
படத்தைப் பார்த்த பிறகு இதைப் பற்றி எழுத எப்படி எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. விமர்சனம் எழுதவும் எனக்குத் தகுதி இருக்கா என்ற எண்ணவைக்கும் ஒரு படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜின் முதல் படம். முத்திரை படம். தன் பணத்தைப் போட்டு இப்படத்தைத் தயாரித்து தான் பேசி வரும் சித்தாந்தம் வெறும் பேச்சளவில் இல்லை செயலிலும் உண்டு எனக் காட்டி தன்னை நிரூபித்து உள்ளார் தயாரிப்பாளர் பா.ரஞ்சித். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் பெரிய வகையில் பாராட்டுகள் உரித்தாகுக.
நம் நாட்டில் ஜாதி வெறி இரத்தத்தோடு ஊறி விடுகிறது. அதற்குத் தீனி போட்டு வளர்ப்பது நான் உயர்ந்தவன் என்கிற அதிகார பலமும், பண பலமும், சுற்றி நிற்கும் வலுவான இனத்தாரின் ஆதரவுமே. கீழ் ஜாதியினர் மேலெழும்ப முடியாமல் இன்னமும் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணம் அவர்கள் அந்த ஆதிக்க வர்க்கத்துக்கே ஊழியம் செய்து பிழைப்பதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பின்மையாலும், மிக முக்கியமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னேற முடியாமல் வரும் மேம்பாட்டுக் குறைவினாலுமே ஆகும். இவை அனைத்தையும் பிசிறில்லாமல் கதையமைத்துக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். பல உண்மை சம்பவங்களின் கோர்வை தான் என்றாலும் இது ஆவணப் படம் போல இல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருப்பது தனிச் சிறப்பு.
ஆதிக்க வர்க்கம் நிறைந்த ஒரு பகுதியில் திருநெல்வேலி பக்கம் ஒரு கீழ் சாதிப் பையன் முதல் தலைமுறையாக சட்டம் படிக்க கல்லூரி சேர்கிறான். அவன் சேருவதற்கு முன்பே அவன் நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும்போது நடக்கும் சம்பவம் படத்தின் ஒன் லைனாக பார்ப்பவர்களை பொளேர் என்று முகத்தில் அறைகிறது. இது தான் நான் காட்டப் போகும் படத்தின் கரு என்று சொல்லி விடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நகரத்தில் வாழ்பவர்களுக்கும், மேல் ஜாதியாக இருந்தாலும் சாதி வித்தியாசம் பார்க்காதவர்களுக்கும், தங்களை பாதிக்காத வரை அதைப் பற்றி சிந்திக்காதவர்களுக்கும், இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கறாங்க என்று கேட்கும் அறிவீலிகளுக்கும் இப்படம் சமுதாயத்தின் அழகான மேல் தோலை உரித்து உள்ளே இருக்கும் அசிங்கமான இரத்தத்தையும், சதையையும், பிண்டத்தையும் காட்டுகிறது. கருப்பி என்னும் நாயோடு இருக்கும் உறவும் பந்தமும் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பைக் காட்டுகிறது. அதை கொடூரமான முறையில் ஆதிக்க வர்க்கம் கொல்வது எப்படி அவர்களின் நம்பிக்கையை தகர்க்க அவர்கள் கையாளும் முறை என்பதையும் காட்டுகிறது.
