வீடு வரை உறவு – சிறுகதை

houseunderconstn

நாங்க 1993ல் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது ரொம்ப மலைப்பா இருந்தது. புறநகர் பகுதியில் என் கணவர் திருமணத்துக்கு முன்பே ஒரு முக்கால் கிரவுண்ட் நிலம் வாங்கிப் போட்டிருந்தார். அதை வித்து ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்கு முன் பணமா கட்டி ஒரு flat வாங்கியிருக்கலாம். ஆனால் ஏனோ தனி வீடு ஆசையில் ஆரம்பித்துவிட்டோம். நான் பள்ளி ஆசிரியை ஆனதால் கோடை விடுமுறையில் மனை பூஜை போட்டு வீடு கட்ட ஆரம்பித்தோம். லீவில் தினம் சைட்டிலேயே பழியாய் கிடப்பேன்.

என் வீட்டில் இருந்து கிளம்பி இரண்டு பஸ் பிடித்துக் கொஞ்ச தூரம் நடந்த பின்னே தான் சைட்டை அடைய முடியும். வேர்க்க விறுவிறுக்க ஒரு நாள் நான் வந்த போது சித்தாட்கள் எல்லாரும் ஒரு மரத்தடியில் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், பெரியாட்கள் எல்லாரும் மணல் மேட்டில் உட்கார்ந்து பீடி வலித்துக் கொண்டிருந்தனர். மேஸ்திரியைக் காணோம், வரேன் என்று சொல்லியிருந்த இஞ்சிநியரையும் காணோம். ‘ஏன் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கீங்க’ என்றேன். ‘மேஸ்திரி வந்தாரு மா, இஞ்சினியரு வந்து எதோ சொல்லணுமாம், அதுக்கப்புறம் தான் வேலை ஆரம்பிக்கணும்னு சொன்னாரு’ என்றான் ஒருவன்.

கொஞ்ச தூரத்தில் ஒரு பொட்டிக் கடை. அங்கே போன் இருந்தால் இஞ்சினியருக்கு ஒரு போன் போடலாம் என்று போனேன். அந்தக் கடையில் இல்லை. அந்தக் கடைக்காரர் எதிர் பக்கம் இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து, ‘அங்கே போய் கேளுங்கம்மா. அவங்க வீட்டில போன் உண்டு.’ என்றார்.

Glass_On_Wall

மிக உயரமான காம்பவுண்ட் சுவர். சுவரின் உயரமே பத்தடி இருக்கும். சுவரின் மேலே உடைந்த கண்ணாடி துண்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. ரெண்டு கேட்டு. காருக்கு ஒண்ணு, மனிதர்களுக்கு ஒண்ணு. நாங்க கட்டும் வீட்டுக்கு வேலி கூட போடணுமான்னு யோசித்துக் கொண்டிருந்தோம், பட்ஜெட் பிரச்சினை. இவங்க காம்பவுண்ட் சுவரைப் பார்த்து இதைக் கட்டவே எங்கள் வீட்டின் பாதி பட்ஜெட் ஆகியிருக்கும்னு தோன்றியது. ரெண்டு கிரவுண்டு நிலத்தில் வீடு கட்டியிருந்தார்கள். ஆனால் வீட்டை வெளியில் இருந்து பார்க்க முடியவில்லை. மாடியில்லாமல் ஒரு தளம் தான். வாச கேட் உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. காலிங் பெல் எதுவும் இல்லை.

