விதியை மதியால் வெல்ல முடியுமா?

 

 

hands

மதி என்ன என்று நம் அனைவருக்கும் தெரியும். மதி என்றால் அறிவு, புத்திசாலித்தனம், சாமர்த்தியம் என்று சூழ்நிலைக்குத் தக்கவாறு சொல்லிக் கொள்ளலாம்.

விதி என்றால் விதிக்கப்பட்டது என்று பொருள். விதிக்கப்பட்டது என்ன என்பது ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின் தான் தெரியும்.  பல சமயங்களில் புரிந்து கொள்ள முடியாத, காரணம் கூற இயலாத சம்பவங்களுக்கும் விதிப்படி நடந்து விட்டது என்றும் கூறுகிறோம்.

நம் எல்லைக்கு அப்பாற்பட்டு, நம் கட்டுப்பாட்டுக்கு மீறி நடப்பவைகளும் விதியில் அடங்கும். உதாரணத்துக்கு இயற்கைச் சீற்றங்களை எடுத்துக் கொள்ளலாம், சுனாமி, பூகம்பம், எரிமலை வெடிப்பது ஆகியவை தானாக ஏற்படுபவை. ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சென்னையில் மழை பெய்யும், கோடையில் வெயில் கொளுத்தும் என்பது நியதி. அவைகளும் ஒரு விதிக்கு உட்பட்டே செயல் பட்டு வருவதால் இது பிரபஞ்சத்தால் உண்டாகும் விதி.

வாழ்க்கையில் நாம் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும் தருணத்தில் இருந்து விதி எனப்படுவது முக்கியத்துவம் பெற துவங்குகிறது. பள்ளிக்குச் செல்லலாமா இல்லை வயிற்று வலி எனப் பொய் சொல்லிவிட்டு வீட்டிலேயே தங்கிடலாமா என்பதில் இருந்து நாம் முடிவெடுக்கும் எந்த நிகழ்வுக்கும் எதிர் வினை உண்டு. இந்த சின்ன முடிவின் வினை எப்படி இருக்கும் என்றால், ஒன்று நாம் அன்று முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடத்தைத் தவற விட்டிருப்போம் அல்லது வயிற்று வலி எனப் பொய் சொன்னதினால் அம்மாவிடம் ரெண்டு அடி வாங்கியிருப்போம். எந்த செயலின் பின் விளைவுக்கும் விதி என்ற பெயர் வந்துவிடுகிறது.

நன்றும் தீதும் பிறர் தர வாரா. எல்லாமே நம் செயல்களின் பலன்கள் தான். இங்கே விதியைப் பற்றி பேசும்போது கர்மாவைப் பற்றியும் சொல்ல வேண்டியுள்ளது. முற் பிறவியில் செய்த நன்றும் தீதும் இப்பிறவியில் நாம் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதனாலேயே பிறக்கும் குழந்தைகளே வெவ்வேறு மாதிரி பிறக்கின்றன, ஒரு குழந்தை ஏழை வீட்டிலும் இன்னொன்று பணக்காரர் வீட்டிலும். ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், ஒரு குழந்தை உடல் ஊனத்துடனும். ஒரு குழந்தை மேதாவியாகவும், ஒரு குழந்தை புத்திக் குறைபாடுடனும்.

இவ்வாறு வேறுபாடுகள் இருந்தும் எல்லா மானிடர்களுக்கும் பொதுவானது என்னவென்றால் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம். நமது வாழ்க்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பின்னால் வரும் நம் வாழ்க்கைப் பாதையை வகுக்கும் விதியாக மாறுகிறது. அதனால் தான் நாம் செய்யும் செயல்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவைதான் பின்னர் விதியாக மாறி, நமக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கப் போகின்றன.

இராமாயணக் கதை உலகறிந்தது. அதில் இராமனுக்கு முடிச்சூட்டல் நாளை காலை என்னும் போது கைகேயின் விண்ணப்பத்தால் காட்சி மாறி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்லவும் பரதன் அயோத்தியை ஆளவும் சூழ்நிலை மாறுகிறது. இராமனை தன் மகனாக பாவித்த கைகேயி எப்படி இப்படி ஒரு கோரிக்கையை தசரதன் முன் வைக்க மனம் வந்தது? அங்கு ஒரு திருப்பம். கூனி என்னும் அவளின் ஊரில் வந்த அவள் தோழி/நலன் விரும்பி அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.

ramasita

இங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது, இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார். தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.

இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தும் இறைவன் இச்சையினாலேயே நடக்கிறது. அவன் அன்றி உலகில் ஓர் அணுவும் அசையாது. “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று இறைவனை நினைக்கக் கூட அவன் மனம் வைக்க வேண்டும் என்றிருக்கும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்துக்கும் அவனே காரணம் என்றும் ஆகிறது. அதெப்படி நன்றும் தீதும் பிறர் தர வாரா, ஆனாலும் எல்லாம் அவன் செயல் என்று முன்னுக்கு முரணாக வருகிறதே என்கிற கேள்வி இங்கே எழும். இரண்டு கால்களையும் தூக்கி நிற்க முயற்சி செய்தால் மனிதன் கீழே விழுந்துவிடுவான் என்று விதிக்கப்பட்டுள்ளது. அதே போல பறவைகள் இறக்கைகளை விரித்துக் கொண்டு பறக்கும் என்பதும் இயற்கையாக விதிக்கப்பட்டுள்ளது. இவ்வியற்கை விதிகளை மாற்ற முடியாது.

ஆனால் இருக்கும் வரைமுறைகளுக்குள் நாம் சிறப்பாக செயலாற்றுவது நம் கையில் உள்ளது. எல்லாம் அவன் செயல், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று வாளாய் இருக்க முடியாது. மனிதன் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆற்றல் வெவ்வேறு. அந்தத் தனிப்பட்ட ஆற்றலைக் கொண்டு நம் இலக்கு என்ன, நாம் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பதே நம் வாழ்வின் பாதையையும், வெற்றியையும் நிர்ணயிக்கிறது.

முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணமே முயற்சி. இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி. அது தான் விதி. பிறக்கும் போதே நமக்குக் கொடுக்காமல் நம்மை தேட வைத்து நமக்கு கிடைக்க வேண்டியதை போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

என்னுடைய கர்மவினை எப்படிப்பட்டதாக இருப்பினும் என்னுடைய சமூக சூழல் எவ்வாறாக இருப்பினும், என்னுடைய பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எனக்கு அது ஒரு பொருட்டில்லை. நான் என் இலக்கை நோக்கிச் செல்கிறேன் என்று உழைப்பவர்கள் விதியை மதியால் வென்றவர்கள் என்று கூற மாட்டேன் விதியை மதியாதவர்கள் என்றே சொல்லுவேன். இவர்களே வாழ்க்கையில் உண்மையில் வெற்றிப் பெற்றவர்கள்.

learntosurf

நம் வாழ்வின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது தான். அப்படி இருப்பதற்கு ஒரே வழி வாழ்க்கை முறை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் எண்ணங்களை செலுத்துவதே.

செயலாக மாறாத எந்தவொரு எண்ணமும் நம்மை ஆனந்தத்திலிருந்து வெளிநடத்திச் சென்று விடுகிறது. எனவே ஞானம் (அ) அறிவு, செயல், சிந்தனை – இவை மூன்றுமடக்கிய எண்ண முறையானது அவசியம்.

உதாரணத்துக்கு வேலை வாய்ப்புத் தேடி அலைகிறோம், நம் இலக்கு வெளிநாட்டில் வேலை செய்வது. அந்த வாய்ப்பைத் தரும் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து நன்றாக உழைக்கிறோம். ஆனால் சில ஆண்டுகள் காத்திருப்பின் பின்னும் அந்தக் கம்பெனி வெளிநாடு செல்லும் வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை. அந்நிலையில் கம்பெனியை விட்டு விலகி வேறு கம்பெனியில் வேலை தேடலாம். அந்தப் புது கம்பெனியிலும் வெளிநாடு அனுப்புவார்களா என்று தெரியாது. அல்லது அதே கம்பெனியில் தொடர்ந்து இருந்து வெளிநாடு செல்லாவிட்டாலும் பதவி உயர்வை பெற்று வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

rethink

இங்கே விதி என்பது என்ன? நாம் ஓர் இலக்கு வைத்து உழைக்கிறோம், அறிவுடன் செயல்படுகிறோம். ஆயினும் நம்மால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை. வேறு எதோ தான் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இந்நிலையில் தோல்வியை எண்ணிக் கலங்கி நிற்பதா? வேறு தவறான பாதையில் இலக்கை அடைய நினைப்பதா? அல்லது இருக்கும் வாய்புகளை வைத்து தீவிரமாக முன்னேறி உழைப்பதா? இந்த முடிவை எடுக்கும் சுதந்திரம் தான் நம் கையில் உள்ளது.

நாம் நம்முடைய  எண்ணங்களை மாற்றியமைப்பதன் மூலம் நமக்கு விதிக்கப்பட்டதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்ள முடியும். பாதையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். எனவே, வாழ்க்கை என்பது வெறும் திட்டமிடா ரசாயன மாற்றங்களால் ஆனதல்ல. நமக்குப் பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பப் பழகினால் விதியை மதியால் வென்றுவிட்டோம் என்று கொள்ளலாம்.

