக்கும் மத்த டான்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார். இதில் ராதா ரவி சின்ன வேடத்தில் பெருங்காய டப்பா டான் சங்கத் தலைவராக வந்து போகிறார். அந்தக் காட்சிகள் எல்லாம் நல்ல ஸ்பூஃப்!

விசே கெட்டப் காமெடியா இருக்கு. யார் இதை அவருக்கு செய்து கொடுத்து நல்லா இருக்குன்னு சொன்னதோ தெரியலை. ஆனா வடிவேலு மாதிரி காமெடி செய்யனும்னு நினச்சு இந்த கெட்டப்பை அவர் தேர்ந்தெடுத்திருக்கலாம். மடோன்னா செபாஸ்டியன் சில சீன்களிலேயே வந்து கழட்டி விடப்படுகிறார் (literally). கஞ்சப்பிசினாரி டான் விசே, அதனால் ஒரு டூயட் மட்டும் பாடிவிட்டு செலவு வைக்கும் காதலியை கழற்றி விடுகிறார். அடுத்து சாயிஷா. இவர் வெள்ளைத்தோல் வடிவழகி!  செட்டியாரின் (சுரேஷ் மேனன்) செல்ல மகள். நன்றாக நடனம் ஆடுகிறார். குறை சொல்ல ஒன்றும் இல்லை. செட்டியார் விசேவிடம் திரை அரங்கை தவணை முறையில் விற்க மறுக்க விசே உடனே பேரிசில் இருக்கும் மகளை கடத்தி செட்டியாரை பணிய வைக்க பேரிஸ் போகிறார். எந்தப் பேரிசுக்கு முதலில் போகிறார் என்பாதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்!

அவர் பேரிஸ் போகும்வரை செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கின்றன, ஆனால் கஞ்சத்தனமான டானாக சென்னையில் செய்தவைகளையெல்லாம் மொழி தெரியாமல் யோகிபாபுவுடன் பாரிசில் தொடர்வது அபத்தமாக உள்ளது. ஆனால் எப்பொழுதும் ஒரே மாதிரி நடித்து வந்த அவர் இப்படத்தில் செய்யும் சேட்டைகள் ஒரு மாற்றாக நன்றாக அமைந்திருக்கிறது. நன்றாக செய்திருக்கிறார். ஆனால் இயக்குநர் பாரிஸ் சென்ற பிறகு திரைக் கதையில் கோட்டை விட்டுவிட்டது படத்தின் சறுக்கல்.

படிக்காத, ஏழை, கஞ்சனான சுமார் மூஞ்சி குமார் டான் ஹீரோவுக்கும் பணத்திலே புரண்டு வளர்ந்த, படித்த, அழகி ஹீரோயினுக்கும் காதல் வருவதை எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்பது தமிழ் சினிமா பார்க்கும் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியும். அதே போல இடாலியன் மாஃபியா கண்ணில் மண்ணைத் தூவி காதலியைக் காப்பாற்றி, பிரெஞ்ச் போலிசிடமிருந்தும் செம கார் சேசிங் செய்து தப்பிக்கும் ஹீரோ நமக்கும் புதுசும் இல்லை. எப்படியோ ஹீரோ காதலியையும் கைப்பற்றி தன் சபதத்தையும் நிறைவேற்றி விடுவார்.

இவருக்கு அம்மாவாக சரண்யா. இவர் ப்ளாஷ் பேக்கை சொல்லி இவர் டான் குடும்பம் என்பதை தெரிவிக்கிறார். அதில் டாடா சுமோவை பிரபலப்படுத்தியதே இவரின் அப்பாவும் தாத்தாவும் தான் போன்ற வசனங்கள் நல்ல நகைச்சுவை. அவரை விட அவர் மாமியாராக விசேவின் டான் பாட்டியாக வருபவர் பின்னி பெடலெடுக்கிறார். விசே தோழனாக யோகி பாபு படத்தின் பலம்.