கேட்டை தட்டி ஆண்டி ஆண்டி என்றேன். என் குரல் எனக்கேக் கேட்கவில்லை. நல்ல காலம் அந்த சமயம் அயர்ன் பெண் துணி கொடுக்க அந்த வீட்டுக்கு வந்தாள். கேட்டை வேகமாகத் தட்டி ‘அம்மா அயர்ன் மா’ என்று சத்தமாகக் கத்தினாள். கேட்டின் சிறு இடுக்கு வழியாக நல்ல தாட்டியாக சிவந்த நிறத்தில் ஒரு ஐம்பது வயது மதிக்கத் தக்க அம்மா ஒருவர் வாசல் கதவைத் திறந்து நிதானமாக நடந்து கேட்டருகே வருவது தெரிந்தது. வந்து, பூட்டினை சாவிக் கொண்டு திறந்தார். அயர்ன் பெண் வேகமாக உள்ளே சென்றாள். என்னைப் பார்த்த அந்த அம்மணி கண்ணாலேயே என்ன வேண்டும் என்று வினவினார். ‘நாங்க அங்க வீடு கட்டுக்கிறோம்’ சொல்லிக் கொண்டே எதிர் பக்கம் கையைக் காண்பித்தேன். அவர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. நான் தொடர்ந்து, ‘இன்ஜினியர் வரலை, வேலை நிக்குது. உங்க போன் use பண்ணிக்கலாமா? அந்தப் பொட்டிக் கடைல உங்க கிட்ட போன் இருக்குன்னு சொன்னாங்க.’ என்றேன். அதற்குள் அயர்ன் பெண் ‘அம்மா அயர்ன் காசு நுப்பத்தஞ்சி ரூபாம்மா என்றாள்.’ இந்தம்மா அவளைப் பார்த்து ‘இவங்க இங்க வீடு காட்டறாங்களா?’ என்றார். ‘ஆமாம்மா அந்த எதிர் சைட்ல கட்றாங்க, தினம் வருவாங்க’ என்றாள். மறுபடியும் கண்ணாலேயே உள்ளே வா என்றழைத்து அவர் முதலில் உள்ளே சென்றார். நாங்கள் கேட்டை தட்டியதில் இருந்து அவர்கள் வீட்டில் விடாமல் ஒரு நாய் கத்திக் கொண்டிருந்தது. நல்ல வேளை அதை சைடில் ஒரு மரத்தில் கட்டியிருந்தார்கள்.

உள்ளே போய் ஹாலில் இருந்த போனில் இஞ்சிநியரைக் கூப்பிட்டேன். போனை எடுத்த அவர் மனைவி, ‘உங்க சைட்டுக்கு தாம்மா வந்துக்கிட்டு இருக்கார். கிளம்பும்போது யாரோ வந்துட்டாங்க,’ என்று சால்ஜாப்பு சொன்னார். போனை வைத்து விட்டு பர்சில் இருந்து ஒரு ரூபாய் காயினை தேடி எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். ‘ரொம்ப தாகமா இருக்கு, கொஞ்சம் குடிக்கத் தண்ணிக் கொடுக்கறீங்களா?’ என்று கேட்டேன். உள்ளே திரும்பி, ‘விமலா தண்ணி கொண்டு வா’ என்றார். குடித்து விட்டு, நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அந்தம்மா நான் இருந்தவரைக்கும் ஒரு தடவை கூட புன்னகைக்கவில்லை.

tamilnadu-single-floor-home

வீடு கட்டி கிரகப் பிரவேசம் வைக்கும் போது அக்கம் பக்கத்து (தூர தூர இருந்தாலும்) வீடுகளில் இருப்பவர்களையும் கூப்பிட வேண்டும் என்று ஆசை. முக்கியமா அந்த பெரிய வீட்டம்மாவை பிரென்ட் பிடிக்க வேணும் என்று ஏனோ ஆசை. திரும்ப அதே பட்ஜெட் ப்ராப்ளம் தான். உறவினர்களிலேயே எல்லாரையும் கூப்பிட முடியாமல் ரொம்ப நெருங்கிய சொந்தத்தை மட்டும் கூப்பிட்டு சுருக்கமாக முடித்து விட்டோம்.

வீட்டுக்குக் குடி வந்த பிறகு வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் பஸ்ஸை பிடிக்க அந்தப் பெரிய வீட்டைத் தாண்டி தான் போக வேண்டும். வீட்டைப் பார்த்துக் கொண்டே போவேன். எப்பவும் மூடியே தான் இருக்கும். பக்கத்தில் ஒரு கோவில். அதில் ஆடி வெள்ளி, தை வெள்ளிகளில் விளக்குப் பூஜை நடைபெறும். அந்த ஏரியா பெண்கள் பலரும் கலந்து கொள்வார்கள். அறிமுகமில்லாதவர்களை அறிமுகப் படுத்திக் கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம். அதற்கும் இந்தம்மா வரமாட்டாங்க.