முற்பிறவி வாசனைகள் என்னும் நதி மனிதனை நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ இழுத்துச் செல்கிறது. ஆனால் முயற்சியால் கெட்ட வழியில் இருந்து நல்ல வழிக்குத் திரும்பலாம், அதே மாதிரி நல்ல வழியிலிருந்து கெட்ட வழிக்கும் எளிதாக திசை மாறலாம். அதனால் மனிதனுக்கு முயற்சி மிக அவசியம். ஆற்றில் அடித்துச் செல்லப்படும் இலையைப் போல் இல்லாமல் ஓர் இலக்கை நோக்கி துடுப்பைப் போட்டு ஓடும் ஓடமாக நாம் இருக்க வேண்டும்.

Serenity prayer என்று மிகவும் பிரபலமான ஒரு பிரார்த்தனை ஒன்றுண்டு.

Serenity Prayer

{Reinhold Niebuhr (1892-1971)}

God grant me the serenity

to accept the things I cannot change; 

courage to change the things I can;

and wisdom to know the difference.

இதுவே விதியைப் பற்றி அழகாகச் சொல்கிறது. “எதை மாற்ற முடியாதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும், மாற்றக் கூடியதை மாற்றியமைக்க துணிச்சலும், மாற்ற முடியாதவை, மாற்ற முடிந்தவை – இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் எனக்குத் தாருங்கள் இறைவா!”

இதை நாம் கடைபிடித்தால் விதி, மதி இரண்டையும் நம் வசப்படுத்தியவர்கள் ஆகிறோம்!

accept

 

தோழா – திரை விமர்சனம்

thozha

“The Intouchables” என்ற பிரெஞ்ச் படத்தின் தழுவலே தமிழில் தோழா என்றும் தெலுங்கில் ஊபிரி என்றும் வெளிவந்துள்ளது. நாகார்ஜுனாவும் கார்த்தியும் சரியான பாத்திரத் தேர்வு.  அவர்கள் நடிக்க நல்ல தீனி போடும் பாத்திரப் படைப்பு! இருவரும் நடிப்பதே தெரியாமல் இயல்பாக செய்து மனத்தில் நிற்கிறார்கள். வம்சியின் திரைக்கதை, இயக்கம் பாராட்டுக்குரியது. நடிகர்களை சரியாக வேலை வாங்கியிருக்கிறார்.

கார்த்திக்கு இந்தப் படம் கிடைத்தது ஒரு நல்ல அதிர்ஷ்டமே. சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் எதுவுமே பேர் சொல்லும்படி இல்லை. இந்தப் படத்தில் இவர் பாத்திரத்தில் முதலில் ராமா ராவ் ஜூனியர் நடிப்பதாக இருந்து, அவர் வெளியேறியதால் கார்த்திக்கு அடித்திருக்கிறது ஜேக்பாட். கேர்ப்ரீயாக, கொஞ்சம் ரவுடி/நிறைய நல்லவன், அன்பும் பாசமும் நிறைந்த துடிப்பான ஏழை இளைஞன் வகை குணச்சித்திரம் கார்த்திக்கே வெச்சுத் தெச்சது போல பொருந்துகிறது. மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.

நாகார்ஜுனாவின் பாத்திரம் பார்க்க இலகுவாகத் தெரிந்தாலும் மிகவும் கடினமான உழைப்பை வாங்கக் கூடிய ரோல். அவர் ஒரு quadriplegic patient. அதாவது கழுத்துக்குக் கீழே எந்த அசைவும் உணர்ச்சியும் கிடையாது. அதனால் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தோ, படுக்கையில் படுத்தபடியோ மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம். அவர் நடிப்பை முகத்தில் மட்டுமே காட்டவேண்டும் என்கிற நிலையிலும்  மிகவும் அற்புதமாக செய்திருக்கிறார். அவர் உடல் மொழி எப்படிப்பட்ட தேர்ந்த நடிகர் அவர் என்பதைக் காட்டுகிறது.

ஒரு quadriplegicகிற்கு ஏற்படும் சங்கடங்கள், மன அழுத்தம் முதலியவை சரியாக திரைக்கதையில் காண்பிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனாவுக்கும் அவரின் caretaker அதாவது அந்தரங்க உதவியாளர் கார்த்திக்கும் இடையே ஏற்படும் உறவும் அதன் மூலம் இருவரும் அடையும் இலாபங்களுமே தான் கதை. நாகார்ஜுனா கார்த்திக்குச் செய்யும் உதவியும் கார்த்தி அவருக்குச் செய்யும் உதவியும் அவர்கள் இருவரின் வாழ்வையும் மேம்படுத்துக்கிறது. அந்த விதத்தில் இது ஒரு feel good movie.