பாடல்கள் எல்லாம் ஏன் வருது எதுக்கு வருதுன்னு தெரியலை ஆனா இயக்குநர் சொன்ன நேரத்தில் கரெக்டா வருது. விபின் சித்தார்த்தின் பாடல்கள் ரொம்ப சுமார். பின்னணி இசையை நான் கவனிக்கவேயில்லை. அது பிளஸ்சா மைனஸா தெரியலை! டட்லியின் ஒளிப்பதிவு வெளிநாட்டு லொகேஷன்களில் அருமை!

முன்னெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது பெரிய விஷயம், அதனால் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ வெளிநாட்டுக் காட்சிகளைக் கண்டு களிக்க நிறைய பேர் அப்படங்களுக்கு செல்வார்கள். அது மாதிரி இந்தப் படமும் பிரான்ஸ் ச்விட்சர்லேந்து என்று படமக்கப்பட்டிருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சிகளை கண்டு களித்துவிட்டு வரலாம்.

பிரெஞ்சு போலீசுக்கே அல்வா கொடுத்த விசே எதற்காக தமிழக போலீசில் மாட்டினார்? முதல் சீனே சிறைச்சாலை தான், ஆனால் அது கடைசி சீன் வரை புரியவில்லை. அவ்வளவு சிறப்பான திரைக்கதை! கோகுல் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களில் சில பகுதிகள் மிகச் சிறப்பாகவும் சில பகுதிகள் மிகத் தொய்வாகவும் இருக்கும். இந்தப் படத்தில் முன் பாதி நகைச்சுவை துணுக்குத் தோரணம், பின் பாதியில் கதை இல்லை. ஆனால் திரை அரங்கில் படத்துக்கு செம வரவேற்பு உள்ளது!

 

 

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்

 

கார்த்தி நடிப்பில் பட்டையை கிளப்பும் படம் கடைக்குட்டி சிங்கம். முழுக்க முழுக்க ஒரு பெரிய குடும்பத்தில் நடக்கும் உறவின் முறை சண்டை சச்சரவுகள், பாசப் பிணைப்பு, பரிதவிப்பு, ஏமாற்றத்தின் எதிரொலி, கடைசியில் எல்லாம் எப்படி அன்பின் முன் அடங்குகிறது என போகிறது திரைக்கதை. இயக்குநர் பாண்டிராஜூக்கும் சூர்யாவுக்கும் பசங்க 2 படத்தைத் தயாரித்ததில் நல்ல புரிதல் ஏற்பட்டதால் இந்தப் படத்தையும் சூர்யாவே தயாரித்துள்ளார் போலிருக்கிறது. சூர்யா தயாரிக்கும் எல்லா படத்திலும் அவர் தலையைக் காட்டுவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். தவிர்க்கலாம். படத்தில் அவர் கல்விக்கு நிறைய செய்கிறார் என்று தலைமைத் தாங்க வந்து பரிசு கொடுப்பதெல்லாம் எவ்வளவு முறை பார்ப்பது. அடக்கி வாசிக்கலாம்.

படத்தின் ஆரம்பம் கொஞ்சம் கொடூரமாக உள்ளது. அதாவது ஆண் குழந்தை வேண்டுமென்று சத்தியராஜ் அக்கா தங்கையை கட்டியது போதாதென்று இன்னொரு பெண்ணையும் மணம் முடிக்க நினைக்கிறார். கதைக்களம் நடக்கும் காலம் தற்போது, ஏனென்றால் ஐ பேட் வைத்துக் கொண்டு தான் சத்தியராஜ் வளைய வருகிறார். அதனால் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் முன் இவ்வாறு சத்தியராஜ் நடந்து கொண்டதாக இருந்தாலும் என்ன கண்றாவி இது என்று நினைக்கத் தோன்றுகிறது. பின் பாதியில் இந்த இரண்டு பெண்டாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட குழந்தைகளினால் ஏற்படும் இடியாப்ப சிக்கல் அந்தச் செயலின் தாக்கத்தை நன்றாக வெச்சு செய்வது ஒரு ஆறுதல்!

