மெர்லயன் – சிங்கப்பூரின் தேசிய சின்னம்
சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. சொல்லப் போனால் அந்த நாட்டின் பரப்பளவு சென்னை மாநகரத்தின் பரப்பளவை ஒத்தது. பரந்து விரிந்த அமெரிக்காவில் இருந்து நாங்கள் சிங்கை வந்து குடியேறியபோது (1993-1996) முகத்தில் அடித்த முதல் பெரிய வித்தியாசம் அது தான். அடுத்து எங்கு திரும்பினும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள். பொழுதுபோக்கு என்று பார்த்தால், ஷாப்பிங் தான் அங்கே மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஊர் சிறியது ஆனதால் சுற்றிப் பார்க்க அதிகம் இல்லை. ஆனால் அதிலும் அவர்கள் சென்தோசாத் தீவை ஒரு டிஸ்னி லாண்டை போல் ஒரு உல்லாசத் தலமாக அமைத்திருந்தது அவர்களின் படைப்பாற்றலைத் தான் காட்டுகிறது.
சாலைகள் அகலம் குறைவாக இருப்பினும் அதன் சுத்தமும் தரமும் நம்மை வியக்கவைக்கும். அந்நாட்டின் பொருளாதாரமே வெளிநாட்டினர் அங்கு சுற்றுலா வருவதைச் சார்ந்து இருப்பதால் அதற்குத் தகுந்த அனைத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சில கதைகளில் அடுத்த சில நூற்றாண்டுகளில் வரவிருக்கும் ரோபோ நகரங்களைப் பற்றி விவரித்திருப்பார். அதை ஓரளவு சிங்கப்பூரில் நாங்கள் அப்பொழுதே பார்த்தோம். இப்பொழுது கேட்கவே வேண்டாம். இன்னும் சட்ட திட்டங்களை மெருகேற்றி குடிமக்களுக்கு அனைத்தும் வாயிற்படியில் வந்திறங்கும் தரத்திற்கு முன்னேறியிருக்கும் 🙂
இரவு இரண்டு மணிக்கும் ஒரு பெண் நகைகள் அணிந்து வெளியில் தனியாகச் சென்று வரலாம். பயமில்லை. எனக்கு ஒரு சமயம் அந்த மாதிரி ஒரு அவசியம் ஏற்பட்டு அவ்வாறு சென்றிருக்கிறேன். தவறு செய்து பிடிபட்டால் கடும் தண்டனை என்ற பயம் தான் இந்த நல்லொழுக்கத்திற்குக் ஒரு முக்கிய காரணம் என்று நிச்சயமாகச் சொல்வேன். தவறு இழைத்தவர்கள் பிரம்பினால் பிட்டத்தில் அடிக்கப் படுவார்கள். ஒரு அடி, இரண்டு அடிகளே வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாததாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நாங்கள் அங்கிருந்த போது ஒரு அமெரிக்க தூதரகத்த்தில் வேலை செய்பவரின் பதின் வயதில் உள்ள மகன், கிராஃபிட்டியை சில நண்பர்களுடன் பொதுச் சொத்தான ஒரு சுவரில் கிறுக்கியதற்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டது. இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வழக்கு. அமெரிக்காவில் சுவற்றில் கிறுக்குவதை ஒரு குற்றமாகவே கருதமாட்டார்கள். இந்த மாதிரிச் செயலுக்குப் பிடிபட்டால் இத்தனை மணி நேரம் சமூகச் சேவை செய்யச் சொல்லி நிதிபதி அங்கே தண்டனை விதிப்பார். இங்கோ பிரம்படி. அந்தப் பையனின் பெற்றோர்களும் அவனை எப்படியாவது அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விடவேண்டும் என்று முயன்றனர். முடியவில்லை. தண்டனைக்குப் பிறகே அவன் அமேரிக்கா திரும்பினான்.