நானும் அப்படி இப்படி விசாரித்ததில் தெரிந்து கொண்டது என்னன்னா, அவங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான். அதையும் ஏதோ வெளியூரில் கட்டிக் கொடுத்திருக்காங்க. வருஷத்துக்கு ஒரு முறை அந்தப் பெண் வந்து போகுமாம். இவங்க கணவரோடு காரில் வெளியே போய் வருவாங்க, மத்தப்படி வெளியே யாரோடும் பழக மாட்டாங்க. வீட்டோடு ரொம்ப வருஷமா ஒரு பொண்ணை வேலைக்கு வெச்சிருக்காங்களாம். சொந்த ஊரில் இருந்து வந்த பொண்ணாம். அது தான் தண்ணிக் கொடுத்த விமலாவும் இருக்கும்னு நினைத்துக் கொண்டேன். டிரைவர் தோட்டகாரன்னு வெளி வேலைக்கு ஆட்கள் வெச்சிக்கிட்டு இருந்தாங்க.

vegetablevendor

வீட்டுக்குக் குடி வந்து ஒரு அஞ்சு வருஷம் ஆகியிருக்கும். ஒரு நாள் வாசலில் வந்த காய்கறி வண்டியில் காய் வாங்கிக் கொண்டிருந்தேன். நல்ல வெள்ளை நிற உடுப்பில் ஒருவர் எங்களைத் தாண்டி போனார். காய்கறிக்காரர், ‘ஐயா வணக்கம்’ என்றார் அவரிடம். அவரும் தலையை ஆட்டிக் கொண்டே போய்விட்டார். அவர் கொஞ்சம் நகர்ந்ததும், அடிக் குரலில் காய்கறிக் காரரிடம் ‘யார் அவர்’ என்றேன். ‘அவர் தாம்மா அந்த பெரிய வீட்டுக்காரர்’ என்றார். இந்த இடத்துக்குக் குடி வந்து அஞ்சு வருஷம் கழிச்சு தான் அந்த வீட்டுக் காரரையே பார்த்தேன்.

திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் ஒரே கூட்டம். போலீஸ் கார், மோப்ப நாய், ஆம்புலன்ஸ் என்று வந்திருந்தது.  பொட்டிக் கடைக்காரர் அயர்ன் காரப் பெண் எல்லாரும் அவங்க வீட்டு வாசல்ல. நானும் வேகமாப் போனேன். என்னைப் பார்த்து அயர்ன் பெண் ‘அம்மா, அம்மாவை யாரோ கொன்னுட்டாங்கம்மா, காலையில் டிரைவர் வந்து தான் தெரிஞ்சிருக்கு. அவங்க வீட்டில வேலை செய்யற பொண்ணையும் ஐயாவையும் கட்டிப் போட்டிருந்தாங்களாம்மா ஐயா மண்டைல அடிச்சு பொழைக்கறது கஷ்டமாம் மா. ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காங்கம்மா.’ என்றாள்.

இரவில் யாரோ கதவை தட்டியிருக்கிறார்கள், அந்த வேலைக்காரப் பெண் தான் கதவை திறந்திருக்கிறாள். வந்தவர்கள் முகமூடி அணிந்திருந்தார்களாம். அந்த வேலைக்காரப் பெண்ணையும் அவரையும் கட்டிப் போட்டு அந்தம்மாவிடம் பீரோ சாவியும் நகைகளையும் கொடுக்க சொன்னார்களாம். அந்தம்மா மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டியிருக்கிறார்கள். அவரையும் மண்டையில் ஓங்கி அடித்திருக்கிறார்கள்.

நம்பவே முடியலை. எங்க ஏரியாவில் இப்படி ஒரு சம்பவமா? புற நகர் பகுதி என்றாலும் நாங்கள் குடிவந்த இந்த அஞ்சு வருஷத்தில் நிறைய வீடுகள் வந்துவிட்டன. நல்ல ஜன நடமாட்டமுள்ள இடமாகத் தான் மாறியிருந்தது. ஆனால் இந்தக் கொலை இரவு வேளையில் நடந்திருக்கு. ஆனால் ஒன்று மட்டும் நெருடியது. அந்தம்மா பகலிலேயே அவ்வளவு உஷாராக இருப்பாங்களே எப்படி இரவில் கதவை திறக்க அனுமதித்து இருப்பார்கள் என்று தோன்றியது.