கார்த்தி விவசாயி. விவசாயத்தின் தேவை, ஜல்லிக்கட்டு, காளை மாடுகள், ரேக்ளா ரேஸ் போன்ற முக்கியமான விஷயங்களைத் தொட்டு சென்றாலும் படம் அவற்றைப் பற்றியது அல்ல. பாண்டிராஜின் இயக்கத்தில் வந்த பல படங்களிலும் அந்தக் குறை உண்டு. சமூக அக்கறையுடன் ஆரம்பிக்கும் படம் பின் வேறு மாதிரி பயணிக்கும். அதே மாதிரி இந்தப் படமும் முறைப் பெண்கள் இருவர் இருக்கும் போது இன்னொரு பெண்ணை காதலித்து எப்படி நவக்கிரகங்களாக முறுக்கி நிற்கும் உறவுகளை பாசத்தினால் கைக் கோர்க்க வைத்து அவர்கள் சம்மதத்துடன் தன் காதலியை கைப்பிடிக்கிறார் என்பதே கதை. இதில் ஜாதி, ஆணவக் கொலை ஆகியவையும் பேசப்படுகின்றன.

ஐந்து அக்காக்களுக்குப் பின் கடைக்குட்டி கார்த்தி என்பதால் ஏகப்பட்டப் பாத்திரங்கள். முதலில் தலையை சுத்தினாலும் பிறகு சீராக பயணிக்கிறது திரைக் கதை. நிச்சயமாக இந்தப் படத்தின் பலம் திரைக்கதையே. அடுத்து நடித்த அனைவரின் பங்களிப்பும். சத்தியராஜ் ஓவர் ஏக்டிங் செய்ய எத்தனையோ சந்தர்ப்பம் இருந்தாலும் அருமையான பண்பட்ட நடிகர் என்பதை படம் முழுவதும் பிரதிபலிக்கிறார். நல்லதொரு பாத்திரம், அதற்கேற்ற கச்சிதமான நடிப்பு. முதல் மனைவியாக விஜி சந்திரசேகர் கிளைமேக்சில் பிரமாதமாக செய்கிறார். பானுப்ரியா இரண்டாவது மனைவி, அவரும் தேர்ந்த நடிகர் என்பதால் இயல்பாக பாத்திரத்தில் பொருந்துகிறார்.

சரவணன், இளவரசு, மௌனிகா, யுவராணி, பொன்வண்ணன், ஜான் விஜய், மனோ பாலா, ஸ்ரீமன், என மகள்கள, மருமகன்களாக, இதர பாத்திரங்களாக வருபவர்கள் அந்தந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பாட்டியாக வருபவரும் அருமை! நாயகி சாயிஷா சைகால் நன்றாக செய்திருக்கிறார் ஆனால் முறைப் பெண்களும் நன்றாக தான் இருக்கிறார்கள், எது கார்த்தியை அவரிடம் ஹெவியா லைக் பண்ண வெச்சுதுன்னு சொல்கிற அளவுக்கு ஸ்பெஷலா அவரிடம் ஒன்றும் இல்லை. நகைச்சுவைக்கு சூரி. கார்த்தியுடன் பெரும்பாலான காட்சிகளில் அவரும் இருக்கிறார். காமெடி பரவாயில்லை. படத்தின் பின் பாதி ஓவர் மெலோடிராமா தான். ஆனால் இந்த மாதிரி குடும்ப சண்டைகள் நடக்கும் என்பதால் படத்துடன் ஒன்ற முடிகிறது. வசனங்கள் கூர்மை!