டாக்சி ஓட்டுனர்கள் வண்டி எண்கள், ஓட்டுனர் லைசென்ஸ், அவர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் அந்தத் துறைக்கான அரசாங்க அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஏதாவது பொருளைத் வண்டியில் விட்டுவிட்டாலோ, ஓட்டுனர் முறைகேடாக நடந்து கொண்டாலோ உடனே வண்டி எண்ணைக் குறித்துக் கொண்டு புகார் கொடுத்துவிடலாம். அதனால் டாக்ஸி ஓட்டுனர்களும் நல்ல முறையில் நம்மிடம் பழகுவார்கள். மீட்டருக்கு மேல் வாங்குவது என்ற பேச்சே இல்லை. மேலும் அரசாங்கமே கிலோமீட்டர் பயணத்திற்கு இவ்வளவு என்று நியாய விலை நிர்ணயம் செய்து விடுகிறது. இரவில் சென்றால் டாக்ஸி கட்டணம் ஒன்றரைப் பங்கு அதிகம் கொடுக்கவேண்டும். விலாசத்தைச் சொன்னால் போதும் சரியான இடத்திற்கு நம்மை அழைத்துச் சென்று நிறுத்தி விடுவார்கள். தொண்ணூறு சதவீதத்தினருக்கு ஆங்கிலம் தெரியும். தெரியாத பத்து சதவீதத்தினரும் ஓரளவு புரிந்து கொண்டு செயல்படுவர்.
அமெரிக்காவில் இருந்த பொழுது நாங்கள் இரண்டு கார்கள் வைத்திருந்தோம். சிங்கப்பூரில் இருந்த மூன்று வருட காலமும் கார் வாங்கவில்லை. இரு காரணங்கள். ஒன்று, அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருந்த பொதுப் போக்குவரத்திற்கான பஸ்களும், மெட்ரோ ரயில்களும் அவ்வளவு வசதியானவை. விரைவாகச் செல்லக்கூடியவை. கட்டணங்களும் மிதமானவை. டாக்சிகள் சௌகர்யமானவை. கட்டணங்களும் அதிகப்படியானவை ஆல்ல. அடுத்தக் காரணம், அங்கு கார்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரி. சீ ஓ ஈ என்பார்கள். காரின் விலை முப்பதாயிரம் வெள்ளி என்றால், கூடுதல் வரி இருபதாயிரம் முதல் அறுபது எழுபதினாயிரம் வரை இருக்கும். இதன் மூலம் வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கையை சீரான வழிமுறையில் அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது. இந்த வரியின் வாழ்நாளும் பத்து வருடங்கள் தான் அதாவது ஒரு காரின் வாழ்நாளும் அவ்வளவே. அதன் மூலம் காற்றில் உள்ள மாசு கட்டுப்படுத்தப் படுகிறது. அதற்குப் பிறகு திரும்பவும் வரி செலுத்த வேண்டும். மேலும் அலுவலகத்தில் வாகன நிறுத்தத்திற்கும், சாலை பயன்பாட்டிற்கும் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும்! இந்த அதீத கெடுபிடியினால் வாகனம் வாங்குவோர் எண்ணிக்கையை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. அதிக வாகனங்கள் விற்கப்பட வேண்டும் என்று நினைத்தால் சி ஓ ஈ யை குறைப்பார்கள். அரசாங்கம் நாட்டை நடத்துவது ஒரு நிறுவனத்தை நடத்துவது போல் இருக்கும்.
என் குழந்தைகளுக்குக் குறிப்பாக என் மகனுக்குக் கார் இல்லாதாது சிறிது கஷ்டமாக இருந்தது 🙂 வீட்டுப்படி இறங்கியவுடன் கையை நீட்டிவிடுவான் சாலையில் போகும் டாக்சியை நிறுத்த. பள்ளிக்குச் செல்ல இருவருக்கும் பள்ளிப் பேருந்து வந்துவிடும். பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது அவ்வளவு எளிதாக இருந்தது. விண்ணப்பப் படிவத்தை கல்வித் துறை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களே நம் வீட்டு விலாசத்தை வைத்து அதற்கு அருகில் உள்ள பள்ளியில் அந்தந்த வகுப்பிற்கான அனுமதி அளித்துவிடுவர். அங்கே நாங்கள் இருந்த போது ஷிப்ட் முறை. ஒன்றாம் மூன்றாம் ஐந்தாம் வகுப்புகள் மதியம் ஆரம்பித்து மாலை முடியும். இரண்டாம் நான்காம் ஆறாம் வகுப்புகள் விடிகாலை ஆரம்பித்து மதியம் முடியும்.