கதிர் பரியேறும் பெருமாள். இன்னொருவரால் இந்தப் பாத்திரத்தை இவ்வளவு செம்மையாக செய்திருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் உயிர் கொடுத்தப் பாத்திரம் எனினும் அதை நகமும் சதையுமாக திரையில் நடமாட வைத்து நம்மை அப்பாத்திரத்தின் அத்தனை வலியையும் உணர வைக்கிறது கதிர் தான். இந்த மாதிரி பாத்திரம் கிடைக்க ஒரு நடிகர் பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிலருக்குக் கிடைக்காமலும் போகும். இவருக்குக் கிடைத்து அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன் படுத்தியுள்ளார், வெகுளிப் பையனாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது உள்ள அவர் இயல்பு, பின் படிப்படியாக நிறைய ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளால் வித்தியாசங்களை அனுபவிக்கும் போது உண்டாகும் குழப்பங்கள், பின் படிப்பினைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவரின் பக்குவம், அடுத்து அவர் அடித்துத் துவைக்கப்பட்டு இதுதாண்டா சமூகத்தில் உன் நிலை என்று சுட்டிக் கட்டப்பட்ட பின் அவரின் விவேகமான பார்வை, இயலாமையை இயலாமையாக எடுத்துக் கொள்ளலாமல் அதனை எதிர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளில் தெறிக்கும் கோபம், கள்ளம் கபடமில்லாமல் ஜோதியுடன் பழகும் பாசம், அனைத்தையும் அவர் முகமும் உடல் மொழியும் காட்டுகிறது. முக்கியமாக ஜோதியுடன் பழகுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும். கோட்டின் இந்தப் பக்கம் இருந்தால் நான் நல்லவன் அந்தப் பக்கம் போயிட்டா நான் ரொம்ப கேட்டவன் வசனம் மாதிரி மெல்லிய கோட்டு வித்தியாசத்தில் காட்டும் முகபாவங்கள் அந்த உணர்வுகளை காதலாக மாற்றி அவர் பத்திரத்தையே கொச்சைப் படுத்திவிடும். அவ்வாறு ஆகாமல் சரியாக கையாண்டு பாத்திரத்தின் தன்மையை காப்பாற்றுகிறார்.
ஜோதி மகாலட்சுமியாக ஆனந்தி சிறப்பாக செய்திருக்கிறார். பெரிய வீட்டுப் பெண், உயர்ந்த ஜாதிப் பெண், எதற்காகவும் வாழ்க்கையில் கெஞ்சியதில்லை, அவமானப்பட்டதில்லை! அழுத்தப்பட்ட சமூகத்தின் வலி தெரியாமல் அது வரை வாழ்ந்தவர், படத்தின் இறுதி வரையிலும் உணராமலேயும் இருக்கிறார் பரியேறும் பெருமாள் தயவில். பாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கதிர் விலகிப் போவது புரியாமல் அழுது வேதனைப் படுவது, வெளி உலகமே தெரியாமல் தன்னை சுற்றி மட்டுமே உலகம் இயங்குவதாக நினைக்கும் ஒரு privileged பெண் பாத்திரத்தை பாங்குடன் செய்திருக்கிறார். அவரால் தைரியமாக காதலிக்க முடிகிறது அதை சொல்லவும் முடிகிறது. ஆனால் கதிர் ஜோதி மேல் கொண்டிருப்பது என்ன மாதிரி உணர்வு என்று கதிர் புரிந்து கொள்ளும் முன்னரே அந்த உணர்ச்சி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இரு பாத்திரங்குளுக்குமான இந்த வித்தியாசம் சொல்கிறது ஜாதியின் சமூக அவலத்தை.
ஜோதியின் அப்பாவாக வரும் பாத்திரம் (G.மாரிமுத்து)முழு வில்லனும் இல்லை, நல்லவரும் இல்லை. கதிரின் கதையை முடிக்கவும் குடும்பத்தினருடன் ஒத்துக் கொள்கிறார், அது அந்த சமூகத்துக்கு இயல்பான ஒன்றாகவும் கட்டப்படுகிறது. அவரின் தவறின் வீர்யம் கூட அவருக்கு உரைக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால் அதே சமயம் அவருக்குள் இருக்கும் மனசாட்சி அவருக்குக் கதிரை எளிதாகப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு வரும்போது தடுத்து விடுகிறது என்பதையும் பார்க்கிறோம். இறுதியில் கதிருடன் நடக்கும் உரையாடலில் அவரின் conundrum புரிகிறது. அது தான் நிதர்சனமும் கூட!
பெண் வேஷமிடும் கூத்து நடிகராக கதிரின் அப்பா பிரமாதமான பாத்திரப் படைப்பு மட்டுமல்ல கதைக்கு நல்ல பரிமாணத்தைக் கொடுத்து உயர்த்துகிறது. அவரை வில்லன் மாணவர் அவமானப்படுத்தி ஓடவிடும் காட்சியில் கண்ணில் நீர் துளிக்காதவர்கள் இருக்க முடியாது.