இவ்வளவு நல்ல நடிகர் பட்டாளத்தைத் தேர்ந்தெடுத்த பாண்டிராஜ் வில்லன் தேர்வில் சொதப்பியுள்ளார். சரியான சோதா வில்லன். அதற்குக் காரணம் பாத்திரப் படைப்பும் தான். யாருமே செய்யாத அளவு மோசமான முறையில் கார்த்தியை கொலை செய்ய திட்டம் போடுவதாக காட்டிவிட்டு சும்மா ஒரு அடியாள் பட்டாளத்தை ஒவ்வொரு முறையும் அனுப்பி கார்த்தியினால் பந்தாடப்பட்டு திரும்பி வருகின்றனர். குடும்பத்தைக் கலைக்க வில்லன் மேற்கொள்ளும் வழிகளும் பயங்கர சாதா. பாண்டிராஜ் இதற்காக மூளையை செலவழிக்கவில்லை. அது படத்தின் மிகப் பெரிய மைனஸ். பாடல்கள் எதுவுமே நன்றாக இல்லை. D.இமானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. வேல்ராஜின் ஒளிப்பதிவு ரேக்ளா ரேசில் அருமை. ரூபனின் படத்தொகுப்பு ஓகே, கொஞ்சம் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். படத்தின் தலைப்பில் ஒற்றுப்பிழை உள்ளது. கடைக்குட்டிச் சிங்கம் என்றிருக்க வேண்டும். ஏன் இந்தத் தவறு என்று தெரியவில்லை.

மாயாண்டி குடும்பத்தார் அந்தக்காலம், கடைக்குட்டி சிங்கம் இந்தக்காலம்.

 

மிஸ்டர் சந்திரமௌலி – திரை விமர்சனம்

இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் பாதியில் கதையை ஆரம்பிக்க ரொம்ப துணிச்சல் வேண்டும் இயக்குநர் திருவுக்கு. முதல் பாதி முழுக்க ஆமை வேகத்தில் ஊர்கிறது கதை(?)! இரண்டு கேப் கம்பெனிகளுக்குள் போட்டி என்பது மட்டுமே முதல் பாதியில் நாம் தெரிந்து கொள்வது. ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியை அழிக்க எந்த அளவு போகிறது என்பது மறு பாதியில் தெரிகிறது. டூ ஃபார் ஒன் விலையில் கார்த்திக், கௌதம் கார்த்திக் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்பா மகன் பாத்திரம். கார்த்திக் இன்னும் இளமை மாறாமல், அவரின் சேஷ்டைகள் மாறாமல், டயலாக் டெலிவரி மாறாமல் அப்படியே இருக்கிறார். கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் நல்லதொரு முன்னேற்றம் காணமுடிகிறது.

கௌதம் கார்த்திக் ஒரு வளரும் குத்துச் சண்டை வீரர். உடற் கட்டும், சண்டைப் பயிற்சியும் அவரை முன்னிலைப் படுத்துகிறது. ஆனால் அதையெல்லாம் காட்டுவதற்கு வாய்ப்பு பின் பாதியில் தான். முதல் பாதியில் அப்பாவும் மகனும் பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் நம் பொறுமையை சோதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அப்பா மகன் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. இயக்குநர் மகேந்திரன் சின்ன பாத்திரத்தில் வருகிறார். தெறி படத்தில் வில்லனாக நன்றாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. இயக்குநர் அகத்தியனும் கார்த்திக்கின் நண்பனாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார்.

கௌதம் கார்த்திக்கின் ஜோடி ரெஜினா கசான்ட்ரா டூயட்களில் நன்றாக கவர்ச்சி காட்டுகிறார். முதல் பாதியில் உப்புச்சப்பில்லாமல் அவர்களுக்குள் ஏற்படும் காதலுக்கு ஓரிரு டூயட்கள் துணை போகின்றன. நடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். அவர்கள் அறிமுகமே பின் பாதியில் தான். நடக்கும் கொலை, திருட்டு இன்ன பிற குற்றங்களுக்கான காரண புதிரை விடுவிக்க வரலட்சுமி பாத்திரம் உதவுகிறது. வரலட்சுமி வெகு இயல்பாக நடிக்கிறார். அவரை தமிழ் திரையுலகம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறது. நடிகர் சதீஷ் இருந்தும் காமெடி துளியும் இல்லை. ஓரிரு இடத்தில் கஷ்டப்பட்டு சிரிக்கலாம்.

ஒரு விபத்தால் கௌதமுக்கு பெரிய குறை ஏற்பட்டப் பின் அந்தக் குறையுடன் குற்றப் பின்னணியை கண்டுபிடிக்க சதீஷ் ரெஜினா கௌதம் கூட்டணி கையாளும் டெக்னிக் படத்துக்கு முதலுதவி செய்து பிழைக்க வைக்கிறது. இறுதியில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்தது படத்துக்கு ஊக்க மருந்தாக அமைகிறது. இவை மட்டும் இல்லையென்றால் படத்துக்கு விமர்சனமே எழுத தேவையிருந்திருக்காது.

