அக்காக் குருவி கத்தலும் கிளிகளின் கூட்டுக் கிக்கிக்களும் மஞ்சுவை எழுப்பின. ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. கார், பஸ்களின் வேக ஓட்டத்தின் ஒலிகளின் நடுவில் வாழ்ந்த அவளுக்கு இந்தக் கிராம சூழ்நிலை நினைத்தே பாராமல் கிடைத்த ஒரு வரம்.
சுற்றிப் பார்த்தாள். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. சத்தம் போடாமல் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி வருவதற்குள் சில குழந்தைகள் சிணுங்க ஆரம்பித்து இருந்தன. சிலவை அழகாகக் குப்புறப் படுத்துத் தலையைத் தூக்கித் தொட்டிலில் இருந்து கருவண்டு கண்களுடன் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தன.
வேகமாக ஒவ்வொன்றிற்கும் டயப்பர் மாற்ற ஆரம்பித்தாள். அதற்குள் அவள் சக காப்பாளர் மாலா புட்டிகளில் பாலை நிரப்பி வந்து குழந்தைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தாள். சில குழந்தைகள் தானே பாட்டிலைப் பிடித்துக் கொண்டு சப்ப ஆரம்பித்தன. சில இன்னும் சிறுசு, அதனால் அவைகளில் ஒன்றை தொட்டிலில் இருந்து எடுத்து மடியில் போட்டுக் கொண்டு பால் கொடுத்தாள் மஞ்சு. வயிறு முட்டக் குடித்தப பின் வாயில் இருந்து பால் வழிய அவளை பார்த்து ஒரு பூஞ்சிரிப்பை உதிர்த்தது.
கண்களில் பொங்கி வந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அடுத்தக் குழந்தையிடம் சென்றாள். ஒரு குழந்தைக்காக ஏங்கிய அவளுக்கு பத்துக் குழந்தைகளைக் கொடுத்துவிட்டார் இறைவன். இங்கு வந்து சேர்ந்தது நேற்று தான். அதுவும் கனவு போல இருந்தது. இன்னும் உறக்கம் கலையாமல் கனவில் இருக்கிறோமோ என்று கூட அவளுக்குத் தோன்றியது.
ஜேகப்பை விட்டுத் தொடர்ந்து இந்த ஹோமில் வாழமுடியுமா என்று ஒரு சிறு பயமும் வந்தது. இருபது வருட வாழ்க்கை எளிதாக மறக்கக் கூடியதா? இந்த முடிவை எடுக்க அவள் எவ்வளவு மன உளைச்சல் பட்டாள்! இன்னும் உள் மனம் பயத்தில் இருந்து மீளவில்லை.
உண்மையில் திருமணம் அவளுக்கு மிகவும் இனிமையான ஒரு வாழ்வின் ஆரம்பம். அவளுடையது காதல் திருமணம். அதற்கு முன் கசந்த அவள் கன்னி வாழ்க்கையை இனிய காதல் திருமணம் தித்திக்க வைத்தது. அவள் அலுவலகத் தோழி வேதா பிரசவ விடுப்பு முடிந்து வேலைக்குச் சேரும் முன் தன் மூணு மாதக் குழந்தையை ஆபிசுக்கு எடுத்து வந்தபோது தான் சக ஆபிஸ் கொலீக் ஜேகப்பை முதலில் கவனித்தாள். வேதா மெடிகல் இன்சியுரன்ஸ் கிளைமுக்காக சில பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டியிருந்த சமயத்தில் அழும் குழந்தையை அவ்வளவு லாகவமாக அவன் கையாண்டான். இவளும் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “பப்புக்குட்டி சின்னிக் குட்டி” என்று கொஞ்ச இருவருக்கும் இடையே சிநேகமான நட்பு தோன்றியது. “எனக்குக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் சொன்னபோது அவன் மேல் சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது.