சர்க்கரை வியாதி எப்படி ஒரு சைலன்ட் கில்லரோ அது போல் இப்படத்தில் ஒரு சைலன்ட் கில்லர் பகீர் ரகத்தில் உள்ளார். ஜாதி மேல் உள்ள பற்று என்பது கடவுள் வழிபாட்டையும் விட உக்கிரமாக கருதப் படுவதை இவரின் செயல்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இவரின் இறுதி முடிவு இவரின் கொள்கைப் பிடிப்பின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இன்னும் மற்றப் பாத்திரங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், முதலில் வரும் கல்லூரி முதல்வர், அடுத்து இரண்டாவதாக வரும் முதல்வர், இதர பேராசிரியர்கள், கிராமத்து மனிதர்கள், கல்லூரி நண்பர்கள் அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகி பாபுவின் பங்களிப்பு அருமை. கல்லூரியில் ஆங்கிலம் தெரியாமல் கதிரும் அவரும் செய்யும் அலப்பறைகள் நல்ல நகைச்சுவை ரகம். தந்தையாக நடிக்க கதிர் அழைத்துவரும் சண்முகராஜனும் நன்றாக செய்திருக்கிறார். பரியேறும் பெருமாள், ஜோதி மகாலட்சுமி தான் முக்கிய கதாபாத்திரங்கள் எனினும் படத்தில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். திரைக்கதையின் சிறப்பு அது.
சந்தோஷ் நாராயணன் இசை வேற லெவல். இதில் கீழ் ஜாதி மக்களின் வாழ்க்கையே இசையோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகும். அவர்களின் சோகத்துக்கும் வடிகால் இசை தான். அவர்களின் உற்சாகத்துக்கும் ஊக்க சக்தி இசை தான். அவர்கள் வாழ்க்கையின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கும் பாடல்களில் உள்ள வரிகள் தாம் காரணம். உணர்ச்சி பிழம்பாக ஒலிக்கிறது ஒவ்வொரு பாடலும். நம் காதுக்கு இனிமையா என்பதை விட கதைக்குப் பொருத்தமா என்பதை தான் கவனிக்க வேண்டும். இதில் ‘கருப்பி’ பாடல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் அவ்வளவு கோபமும் ஆவேசமும் வெளிப்பதுவதில் தான் பரியேறும் பெருமாளின் நிலையையும் அந்த ஜாதி மக்களின் இயலாமை நிலையையும் நமக்கு உணர்த்துகிறது. தெருக்கூத்து நடனத்துக்கு வரும் பாடலும் அருமை. இசையால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பொட்டக் காட்டில் பூவாசம் அழகான மெலடி!
எப்படி மேற்கு தொடர்ச்சி மலை இயல்பான வாழ்வியலை காட்டியதோ அதே மாதிரி இந்தப் படமும் எந்த அரிதாரமும் பூசாமல் ஜாதி தரும் அழுத்தத்தோடு எளிய மக்கள் வலியோடு வாழும் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. வசனங்கள் குறைவு. ஒரு பக்க அறிவுரையை எந்த பாத்திரமும் தருவதில்லை. சம்பவங்களின் காட்சிப் படுத்தலே சொல்ல வந்ததை நச்சென்று சொல்லிவிடுகிறது. ஆனால் சொல்லப்படும் வசன்னங்கள் அனைத்துமே கூர்மை.
அரசியல்வாதி, அடியாள், ரவுடி இவர்களை வைத்தான சாதிக் கதை இல்லை இது. உண்மையாக நடக்கும் போராட்டத்தை, கீழ் ஜாதியினரின் இயலாமையை, மேல் ஜாதியினரின் சலுகைகளைக் காட்டி மேல் ஜாதியினர் மனம் மாறாத வரையில் கீழ் ஜாதியினர் முன்னேற வழி இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதுவும் கடைசிக் காட்சியின் குறியீடு அற்புதம். கதிர் பாத்திரம் யாரையும் பழி தீர்க்க ஆசைப்படுவதில்லை. அது ஒரு நல்ல மெஸ்சேஜ்.
முதலில் பெரிய ஓபனிங் இல்லாவிட்டாலும் இப்பொழுது அரங்கம் நிறைந்த காட்சிகளாக சென்னையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக திரையரங்கில் சென்று படத்தைப் பார்க்கவும். சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது ஜாதி சார்ந்தது. ஜாதி விஷயத்தில் நாம் மாறாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதையாவது புரிந்து கொள்ள இப்படம் உதவும்.
