சிவ கார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைப் பிடித்து விட்டார். இதே போலக் கதைகளையும் இயக்குநர்களையும் தொடர்ந்து தேர்வு செய்தால் அவருக்கு இனி எல்லாம் ஏறுமுகமாக தான் இருக்கும். மாஸ் படங்களில் நடிப்பதே பிரபலம் ஆகும் வழி என்கிற நம்பிக்கைக்கு நடுவில் இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு அவருக்குப் பாராட்டுகள்.
முழுக்க முழுக்க வசனங்களால் நிறைந்துள்ளது படம். மார்கெடிங் சம்பந்தமாக ஒரு MBA வகுப்பில் தெரிந்துகொள்ளக் கூடிய அளவு நிறைய விஷயங்களை படம் பார்ப்பவர் முன் வைக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. ஆனால் கொஞ்சமும் போரடிக்காமல் நகர்த்தியிருப்பதில் தெரிகிறது இயக்குனரின் திறமை. குப்பத்து வாழ்க்கை முறையை காட்டுவதிலும், பெரிய நிறுவனங்களின் கட்டமைப்பையும், நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போட்டி,பொறாமையை காட்டுவதிலும் நன்கு ஆராய்ச்சி செய்து மிகைபடாமலும் உண்மையாகவும் காட்டியுள்ளார்.
முதலாளிகள் எப்படி நுகர்வோரை ஏமாற்றி, தரமில்லாதப் பொருட்களை அவர்களிடம் கொண்டு சேர்த்து, சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாமல் உடற்கேட்டினை நுகர்வோருக்கு உண்டாக்கி கொள்ளை இலாபம் பார்க்கிறார்கள் என்பது இப்படத்தின் பகுதிக் கதை. ஆனால் மட்டமானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவன ஊழியர்களும் நடுத்தர மக்களாக அப்பண்டங்களை நுகர்பவர்களும் அவர்களே என்கிற முக்கிய இழையைப் பிடித்துத் திறமையாகத் திரைக் கதையை உருவாக்கியுள்ளார் ராஜா. அடுத்ததாக, முதலாளிகள் ஏமாற்றினாலும் ஊழியர்கள் நிறுவனத்திற்கு விசுவாசத்துடன் செயல்படுவதால் தான் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள் என்று முற்றிலும் புது கோணத்தில் திரைக் கதையை செலுத்துகிறார். தரக் குறைவான உடல் நலத்திற்கு கேடான பொருட்களை உருவாக்குவதில் ஏற்படும் இன்னல்களை ஊழியர்களுக்கு உணர்த்தி அவர்களின் மனங்களில் குற்ற உணர்ச்சியை உண்டாக்கி தரமான பொருட்களை தயாரிக்க வைத்து ஒரு மாற்றத்தை உருவாக்க முயல்கிறார் கதாநாயகன்.
சிவகார்த்திகேயன் அறிவு’ என்னும் துடிப்புள்ள ஒரு குப்பத்து இளைஞன். தன் பகுதி மக்கள் பொருளாதரத்தில், நாகரிகத்தில் அடுத்தக் கட்டத்துக்கு உயர வேண்டும் என்று அவர் விரும்புவது முதல் சில காட்சிகளிலேயே அழுத்தமாகப் படத்தில் பதிவாகிறது. ஒரு பெரிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் விற்பனையாளராகப் பணிக்கு அமர்கிறார். அங்கு சந்திக்கிறார் ஃபஹத் பாசிலை. ஃபகத்தின் அறிமுகமே கலக்கல். ஒரு தேர்ந்த மார்கெடிங் மேலாளராக, சிகாவுக்கு நல்ல வழிகாட்டியாக, விற்பனைத் துறையில் விதிக்கப்பட்டுள்ள இலக்கை அடைய சாமர்த்தியமாக என்னென்ன செய்யவேண்டும் என்று கற்றுத் தருபவராக, சிகாவுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக வருகிறார் . வெகு விரைவில் அவர் யார் என்கிற உண்மை முகம் நமக்குத் தெரிய வருகிறது. சிகாவுக்கு கிட்டத்தட்ட கடைசிக் காட்சி வரை அவர் யார் என்று தெரியாமலே அவருடன் பயணிக்கிறார். அதுவே நல்லதொரு திரைக் கதையாக அமையக் காரணமாக உள்ளது.