வாழ்வில் பிடிப்பின்றி இருந்த மஞ்சுவிற்கு ஜேகப்பின் கண்ணியமான பேச்சு மெதுவாகக் கவரத் தொடங்கியது. பெற்றோர் இல்லாமல் அண்ணன் அண்ணியுடன் வாழ்ந்த அவளுக்கு முப்பது வயதாகியும் அவர்கள் திருமண ஏற்பாடு எதுவும் செய்வதாக இல்லை. அதற்குக் காரணம் அவள் சம்பளம் தான் என்றும் அவளுக்குத் தெரியும். ஜேகப்புக்கும் அவளுக்கும் இடையே ஆரம்பித்த சிநேகமான நட்பு சில மாதங்களில் இயல்பாகக் காதலாக மாறியது. ஒரு நாள் அவனே, “எனக்கும் வயசாகிட்டு வருது. நான் உன்னை நல்லா வெச்சுப்பேன். என்னைக் கல்யாணம் செஞ்சுப்பியா” என்று நேரடியாக கேட்டதும் அவள் மனம் துள்ளி குதித்தது. அவனின் அன்பும் பரிவும் அவள் அது வரை எவர் மூலமும் அனுபவித்ததில்லை. முதலில் ரொம்ப யோசித்தாள். வேற்று மதம் பயமுறுத்தியது. ஜாதி விட்டு மணமுடித்தாலே கஷ்டம், இதில் மதம் மாறி ……
ஆனால் உறவுகள் யாரும் எந்த விதத்திலும் உதவாத போது இக்கலப்புத் திருமணத்தால் புதிதாக என்ன நஷ்டம் வரப் போகிறது என்று எண்ணித் துணிந்தாள். இவள் மதம் மாறி மஞ்சு கேதரின் ஆகத் திருமணம் புரிந்ததால் ஜேகப் வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் இல்லை.
வீட்டில் மாமியார் மட்டும் தான். ஜேகப் தந்தை இறந்து சில வருடங்கள் ஆகிஇருந்தது. மாமியாருடன் நல்ல உறவு, தினமும் ஜெகபும் அவளும் ஒன்றாக வேலைக்குப் போய் வந்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவள் கேட்கும் முன் புடைவையும் அவன் சக்திக்கு ஏற்ப நகையும் வாங்கிக் கொடுத்தான். அவள் சமையல் கைப் பக்குவம் மாமியாருக்கும் கணவனுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டதால் ஆசையாக விதம் விதமாக தினம் சமைத்துப் பரிமாறினாள். முதல் முறை நாள் தள்ளிப் போன போது இருவரும் வானத்தில் மிதந்தார்கள். ஆனால் சில வாரங்களிலே அது பொய் என்றாகிவிட்டது. அது தான் அவர்களின் மண வாழ்க்கையின் முதல் பெரிய ஏமாற்றம்!
கொஞ்ச நாளிலே வேலையை விட்டுவிட்டு பிசினெஸ் ஆரம்பித்தான் ஜேகப். மஞ்சு ரொம்ப கெஞ்சினாள் வேலையை விட வேண்டாம் என்று. அவனோ பிடிவாதமாக “இப்படியே எத்தனை நாள் வாழறது, காரு வீடெல்லாம் நம்ம சம்பளத்தில் வெறும் கனவு தான். துணிஞ்சு இறங்கனும்”. என்றான்.
கார்மென்ட் பிசினெஸ். ஆர்டர் பிடிக்க அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியிருந்ததால் மஞ்சுவையும் வேலையை விடச் சொன்னான். “நீ தான் கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும். எவனுக்கோ போய் உழைப்பதுக்கு பதிலா நம்ம கம்பெனியில் உழைச்சா இலாபம் நமக்கு தானே” என்றான். அவன் இல்லாத போது கம்பெனியில் சின்ன சின்ன திருட்டுகள் நடக்க ஆரம்பித்தன. அதனால் அவள் அங்கு இருப்பது அவசியமாயிற்று. பிசினசும் சூடு பிடித்ததால் வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் கம்பெனியில் அமர்ந்தாள்.