அங்கு நடைபெறும் அனைத்துச் செயல்களும் ஒரு கட்டுக்கோப்பாக நடைபெறும். அரசாங்கம் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஹெச் டி பி எனப்படும் வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புக்களை சகாய விலையில் வாங்க முடியும். ஒரு டாக்சி ஓட்டுனரும் சொந்த வீட்டுக்காரராகத் தான் இருப்பார். முக்கியமாக சிங்கப்பூர் குடிமகனாக இருந்தால் மேலும் அவர்களுக்கு நிறைய சலுகைகள் உண்டு. வீட்டு வசதி வாரியத்தின் புதிய குடியிருப்புக்களை வாங்ககுவதில் முன்னுரிமை முதல் பலவிதமான நன்மைகள் அவர்களுக்குக் கிடைக்க வழிச் செய்கிறது அரசாங்கம்.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதை அங்கு சாதாரணமாகக் காணலாம். அங்கு இருக்கும் இன்னும் ஒரு கலாச்சாரம், வீட்டு வேலைக்கு வீட்டோடு தங்கும் முழு நேர ஆள் அமர்த்திக் கொள்ளும் வசதி. அவ்வாறு வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் இலங்கை, பங்களாதேசம், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களே. அவர்களுக்குத் தனி விசா உள்ளது.

வானுயரக் கட்டிடங்கள்
சொந்தமாக இயற்கை வளம் ஏதும் இல்லா நாடு சிங்கப்பூர். தண்ணீர் கூட மலேசியாவில் இருந்து தான் வாங்குகிறார்கள். ஆயினும் நல்ல தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அரசாங்கம் எல்லா சூழ்நிலையையும் எதிர்பார்த்து முன்னேற்பாடுடன் செய்ல்படுகிறது. குட்டியூண்டு நாடாகினும் அதைக் காக்க கட்டாய ராணுவப் பயிற்சியை பள்ளிக் கல்வி முடிந்த அனைத்து ஆண்களுக்கும் தருகிறது அரசாங்கம். அது மூன்று வருடப் பயிற்சி. அதற்குப் பின் தான் கல்லூரி படிப்பிற்கு அவர்கள் செல்ல முடியும். ஆனால் அதை செவ்வனே முடித்தால் வெளிநாடு சென்று படிப்பதற்கோ அல்லது உள்நாட்டில் நல்ல பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கோ பண உதவி செய்கிறது அரசாங்கம். அனால் இந்தப் பயிற்சியைத் தவிர்ப்பவர்களை நாடு விட்டே கடத்திவிடுகிறது. பி ஆர் எனப்படும் அமெரிக்க பச்சை அட்டைக்கு ஒப்பான நிரந்தரக் குடியுரிமை பறிக்கப்பட்டுவிடும். பின் அவர்கள் சுற்றுலா விசாவில் தான் வந்து போக முடியும். இந்தக் கடுமையான இராணுவப் பயிற்சியில் விருப்பம் இல்லாத நிறைய இந்தியர்கள் தங்கள் ஆண் பிள்ளைகள் பத்தாம் வகுப்புப் படிக்கும் தருவாயில் வேறு நாட்டிற்கு சென்று குடி ஏறிவிடுகின்றனர்.
பள்ளிக்கூடங்களிலும் அதீத கட்டுப்பாடு. அவர்கள், பிள்ளைகளின் எடையைக் கூட கண்காணிப்பர். அவர்களுக்கு அடுத்து வரும் சந்ததியினர் குண்டாக இருந்துவிடக் கூடாதே என்று கவலை. அதற்காக பள்ளியில் குண்டாக இருக்கும் குழந்தைகள் உண்ணும் உணவை கண்காணிப்பர், வகுப்பு முடிந்த பின்னோ அதற்கு முன்னோ எடை குறைக்க ஓட்டப பயிற்சியும் எடுக்க வேண்டும்.