இசை சாம் C.S, பின்னணி இசை சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் பழைய படங்களில் வரும் பின்னணி இசை போலவும் உள்ளது. ஒரு பாடல் ஏதேதோ ஆனேனே அதற்குள் வானொலியில் பிரபலமாகியுள்ளது. ஒளிப்பதிவு ரிச்சர்ட் நாதன், தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட டூயட்டில் அவரின் கை வண்ணம் மிளிர்கிறது. T.S.சுரேஷின் படத்தொகுப்பு நன்றாக உள்ளது. ஆனால் முன் பாதியை கத்திரிக்காமல் விட்டதற்கு அவரை மன்னிக்க முடியாது.

கௌதம் கார்த்திக் நன்றாக நடித்துள்ளார். சூர்யா, கார்த்திக் தவிர மற்ற வாரிசு நடிகர்கள் ஒருவரும் பேர் சொல்லும்படியாக தமிழ் சினிமாவில் முன்னணிக்கு வரவில்லை. இவருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கார்த்திக் ஒரு பேட்டியில் நிறைய அப்பா மகன் கதைகள் வந்தும் அவையெல்லாம் பிடிக்காமல் இக்கதையைப் பிடித்துத் தேர்வு செய்ததாக கூறியுள்ளார். அப்போ அவர் கேட்ட மத்த கதைகள் எல்லாம் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்று நாம் யூகிக்கலாம். இதில் அப்பா மகன் உறவில் நெகிழ்ச்சித் தரக் கூடிய காட்சிகள் உள்ளன ஆனால் இருவருக்கும் தீனி போடும் விதத்தில் திரைக் கதையில் ஒன்றும் இல்லை.

மௌன ராகம் பட மிஸ்டர் சந்திரமௌலி பெயரை வைத்துத் திரை அரங்கத்துக்கு அழைத்து வந்துவிட்டார்கள். ஆனால் இறுக்கையில் இருத்தி வைக்க முடியலையே!

டிக் டிக் டிக் – திரை விமர்சனம்

இதுவரை எடுத்துக் கொள்ளாத ஒரு கதைக் களம், விண்வெளியில் நடக்கிறது முக்கால்வாசி கதை. துணிச்சலாக இக்களத்தை தேர்ந்தெடுத்துத் திரைக்கதை அமைத்ததற்கு இயக்குநரை பாராட்டவேண்டும். இதுவரை தமிழ் திரையுலகில் விண்வெளியில் நடப்பவைகளாக எந்தக் கதையும் எடுக்கப்படவில்லை. ஒரு மிகப் பெரிய எரிகல் (ஆஸ்டிராய்ட்) தென் இந்தியாவை தாக்கப் போவதாகவும், அது தாக்கினால் பெரும்பாலான தென் பகுதிகள் அழிந்துவிடும் என்னும் நிலையில் அதைத் தடுக்க ஒரு மிகப்பெரிய ஏவுகணையை கள்ள மார்க்கெட்டில் வாங்க அன் அபிஷியலா இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் (அல்லது தளபதி? சரியா புரியவில்லை) முனைவதாகவும் ஆரம்பிக்கிறது கதை. அந்தக் கள்ளச் சந்தையில் வாங்க முனைகையில் அந்த ஏவுகணை இருக்குமிடம் விண்வெளியில் சைனா போன்ற ஒரு நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு விண்வெளி தளத்தில் என்று தெரியவருகிறது. அதை விண்வெளிச் சென்று திருட ஒரு திருடனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குப் பயிற்சி அளித்து அந்த எரிகல் பூமி எல்லையைத் தொடும் முன் அதன் மேல் ஏவுகணையைப் பாய்ச்சி அதை உடைத்து நம் தென் தமிழகத்தைக் காப்பாற்ற முனைவது தான் கதை. இதை ஆறு நாட்களுக்குள் செய்து முடிப்பது இன்னொரு சவால்.