பிசினஸ் நன்றாக வளர்ந்தது. ஆசைப்பட்ட மாதிரி ஜேகப் கார் வாங்கினான். ஆனால் யார் வைத்தக் கண்ணோ திடீரென்று ஒரு பெரிய ஆர்டர் கேன்சல் ஆனது. ஆர்டரை எதிர்பார்த்து தைத்து வைத்திருந்த சரக்கெல்லாம் விற்க முடியாமல் தேங்கிப் போனது. அதே சமயம் இருந்த ஒரே உறவான மாமியாரும் இறந்து போனார். முடிந்த அளவு ஜேகப்புக்கு ஆறுதலாக இருந்தாள் மஞ்சு. முதல் குறை பிரசவத்துக்குப் பிறகு மேலும் இரண்டு குறைப் பிரசவங்கள் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு இடைவெளியை கொஞ்ச நாளாகவே ஏற்படுத்தியிருந்தது. குழந்தைக்காக ஏங்கிய இருவருக்கும் இறைவன் அந்த பாக்கியத்தை கொடுக்கவில்லை. இந்த சமயத்தில் இது வரை இல்லாத புதுப் பழக்கத்தை மதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தான் ஜேகப். தினமும் அளவுக்கு அதிகமாக குடிக்க ஆரம்பித்தான். எப்படி இந்தப் பழக்கம் ஆரம்பித்தது என்று அவள் யோசிப்பதற்குள் அவன் ஆபிசுக்கு வராமல் அதிகமாக பார் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்ததை கவனித்துப் பெரும் குழப்பத்துக்கு ஆளானால் மஞ்சு.
பிசினஸ் என்று ஒன்று ஆரம்பித்தப் பின் நஷ்டம் வந்தால் சோம்பி உட்கார முடியுமா? மஞ்சுவே தன் சாமர்த்தியத்தால் பக்கத்தில் உள்ள பள்ளிக் கூடங்களுக்குச் சென்று சீருடை ஆர்டர் வாங்கி பொறுப்புடன் கம்பெனியை நடத்த ஆரம்பித்தாள். தொய்வு ஏற்பட்ட பிசினஸ் நன்றாகப் பிக் அப் ஆனது.அது ஜெகபை எரிச்சல் படுத்தியது. “பொட்டச்சி நீ, என் உதவி இல்லாம ஆர்டர் வாங்கி கம்பெனியை நடத்துறியா? எவ்வளவு நாளைக்கு ஓடுது பாக்கலாம்” என்று எல்லார் முன்னிலையிலும் கம்பெனியில் கத்தி அவமானப் படுத்தித் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அவளால் நம்ப முடியவில்லை. இந்த மாதிரி கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி அவள் கேட்டதே இல்லை. குடியின் பாதிப்பால் மாறிவிட்டானா அல்லது உண்மையிலேயே பொறாமைப் படுகிறானா என்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் குடிக்காத போது அன்பாகத் தான் இருந்தான்.
ஜேகபை சர்ச் பாதிரியாரிடம் கவுன்சலிங்கிற்கு அழைத்துச் சென்றாள். அவர் பேசும்போது நல்ல பிள்ளையாக எல்லாவற்றிற்கும் தலை ஆட்டிவிட்டு வீட்டுக்கு வந்ததும் இவளை முதல் முறை கை நீட்டி அடித்தான். அவன் விட்ட அறையில் நிலைகுலைந்து போனாள். “நீ யாருடி என்னைப் பத்தி பாதரிடம் போய் கம்ப்ளெயின் பண்ண? முதல்ல நீ கிருஸ்துவச்சியே இல்லை. உன்னைக் கல்யாணம் கட்னதே தப்பு” வாய்க்கு வந்தபடி பேசினான். அதன் பின் அடிப்பதும் உதைப்பதும் தினப்படி வாடிக்கை ஆனது.
