இப்பொழுது நிறைய பேருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. காரணம் என்னவாயினும் மண வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பது மழலை இன்பமே. அது இல்லையெனில் சில பல வருடங்களில் வாழ்வில் விரக்தியும் வெறுப்பும் வருவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது
முன்பு டெஸ்ட் டியுப் பேபி என்று சொல்லப்பட்டது. அதுவே இப்பொழுது IVF (in vitro fertilisation ) என்று பிரபலமாகி உள்ளது. இந்த சிகிச்சையில் பல ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை முயற்சிகள் வெற்றி பெற்றதனாலும், அறிவியல் முன்னேற்றத்தினாலும் இதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
ஆனால் இதில் பணச் செலவு அதிகமே. மேலும் அசாத்திய பொறுமையும், வீட்டாரின் ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். முக்கியமாக கணவன் மனைவி இருவரும் முதல் மருத்துவர் சந்திப்பில் இருந்து பின் தொடர்ந்து வரும் மற்றப் பரிசோதனைகளுக்கும் முழு மனதுடன் ஒத்துழைப்புத் தர வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் குறைபாடுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. அல்லது கணவனுக்கு மட்டுமோ மனைவிக்கு மட்டுமோ குறைபாடு இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லக் கூடிய மனப் பக்குவம் இருவருக்கும் இருக்க வேண்டும்.
ஆணுக்கு விந்து குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய மருந்துகளை ஊசி மற்றும் மாத்திரைகள் மூலம் கொடுக்கிறார்கள். அதே பெண்ணுக்கு முட்டையில் குறைபாடு இருந்தால் சுரப்புநீரை (harmone) அதிகப்படுத்த ஊசி மூலம் தொடர்ச்சியாக பல நாட்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். பலப் பலக் குறைகளை சரி செய்த பின், இருவருமே தயார் நிலையில் உள்ளார்கள் என்று உறுதிப் படுத்தி, பின் ஆண் விந்தையும் பெண் முட்டையையும் தனித் தனியாக எடுத்து வெளியிலேயே இணைக்கிறார்கள். எடுத்ததில் மிக ஆரோக்கியமான பத்து முட்டைகளையும் விந்துக்களையும் சேர்க்கிறார்கள். அதில் ஒவ்வொருவரின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ஆறோ ஏழோ உருப்பெறும். அதில் சிறப்பாகச் சேர்ந்த ஐந்து கருவை பெண்ணின் கர்ப்பப்பையில் செலுத்துகின்றனர். திரும்ப அவர்களின் அதிர்ஷ்டத்தின்படி முண்றோ அல்லது இரண்டோ அல்லது ஒன்றோ கர்ப்பப்பையில் தங்குகின்றது. கருவை கர்ப்பப்பையில் செலுத்திய ஒரு வாரத்திலேயே ரத்தப் பரிசோதனையில் பெண் கருவுற்று இருப்பது தெரிந்து விடுகிறது. அந்த கணவன் மனைவிக்கும் அதற்காகப் பாடு பட்ட மருத்துவருக்கும் அது ஒரு மிக மகிழ்ச்சியான தருணம்.
ஆனால் இவ்வளவு தூரம் முயற்சி எடுத்தப் பின்னும் பலருக்குக் கர்ப்பப்பையில் கரு தாங்காமல் போய் விடுகிறது. அந்த மாதிரி தம்பதிகளுக்கு எந்தக் குறைப்பாட்டினால் அவ்வாறு ஆனது என்று ஆய்வு செய்து பின் அடுத்த முயற்சியைத் தொடங்குவார்கள். முதல் அடெம்ப்டிலேயே CA பாஸ் செய்வது போல சிலருக்கு முதல் முயற்சியிலேயே கருத்தரித்துவிடுகிறது. பலர் மீண்டும் மீண்டும் முயற்ச்சிக்க வேண்டியிருக்கிறது. அதற்கேற்ற பணபலமும், ஆள் பலமும், மனபலமும் இருந்தால் தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.
