
திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமோ அல்லது நாமே பார்த்து தீர்மானித்துக் கொள்ளும் காதல் திருமணமோ நமக்கு ஏற்ற வாழ்க்கை துணை அமைவது ஒரு ஆச்சர்யம் கலந்த அதிசயம் தான்.
என் தாய்க்கு என் தந்தை தூரத்து உறவினர். அவர் கல்கத்தாவில் இருந்து சென்னை வந்த புகைவண்டி பெருமழையின் காரணமாக இருபத்தி நாலு மணிநேரம் தாமதமாக வந்திருக்கிறது. அவருக்காகக் காத்திருந்த அவர் நண்பர் காலவரையறை இன்றி காத்திருக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார். எதேச்சையாக என் மாமா வேறு ஒரு நண்பரை அழைக்க அந்த நேரம் ஸ்டேஷன் சென்றுள்ளார். அவர் நண்பரின் வண்டியும் தாமதம். ஆனால் அங்கே நின்றுகொண்டிருந்த என் தந்தையைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். என் தந்தை புது வேலையில் சேர சென்னை வந்து இறங்கியிருந்தார். தூரத்து சொந்தம் ஆதலால் தங்கும் இடம் பார்த்துக் கொண்டு செல்லும் வரை இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியுள்ளார். அந்த சமயத்தில் இவரின் நடத்தை என் தாத்தாவிற்கு மிகவும் பிடித்துப் போய் தன் மகளை அவருக்கு மனம் முடிக்கும் முடிவை எடுத்திருக்கிறார். என் தந்தைக்கும் என் தாயைப் பார்த்ததுமே பிடித்துப் போய் உள்ளது. என் தாயை பார்த்த மாத்திரத்தில் அவரை மிகவும் வசீகரித்துவிட்டதாக என் தந்தை என்னிடம் சொல்லியுள்ளார் 🙂
என் ஒரு மாமாவின் திருமணம் இன்னொரு அழகான கதை. என் மாமா மிகப் பெரிய பொருளாதார நிபுணர், ஆனால் வலது கையில் போலியோ வந்து கையை சரியாக உபயோகப் படுத்தமுடியாது. அதனால் அவருக்கு திருமணம் புரிந்துகொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது. ஆனாலும் என் தாத்தா அவர் கடமையை நிறைவேற்ற நிறைய இடங்களில் பெண் தேடிக் கொண்டிருந்தார். என் மாமியின் வீட்டிற்கு என் மாமாவின் ஜாதகம் வந்துள்ளது. அவர்களும் பொருத்தம் பார்த்து நன்றாக உள்ளது என்று மாமியிடம் சொல்லியிருக்கின்றனர். ஆனால் என் மாமிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதனால் அவர்கள் வீட்டிலும் மேற்கொண்டு எங்கள் தாத்தாவை தொடர்பு கொள்ளவில்லை. ஆறு மாதங்கள் கழித்து என் மாமியின் நெருங்கிய உறவினர் அவர்கள் இருவரின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ரொம்பவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். என் மாமியிடம் நீ இந்த வரனை மணம் முடித்தால் ராணி போல வாழ்வாய் என்று சொல்லியிருக்கிறார். 🙂 பின் என் மாமியும் அவரின் அண்ணாவும் அப்பொழுது என் மாமா இருந்த டில்லிக்கே அவரைப் பார்க்க சென்றுள்ளனர். இதுவும் அந்த காலத்தில் நடைமுறையில் இல்லாத விஷயம். பிள்ளை தான் பெண்ணை பார்க்க வரவேண்டும். என் மாமியும் அவர் அண்ணனும் மாமாவை சந்திக்க சென்ற போது என் மாமா தன் சட்டையை அவிழ்த்து என் கை இப்படித் தான் இருக்கும் பார்த்துக் கொள், உனக்கு முழு சம்மதம் என்றால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அவரின் அந்த ஓரு செயல் என் மாமியின் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டது. நான் என் வாழ்நாள் முழுவதும் உங்கள் வலது கையாக இருப்பேன் என்று அங்கேயே சொல்லியுள்ளார். அதன் பின் கெட்டி மேளம தான் 🙂

நானும் என் கணவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததும் மிகக் குறுகிய கால சந்திப்பில் தான். திருமணமும் சந்தித்த ஒரே வாரத்தில் நடைபெற்றது. பின் அவரைத் தொடர்ந்து அமேரிக்கா பயணம். மிகவும் துணிச்சலான முடிவு தான். அதை மேற்கொள்ள அவரின் மேல் எனக்கு விழுந்த ஒரு நம்பிக்கை தான் காரணம்!
என் தோழிகள் இருவர் காதல் மனம் புரிந்தனர். அதில் பக்கத்து வீட்டு பையனையே மனந்தவள் ஒருத்தி. இன்னொரு தோழி பயங்கர எதிர்ப்பை தாங்கி வீட்டை விட்டு ஓடிப் போய் கலப்பு மணம் புரிந்தாள்.
