பெண்

குழந்தை பிறந்தவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி ஆணா பெண்ணா என்பது தான். ஆண் குழந்தை என்றால் இன்றும் அனைத்துத் தரப்பினரிடமும் சற்றே அதிக மகிழ்ச்சி ஏற்படுதல் குறையவில்லை என்பது தான் உண்மை நிலை. பெண் பிறந்ததும் மகாலட்சுமி பிறந்திருக்கிறாள், பெண் குழந்தை தான் அதிக அன்புடன் இருக்கும், பெண்ணுக்கு தான் அழகு செஞ்சு பார்க்க முடியும் என்று சொல்லுவதெல்லாம் மேல் பூச்சுக்கான சொற்கள். மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால் உண்மையான அன்புடன் போற்றி கொண்டாடும் பெற்றோர் உள்ளனர், ஆனால் அவர்கள் வெகு சிலரே.

குழந்தையை பெற்றேடுப்பதே ஒரு பெண் தான். இன்று வரை அறிவியல் எத்தனை வளர்ந்திருந்தாலும் இதற்கு மட்டும் மாற்று வரவில்லை. அதற்கு இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். மகப்பேறு மகத்துவம் மட்டும் அவளிடம் இல்லாதிருந்தால் இந்த அளவு கிடைக்கும் மதிப்பயும் மரியாதையையும் கூட அவள் இழந்து வெறும் போகப் பொருளாக மட்டுமே இருந்திருப்பாள். ஆனால் இந்தப் பெருமையே அவளின் பலமும் பலவீனமும் ஆகிறது. முள்ளில் மேல் விழுந்த சேலை கிழிந்தால் முள்ளுக்கு எந்த நட்டமும் இல்லை சேலைக்கு தான் என்பது போல் ஆண் பெண் உறவில் பங்கம் ஏற்பட்டால் களங்கம் பெண்ணுக்கு தான். ‘ஆம்பள கெட்டா வெறும் அத்தியாயம் தான், ஆனா பொம்பள கெட்டா பொஸ்தகமே போட்டுடுவா’ என்று ஊர்வசி சொல்வது {MMKR} தான் உலக நடப்பு.

ஆசிட் வீச்சோ, வன் புணர்வோ, வன் தொடர்தலோ, அடி உதை கொடுத்து குடும்பத்தினரால் வன்முறைக்கு ஆட்படுத்தப் படுவதோ, மன உளைச்சல் உண்டாக்கி வருத்துவதோ ஆணுக்கு நேர்வதில்லை. அதனால் தான் என்னவோ பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லையோ என்னவோ!

பெண்ணை ஏமாற்றி வயிற்றில் பிள்ளையைக் கொடுத்தபின் ஆண் தன் வழியே போக முடியும். பெண்ணுக்கோ கருச்சிதைவு செய்யவும் தயக்கம், அதை பெற்று ஒத்தை ஆளாக வளர்ப்பதும் கஷ்டம். {ஏன் பெண் ஏமாந்தாள் என்று தனியாக பட்டிமன்றம் வைத்துக் கொள்ளலாம். அது வேற டிபார்ட்மென்ட்.} ஆனால் மொத்தத்தில் எதிர்வினகளினால் பாதிக்கப்படுவது பெண் தான்.

ஆண் பெண் இருவரும் சரி நிகர் சமானமில்லை. முதலில் புரிந்து கொள்ள வேண்டியது பெண்ணும் ஆணும் வெவ்வேறானவர்கள் என்பதை தான். எவ்வளவு பெண்ணியம் பேசினாலும் இந்த நிலை மாறப் போவதில்லை. பெண் விண்கலத்தில் ஏறி வான வெளியில் உலா வரலாம், செவ்வாய் கிரகத்திலும் கால் பதிக்கலாம். ஆனால் பெண் சில விஷயங்களில் அடக்கி தான் வாசிக்க வேண்டியிருக்கு அடங்கி தான் போக வேண்டியிருக்கு. இதை தான் ஆண்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