கடைசிக் காட்சி வரை வில்லன் வெகு சக்தி வாய்ந்தவராக இருப்பது இப்படத்தின் பலம். பலமுறை சொன்னது போல கதாநாயகனின் பராக்கிரமம் வில்லனின் சக்தியை வைத்தே நிரூபணமாகிறது. இதில் ஃபகத் பாசிலுக்கு மிகவும் புத்திசாலியான, சொடக்குப் போடுவதற்குள் வியுகம் அமைப்பவராக வரும் வில்லன் பாத்திரம். சிகாவும் ஃபகதுக்கும் இடையே சதுரங்க காய் நகர்த்தல்கள் பாணியில் தான் சூதும் வாதும் நடக்கின்றது. முட்டி மோதும் ஹீரோயிச சண்டைக் காட்சிகள் இல்லை. ஃபகதின் நடிப்பு A1. சும்மா பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். எப்படி தனி ஒருவனில் அரவிந்த் சுவாமி பரிமளித்தாரோ அதே மாதிரி இப்படத்தில் ஃபகத் பாசில்.
சிவகார்த்திகேயன் பிரமாதமாக நடித்திருக்கிறார். குப்பத்திலே வளர்ந்து வெளி உலகம் பற்றி அதிகம் தெரியாத ஒரு வெகுளித்தனம், தன் குப்பத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் ஆனால் செய்ய முடியவில்லையே என்கிற போது வரும் ஆதங்கம், வெற்றி பெற வேண்டும் என்கிற வெறி, யோசித்து செயல்படும் நிதானம், ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற போது வரும் அயர்ச்சி, என்று பலவித உணர்ச்சிகளை அனாயசமாக காட்டியுள்ளார்.
நயன்தாராவுக்கு சின்ன பாத்திரம் தான். ஆறம் எல்லாம் பார்த்த பிறகு இதில் அவரை பார்க்கும்போது சின்ன வேடம் தான். நன்றாக செய்துள்ளார். ஆர்ஜேபாலாஜி ‘நானும் ரவுடி தான்’ படத்தில் இருந்த அளவு இந்தப் படத்திலும் நன்கு செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ் குப்பத்து டானாக வருகிறார். இந்த மாதிரி பாத்திரம் எல்லாம் அவருக்குத் தண்ணிப் பட்ட பாடு. ஸ்னேகா முக்கிய வேடத்தில் ஆனா சின்ன வேடத்தில் வருகிறார். தேர்ந்த நடிகை அவர். சிவகார்த்திகேயனின் பெற்றோராக வரும் சார்லி, ரோகினி அருமையாக நடித்துள்ளனர். ஓரிடத்தில் ரோகினி சிகாவிடம் தான் வீட்டு வேலை செய்யுமிடத்தில் முதலாளி தவறாக நடக்க முயன்றபோது தான் கோபத்தை வெளிப்படுத்திய விதத்தை சொல்லுவார். அந்த இடத்தில் சிகாவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் அருமை. தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், சதீஷ், வினோதினி, கற்பக விநாயகம், Y.G.மகேந்திரன், மன்சூர் அலி கான் என்று ஒரு பெரிய குழுவே படத்தில் உள்ளது. அனைவரின் பங்களிப்பும் நன்று. இயக்குநருக்குப் பாராட்டுகள். இப்படத்தில் நடித்தவர்கள் யாருமே மிகையில்லாமல் நடித்திருப்பது சிறப்பு.
நிறைய சம்பவங்கள் இருப்பினும் தெளிவாகக் கதையை எடிட் செய்த ரூபினும், பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் வாழ்த்தைப் பெறுகிறார்கள். அனிருத் புகுந்து விளையாடியிருக்கார். பின்னணி இசை கச்சிதம். பாடல்களும் நன்று.
ஆரம்பத்தில் இருந்து நூல் பிடித்தார் போல் பயணிக்கிறது கதை. ஒரு குழப்பம் இல்லை, ஓர் இடத்திலும் தொய்வு இல்லை. ராஜா கையை வெச்சா அது ராங்கா போயிடாதுன்னு காட்டிவிட்டார் இயக்குநர் ஜெயம் ராஜா! தனி மனித ஒழுக்கம் வளரவேண்டும், நாம் ஒவ்வொருவரும் மாறாத வரை சமூகம் மாறாது என்பதை அழகாக சொல்லியுள்ளார்.
Dec 24, 2017 @ 06:23:50
நன்றி வாழ்த்துக்கள். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் விமர்சனம் படித்த பிறகு. படம் பார்த்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்.
அருவி பார்த்துட்டேன் கருத்தும் சொல்லிட்டேன் 🙂
Dec 26, 2017 @ 02:03:28
Good movie.. very good review.. First class movie…