அதற்குள் அவர்கள் உறவினர்கள் போல சிலர் வந்து உரக்க அழ ஆரம்பித்திருந்தனர். கூடவே அந்த வேலைக்காரப் பெண்ணும் உரக்க அழுது கொண்டிருந்தது. போலிஸ் காரர்கள் அங்கிருந்தவர்களை எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தனர். அதற்குள் அந்த ஐயாவும் இறந்து விட்டார் என்ற செய்தி வந்து அங்கு கூடியிருந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

மகள் பாவம் குடும்பத்தோடு அடுத்த நாள் காலை தான் வந்தாள். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இந்த மாதிரி கொடுமையான முறையில் இறந்தது எங்கள் காலனியையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அத்துடன், துணிச்சலாக யார் இப்படி ஒரு கொலையை செய்திருக்க முடியும் என்று பலவித ஊகங்கள் எங்களிடயே. இரவில் நாய் வேறு அவிழ்த்து விடப்பட்டிருக்குமாம்.

ரொம்ப சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல், அன்று மாலையே டிரைவரும் வீட்டில் பல வருடங்களாகப் பணி புரிந்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். வேறு ஒரு லாக்கருக்கு நகைகளை மாற்ற அந்தம்மா நூறு பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார். கொஞ்ச நாளாகவே வேலைக்காரப் பெண்ணுக்கும் டிரைவருக்கும் காதலாம். அவன் பிளான் படி வெளியாட்களை வைத்து கொலை செய்யாமல் திருடத் தான் திட்டமிட்டார்களாம். ஆனால் இந்த வேலைக்காரப் பெண் இவர்கள் அனுமதி இல்லாமல் கதவைத் திறந்ததை அந்தம்மா கவனித்து ஏன் இப்படி செய்தாய் என்று சந்தேகத்துடன் கேட்டிருக்கிறார்கள். அதனால் வந்த ஆட்கள் இவர்கள் இருவரும் உயிருடன் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று இருவரையும் தாக்கியிருக்கிறார்கள். அதில் அந்தம்மா உடனே இறந்து விட்டார். வீட்டுக்காரரும் இறந்ததாக எண்ணிய அவர்கள் நகைகளையும் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணையும் கட்டிப் போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர். காலை வரை அவருக்கு உயிர் இருந்தது அவர்களின் துரதிர்ஷ்டம்.

அந்தப் பெரியவர் சாகும் முன் மருத்துவமனையில் விமலா விமலா என்று அந்தப் பெண்ணின் பெயரை சொல்லியிருக்கார். அதை வைத்து போலிஸ் மேலும் விசாரணை செய்ததில் உண்மை வெளி வந்திருக்கிறது.

அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவர்களே செலவழித்துத் திருமணம் செய்து வைப்பதாக இருந்ததாம். பேராசை பெருநஷ்டமாகியது அந்தப் பெண்ணுக்கு. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்த ஒரு பெண்மணியை பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் இன்னும் என் மனசில்.

photo credit: http://www.leannegraeff.com/labels/tutorial.html

http://sketchindia.wordpress.com/

http://www.thehindu.com/features/homes-and-gardens/building-walls-around-us/article4657318.ece

Super Ten’s Singapore Sweetheart Sasha

sasha

I have earlier written a post about our Super Ten’s friendship. {https://amas32.wordpress.com/2012/01/21/the-super-ten/} Now our children have grown and three from our group have their daughters married and two their sons. Yesterday early morning the first to get married among our Super Ten’s children delivered a girl baby to the joy of all of us!

Theirs was a love marriage and this baby is the fulfillment of their cherished dream of five years of marital bliss. They got married in Feb of 2009. Being a love marriage they had their fair share of initial disapproval from their families which they overcame through their love and patience! Their life in Singapore is made more beautiful now by the arrival of their little angel Sasha. Sasha means defender of the human race! Such an apt name for a girl in this day and age 🙂

shruthi

A few months ago our friend celebrated her daughter’s bridal shower in Chennai with much happiness. Her daughter’s due date was Nov 15th and so my friend had planned to leave on the 18th of this month. But Sasha had made other plans. My friend’s daughter went into early labour on the 15th morning. My friend could get a seat in the Singapore airlines flight which left Chennai only at 11.30pm on the 15th.