அவள் நொந்து போனால். எவ்வளவு மென்மையானவன், குழந்தைகளிடம் எவ்வளவு அன்புடன் பழகுபவன், எப்படி இப்படி மாறினான் என்றே அவளுக்குப் புரியவில்லை. அவன் அடித்தாலும் அவளுக்கு அவன் மேல் உள்ள அன்புக் குறையவில்லை. இரவு ஒரு மணிக்கு தள்ளாடி வீடு திரும்பும் அவனுக்கு சூடாக உணவு பரிமாறி அவனை நல்ல முறையில் படுக்க வைத்தப் பின் தான் அவளுக்கு உறக்கமே வரும்.
கம்பெனிக்கு வந்து, அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு குடிக்கப் போவதால் பணம் அதிகம் petty cash பாக்ஸில் வைக்காமல் இருந்தாள். அதனால் வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்துச் சென்று விற்றோ அடமானம் வைத்தோ குடிக்க ஆரம்பித்தான். இதற்காகவே அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்க ஆரம்பித்தாள் மஞ்சு.
அவன் குடிக்காத நேரத்தில் அவனிடம் நல்லவிதமாகப் பேசி அவனை மருத்துவமனையில் சேர்த்து அடிக்ஷனில் இருந்து விடுபட வைக்க எவ்வளவு முயன்றும் அவளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஜேகப், தான் குடிப்பதால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சாதித்தான். “எங்கப்பாவும் தான் குடிப்பார். எங்கம்மா அவருடன் சந்தோஷமா வாழலையா? உனக்கு என்ன கொழுப்பு என்னை குடிக்காதே என்று சொல்ல?” பேச்சில் ஆரம்பித்து அடி உதையில் முடிவது சகஜமாயிற்று. அவன் அப்பா இறந்ததே அதிகம் குடித்து அதனால் வந்த லிவர் பிரச்சினையால் என்று ஒரு நாள் வேறு ஒரு உறவினர் மூலம் தெரிந்து கொண்டாள் மஞ்சு. இந்தக் குடி நோய் அடுத்த சந்ததிக்கும் தொடரும் என்பதை அவள் உதவித் தேடிச் சென்ற மருத்துவர் மூலம் அறிந்து கொண்டாள். என்ன செய்வது? அவனின் சொந்தங்கள் அவன் அம்மா இறந்த பிறகு இவர்களுடன் தொடர்பில் இல்லை. அவர்கள் யாரிடமும் இவளால் உதவி கேட்கப் போக முடியவில்லை.
இந்த நேரத்தில் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்த பாண்டியன், தான் ஜேகபிடம் பேசிப் புரிய வைப்பதாக அவளிடம் வந்து சொன்ன போது ஒரு பாரம் இறங்கியது போல இருந்தது அவளுக்கு. பாண்டியனை வேலைக்குச் சேர்த்ததே ஜேகப் தான். பிசினஸ் ஆரம்பித்த நாள் முதலாக அவன் கம்பெனியில் இருந்தான்.
“தினம் சாயங்காலம் நான் அவர் கூடவே இருக்கேன் மேடம். ரொம்ப குடிக்காம பார்த்துக்கறேன். அப்படியே நல்லவிதமா பேசி சரி பண்ணிடலாம், கவலைப் படாதீங்க” என்று தைரியம் சொன்னான்.
இரவு பாண்டியனே அவனை வீட்டில் வந்து விட்டுவிட்டுப் போக ஆரம்பித்தான். குடித்துவிட்டு வண்டி ஒட்டாமல் வருகிறானே என்று ஒரு சிறு நிம்மதி மஞ்சுவுக்கு. அதுவும் சொற்ப காலமே. அவர்கள் கம்பெனி வங்கிக் கணக்கு ஜாயின்ட் அக்கௌன்ட். அதனால் அவள் மிகவும் ஜாக்கிரதையாக செக் புக்கை ஜேகப் கண்ணில் படாமல் வைத்திருந்தாள். வங்கி மேலாளர் ஒரு நாள் கணக்கில் overdraft இருப்பதால் ஒரு செக்கைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு என்று போன் பண்ணியபோது அவள் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல இருந்தது.