கர்ப்பப்பையில் இரண்டுக்கும் மேற்பட்ட கரு தங்கி விட்டால் பாதுகாப்புக் கருதி அவற்றை அகற்றிவிடுகின்றனர். இதற்கு foetus reduction என்று பெயர். கருத்தரித்தப் பின்னும் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அலுங்காமல் குலுங்காமல் முடிந்தவரை முதல் மூன்று மாதங்கள் படுக்கையில் ஓய்வில் இருக்க வேண்டும். சிலருக்கு பிரச்சினைகள் இருந்தால் குழந்தை பெறும் வரை இவ்வாறு ஓய்வில் இருக்க வேண்டி வரும். தொடர்ந்து ஊசிகளும் போட்டுக்கொண்டு, மருந்துகளும் உட்கொள்ளவேண்டும். தாய்க்கு இந்த சிகிச்சை முறையின் பின் விளைவினால் நீரிழிவு நோய் வருவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. அதற்கான மருந்துகளும் உட்கொள்ள வேண்டும். வேறு பிரச்சினைகள் உதிக்கும்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்டு சிகிச்சைகள் அளித்து கருவை காப்பாற்றுகின்றனர். இவ்வாறு முப்பத்தியாறு வாரங்கள் கருவைக் காப்பாற்றி சிசேரியன் முறையில் குழந்தையை வெற்றிகரமாக வெளிக் கொண்டு வருகின்றனர். இது நிச்சயமாக ஒரு பெரிய கூட்டு முயற்சி.
பேரக் குழந்தையை பார்க்க வேண்டும் என்றால் மாமியார் உண்மையாகவே மருமகளை தாங்க வேண்டும். மனைவி உடலை வருத்திக் கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். கணவன் முகம் சுணுங்காமல் மனைவிக்குப் பணிவிடை செய்வது மட்டுமல்லாமல் பணம் செலவழிக்கவும் தயாராக இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு தம்பதியினர் தங்கள் வீட்டை விற்று மருத்துவச் செலவுகளை மேற்கொண்டு இப்போ ஒரு குழந்தைச் செல்வத்தைப் பெற்றுள்ளனர்.
சிலர் வாடகைத் தாய் மூலமும் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இது கொஞ்சம் சிக்கல் நிறைந்தது. பிறக்கும் குழந்தைக்கு சம்பந்தமில்லாத வேற்று மனிதரின் உதவியை நாட வேண்டியுள்ளது. அவருக்கு பணம் செலுத்திக் கடனைத் தீர்த்துக் கொண்டாலும் அந்தப் பெண்ணின் மனம் குழந்தையை கொடுக்கும் போது எந்த அளவு வேதனைப் படும் என்று நமக்குத் தெரியாது. மேலும் சட்டச் சிக்கல்களும் வர வாய்ப்புள்ளது.
இதெல்லாம் விட இன்னொரு எளிய வழி ஒன்று உள்ளது. அது தான் தத்தெடுத்துக் கொள்வது. ஒரு பக்கம் பெற்றோர்கள் அன்புக்கு எங்கும் சிறு குழந்தைகள். இன்னொரு பக்கம் மழலைச் செல்வத்திற்கு ஏங்கும் குழந்தையற்ற தம்பதிகள்! இருவரும் இணைந்தால் பேரின்பமே! என்னுடைய நண்பர்களில் பலர் தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு மாதக் குழந்தையாக உள்ளபோதே தத்தெடுத்துக் கொண்டுவிடுகின்றனர்.அதனால் அது அவர்கள் குழந்தையாகவே தான் வளருகிறது. ஆச்சர்யமாக, பல சமயங்களில் தத்தெடுத்தப் பெற்றோர்களில் ஒருவரின் முக ஜாடை அந்தக் குழந்தைகளுக்கு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
வேறு மரபணு தான். ஆனால் அதைப் பெரிது படுத்தாமல் தன் குழந்தையாக பாவிக்கும் மனம் கணவன் மனைவி இருவருக்கும் இருக்குமானால் அவர்கள் செய்யும் இச்செயல் பெருமைக்குரியது.போற்றத்தகுந்தது. அனைத்துத் தரப்பினருக்கும் ஆனந்தம் அளிக்கவல்லது. எனக்குத் தெரிந்த சிலர் முதல் குழந்தை தத்தெடுத்தப் பின்னர் சில வருடங்கள் கழித்து அந்தக் குழந்தைக்குத் தம்பியோ தங்கையோ வேண்டும் என்று இன்னொரு குழந்தையும் தத்தெடுத்துள்ளனர். இது ஒரு உன்னதமான செயல்!
Mar 23, 2012 @ 11:42:52
Good writing. Comes from the heart.
Mar 23, 2012 @ 12:54:33
Thank you sir, for taking the time to read my blog and also appreciating it :-)amas32