We always considered all our friends children as our own. So we were going through the same pressure and tension that our friend was going through for not being there with her daughter to help her. Initially things were going fine and looked like her daughter will have a normal delivery but suddenly a few complications arose and so the baby was delivered by C section. Sasha was born on the 16th morning at 3.47am under the punarpoosam star even before our friend arrived in Singapore. Both mom and baby are fine.

It was always great great fun to participate in each child’s wedding, this time though we went through the worries of motherhood when a daughter goes through her labour. Whenever a daughter in law or a son in law joins our clan we always scare them by saying you have not one mother in law but ten 🙂 But let me make it clear that in this case our friend alone has become the grandmother and none of the other of Super Ten group! 🙂

The baby looks like a newborn rose flower! We pray and wish Sasha to have a long and healthy life spreading joy to her family and beyond.

சூப்பர் டென்னின் சிங்கை செல்லம் சாஷா :-)

 

sasha

எங்கள் நண்பர் குழாம் பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கேன். அதில் மூன்று தோழிகளின் மகள்களுக்கும் இரண்டு தோழிகளின் மகன்களுக்கும் திருமணம் முடிந்து விட்டது. இன்று விடிகாலையில் வரிசைப்படி முதலில் திருமணம் புரிந்து கொண்ட எங்கள் தோழியின் மகளுக்கு அழகானப் பெண் குழந்தை பிறந்து எங்களை எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள்.

காதல் திருமணத்தின் அன்புப் பரிசு இந்தக் குழந்தை! 2009ஆம் வருடம் பிப்ரவரியில் திருமணம் நடந்தது, காதல் என்றாலே எதிர்ப்பும் சகஜம் தானே? இந்தத் திருமணத்திலும் அதற்குக் குறைவில்லை. ஆனால் அவர்களின் அன்பு வென்றது. இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு சிங்கையில் வாழ்ந்து வந்த அவர்களுக்கு இறைவன் அருளால் குழந்தை வரம் இப்பொழுது கிடைத்துள்ளது.

shruthi

சில மாதங்களுக்கு முன் அவளுக்கு வளைகாப்பு வைபவம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அவளின் due date அடுத்த மாதம் 15 ஆம் தேதி தான். என் தோழி 18ஆம் தேதி இங்கிருந்து கிளம்பி உதவிக்குச் செல்வதாக இருந்தது. அதற்குள் நேற்று காலை என் தோழியின் மகளின் உடல் சுகவீனம் அடைந்து அவளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. என் தோழிக்கு இரவு 11.30 மணி விமானத்தில் தான் இடம் கிடைத்தது.

ஒரொரு தோழியின் பிள்ளைகளும் எங்களுக்கு எங்கள் பிள்ளைகள் போலத்தான். எங்கள் தோழி பட்ட துடிப்பையும் நாங்களும் பட்டோம். நல்லபடியாகப் பிரசவம் ஆகவேண்டுமே என்ற கவலை. இடுப்பு வலி எடுத்து சுகப் பிரசவம் ஆகும் சூழலில் இருந்து சிறிது சிக்கல் ஏற்பட்டு உடனே சிசேரியன் செய்ய வேண்டிய சூழல் வந்தது. ஆனால் நல்லபடியாக அறுவை சிகிச்சை மூலம் 16.10.2௦14 விடிகாலை 3.47 எங்கள் குழுவின் முதல் பேத்தி புனர்பூச நட்சித்தரத்தில் உதித்தாள். தாயும் சேயும் நலம், எங்கள் தோழி குழந்தை பிறந்ததும் தான் சிங்கை சென்றடைந்தாள்.