கதையில் உறவுகளின் உணர்சிகளுக்கு முதலிடம் கொடுப்பதே பல இடங்களில் நம்மை நெகிழ வைக்கிறது. எந்த சம்பவமும் செயற்கையாக இல்லாமல் நம்பும்படி கதையோட்டத்துடன் அமைந்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாகிறது. நாகார்ஜுனா பெரும் பணக்காரராக இருப்பதால் கண்ணைக் கவரும் அழகிய மாளிகை, பிரமாதமான கார்கள், பாரிஸ் நகர் வலம் ஆகியவை நமக்கும் பார்க்கக் கொடுத்து வைக்கிறது. ஒளிப்பதிவாளர் P.S.வினோத், வம்சியின் கதை திரைக்கதைக்குப் பிறகு அதிக மதிப்பெண் பெறுகிறார்.

தமன்னா அழகு! கார்த்தி தமன்னா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லத் தேவையில்லை :-} நாகார்ஜுனாவின் காரியதரிசியாக பொம்மை போல வந்து போகிறார். ஆனாலும் அதுவும் அவருக்குப் பொருந்துகிறது. பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, விவேக் இவர்களைத் தவிர ஸ்ரேயாவும் அனுஷ்காவும் விருந்தினர் வருகை. நடிகை கல்பனாவுக்கு இது தான் கடைசிப் படம் 😦 டப்பிங் கூட வேறொருவர் தான் கொடுத்துள்ளார்.

வசனங்கள் ராஜூ முருகனும், முருகேஷ் பாபுவும் கச்சித்தமாக எழுதியுள்ளார்கள். வசனங்களிலேயே நகைச்சுவை இழையோடுகிறது. உடைகள் நிர்வாகம் நன்றாக செயல்பட்டிருக்கு. தமன்னா உடைகளும் நாகார்ஜுனாவினுடையுதும் தூள்!

பாடல்கள் சொதப்பல். பெரிய மைனஸ் படத்தின் நீளம். இப்பொழுதெல்லாம் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பொறுமை போய்விடுகிறது. இந்தப் படம் இரண்டேமுக்கால் மணி நேரம்! ட்விட்டரில் சுருங்கச் சொல்லி பழகிவிட்டது போல கதையையும் சொல்ல வந்த கருத்தையும் நறுக்கென்று சொன்னால் தான் இன்றைய காலக் கட்டத்தில் பிடிக்கிறது. இப்படத்தில் எளிதாக இருபது நிமிடங்கள் எடிட் பண்ணிவிடலாம். அதையும் செய்து விட்டால் படம் ஹிட் தான். வாழ்க்கையை பாசிடிவாகப் பார்க்க சொல்லும் படம் பாராட்டப் பட வேண்டியதுதானே :-}

Tamanna, Karthi in Thozha Movie Audio Release Posters

Tamanna, Karthi in Thozha Movie Audio Release Posters

திருவடி சேவை – பகுதி – 3

திருவடி சேவை பகுதி 1 இங்கே.

திருவடி சேவை பகுதி 2 இங்கே

வைணவ சமயத்தில்….

1.வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம் திருமாலின் பாதம் என்பர்.

2.ஆண்டவன் திருவடியினையே குருவின் திருவடியாகப் போற்றுவது வைணவ மரபில் உள்ள சிறப்பு அம்சம்!

3.திருமாலின் அழகிலும் குணத்திலும் ஆழ்ந்து நெஞ்சுருக ஆழ்வார்கள் பாடிய 4000 பாடல்களையும் (பாசுரங்கள்) நாலாயிர திவ்யபிரபந்தம்/ஆழ்வார் அருளிச் செயல்கள் என்று போற்றப் படுகிறது. ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்கள். அவர்களின் நூல்களே வைணவப் பக்தி இலக்கியங்களாகும்.

nammazhvar

இதில் நம்மாழ்வார் நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்றே புகழ்ப்படுகிறார். கம்பர் இயற்றிய “சடகோபர் அந்தாதி” எனும் நூலின் தலைவனும் இச்சடகோபனே ஆவார். இவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருகுருகூரில் அவதரித்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன். பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது அழும், காரணம் என்னவென்றால் பூர்வ ஜென்ம கர்மத்தின் வினை, சடம் என்னும் வாயுவாய் சூழ்ந்துக்கொள்ளும். ஆனால் நம்மாழ்வார் சடம் என்ற வாயுவை தன்னை சூழ்ந்து கொள்ள விடாமல் கோபித்துக் கொண்டபடியால் ‘சடகோபன்’ என்று கொண்டாப்படுகிறார்.

