திரைப்படங்களில் கதாநாயகன் நாயகியை கிண்டல் பண்ணுவார், பின் கிண்டல் பண்ணியவரையே அந்த நாயகி காதலிப்பாள்! இது ஒரு எழுதப்படாத விதியாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்து கொண்டிருக்கிறது. அன்றைய திரைப்படங்களில், எம்ஜிஆர் சரோஜா தேவிவை பின் தொடர்ந்து போய் கிண்டல் அடிப்பார், சரோஜா தேவியும் ஒரு கொழு கொம்பு இல்லாத கோடி போல கையாலாகாதனத்தைக் காட்டி பின் காதலில் விழுவார். அது இன்றும் தொடர்கிறது. பாலாவின் சமிபத்திய “அவன் இவன்” திரைப் படத்தில் ஆர்யா நிவேதித்தாவை கடுமையாக கேலி பண்ணுவார். ஆனாலும் அந்தப் பெண் அவன் மேல் கோபம் கொள்ளாமல் காதல் கொள்வாள். இதை ஆண் பெண் இரு பாலாரும் ஒத்துக் கொண்டு ரசிப்பது தான் வேதனை.
திரைப்படங்களில் மட்டும் அல்ல, புராணங்களிலும் அப்படியே. முருகன் வள்ளியை அடைய முதியவர் போல வந்து கொஞ்சம் அவளை சீண்டி, விநாயகரையும் துணைக்கு அழைத்துப் பின் அவள் கரம் பிடித்தார்.
இது போன்ற முன் உதாரணங்களால், பெண்ணை சீண்டுவது, கேலிப் பேசுவது, மட்டம் தட்டுவது, கொச்சைப் படுத்துவது போன்ற செயல்களில் தவறில்லை என்ற எண்ணத்தை சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. முக்கியமாக பெரும்பாலான இளைஞர்களும் (பல முதியவர்களும்) இந்த நடத்தையில் எந்த தவறும் இருப்பதாகக் கருதுவதில்லை. உண்மையில் இந்த மாதிரி நடத்தை ஒரு வகை பாலியல் துன்புறுத்தலே. ஒரு பெண்ணை பின் தொடர்வது, சீட்டியடிப்பது, அவள் காதுபட அவளை வர்ணிப்பது, ஆபாசமாகப் பேசுவது, சமய சந்தர்ப்பம் கிடைக்கும் பொது அவளை உடலில் எந்த பாகத்திலாவது தொடுவது, இவை அனைத்தும் ஈவ் டீசிங்/பாலியல் துன்புறுத்தல் என்ற வகையைத் தான் சாரும். இது மிகவும் கண்டிக்க தக்கது. ஆனால் அனைவருமே இதை மிகவுல் லேசாக எடுத்துக் கொள்கின்றனர். ஏன், நமது அரசாங்கமே சரிகா ஷாவின் மரணத்துக்குப் பின்னே தான் அதன் கொடுமையை உணர்ந்து சட்டத் திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தந்து.
என பதின் வயதுகளில் நானும் சீண்டப்பட்டிருக்கிறேன். பல முறை கோபத்துடன் கேலி செய்தவர்களை பொது இடத்திலேயே திட்டியிருக்கிறேன். சில சமயம் அவர்களை உதாசீனப் படுத்துவதும் ஒருவகையில் அவர்களுக்குப் பாடமாக அமைகிறது. கேலிப் பேசி அலுத்துப் போவார்கள். என்னை ஒருவன் ஒரு முறை பேரூந்தில் தகாத முறையில் தொட்டதற்கு அங்கேயே அறைந்திருக்கிறேன். அவன் மறு பேச்சுப் பேசாமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விட்டான். இதனால் அவன் ஏதாவது கற்றுக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.
