விஸ்வாசம் – திரை விமர்சனம்

ஒன்றரை வருடத்துக்குப் பிறகு வரும் அஜித் படம். ஏக எதிர்ப்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு! ரசிகர்களை கட்டிப் போடும் மாஸ் ஹீரோக்கள் நல்ல அறிவுரையை தரும் படங்களை தருவது அந்த ரசிகர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும். அந்த முறையில் இந்தப் படம் பாராட்டுக்குரியது. மற்றபடி முன் பாதி கதையமைப்பில் புதுமை இல்லை. பின்பாதி படத்தை காப்பாற்றுகிறது.

அஜித்துக்கு எப்பவுமே ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் அதிகம். அது இந்தப் படத்திலும் அவருக்கு அருமையாக கை கொடுக்கிறது. வந்து நின்றாலே களை கட்டுகிறது. நயன்தாரா அவரின் ஜோடி நல்ல பொருத்தம். பெரிய ரோல் அவருக்கும். பொருந்தி நடித்துள்ளார்.

சின்ன கிராமத்தில் பெரிய ஆளாக இருப்பவர் அஜித் குமார். அடிதடி காட்டி அசத்தல் மன்னனாக வருகிறார். மருத்துவ முகாமுக்கு வரும் மும்பைவாசி மருத்துவர் நயன்தாரா எப்படியோ அந்த வெள்ளந்தி உள்ளத்தால் கவரப்பட்டு அவர் மூன்றாம் கிளாஸ் பெயில், சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராது, சண்டை போடுவது அவருக்கு ஹாபி என்று தெரிந்தும் காதலில் விழுந்து, அஜித் தான் அவருக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று சொல்லியும் அவரை முழு மனதோடு திருமணம் புரிகிறார். அதன் பின் ஒரு சின்ன விஷயத்துக்காக பிஞ்சு மகளோடு பிரிந்து மும்பைக்கே போய்விடுகிறார். அது பாத்திரத் தன்மையில் நெருடுகிறது. எப்பொழுதுமே ஒருவரின் நடிப்பு கதையமைப்பின் அம்சத்தை ஒட்டியே நன்றாகவோ சுமாராகவோ இருக்கும். இதில் நயன்தாராவின் பின் பாதியில் வரும் அவர் நடிப்பு சற்றே ஒட்டாத தன்மையுடன் இருப்பதற்குக் கதையில் உள்ள குறையே காரணம்.

அஜித்துக்கு முதலில் இருந்து கடைசி வரை ஒரே பாத்திரத் தன்மையோடு பிறழ்வு ஏதும் ஏற்படாத வகையில் கதையமைப்பு இருப்பதாலும் குடும்பப் பாத்திரங்களில் குடும்பத் தலைவராகவோ அல்லது ஒரு பெண்ணுக்குத் தந்தையாக வருவதோ அவருக்கு இயல்பாகவே சிறப்பாக வருவதாலும் படம் முழுவதுமே அவர் பங்களிப்பு மிகவும் அருமையாக உள்ளது. வேட்டியில் அம்சமாக இருப்பவர்கள் பொதுவில் மலையாள நடிகர்கள் தான். தமிழ் சினிமாவில் அஜித் என்று சொல்லலாம்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா இந்தப் படத்திலும் அவர் மகளாக நடிக்கிறார். பாத்திர வயதுக்குக் கொஞ்சம் அதிக வளர்ச்சியாக இருந்தாலும் சிறப்பான நடிப்பு. மகள் தந்தை உறவின் பாசம் இருவரிடமும் வெகு அழகாக வெளிப்படுகிறது. அந்தப் பகுதி மட்டும் அப்ழைய படத்தின் தொடர்ச்சிப் போல தோன்றுகிறது. பலவித உணர்சிகளை அனிகா காட்ட அவர் பாத்திரம் உதவுகிறது. குறைவின்றி செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்திருக்கலாம். படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். இப்படத்தில் தேவையில்லாதவைகள – அட்லீஸ்ட் இரண்டு பாடல்கள், விவேக், கோவை சரளா பாத்திரங்கள, தம்பி ராமையாவும் அஜித்தும் காமெடி என்று நினைத்து செய்யும் சேட்டைகள்! அஜித்தும் நயன்தாராவும் காதலிக்கக் காட்டப்படும் திரைக் கதையும் பிரிய சொல்லப்படும் காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவும் நம்பத் தகுந்தபடியும் மாற்றியமைத்திருந்தால் படத்தின் பலம் கூடியிருக்கும். முதல் பாதி ரொம்ப அலுப்புத் தட்டுகிறது. ஆனால் பின் பாதியில் பிரிந்தவர்கள் சேரும் இடம் வெகு இயற்கையாக அமைவது ஆறுதல்.

ஸ்டன்ட் காட்சிகள் மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருக்கு. அஜித் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் போரடிக்காமலும் உள்ளன. கிராமப்புறங்களை காட்டும்போது ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கிறது. படத்தின் பலம் ஒளிப்பதிவாளர் வெற்றி. திருவிழா காட்சிகளில் வண்ணங்கள் கூட்டி கண்களுக்கு விருந்து படைக்கிறார். அதேபோல ரூபனின் எடிட்டிங்க் பாடல்களிலும் சண்டைக்காட்சிகளிலும் அருமையாக தொகுத்துள்ளார். D.இமானின் இசையில் கண்ணான கண்ணே அருமை, பின்னணி இசை நன்று.

இந்தப் படத்தின் பெரிய ப்ளஸ் இது ஒரு குடும்பப் படம். குடும்ப வேல்யு சிஸ்டம் பற்றி நன்றாக சொல்கிறது. பெற்றோர் பிரிவதால் அவஸ்தைப் படுவது பிள்ளைகள் தாம். இப்பொழுது பல குடும்பங்களில் இதை நிறைய பார்க்க முடிகிறது. அதனை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா. அம்மா தரும் அன்பும் அப்பா தரும் பாதுகாப்பும் ஒரு குழந்தைக்கு எல்லா வயதிலும் தேவை. அதே போல் அம்மாவிடம் சண்டைப் போட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேறியதே இல்லை என்பது போன்ற கருத்துகளை அஜித் சொல்வது அவர் படத்தை விரும்பிப் பார்க்கும் இளம் வயதினருக்கு ஒரு நல்ல படிப்பினையாக அமையும். வசனங்களில் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. கண்களை ஈரமாக்கும் காட்சிகள் படத்தில் உள்ளன.

அஜித்துக்கு இது ஒரு நல்ல படம். ஆனால் அடுத்த முறை இன்னும் சிறப்பான கதையம்சத்தைத் தேர்ந்தெடுத்து இன்னும் சிறப்பான விருந்தை அவர் ரசிகர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்க வாழ்த்துவோம்!

Leave a comment