Paduka_1

வைணவ கோயில்களில் சேவிக்க வருபவர்களுக்கு தீர்த்ததுடன் சடாரி சாதிப்பது வழக்கம். அவ்வாறு சாதிப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. ஸ்ரீசடாரி என்பது ஒரு உயர்ந்த பீடத்தின் மேல் திருமாலின் திருவடிகள் பொறிக்கப்பட்டிருக்கும். நம்மாழ்வார் திருமாலின் திருவடியாகக் கருதப்படுகிறார். நம்மாழ்வார் பெருமாள் திருவடிகளை அடைந்தவர். அவரே குருவாக இறைவனின் பாதத்தை நம்மிடம் சேர்பித்து நம்மை உய்விக்கிறார். ஸ்ரீசடாரிக்கு மற்றொரு பெயர் ‘ஸ்ரீசடகோபம்’. வரிசை வரிசையாக மலர்கள் மேல் உயரமாக அடுக்கி வைத்தது போன்று தோன்றும். கடைசியாக 12 இதழ்க் கமல அடுக்கு! இது துவாத சாந்தத் தலத்தைக் குறிப்பது. இதன்மேல் சிறிய திருவடி இரண்டு காட்சி தரும். இத் திருவடிகளே ஆசாரியன் திருவடி!

பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி தொடர்பு நமக்கு ஏற்பட்டு விடுகிறது. சுவாமி வேதாந்த தேசிகன் அருளிய பாதுகா சகஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் ஆழ்வாரும், பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது.

 ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர பெருமாள் பாடிய பாசுரம் மிகவும் உயர்வானது. இவர் தன் திருவடி சேவையே இறைவனின் கோவிலில் படியாய் கிடந்து அவனை அனுதினமும் பார்த்துக் கொண்டு இருப்பது தான் என்கிறார். பக்தர்களின் திருவடி அவர்மேல் படுவதே அவரின் பெரும் பேறாகக் கருதுகிறார். என்னே அவர் பக்தி!

Kulasekara-alwar

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே

திருமாலின் திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும். எனவே இத்திருவடியை எப்படி அடையலாம் என்பதை பொய்கையாழ்வாரின் இந்தப் பாசுரம் சொல்கிறது.

Poigai_Alvar_Tamil_Poet

வாரி சுருக்கி மதக்களி றைந்தினையும்
சேரி திரியாமல் செந்நிறீஇ – கூரிய
மெய்ஞ்ஞானத் தால்உணர்வார் காண்பரே மேலொருநாள்
 
கைந்நாகம் காத்தான் கழல்
(3230)

(மதக்களிறு ஐந்து = ஐம்புலன், நிறீஇ = நிறுத்தி, கைந்நாகம் = யானை)

மேலும் கன்மம், மாயை ஆகிய மலங்களை நீக்கி, ஐம்புலன்களையும் மனம்போன போக்கில் திரியவிடாமல் நிறுத்தி ஞானத்தினால் உணரலாம் என்று வழியைக் காட்டுகின்றார் ஆழ்வார்.

அரிய புலன்களை அடக்கி, தொழுது மலர்கொண்டு தூபம் கையில் ஏந்தி வழிபடுவதற்கு எழுவாய் நெஞ்சே (3241) என நெஞ்சினைஅழைக்கின்றார்.

விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் மதுரை சென்று பாண்டியன் அரசவையில் வேதங்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனே பரன் (முதல்வன்) என்று நிலை நாட்டினார். போட்டியின் விதிப்படி பொற்கிழி தோரணம் தாழ அதனை எடுத்துக்கொண்டார். எல்லோரும் பாராட்டி, பாண்டிய மன்னன் மனம் மகிழ்ந்து ஆழ்வாரை யானை மீது ஏற்றி வீதி வலம் வந்த போது இவ்வழகிய கோலத்தை ரசிக்க பெருமாள், பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து ஆகாயத்தில் தோன்றி ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.

periyazhvar
ஆழ்வார் பயந்தார். இப்படி காட்சி தருகிறாரே, கண்திருஷ்டி பட்டு விடுமோ என்று பொங்கும் பரிவால் யானை மீதுள்ள மணிகளை ஒலித்து கொண்டு பல்லாண்டு பல்லாண்டு என்று மங்களாசாசனம் செய்தார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்
சேவடி செவ்வி திருக் காப்பு .
(திருப்பல்லாண்டு – 1)

என்று பாடினார். மதுராவில், கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணுரன் முதலிய மல்லர்களை அடக்கி ஆண்ட திண்மையான தோள்களை உடைய கிருஷ்ணா! உனது சிவந்த பாதங்களின் அழகுக்கு கால தத்துவம் உள்ள வரையில் ஒரு குறைவும் வராதிருக்க வேண்டும் என்று திருவடிகளுக்கு திருஷ்டி கழிக்கிறார். இங்கே பெரியாழ்வார் பெருமாளுக்கே ஒரு தந்தையாக வாத்சல்யத்துடன் கவலைப்படுகிறார். திருவடி போற்றுதலில் இது இன்னும் பெரிய அங்கம். வையத்தை வாழ்விக்கும் வைகுந்தவாசனாகிய திருமால் தமக்குக் காட்சியளிக்கும்போது அவரிடம் தமக்கு வரம் கேட்காமல், அவரைப் பல்லாண்டு பாடி வாழ்த்துகிறார் பெரியாழ்வார்.