கதையில் பலப் பல ஓட்டைகள் இருக்கின்றன. இவர்கள் காட்டுவது போல் ஒரு விண்வெளி மையமே நம் நாட்டில் கிடையாது. திருட்டுக் குழு ஜெயம் ரவி & டீம் அர்ஜுன் & ரமேஷ் திலக் இவர்களுக்கு விண்வெளியில் ராக்கெட்டில் பயணிக்கக் கொடுக்கப்படும் பயிற்சி இத்யாதிகள் ஒரு கண்டு பூவை நம் காதில் சுத்துவதை ஒத்துள்ளது. அதுவும் ராக்கெட் பழுதாகி சந்திரனில் இறங்கி பின் டேக் ஆப் ஆவது எல்லாம் பயங்கர உடான்ஸ். ஆனாலும் விண்வெளியில் இருக்கும் விண்கலங்கள், அதில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஏவுகணை, அமெரிக்க ரஷிய விண்வெளி ஸ்டேஷனை போல  உள்ளது. அனிமேஷன் பக்கா. கம்மி பட்ஜெட்டில் மிகத் தரமான காட்சிகளை தந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. முக்கியமாக சீனா விண்வெளி வீரர்களிடம் சண்டையிட்ட பின் விண்வெளியில் ரவி மிதக்கும் காட்சி, ஹாலிவுட் தரம்.

மேலும் முதலில் நடிகர்கள் கொஞ்சம் சுமாராக நடித்தும் கதையில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டைகள் நம்மை எரிச்சல் படுத்தினாலும் போகப் போக திரைக் கதையில் சுவாரசியம் ஏற்படுத்தி இயக்குநர் நம்மை இருக்கையில் இருத்தி வைத்து வெற்றிப் பெறுகிறார். ஜெயம் ரவி, அர்ஜுன், ரமேஷ் திலக் இம்மூவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். நிவேதா பெத்துராஜ் நடிப்பு வெகு சுமார். இன்னும் கேட்டால் முக்கிய வேடத்தில் வரும் ஜெயபிரகாஷ் நடிப்பும் சோபிக்கவில்லை. மிகவும் நாடகத்தனமாக இருந்தது. பாத்திரங்களுக்கு ஏத்த நடிகர்களைத் தேர்ந்தெடுத்திருந்தாலே படம் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

வெங்கடேஷின் ஒளிப்பதிவில் நாமே ஸ்பேஸுக்கு சென்ற அனுபவம் கிடைக்கிறது. டி.இமான் மெதுவாக செல்லும் காட்சிகளை இசையால் தூக்கிப்பிடிக்கிறார். பின்னணி இசை வெகு நன்று. ஆடைவடிவமைப்பாளர் தனபால் மற்றும் கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி டீம் பாராட்டப்படவேண்டியவர்கள். படம் இரண்டு மணி பத்து நிமிடங்கள். நன்றி பிரதீப் ராகவ் (படத்தொகுப்பு).

எப்படி இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நாம் நினைக்கையில் அதை ஒரு நல்ல திரைக்கதையால் முடித்துக் கொடுக்கிறார் மிருதன் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவியின் மகனும் அவர் மகனாகவே படத்தில் நடித்துள்ளார். மீன் குட்டிக்கு நீச்சல் கற்றுத் தர வேண்டுமா? கேமரா பயம் இல்லாமல் நடித்திருக்கிறான். அர்ஜுன் டைமிங் நகைச்சுவை நல்ல ரிலீஃப். படத்தின் வில்லன் குருதிப் புனல் டைப், முடிவும் அப்படியே!

நிரைய லாஜிக் தவறுகள் உள்ள ஆனால் ஒரு புது முயற்சியை பாராட்ட வேண்டும் என்கிற என்ணம் இருப்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். குழந்தைகள் விரும்பிப் பார்ப்பார்கள். ஒரு டூயட் கூட கிடையாது அதனால் தைரியமாக பிள்ளைகளை அழைத்துப் போகலாம்.

Previous Older Entries