இதெற்கெல்லாம் ஆதி காரணம் வளர்ப்பு! பெரும் பொறுப்பு இங்கே பெற்றோர்களுக்கே! எந்த இல்லங்களில் எல்லாம் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுகிறதோ அந்த இல்லங்களில் வளரும் குழந்தைகள் பெண்களை எந்த வகையிலும் கீழ்மை படுத்துவதோ, அவமானப் படுத்துவதோ கூடாது என்று தானாகவே கற்றுக் கொள்கின்றனர். கணவனும், அவர் இல்லத்தாரும் மனைவியை/மருமகளை மரியாதையுடன் நடத்த வேண்டும். பெண்ணுக்கும் இதில் பெரும் பங்கு உள்ளது. அவளும், அவளை அவமானப்படுத்துபவர்களை கண்டிக்காமல் மிதியடி போல கிடந்தால் மற்றவர்கள் மேலும் ஏறித்தான் செல்வார்கள். அனால் இது குடும்பப் பெண்ணுக்கு எளிதானது அல்ல. தன் திருமண வாழ்க்கைக்கு எந்த பங்கமும் வராதபடி, அதே சமயம் உறுதியான மனப்பக்குவத்துடன் தன இல்லத்தாரை சமாளிப்பது கழக்கூத்தாடி விழாமல் கயிற்றில் நடப்பதற்கு ஒப்பாகும். ஆனால் ஒரு தாயாக இந்த விஷயத்தில் அவள் பங்களிப்பு மிகப் பெரியது. அவளால் நல்ல நடத்தையுள்ள புதிய தலைமுறையை உருவாக்க முடியும். அவளுக்கு அந்த சக்தி இருக்கிறது. எது நல்ல நடத்தை என்பதை தாய் தன் மகளுக்கும் மகனுக்கும் கற்றுத் தருவதே அவள் வரும் தலைமுறையினருக்குச் செய்யும் மாபெரும் தொண்டாகும். பிள்ளைகளும் பெற்றோரிடத்தில் எந்த பாலியல் பிரச்சினை ஆனாலும் மறைக்காமலும் பயப்படாமலும் பகிர்ந்துகொள்ள தகுந்த சூழ்நிலையை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.
நமது சமுதாயம் பல சமயங்களில் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகக் கருதும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை வாய் திறக்காமல் மௌனியாக தனக்கு நேர்ந்த அவமானத்தை வெளியில் சொல்லாமல் இருந்து விடுகின்றனர். மகளும் மகனும் சேர்ந்து வளரும் ஒரு இல்லத்தில், இருவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். நிச்சயமாக இரு பாலாருக்கும் தேவைகள் வேறு வேறாகத் தான் இருக்கும். ஆனால் நடத்தும் முறையில் பாரபட்சம் இருக்கக் கூடது. ஒருவர் செயலை குற்றம் என்றும் அதையே மற்றவர் செய்யும் பொது சரி என்றும் வேற்றுமை பாராட்டக் கூடாது. ஒரு பெண்ணை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போது அவளுக்கு உதவி செய்யும்படி மகனுக்கு அறிவுறுத்தி வளர்க்க வேண்டும். அதுவே மகளிடம் யார் அவளை சீண்டினாலும் அதை தடுத்து எதிர்கொள்ளக் கற்றுத் தர வேண்டும்.
இன்னொரு வினோதமான நம்பிக்கை நமது சமுதாயத்தில் நிலவுகிறது. அது என்னவென்றால் பெண் உடுத்தும் உடையினால் தான் அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள் என்பதே ஆகும். இந்த எண்ணத்தைப் பிரபலப்படுத்துவது யார் தெரியுமா? நமது திரைப்பட நாயகர்கள் (ரஜினி முதல் விஜய் வரை). இவர்கள் பனிப் படர்ந்த மலை பரப்பில் கம்பிளி சட்டையும் கழுத்து குட்டையும் போட்டுக்கொண்டு ஆடுவார்கள் ஆனால் கூட நடனமாடும் நாயகியின் உடை/உடையின்மை பற்றி நான் சொல்லவும் வேண்டுமா! பெண் உடுத்திக் கொள்ளும் உடை அவளின் தனிப்பட்ட விருப்பம். எல்லா முடிவுகளிலும் அவள் காட்டும் உரிய அறிவுபூர்வமான பாகுபாட்டை அவள் உடை விஷயத்திலும் காட்ட வேண்டியது அவசியம். ஆனால் அவள் உடுத்திய உடையினால் தான் அவளை சீண்டினோம், அல்லது அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு அதுவே காரணம் என்று எந்த ஆண் மகனும் கூறக் கூடாது.