varaha

வராக அவதாரத்தில் முதலில் ஒரு கட்டை விரல் அளவே பிரம்மாவின் மூக்கில் இருந்து வெளிப்பட்ட சிறிய வெள்ளை பன்றி உருவிலான திருமால்,  பிரம்மாண்ட வடிவெடுத்து ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரனால் பதுக்கி வைக்கப்பட்ட பூமா தேவியை பூப்போல மீட்டு எடுக்கிறார். ஹிரண்யாக்ஷனை அட்டகாசமாகப் போரிட்டு வதம் செய்த பரமனது பரந்த ஒரு திருவடியின் உட்பாதத்தில் சூரியசந்திரர்களும், வானவர்களும்,  ஏழு தேவ லோகங்களும், ஏழு கடல்களும், ஏழு மலைகளும் அடங்கி ஒடுங்கின! விஷ்ணு புராணத்தில் வராக அவதாரம் யஜ்யத்துக்கு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவரின் பிரம்மாண்ட திருவுருவமே யாக சாலையாக, உலகத்தைக் காத்து ரட்சிக்கும் தெய்வமாக, கலகத்தின் நடுவில் காக்கும் தெய்வமாகக் கருதப் படுகிறது. இவ்வதாரத்தில் நான்கு வேதங்களுமே அவரின் திருவடிகள் ஆகின்றன. உலகத்தில் அறம் ஒழுங்காக இயங்க வேதங்களின் துணை அவசியம். அவர் திருவடியே அதற்கு துணை நிற்கின்றது.

திருவடி பெருமையை கிருஷ்ணாவதாரத்தில் வேறு வகையில் காணலாம். கண்ணன் பக்தர்களின் திருவடி துளியை எப்படி பெருமையாக தரிக்கிறார் என்பதற்கு ஒரு கதை உள்ளது. இறைவன் திருவடிகளை மனத்தில் தாங்கியவர் திருவடியே இத்தனை பெருமைக்குள்ளாகும் என்பதை தன் விளையாட்டுப் போக்கில் கண்ணன் நமக்கு உணர்த்துகிறார்.

அன்று வைகுண்ட ஏகாதசி.  கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்தர்களும் துவாரகை வந்திருந்தார்கள். அப்பொழுது அவர் ஒரு சின்ன நாடகத்தை அரங்கேற்றினார். தலைவலியால் அவதிப்பட்டார். மருத்துவர்கள் வரிசையாக வந்து மருந்துகள் கொடுத்தாலும் அவர்  தலைவலி போகவில்லை.

நாரதர் (சிலர் உத்தவர் என்றும் சொல்லுவர்) தலைமையில் ருக்மணி, பாமா சென்று இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று சொல்லுங்கள்,  கொண்டுவந்து தருகிறோம் என்று கேட்டனர். என் மீது உண்மையான பக்தியுள்ள  பக்தனின் பாதத்துளிதான் மருந்து.  அந்தப் பாதத் தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும் என்கிறார் கண்ணன். இதைக்கேட்ட அவர்கள் திகைத்தனர். அவர்களின் பாதத்துளியை பகவான்  மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க அவர்கள் தயாராக இல்லை.

கிருஷ்ணன் உடனே பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேள் என்றார். நாரதர் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார். உடனே அவர்கள் எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்து எல்லாப் பெண்களின் பாதத்தின் துளி அந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து சென்றார்கள்.

gopikas

மேலும் கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார். நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.

கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது. இரண்டு விஷயங்கள் முக்கியமாக இதிலிருந்து தெரிகிறது. ஒன்று, பகவான் பக்தர்களை எந்த அளவு நேசிக்கிறான் என்பது, இன்னொன்று அவன் திருவடிகளைத் தாங்கிய பக்தனின் திருவடியின் மகிமை எந்தளவு உயர்ந்தது என்று!

sri-andal-1

ஆண்டாள் திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி’ பாசுரத்தில் ஏழுலகத்தை தன் பொற்பாதங்களால் அளந்த உத்தமனின் புகழை பாடும்போது, மாதத்திற்கு மூன்று முறை மழை தப்பாமல் பெய்து அமோக நெற்விளைச்சலை தரும்; நெற்பயிர்களின் நடுவே தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும்; குவளை மலர்களின் மேலே உண்ட மயக்கத்தில் பொறிவண்டுகள் கண்ணுறங்கும்; மடியை தொட்ட உடனே பசுக்கள் குடம் நிறைய பால் சுரக்கும். இந்த உலகமே சீரும் செழிப்புமாக உய்யும் என்கிறாள்.