ஒவ்வொரு தோழியின் பிள்ளைகள் திருமணத்திலும் மகிழ்ச்சியோடு பங்குபெறும் நாங்கள் இம்முறை பிரசவம் ஆகும் வரை சேர்ந்து கவலைப்பட்டு பின் நல்ல செய்தி வந்ததும் மகிழ்ச்சியில் திளைத்தோம். ஒவ்வோர் குழந்தையின் திருமணத்தின் போதும் வரும் மருமகளிடமும் மருமகனிடமும் உனக்கு ஒரு மாமியார் இல்லை, பத்து மாமியார்கள் என்று பயமுறுத்துவோம் ஆனால் பேத்தி பிறந்த எங்கள் தோழி மட்டுமே தற்சமயம் பாட்டி என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙂

குழந்தையின் பெயர் சாஷா 🙂 மனிதகுலத்தைக் காப்பவள் என்று பொருள்! பார்க்க ரோஜா பூப் போல அவ்வளவு அழகாக இருக்கிறாள். சாஷா நோய் நொடியின்றி நூறாண்டு வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம்.

கைலாஷ் சத்யார்த்தி – அமைதிக்கான நோபெல் விருதைப் பெறும் இந்தியர்! 2014

kailash satyarthi

நம்மில் பலருக்கு இவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு கிடைத்த அறிவிப்பு வரும் வரை இவர் யாரென்றே தெரியாது. இவருடன் அமைதிக்கான நோபெல் பரிசை சேர்ந்து பெரும் பாகிஸ்தான் குடிமகள் மலாலாவை தெரிந்த அளவு கூட இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இவர் குழந்தைகள் உரிமைக்காகப் போராடும் ஒரு போராளி. இதுவரை இவரின் Bachpan Bachao Andolan (Save The Child Movement) தொண்டு நிறுவனத்தின் மூலம் 80,000 குழந்தைகளை 144 நாடுகளில் கொத்தடிமையில் இருந்து இவர் காப்பாற்றி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பிறந்தவர் (11.1.1954). பொறியியற் பட்டதாரி. முதுகலை பட்டமும் பெற்றவர். போபாலில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர் 1980 வேலையை விட்டு விட்டு Bonded Labor Liberation Frontன் பொது செயலாளராகப் பணி மேற்கொண்டார். இதே வருடம் தான் தன் தொண்டு நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.

இவருடைய தலைமையில் 1998 Global March Against Child Labour தொடங்கியது. இது குழந்தைகள் உரிமையை காப்பாற்றவும், கல்வியை அவர்களுக்கு அவசியமான ஒன்றாக அனைவருக்கும் உணர்த்தவும் எடுத்துக் கொண்ட முயற்சி. மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள செய்வதை தடை செய்யக் கோரியும் அதற்கான விழிப்புணர்ச்சியும் இதன் மூலம் ஏற்படுத்த மேற்கொள்ளப் பட்டது. சிறு முயற்சியாக ஆரம்பித்த இவ்வியக்கம் பெரும் வெற்றியைக் கண்டது. 15௦ நாடுகளில் இருந்து இதில் மக்கள் பங்கு பெற்று, நடை பயணம் ஐந்து கண்டங்களிலும் நடந்தது. பங்கு பெற்றவர்கள் கடைசியில் ஸ்விட்சர்லேந்த்தில் வந்து சேர்ந்தனர். அங்கு International Labour Organisation (ILO)ல் குழந்தைகளை பண்டமாக வியாபாரம் செய்வதை தடை செய்ய தீர்மானம் இயற்றப் பட்டு கையெழுத்தாகியது. அது மட்டும் அல்லாமல் 14௦ நாடுகள் அந்தத் தீர்மானத்தை தங்கள் நாட்டின் சட்டமாகவும் எடுத்துக் கொண்டனர்.

குழந்தை தொழிலாளர் பங்களிப்பில்லாமல் உருவாக்கப்படும் கார்பெட்டுகளுக்கு Rugmark என்னும் சின்னத்தை (தற்போது Goodweave) தாமாக முன் வந்து அளிக்கும் முறையை உருவாக்கினார். இதனால் வெளிநாட்டில் விற்பனை ஆகும் பொருட்கள் இந்த இலச்சினைப் பார்த்து வாங்குவது பெருகியது. இதனால் வர்த்தகத் துறையில் social responsibilityயும் பெருகியது.

குழந்தை தொழிலாளர்களால் ஏழ்மை, படிப்பறிவின்மை, அதன் விளைவால் சமூகத்தில் பல தீமைகள் உருவாகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.