“சார், சான்சே இல்லை. கரென்ட் அக்கௌண்டில் மட்டுமே 5லட்சம் இருக்கணமே” என்றாள். “இல்லையே மா, ரெண்டு வாரமா நிறைய வித்ட்ராயல்ஸ் இருந்ததே. எல்லாமே cash வித்ட்ராயல்ஸ். நீங்க சரியா செக் பண்ணிப் பாருங்க” என்று சொல்லி போனை கட் பண்ணினார்.
செக் புக்கை எடுத்துப் பார்த்தாள். வரிசையாக எண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவள் கடைசி 5 செக்குகள் கிழிக்கப் பட்டிருந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
ரேஸ்கல் பாண்டியன் பண்ணின வேலை இது என்று புரிந்து கொள்ள நிமிஷ நேரம் போதுமானதாக இருந்தது அவளுக்கு. அவளின் ஆபிஸ் ரூமுக்குள் வந்தபோது எப்போதோ ஒரு சமயம் அவள் கவனிக்காத சமயத்தில் அவன் செக்குகளைக் கிழித்து வைத்திருக்க வேண்டும். பின் ஜேகபிடம் கையெழுத்து வாங்கி வங்கியில் இருந்து பணத்தை எடுத்திருக்க வேண்டும். ஜேகப்புக்கு ஏதாவது பணம் கொடுத்தானோ அல்லது எதுவுமே கொடுக்கவில்லையோ தெரியவில்லை, மனம் கொதித்தது மஞ்சுவுக்கு.
“பாண்டியனை கூப்பிடுங்க” என்று இவள் ஆள் அனுப்பிய போது அவன் அதற்குள் தலைமறைவாகி இருந்தான். ஜேகபிடம் வங்கியில் இருந்து பணம் எடுத்ததைப் பற்றி கேட்க, அவன் உடனே “நீ பணத்தை எடுத்து எவனுக்கோ கொடுத்துட்டு என்னை கேக்கறியா” என்று இவளை ஏச, அதன் பின் பேச்சு முற்றிலும் வேறு திசைக்கு மாறியது. “யாரோட டீ நீ தொடர்பு வெச்சிருக்க, என் கம்பெனி பணத்தை எல்லாம் எடுத்து தானம் பண்ற?” என்று ஆரம்பித்து காது கூசும்படி அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான். குடி போதையில் செக்கில் கையெழுத்துப் போட்டதே தெரியவில்லை அவனுக்கு. நான் உன்னைக் கண் கலங்காம பார்த்துக்கறேன் என்று சொன்ன ஜேகப் எங்கே போனான் என்று நினைத்துக் கலங்கி நின்றாள் மஞ்சு.
ஒரு நாள் ஆபிசில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது டெய்லரிங் செக்ஷன் வாசுகி தயங்கி தயங்கி எதோ சொல்ல வந்து எச்சில் கூட்டி முழுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து சற்றே எரிச்சலுடன், “என்ன வாசுகி, என்ன விஷயம் ஏதாவது அட்வான்ஸ் வேணுமா? ஏன் தயங்கி தயங்கி நிக்கற?” என்றாள் மஞ்சு.
“எப்படி சொல்றதுன்னு தெரியலை மேடம், சாரை ரெண்டு மூணு தடவை ஒரு பொண்ணோட பார்த்தேன். நல்ல பொம்பளை மாதிரி தெரியலை.” மென்று முழுங்கினாள் வாசுகி. “சில பேர் கொஞ்ச நாளாவே சேர்ந்து வாழறாங்கன்னு ஆபிசுல பேசிக்கறாங்க” விதிர்விதிர்த்துப் போய்விட்டாள் மஞ்சு.