பலி மன்னருக்கு ஏற்பட்ட தன் முனைப்பை அழித்திட நினைத்த விஷ்ணு வாமன (குள்ள) வடிவம் எடுத்தார். வேள்வியில் ஈடுபட்டிருந்த பலி மன்னரிடம் மூன்றடி நிலம் கேட்டார். குறுவடிவிலான வாமனனின் விருப்பத்தை ஏற்று அவரின் கால் அடியிலாகவே எடுத்துக் கொள்ளப்பணித்தார். இந்நிலையில் வாமனன் திருவிக்கிரமன் என்ற பெயருடைய நெடியோனாகத் தோன்றி தமது முதலடியால் மண்ணுலகையும், இரண்டாவது அடியால் விண்ணுலகையும் அளந்து மூன்றாவது அடியைப் பலி எனப்படும் மாபலி மன்னரின் தலையின் மீது வைத்து மன்னரின் தன்முனைப்பை  அழித்தார்.

thiruvikiraman

நாராயணன் விண்ணுலகை அளக்கும்போது பிரம்மா அவரின் திருவடிகளை நீரை கொண்டு அலம்பினார். அதுவே கங்கையாக மண்ணுலகத்தில் பிரவாகம் எடுத்தது. நாரணனின் திருவடி தீர்த்தம் மானிடர்களின் பாவங்களை தீர்க்கும் கங்கையாகியது. திருவிக்கிரம் ஆவதாரத்தின் மூலம் எம்பெருமானின் திருவடி பெருமையை அறிகிறோம்.

தொடரும் …

கபூர் & சன்ஸ் – இந்தி திரைப்பட விமர்சனம்

kapoor-n-sons

குடும்பக் கதை. ரிஷி கபூர் தாத்தாவாக பிரமாதமாக நடித்துள்ளார். என்ன, கொஞ்சம் முதலில் அவர் முகத்தை தடிமனான மேக் அப்பின் கீழே தேட வேண்டியிருக்கு. பிறகு பழகிப் போய் விடுகிறது. ஒரு குடும்ப க்ரூப் போட்டோ எடுக்கவேண்டும் என்ற ஓர் ஆசையுடன் இருக்கும் ஒரு தொண்ணூறு வயது கிழமாக, வயதை மறந்து நடிகை மந்தாகினியின் மேல் ஜொள்ளு விடும் ஆணாக, வாழ்வின் அந்திம நாட்களில் இருந்தாலும்  உற்சாகமாக வளைய வரும் ஒரு  நல்ல கதாபாத்திரமாக அவரை அமைத்திருக்கிறார் இயக்குநர்/கதாசிரியர் சகுன் பாத்ரா.

அடுத்து ஆலியா பட், ஒரு பப்ளி கேரக்டர்! அவருக்கு இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் ஈசி தூசி. ஒரு சீனில் அவர் பெற்றோரின் மறைவை பற்றி நாயகனிடம் சொல்லும் போது அவர் தொண்டைக் குழி கூட நடிக்கிறது. நேர்த்தியான செயல்பாடு. ஹைவே படத்தில் இருந்தே அவரின் பெரிய விசிறி நான் 😀 அதன் விமர்சனம் இங்கே

இரு சகோதரர்களாக சித்தார்த் மல்ஹோத்ரா, ஃபவத் கான், ரிஷி கபூரின் மகன் மருமகளாக ரஜத் கபூர், ரத்னா பாதக் அனைவருமே நன்றாக நடித்துள்ளனர். வெளி நாட்டில் வாழும் சகோதரர்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக் என செய்தி கேட்டு சொந்த ஊரான குன்னூருக்கு வருகிறார்கள். அப்பொழுது சகோதரர்களுக்கு இடையே ஆன பழைய மனஸ்தாபம், அதனால் ஏற்பட்ட பொறாமை, பெற்றோர்களின் மண வாழ்வில் விரிசல், அதனால் ஏற்படும் மன வருத்தங்கள், இவைகளால் ஏற்படும் குழப்பங்கள் அரங்கேறுகின்றன.

இவ்வுலகில் யாரும் உத்தமர்களோ, குறையில்லாதவர்களோ கிடையாது. அந்த குறைபாடுகளின் பின்னணியில் எல்லாரையும் அவர்களாகவே நாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டு, எப்படி நாம் உறவுகளை அரவணைத்து வாழவேண்டும் என்பதே படம் சொல்லும் கருத்து.

இதே படம் தமிழில் எடுக்கப்பட்டால் இந்த அளவு எனக்குப் பிடித்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தேன். சில கதைகள் அந்தந்த மொழிக்கே பொருத்தமானவை. தமிழில் இதை மாற்றி எடுக்கும் போது அதிக மெலோடிராமா சேர்த்து விடுவார்கள்.