இப்பொழுது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெண்ணை எப்படி சித்தரிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அதன் தாக்கம் மிக அதிகம். முன்பு வீட்டின் பெரியோர் பெண்களை எப்படி நடத்தினார்களோ அப்படியே அவ்வீட்டில் வளரும் பிள்ளைகளும் வளர்ந்த பின் பெண்களை நடத்தினர். இப்பொழுதோ ஊடகங்கள் எல்லாவற்றையும் கிளர்ச்சிக்காக, நிறைய பேர் தங்கள் ஊடகத்தைப் பார்க்க வேண்டும்/படிக்க வேண்டும்  என்பதற்காக செய்திகளை திரித்து, பெண்மையை மாசு படுத்தி, பெண்களை போகப் பொருட்களாகக் காட்டுகிறார்கள். அது உண்மையை பிரதிபலிப்பதில்லை. ஆனால் இன்றைய வளரும் சமுதாயம் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் பிம்பங்களை தான் உண்மை எனக் கருதி நடக்கின்றனர். இதில் சினிமாவின் பங்கைப் பற்றி சொல்லவும் தேவையில்லை! வேண்டாம், என்னை நெருங்காதே, எனக்குப் பிடிக்காது என்று ஒரு பெண் சொன்னால் உண்மையில் அவள் அதைத் தான் சொல்கிறாள், அதற்கு வேறு பொருள் கிடையாது. ஆனால் அவள் NO என்று சொன்னாலும் அவளை வற்புறுத்தலாம் என்று சினிமாவில், தொலைகாட்சி நாடகங்களில் காட்டப்படுகின்றது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சரியான புரிதலுக்கு இளைஞர்கள் கருத்துள்ள கட்டுரைகளைப் படித்தும், சூழ்நிலைகளைப் புரிந்தும் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஊடகங்களில், சினிமாவில் சொல்லப்படும் எந்தக் கருத்தையும் சரியா தவறா என்று சீர் தூக்கிப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முன்னெடுத்த முடிவுடன் ஒரு பிரச்சினையை அணுகினால் உண்மையை எப்படி புரிந்து கொள்ள முடியும்?

எளிதாகப் பெண்ணை குற்றம் சொல்லிவிடலாம். சரியாக உடுக்கவில்லை, இரவில் வெளியே சென்றாள், ஆண் நட்புடன் ஹோட்டலுக்குப் போனாள், இவை தான் ஓர் ஆணை வன் புனர்வுக்குத் தூண்டியது என்று ஊடகங்களும், சமூகமும் உரக்கச் சொல்லி சொல்லி அதையே உண்மையாக மாற்றுவதில் வெற்றியும் கண்டுள்ளது. இவை தான் உண்மையான காரணமா என்று ஒவ்வொரு இளைஞனும் சற்றே யோசிக்க வேண்டும்.

ஒரு ஆட்டோக்காரர் வண்டியில் பயணி விட்டுச் சென்ற தங்க நகைகளை கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் என்பதை ஏன் ஒரு பெருமையாக செய்தியில் சொல்லப்படுகிறது? ஏனென்றால் அது தான் நியாயம், தர்மம், தவறு செய்ய வாய்ப்பிருந்தும் அந்த ஆட்டோக்காரர் செய்யவில்லை என்பதை அது காட்டுகிறது. அதையே தான் பெண்கள் விஷயத்தில் எது முறையோ, அது தர்மமோ, தவறு செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாமல் இருப்பதை ஆண்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இது ஓர் அதிக எதிர்பார்ப்பா?

இந்த மாற்றம் எல்லாம் உடனே வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதற்கான முயற்சியாவது நாம் எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். முதலில் பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக் கொண்டால் தான் விடிவுக்கான வழியைப் பற்றி யோசிப்போம்.

பெண்கள் இயல்பிலேயே அன்பின் ஊற்று. தாயிடம் அன்பு செலுத்தும் நாம் மற்ற பெண்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று சொல்லி தான் புரிய வைக்க வேண்டுமா? ஆண் பெண் உறவில் புரிதலன்றி பிரிவது நிகழலாம். பெண்ணின் மேலும் தவறு இருக்கும். ஆணின் மீதும் தவறு இருக்கும். தவறான கருத்து, மன வேற்றுமை, தப்பர்த்தம் செய்வது போன்ற பிரச்சினைகளால் பேதங்கள் வருவது இயல்பு. அதற்காக பெண்ணின் மீது பழி சுமத்தி, கேவலமாகப் பேசுவதோ நடத்துவதோ சமுதாய சீர்கேட்டில் தான் முடியும்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளம் வயதில் இருந்தே ஆண்களை செம்மையாக வளர்க்கப் பாடுபட வேண்டும். பண்புடன் பெண்களிடம் பழக இளம் வயதில் இருந்தே ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. பெண்களை மதிப்பும் மரியாதையும் கொடுத்து நடத்தினால் அந்தச் சமுதாயம் நிச்சயம் இன்னும் சிறப்பாக முன்னேறும். பெண்கள் தினம் என்று ஒன்று தனியாக தேவையில்லாதவாறு சமூகத்தை மாற்றி அமைப்பது நம் கையில் தான் உள்ளது அது வரை பெண்கள் தின வாழ்த்தைப் பகிர்வோம்.

March 8 2017