என் அத்தை பையன் அவனுடைய பள்ளித் தோழியை மனந்தான். வேறு ஜாதி தான். அதனால் அவர்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன் (அவளே ஒரு மருத்துவர்) என் அத்தையின் கணவரே முன் நின்று திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெண் வீட்டாரிடம் சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் வந்து சிறப்பித்தது ஒரு நிம்மதி!
என் ஒரு மாமாவின் மகனும் காதலித்து தான் மணம் புரிந்தான். கல்லூரி தோழி. ஆனால், ஒரே ஜாதி. அதனால் திருமணம் கோலாகலமாக நடந்தது 🙂 இன்னொரு மாமாவின் மகனை அவனின் பெற்றோர்கள் அவனையே பெண் பார்த்துக் கொள்ள சொன்னார்கள். ஆனால் பிடிவாதமாக பெற்றோர் தான் தனக்கு பெண் பார்த்து மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டான். ஆனால் அவர்களும் பார்த்தபாடில்லை. ஆனால் பாருங்கள், பெண்ணே அவனை பார்த்து விட்டாள். அவன் மணம் முடித்த பெண் அமெரிக்க சென்ற போது அவனை சந்தித்து அவன் மேல் பிரியப்பட்டு விட்டாள். தன் ஆசையையும் அவனிடம் தெரிவித்து இருக்கிறாள். இந்த அம்மான் மகன் என் அப்பா அம்மா சம்மதத்துடன் தான் நான் எந்த முடிவும் எடுப்பேன் என்று சொல்லி ஒரு வருடம் கழித்து இந்தியா வந்து பின் அவளை பெற்றோர்களுடன் சென்று பெண் பார்த்து பின் மணம் முடித்துக் கொண்டான்!
அடுத்து என் மாமா மகள். அவள் தன்னுடன் படித்த பெங்காலி பையனை விரும்பினால். அதனால் என் மாமாவும் மாமியும் கல்கத்தாவில் உள்ள பிள்ளை வீட்டிற்கு சம்மந்தம் பேச சென்றனர். பிள்ளையின் அப்பாவோ, உங்கள் மொழி வேறு எங்கள் மொழி வேறு, பழக்க வழக்கங்களும் வித்தியாசப் படும். அதனால் இதெல்லாம் சரிப்பட்டு வராது, கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டார். என் மாமாவிற்கு பெரிய ஷாக். பெண்ணும் பிள்ளையும் அமெரிக்காவில் உள்ளனர். அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டது இது என்ன புது குழப்பம் என்று பயந்து விட்டார். ஆனால் பையன் விடவில்லை. அப்பாவிடம் போராடியிருக்கிறான். அதன் விளைவாக அவர், ஆறு மாதம் இருவரும் பேசக் கூடாது, பார்த்துக் கொள்ளக் கூடாது, அதன் பின்னும் விருப்பப் பட்டால், தான் திருமணத்திற்கு சம்மதம் அளிப்பதாகச் சொல்லியுள்ளார். (இருவரும் இருப்பது ஒரே ஊரில், வெளிநாட்டில். ஆனால் பாவம் இவர் மகன் மேல் அவ்வளவு நம்பிக்கையோடு இந்த கண்டிஷனைப் போட்டிருக்கிறார் 🙂 ) ஆறு மாதம் கழிந்தது. பையன் அப்பாவிடம் தான் இன்னும் அதே எண்ணத்துடன் இருப்பதாக சொன்னவுடன், கொடுத்த வாக்கை நிறைவேற்றினார் தந்தை. இன்னொரு திருமணம் இனிதே நடந்தேறியது!

என் இன்னொரு அத்தையின் மகன் எதிர் வீட்டு பெண்ணை காதலித்தான். ஒரே ஜாதி. ஆயினும் அவன் பெற்றோர்கள் அவன் திருமணத்திற்கு சென்று ஆசி வழங்கவில்லை. ஏனென்றால் அவனாக எடுத்த முடிவில் அவர்களை உதாசீனப் படுத்தியதாக நினைத்துவிட்டார்கள்.
இப்பொழுது என் ஒரு அத்தையின் கடைக் குட்டி தன் காதலை உறவினர்களுக்குத் தெரிவித்து உள்ளான். வேறு மொழி, வேறு ஜாதி, ஒரு பெரிய அரசியல்வாதியின் மகள்! இது எங்கள் குடும்பத்திற்கு முதல் முறை 🙂
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்பது உண்மையான கூற்று. என் குழந்தைகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மிகவும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சுப நிகழ்ச்சிகள் 🙂 எனக்கு வரப்போகும் மருமகன், மருமகள் யார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரசியம் 🙂