இந்தப் படம் முழுக்க குன்னூரில் எடுக்கப் பட்டுள்ளது. அது ஏன் என்று புரியவில்லை. இந்தக் கதை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம், நைனிடால் அல்லது லோனவாலாவிலும் எடுக்கப் பட்டிருக்கலாம். எதற்கு ஒரு இந்திப் படம், எல்லா பாத்திரங்களும் இந்தியிலேயே பேசுகின்றன ஆனால் தமிழ் நாட்டில் நடப்பதாகக் காட்டவேண்டும்?

இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப புதிய குடும்ப உறவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்படத்தில் பார்க்கலாம்.  மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசிக்க முடியும். சத்தியம் திரை அரங்கில் சப் டைட்டில் உள்ளது.

kapoorandsons

காதலும் கடந்து போகும் – திரை விமர்சனம்

kkp

My Dear Desperado என்ற கொரியன் படத்தின் தழுவல் தான் க க போ! நலன் குமாரசாமியும் விஜய் சேதுபதியும் மறுபடியும் இணைந்து கொடுக்கும் படம் இது. சூது கவ்வும் படத்தின் தரத்தை எதிர்ப்பார்த்துப் போனால் ஏமாற்றமே. சூது கவ்வும் ஒரு மாறுபட்ட கதையாலும், கதை சொல்லும் விதத்தாலும் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.

ரவுடிகளின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் அடியாட்கள் பாதிக்கப் படும் பக்கத்தைக் காட்டுவதில் இந்தப் படமும் ஒரு புதுக் கதையை சொல்கிறது என்றாலும் திரைக் கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பது படத்தின் தொய்வுக்குக் காரணமாகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவு {தினேஷ் கிருஷ்ணன்} என்னை மிகவும் கவர்ந்தது. நிறைய மழை வரும் சீன்கள் உள்ளன, படம் முடியும்போதும் மழை தான். அரங்கத்தை விட்டு வெளியே வரும்போது என்ன வெளியே மழை இல்லையே என்று ஒரு நொடி தோன்றுகிறது. அந்த அளவு அருமையான ஒளிப்பதிவு! பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிகவும் அழகாகப் பொருந்துகிறது. சந்தோஷ் நாராயணனுக்கு இந்தப் படமும் ஒரு ஹிட் தான்.

ப்ரேமம் படத்தில் செலினாக நடித்த மடோன்னா செபாஸ்டியன் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். நல்ல அழகு, தெளிந்த நடிப்பு. சரியான பொருத்தம் பாத்திரத்துக்கு. அவருக்கு உடைகளை தேர்ந்தெடுத்தவர் அற்புதமாக தேர்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு சீனிலும் அவரே ஸ்கோர் செய்கிறார். கதாநாயகி யாழினியைச் சுற்றி கதை அமைந்திருப்பதும் இப்டத்தில் பாராட்டக் கூடிய ஓர் அம்சம்.

விஜய் சேதுபதிக்கும் பொருத்தமான ஒரு பாத்திரமே. பெற்றோர் இல்லாத, வழிகாட்டுதல் இல்லாத ஒரு அடி வாங்கும் அடியாள் பாத்திரம் சேதுபதிக்கு. ஏமாற்றப் படுகிறோம் என்று தெரிந்தும் எதுவும் செய்ய வலுவில்லாத ஒரு நல்ல ரவுடி கதாப் பாத்திரம் அவருடையது. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு வெகு இயல்பாக செய்திருக்கிறார்.

நாயகன் நாயகி இருவரின் பாத்திரமும் நன்றாக செதுக்கப் பட்டுள்ளது. முதலில் இருந்து கடைசி வரை அவர்கள் பாத்திரத் தன்மையில் பிறழ்ச்சி இல்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பும் ஒரு கவிதை போல் உள்ளது.

பிரச்சினை கதையில் தான் வருகிறது. எந்த குறிக்கோளுக்காக யாழினி சென்னையில் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை. விழுப்புரத்தில் இருந்தும் கூட அவர் மறுபடியும் வேலை தேடிக் கொண்டிருக்கலாம். அதே மாதிரி கடைசியில் காவல் நிலையத்தில் நடந்தது என்ன என்று புரியவில்லை. சமுத்திரக் கனியை கொல்ல முடிவெடுத்ததும் ஏனென்று தெரியவில்லை. அதையும் தவிர அவ்வளவு கெட்டவனான சமுத்திரக்கனி வேலையை முழுதும் முடிக்காமல் போவதும் ஏனோ?

க்ளைமேக்சில் நடக்கும் சம்பவங்களில் நம்பகத் தன்மை இல்லாததால் எரிச்சல் ஏற்படுகிறது. ஆனாலும் விஜய் சேதுபதி, மடோன்னா செபாஸ்டியன் பங்களிப்பால், ஒரு பீல் குட் மூவியை பார்த்த எண்ணம் அரங்கை விட்டு வெளியே வரும்போது வருகிறது.

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills

Vijay Sethupathi, Madonna Sebastian in Kadhalum Kadanthu Pogum Movie Stills