இந்த சட்ட திட்டங்கள் பல என் மகளை மிகவும் பாதித்தது. முக்கியமாக தமிழர்கள் பால் மற்ற இனத்தினர் குறிப்பாக சீனர்கள் காட்டிய வேறுபாட்டை அவள் உணர்ந்தாள். அமெரிக்காவில் எல்லாவற்றிற்கும் சுதந்திரம். இங்கோ அனைத்துக்கும் தடை அல்லது உத்தரவு வாங்க வேண்டும். அங்கே தொடர்ந்து இருக்கப் பிடிக்காமல் எட்டு வயதே ஆன அவள் இந்தியா சென்று தன் பாட்டி தாத்தாவுடன் இருந்து பள்ளிப் படிப்பைத் தொடர முடிவு செய்து விட்டாள்.
பின் நாங்களும் அவளைப் பின்தொடர்ந்து இந்தியா திரும்பினோம். என்னைப் பொறுத்தவரை அங்கு இருந்த நாட்கள் நல்ல நாட்களே. ஆனால் தொடர்ந்து அங்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பேனா என்பது சந்தேகமே. ஏனென்றால் எனக்கும் அதிகக் கட்டுப்பாட்டும் பாகுபாடும் பிடிக்காது.
சிங்கப்பூரில் நிறைய தமிழ் கோவில்கள் உள்ளன. பெருமாள் கோவில், செட்டியார் முருகன் கோவில், வடபத்ர காளியம்மன் கோவில் என்று பிரபலமான பல கோவில்கள் அங்கே இருக்கின்றன. தைப்பூசத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சீனர்களும், மலாய்காரர்களும் விரதம் இருந்து நம் தமிழர்களுடன் சேர்ந்து காவடி எடுப்பதும் பால்குடம் சுமப்பதும் கண் கொள்ளாக் காட்சி.

வடபத்ர காளியம்மன் கோவில்
செரங்கூன் சாலையும் முஸ்தபா, கல்யாணசுந்தரம் அங்காடிகளும், கொமளாஸ் சைவ உணவு சாப்பாட்டிடங்களும், அங்கு உள்ள குட்டி இந்தியாவும் நம்மை நிச்சயமாக இந்தியாவை மறக்கச் செய்யும். அங்கு கிடைக்காதப் பொருட்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் மூன்று இனத்தவரும் (சீனா, மலாய், மற்றும் இந்திய வம்சாவளியினர்) சண்டை சச்சரவின்றி சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். இதற்கு அரசாங்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். அனால் உண்மையான சுதந்திரமிருக்கிறதா? இது ஒரு மிகப்பெரிய கேள்வி. அமைதியான வாழ்க்கை. ஆனால் இயந்திரத்தனமானதோ என்று எனக்கு ஒரு ஐயம்!
கூடி வாழ்வோம்
Aug 08, 2012 @ 15:45:57
சிங்கப்பூர் ஒரு அழகிய சிறிய பரபரப்பான நாடு.
நீங்கள் சொல்வது போல சிங்கையில் கார் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. டாக்சிகள் நிறைய இருக்கின்றன. ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்தால் கண்டிப்பாக டாக்சி நிச்சயம்.
எம்.ஆர்.டி அருகில் இருந்தால் இன்னும் சிறப்பு. இப்போது சர்க்கிள் லைன் வேறு வந்து விட்டது. பிரச்சனைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் சர்க்கிள் லைன் அவசியமானது.
பலவிதமான பண்பாடுகளின் கலவை சிங்கப்பூர்.
அங்குள்ள பள்ளிகளில் நீங்கள் சொல்லும் கட்டுப்பாடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்.கே.ஜியில் இருந்தே குழந்தைகளை அந்த நாட்டுத் தேவைகளுக்குத் தயார் செய்யத் தொடங்கி விடுவார்கள். அதுனால்தானோ என்னவோ.. அந்த நாட்டுக் குழந்தைகள் குறும்பு செய்து பார்த்ததில்லை. பெரும்பாலும் நம் நாட்டுக் குழந்தைகளோ ஐரோப்பிய அமெரிக்கக் குழந்தைகளோதான் அங்கு குறும்பு செய்வதைக் காண முடியும்.
இன்னொன்று. சிங்கையில் கிடைக்கும் பலவித உணவுகள். யாருக்கு எது பிடிக்குமோ அது கிடைக்கும். புடலங்காய் பொரியலில் இருந்து பாம்பு வறுவல் வரை எல்லாம் கிடைக்கும்.