அன்று இரவு குடித்து விட்டு வந்தபோது அமைதியாக இருந்தாள் மஞ்சு. காலையில் எழுந்தவுடன் அவனிடம், “உங்களை யாரோ ஒரு பொண்ணோட பார்த்ததா சிலர் வந்து எங்கிட்ட சொன்னாங்க. யாருங்க அந்தப் பொண்ணு?” என்றாள். “யாரோட வேணா நான் போவேன், அதை கேக்க நீ யாரு?” கோபத்தில் அவளைப் பிடித்து வெறியுடன் தள்ளியவன் அவள் தலை ஜன்னல் கம்பியில் மோதி இரத்தம் வழிவதைக் கூடக் கண்டுகொள்ளாமல் வாசக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.
மனோ தத்துவ மருத்துவரை அணுகினாள். அவனாக வந்து அடிக்ஷன் சென்டரில் அனுமதித்துக் கொண்டால் அன்றி அவன் நோய் குணமாக வாய்ப்பில்லை என்றார் டாக்டர். தினம் அடி உதை வாங்குவதால் இரவில் அவன் வரும் நேரத்தில் பயம் வயிற்றைக் கவ்வி இம்சை பண்ணுவதை மருத்துவரிடம் தெரிவித்தாள். அவளை சாந்தமான மன நிலையில் இருக்க உதவும் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். அதைத் தவிர அவரிடம் இருந்து அவளுடைய பிரச்சினைக்கு வேறு பதில் கிடைக்கவில்லை.
ஆபிசில் ஒரு நாள் வந்து இறங்கிய சரக்கைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது, துணியைச் சுற்றி வந்த பேப்பரில் உள்ள வரி விளம்பரம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. முதியோர் இல்லமும் அநாதை ஆசிரமமும் சேர்ந்தே இருந்த ஒரு இடத்துக்குக் குழந்தைகளை பராமரிக்கத் தாயுள்ளம் கொண்ட பெண் தேவை என்று விளம்பரத்தைப் பார்த்தாள். உணவும் இருப்பிடமும் கொடுத்து மாதச் சம்பளம் ரூ10,00௦ என்று போட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் இருந்தது. தினசரியின் தேதியைப் பார்த்தாள். ஒரு வாரப் பழைய பேப்பர்.
திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன் யோசித்ததை விட இப்பொழுது எடுக்கப் போகும் முடிவுக்காக இரவும் பகலும் மன வேதனையில் உழன்றாள் மஞ்சு. அன்று அவள் வீட்டை விட்டுக் கிளம்பி ஜேகப்புடன் வாழ முடிவு செய்தபோது அர்த்தமற்ற வாழ்க்கை பொருள் பொதிந்ததாயிற்று. ஆனால் இன்று எடுக்கப் போகும் முடிவோ ஒரு உறவின் நிரந்தரப் பிரிவை ஏற்படுத்தப் போகும் முடிவு, உண்மையில் ஓரு மரணத்துக்கு நேர்.
மிகுந்த யோசனைக்குப் பின் தொலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு நேர்காணலுக்குச் சென்றாள். “நான் ஒரு அநாதை, பயமில்லாமல் வாழ ஓர் இடம் தேடி வருகிறேன் மேடம். இப்போ ஒரு கார்மென்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். ஆனால் தங்குமிடம் சரியா இல்லை” என்று நிர்வாக இயக்குநரிடம் உண்மையும் பொய்யும் கலந்து உருக்கத்துடன் சொன்னாள்.
அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்தவுடன் அவள் மனம் பல வருடங்களுக்குப் பின் லேசானது போலத் தோன்றியது. சில குழந்தைகள் தொட்டிலில் இருந்தன. சில தவழ்ந்து கொண்டிருந்தன. குழந்தைகளை பராமரிக்க இவளை விட சிறந்தவர் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இவளுடன் பேசி, இவள் செய்கைகளை கவனித்த சிறிது நேரத்திலேயே நிர்வாக இயக்குநர் புரிந்து கொண்டார். அவர்களுக்கும் குழந்தைகளைப் பராமரிக்க ஒருவர் உடனடித் தேவையாக இருந்ததால் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அடித்து அப்பொழுதே அவள் கையில் கொடுத்து விட்டார்.
முதல் முறை சூழ்நிலைக் கைதியாக இருந்து விடுதலை வேண்டி வீட்டை விட்டுக் கிளம்பினாள். இம்முறையும் வீட்டை விட்டுக் கிளம்பும் போதும் அதே சூழ்நிலைக் கைதி தான். ஆனால் முதல் முறை வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்தத் துணிச்சலை விட இம்முறை அதிகம் தேவையாக இருந்தது. இருட்டின் அடர்த்தியைப் பொறுத்தே உள்ளது அதில் இருந்து விடுபட தேவையான துணிச்சல்!
images taken with thanks from the following websites:
https://www.etsy.com/listing/78235918/birds-in-a-garden-graphite-pencil
http://vaishnavinair.blogspot.in/
http://scribbles-n-sketches.deviantart.com/art/sunrise-283194928
Oct 09, 2015 @ 16:30:09
உங்களுக்கு எழுத்து கொஞ்சம் வசப்பட்டுடுச்சுன்னு நினைக்கறேன்..இதுவரை நீங்க எழுதின கதைகளை விட இதில் சொல்ல வந்த விசயத்தை அழகாச் சொன்ன தெளிவு இருக்கு..one line ல எளிதாகச் சொல்ற கதை எனினும் சொன்ன விதம் நன்று..தொடர்ந்து எழுதுங்க இன்னும் வசப்படும்..ஆரம்பத்தில் கொஞ்சம் ரமணி சந்திரன் சாயல் கதையோ ன்னு நினைச்சுட்டேன்.. 🙂
Oct 09, 2015 @ 16:31:09
சொல்ல மறந்தது..படங்கள் அனைத்துமே நன்று கதைக்குப் பொருத்தமாக..
Oct 10, 2015 @ 03:38:01
ரொம்ப நன்றி உமா 🙂
Oct 09, 2015 @ 16:35:19
Good story. “லக்ஷ்மி” யின் கதைகளை நினைவூட்டுகிறது, சோகத்தில்.
Oct 10, 2015 @ 03:38:30
அதுவே பெரிய காம்ப்ளிமென்ட். நன்றி 🙂
Oct 09, 2015 @ 21:25:30
super ma 🙂 and apt pictures also 🙂
Oct 10, 2015 @ 03:39:18
thank you 🙂
Oct 10, 2015 @ 02:57:16
மனித வாழ்க்கையில் எதிர்கொள்ளும் உறவுச்சிக்கல்களையும் அதன் விளைகளையும் மிகவும் எளிமையாக காட்சியமைத்து ஒரு சிறு கதையாக கொடுத்துள்ளார்கள். நன்றி.
Oct 10, 2015 @ 03:38:56
ரொம்ப நன்றி சார்.
Oct 10, 2015 @ 09:59:24
வணக்கம்
சிறுகதையை படித்த போது மனம் மகிழ்ந்தது.. நன்றாக உள்ளது… வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Oct 11, 2015 @ 02:14:56
நல்ல விவரிப்பில் தெளிந்த நீரோடைபோல ஒரு சிறுகதை – சந்தேகமில்லை.