துரத்ரிஷ்டவசமாக இந்த ஈவ் டீசிங்கை முடிவுக்குக் கொண்டுவருவதில் பெரும் பங்கும் பெண்களிடமே உள்ளது! பெண் உறுதியானவளாக இருக்க வேண்டும். சமுதாயமும் இன்னும் கண் மூடிக்கொண்டு இருக்கக் கூடாது. வெளிப்படையாக தவறை தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டும். பெண்கள் சுதந்திரத்துக்காக போராடும் குழுவினர்கள் பெண்கள் குறைந்த உடையில் வரும் படங்களை தடை செய்ய மட்டும் போராடாமல், அவர்களை இழிவாகக் காட்டும் படங்களையும் பெண் சீண்டலை/பாலியல் துன்புறுத்தலை பெருமை படுத்தும் படங்களையும் தடை செய்ய போராட வேண்டும். அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கை தரும் முயற்சியிலும் அவர்கள் ஆக்கப் பூர்வமாக ஈடுபடவேண்டும். காவல் நிலையங்கள் கண்டிப்பாக பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும். பள்ளிகளும் கல்லூரிகளும் அங்கு பயில்பவர்களுக்கு ஈவ் டீசிங்கின் தீமையை பற்றி எடுத்துரைக்க பயிலகங்கள் நடத்த வேண்டும். இது நம் சமுதாயத்தில் இருந்து போக வேண்டும் என்றால் ஒரு கூட்டு முயற்சியால் தான் இதை சாதிக்க முடியும்!
Feb 11, 2012 @ 18:03:26
நல்ல பதிவு. பிரச்சனை பற்றி மட்டும் பேசாமல் அதன் காரணம்,தீர்வையும் சொல்லியிருப்பது அருமை. படங்களை தடை செய்வது,காவல் நிலையங்களை நம்புவது எல்லாம் சரிவருமா என்று தெரியவில்லை, ஆனால் நீங்க சொல்வது போல் பெண்களிடமிருந்தே இது துவங்க வேண்டும். பெண்களை சமஉரிமை,சுயமரியாதையுடன் வளர்ப்பது போல்,ஆண்களையும் பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும். இது இரண்டும் நடந்தால் இது போன்ற பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
Feb 11, 2012 @ 21:52:52
ரொம்ப நன்றி திருமாறன் 🙂
Feb 12, 2012 @ 03:36:48
அருமையான பதிவு!
Feb 13, 2012 @ 01:54:05
மிக்க நன்றி!
Apr 30, 2012 @ 14:53:34
உண்மையான பதிவு! ஒருதரம் நான் தெரியாமல், கல்லூரி மகளிர் பஸ்ஸில் பயணிக்க நேர்ந்தது. ரொம்ப கலாய்த்தார்கள்! 🙂 பொதுவாக உறவுகள் குறைந்த வரும் இந்த காலகட்டத்தில், மற்றவர்களையும் மதிக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச ஒழுக்கம் குறைந்து வருகின்றது. தரக்குறைவான தமிழ் படங்கள், பாட்டுகள் மேலும் நிலமையை மோசமாக்குகிறது. சமூக ஒழுக்கம் என்று பள்ளிகளில் போதித்தால், நல்ல எண்ணங்களை பிஞ்சு மனங்களில் பதிய வைத்தால் ஓரளவு பலன் அளிக்கும் என்பது சரியே! தங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்!
Apr 30, 2012 @ 15:43:00
உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
Mar 06, 2015 @ 05:08:53
உலக மயமாக்கம், அமெரிக்கத் தாக்கம், சவுதி அரேபிய தாக்கம், கணினி மயமாக்கம், தவறாகப் புரியப்பட்ட கம்யூனிச சித்தாந்தங்கள், திரைப்படங்களின் தவறான தாக்கங்களினால் ஏற்பட்ட தொழிலாள வர்க்கங்களின் மன எழுச்சி போன்ற இன்ன பிற காரணங்களால் இந்தியாவில் மனிதம் சிக்கி சின்னா பின்னமாகும் போது Collateral damage ஆவது முதியோரும் பெண்ணும்….!
Mar 06, 2015 @ 09:02:36
நன்றி அகிலன்.
Mar 06, 2015 @ 07:16:23
This is out-dated Madam….now a days most of the men won’t do this….because, they have other sources for them…..
Mar 06, 2015 @ 09:03:08
may be maybe not.
Mar 08, 2015 @ 09:14:34
சரியான பதிவு. ஆனால் பையன்கள் செய்யும் கலாட்டாக்களை சில பெண்கள் ரசிப்பதையும்,அருகில் வந்து வழியும் பையனுக்கு இடம் கொடுப்பதையும்.தன்னால் தன்னைக் காத்துக்கொள்ள முடியுமென்று நம்பும் மடமையையும் நாம் பார்க்கிறோம்.