Aug 08, 2012 @ 16:03:06
Again, thanks a lot for sharing your thoughts on this post 🙂 நீங்கள் படித்துக் கருத்துச் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது 🙂
Aug 09, 2012 @ 07:40:57
Reblogged this on nidurseason.
Aug 09, 2012 @ 10:25:14
Brilliant. Rightly said, It’s the corporate style governance that makes all the difference there.
Aug 10, 2012 @ 02:26:28
Thank you Krishna 🙂
Aug 10, 2012 @ 02:23:34
சுவாரசியமான பதிவு. சிங்கப்பூரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
Aug 10, 2012 @ 02:26:50
நன்றி 🙂
Aug 12, 2012 @ 01:44:09
நன்றி. நல்லது கெட்டது சீர்தூக்கி அனுபவப்பட்டு எழுதியுள்ளீர்கள். என்ன வளமில்லை நம் திருநாட்டில்? எவ்வளவு இயற்கையான வரலாற்றுமிக்க டூரிஸ்ட் ஸ்பாட்கள். டூரிசத்தில் உலகிலேயே பணக்கார நாடு என்று சொல்லலாம். ஆனால் ஒன்றுமே இல்லாமல், இன்று டூரிசத்தை கவனம் செலுத்தி முன்னேற்றி பின் அதன் வருமானத்தை நம்பியிருக்கும் சிங்கப்பூரை பாராட்டத்தான் வேண்டும் கட்டுப்பாடு இருப்பதால்தான் முன்னேற்றம் காணமுடிகிறது.ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆகா இருந்தால் வெறுப்புதான். நன்றி. மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். வாழ்க வளமுடன்.
Aug 12, 2012 @ 01:56:45
மிக்க நன்றி 🙂 உங்கள் வார்த்தைகள் எனக்கு டானிக் போல 🙂
Aug 12, 2012 @ 03:02:41
சிங்கப்பூரைப் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி
நல்ல பதிவு
Aug 12, 2012 @ 14:42:12
Thank you Anand 🙂
Aug 12, 2012 @ 08:39:33
எல்லோருக்கும் பெயர் இரண்டு எழுத்துதான் என்று அரசாங்கம் அறிவிக்கவில்லையா? சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’வை நினைவூட்டுகிறது.
Aug 12, 2012 @ 14:47:15
மக்கள் தொகையையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தான் வைத்திருக்கிறார்கள். ஜனத் தொகை குறைந்தது உள்ளது என்று அவர்கள் எண்ணினால் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் இத்தனைச் சலுகைகள் என்று பட்டியல் இடுவார்கள். குறைக்க வேண்டும் என்றால் இரண்டோடு நிறுத்திக் கொண்டால் அதிகப்படி அலவன்ஸ் என்பார்கள். பின்னூட்டத்திற்கு நன்றி அனுஷா 🙂
Aug 26, 2012 @ 15:11:09
Wanted to say ‘ஏங்கவைக்கும் சிங்கப்பூர்’. However subsequent remarks in the article make me hesitate.
You have a great grasp of people, things and events. 🙂
Aug 26, 2012 @ 15:13:31
Thank you very much 🙂
Oct 09, 2012 @ 06:38:42
naam ninaithal namma urai singapoorai vida arumaiyana nadaga seiyamudiyum ovvaruvaram manadu vaikka vendum natin meethu akkaraium, unarvum erpadavendum
Oct 09, 2012 @ 07:34:17
:-)))) yes!
May 15, 2014 @ 10:38:30
முதன் முதலாக சிங்கப்பூர் பயணமாகும் பொருட்டு சில வாசிப்புகளை தேடினேன் . சில அனுபவங்களை தங்களின் பதிவில் வாசித்ததில் மகிழ்வு . நன்றி .
May 15, 2014 @ 10:39:37
முதன் முதலாக சிங்கப்பூர் பயணமாகும் பொருட்டு சில வாசிப்புகளை தேடினேன் . சில அனுபவங்களை தங்களின் பதிவில் வாசித்ததில் மகிழ்வு . நன்றி .
May 15, 2014 @ 11:27:30
நன்றி 🙂
Jun 06, 2014 @ 15:31:28
வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/06/blog-post_6.html?showComment=1402066899274#c3308107344037492304
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Feb 07, 2016 @ 13:08:13
Nice!!