ஆனால் என் மனதில் எழுந்ததை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நல்ல கெட்டி பருப்போடு நெய்யூற்றி சாப்பிடும்போது அதில் குறை சொல்வதற்கு ஏதுமுண்டா, ஆனால் தொட்டுக்கொள்ள வெஞ்சனம் (Side dish) ஒன்றுகூட் இல்லாவிட்டால் ! இதையாவது செய்துவைத்தாலே உடல்நிலை சரியில்லாத மனைவி என்று திருப்திப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில், ஒரு அப்பளமாவது பொரித்து வைத்திருக்கலாமே என்று நம் பாழும் மனம் எண்ணுவதை தடுக்க முடியுமா?
குடிகாரனிடம் அல்லல்படுவதைவிட, அதிலிருந்து மீண்டு ஒரு நல்ல அமைதியான வாழ்க்கை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதே கதையின் நீதி.
தன்னை சுற்றியுள்ள குடிகாரர்கள் கணவர், சகோதரர் , உறவினர்கள் யாராக இருந்தாலும், முடிந்தவரை போராடி, அதன்பின் ஒரு தீர்வு காணவேண்டும் அதுவும் கதையில் ஒரு திருப்பத்தோடு. இங்கே போராட்டம் மிஸ்ஸிங் அதற்கு பதிலாக இங்கே சப்மிஸ்ஸிவ்.
ஏதோ ஒரு சம்பவத்தால் அவன் மரணம் எய்தி, அதனால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தை வைத்து தானே சிறாரர்/ முதியோர் இல்லம் உருவாக்கி தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை துவக்கி மனம் நிம்மதியடைந்தாள் என்றாவதொ அல்லது ஏதாவது ஒரு சிறு திருப்பம் வாசகர்களை கடைசியில் துணுக்குற மாதிரியோ சிந்தனையை தூண்டிவிடுகின்ற மாதிரியோ இருக்கலாம் என்பதே நான் சொல்லவரும் கமண்ட்
நன்றி வாழ்த்துகள் :))
Oct 11, 2015 @ 02:53:15
அது தான் பெண்களிடம் எல்லாரும் எதிர்பார்ப்பது. அவனுக்கு இருப்பது குடி நோய். இந்த மாதிரி சூழ்நிலையில் அவனையே அண்டி அடி உதை வாங்குவதை விட இந்த முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவே இந்தக் கதை. இது அவனுக்குள் ஒரு அதிர்வை ஏற்படுத்தி தன்னை மாற்றிக் கொள்ள ஒரு தூண்டுகோலாக இருக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அவன் குணம் பெற்று வந்தால் அவனுக்கு அவன் கம்பெனி உள்ளது எடுத்து நடத்த. தவிக்க விட்டுவிட்டு வரவில்லை.
நான் பல குடி நோயாளிகளின் குடும்பத்தில் நடப்பதைப் பார்த்தே இந்தக் கதை.
நீண்ட பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி 🙂
Oct 13, 2015 @ 11:29:00
ஒய் ! என்ன ஒய் ! நான் என்ன சொல்ல வர்றேன் நீங்க என்ன சொல்ல வர்றேள் ?
நான் சொன்ன போராடும் குணம், அடிபட்டு மிதிப்பட்டு வாழ்நாள் முழுவதும் அல்லலுற வேண்டும் என்பது அல்ல. தானே தனியாகவோ, சகோதரர்களின், நண்பர்களின் உதவியாலையோ அவன் கைய்ய காலவாங்கிட்டோ , நல்லா நையப்புடைத்து வந்திருக்கவேண்டும் என்று சொன்னேன்.
மேலோட்டமா நான் சொல்ல வந்தது, கதாநாயகியின் முடிவில் அப்படிவோன்றும் நெகிழ்ச்சியான சுவாரஷ்யமில்லை என்று.
ஒரு வேளை தினமும் பேப்பரில் வரும் குடிகாரர்களின் செய்திகளை படித்து எனக்கு மனம் மரத்துப்போய்விட்டது போல :))
Oct 16, 2015 @ 03:42:30
போராடும் பெண்கள் கடைசியில் தேடுவது நிம்மதியை மட்டுமே. நல்ல கதை.