UNESCO வின் ஒரு முக்கியக் குழுவில் அவர் அங்கத்தினர். கல்வியை அனைவருக்கும் தர வேண்டிய சமத்துவ உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். மேலும் குழந்தைகள் கொடுமைப் படுத்துவதை தடுக்கும் கமிட்டிகளில் அங்கம் வகித்துப் பல நாடுகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளார்.

Millennium Development Goals என்று ஒன்று 2000 வருடம் ஆரம்பிக்கப் பட்டது. அதில் இவர் முக்கிய நிறுவனர். அதன் கொள்கைகள்:

  1. உணவில்லாமல் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பது.
  2. எல்லாருக்கும் தொடக்கப் பள்ளி கல்வி கிடைக்கச் செய்வது.
  3. ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்குவது.
  4. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையைக் குறைப்பது.
  5. தாயின் உடல் நலத்தை மேம்படுத்துவது.
  6. எய்ட்ஸ், மலேரியா மற்றும் இதர நோய்களைக் களைவது.
  7. சுற்று சூழல் பாதுகாப்பு.
  8. உலக நாடுகளின் ஒத்துழைப்போடு இவற்றை செயல்படுத்துவது.

இவரின் முயற்சியால் இவற்றை செயல் படுத்த பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இவர் தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரின் சிறிய அலுவலகத்தில் ஒரு சின்ன நோட்டீஸ் பலகையில் இவர் இதுவரை கொத்தடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பிளாஸ்டிக் நம்பர்களில் ஒளிர்கிறது. இன்றைய தேதியில் 80000.

ஆனாலும் இவருக்கு நோபெல் பரிசு கிடைக்கும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். நமது அரசாங்கம் இவருக்கு ஒரு பத்ம விருது கூட இது வரை வழங்கவில்லை. இவரின் அலுவலகம் தெற்கு தில்லியில் ஒரு புழுதி படிந்த தெருவில் உள்ளது. தொலைபேசி அழைப்புகளை அவரே எடுத்து பதில் சொல்கிறார்.அவருடை ஈமெயில் ஐடியை யார் கேட்டாலும் கொடுக்கிறார். பிள்ளைகளைக் காப்பாற்றுவது தன் கடமை, வாழ்கை எனக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த விருது அவரின் சேவைக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய அங்கீகாரம்.

விபச்சாரத்தில் இருந்து சிறு பெண்களை இவர் காப்பாற்றிய பல பொழுதுகளில் இரும்பு ராடுகளினாலும் கழிகளினாலும் தாக்கப்பட்ட விழுப் புண்கள் இவர் உடல் முழுதும் உள்ளன. நம் நாட்டில் குழந்தைகள் வேலைக்குப் போவது எதனால் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். வயிற்றுக்கு இல்லாத போது பல குழந்தைகள் தாமாகவே பெற்றோர்களுக்கு உதவ பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றன. பின் வேறு வழியில்லாமல் அதுவே தொடர்கிறது.

இன்னொரு வகை உள்ளது, அதில் படித்துக் கொண்டே பெற்றோர்கள் சுமையை குறைக்க பிள்ளைகள் மாலை நேரத்தில் வேலைக்குப் போவது. இந்த வகையை ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். கைலாஷ் இவை அனைத்தையும் உணர்ந்து தகுந்த முறையில் குழந்தைகளுக்கு உதவி செய்கிறார்.  ஏழை எளியவர்களுக்குக் கிடைத்த கொடை திரு கைலாஷ் சத்யார்த்தி. இறைவனும் இயற்கையும் அவரின் தொண்டுக்குத் தொடர்ந்து துணை புரியட்டும். உலகமெங்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வளரட்டும்.

அமைதிக்கான நோபெல் பரிசை மலாலாவுக்கும் இவருக்கும் இணைந்து கொடுக்கப் போகும் அறிவிப்பு வந்தவுடன் இவர் மலாலாவுடன் கை கோர்த்து சேவை செய்ய தன் இணக்கத்தைத் தெரிவித்து உள்ளார்.

Kailash_Satyarthi

 

Reference: இணையத்தில் wiki, அவரின் பேட்டிகள்.